அவன் ஒரு உந்துகணை செலுத்தியின் (RPG) சூட்டாளன். அதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்ற விக்டர் கவச எதிர்ப்பு அணியில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளுக்காக களமுனைக்கு வந்திருந்தான். அவன் மட்டு அம்பாறை மாவட்ட படையணியாகிய ஜெயந்தன் படையணியில் நீண்டகாலமாக இயங்கி பின் வட தமிழீழத்துக்கு நகர்ந்திருந்த போராளிகள் அணியினரோடு முகமாலைப் பகுதிக்கு வந்திருந்தான்.

அங்கே நடவடிக்கைகளில் இருந்த போது தான் சிறப்பு உந்துகணை செலுத்தும் அணியினை மேம்படுத்த என்று தொடங்கப்பட்ட சிறப்புப் பயிற்சியில் பங்கெடுத்து சிறந்த ஆயுத உதவியாளனாக வெளி வந்தான். அன்றில் இருந்து தொடங்கிய அவனது RPG தாக்குதல் நடவடிக்கை மன்னார் மணலாறு முகமாலை என்று தொடர்ந்து கொண்டிருந்த போது உந்துகணை செலுத்தியின் சூட்டாளனாக மாறியிருந்தான். நிச்சயமாக அவனது உந்துகணைகள் எதிரியைத் திணற வைத்துக் கொண்டே இருந்தது.

இந்தப் போராளியின் இக் கதை முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் போர் மௌனிப்பதற்கு கொஞ்சநாள் முன் நடந்தது.

அப்போது தமிழீழ எல்லை மன்னாரில் இருந்தும் மணலாறு, வவுனியாவில் இருந்தும் நகர்ந்து வந்து வட்டுவாகல், தேவிபுரம், இரணைப்பாலை, சாளை போன்ற பிரதேசங்களை தாண்டும் நோக்கோடு தினமும் சண்டையால் வெடித்துக் கொண்டிருந்தது. எம்தாயகத்தை வன்பறிக்க என்று படையெடுத்து வந்த சிங்கள இன வெறிப்படைகளை எதிர்த்து, தம்முயிரை துச்சமாக மதித்த போராளிகள் இடைமறிப்புத் தாக்குதல்களை மேற் கொண்டு தம்மை தியாகித்துக் கொள்கிறார்கள். அப்படியான நிலையில் தான் கடற்புலிகளின் முக்கிய தளங்களில் ஒன்றான சாளைத் தளத்துக்கு அருகில் களமுனை வந்திருந்தது. அப் பகுதி விடத்தல் பற்றைகளாலும், கண்டல் பற்றைகளாலும் மூடப்பட்டுக் கிடந்தது. ஒரு பக்கம் தொடுவாய் பக்கமாகவும் கடற்கரைப் பக்கமாகவும் இருந்தது.

அருணன் மாஸ்டர் என்ற தளபதியின் கட்டளைக்குக் கீழ் கடற்புலிகளின் மகளிர் அணியின் நடவடிக்கைக் களமாக இருந்தது. அப் போராளிகளுக்கு பொறுப்பானவராக எழில் என்ற போராளி இருந்து செயற்பட்டார். அங்கு தான் அவன் மகளிர் அணியின் உந்துகணை செலுத்தியோடு வந்திருந்தான்.

“அக்கா என்ன நடந்தாலும் இந்த லைனைத் தாண்ட விடக்கூடாது அக்கா…”அவன் எதிரியைத் துச்சமென்றே மதித்தான். தமிழீழ எல்லையை விட்டு ஓட ஓட விரட்ட வேண்டும் என்றே அவன் எப்போதும் கனவு கண்டான். அதற்காக அவன் ஓய்வு என்பது இல்லாமல் பணியற்றினான். அன்றும் அவ்வாறு தான் அவனின் களப்பணி இருந்தது. போராளிகளின் எல்லை வேலியைக் கடந்து சிறிய வேவுக்காக சென்றவன் அங்கே குவிந்து கிடந்த சில பத்து PK வகை ஆயுதத்தின் ரவைகளை தனது கோள்சரோடு இடுப்பில் கட்டி இருந்த சாறத்தைப் பை போல செய்து தூக்கி வந்தான்.

அக்கா இரவு வேவுக்கு வந்திருக்கான் போல போகும் போது கொட்டீட்டு போட்டான் எப்பிடியும் இண்டைக்கு இதுக்கால இழுப்பான் என்று நினைக்கிறன்.

தம்பி எதுக்கால வந்திருக்கான்?

பொறுப்பா நின்ற பெண் போராளி எழில் பொறுப்போடு தகவல் சேகரித்து அதுக்கேற்ப தன் போராளிகளை ஒழுங்கு படுத்துகிறாள்.

“அக்கா நீங்கள் ஆக்கள ஒழுங்கு படுத்துங்கோ நான் முன்னுக்கு ஒருக்கா போய் வாறன். அதில பனங்குத்திகள இறக்கி வைச்சு லைன் அடிக்கிறான். கொஞ்சம் முன்னுக்கு போனால் RPG யால குடுக்கலாம் குறைஞ்சது 10 பேராவது நிப்பான் வடிவா குடுக்கலாம் அக்கா”அவன் எழுந்து கொள்ள,

“தம்பி சாப்பாடு வந்திருக்கு சாப்பிட்டு போங்கோடா”

பொறுப்பாக நின்ற போராளி அழைக்கின்றாள். அது மாலை நேரம். அப்போது ஓய்வு என்பது யாருக்குமே இல்லை. உணவு என்பது கஞ்சியைத் தவிர எதுவும் இல்லை. அதுவும் தினமும் 3 நேரமும் கிடைக்குமா என்பது கேள்வியே. அவ்வாறான நிலையில் கிடைக்கும் கஞ்சியை கிடைக்கும் நேரத்தில் பசி போக்க பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் மீண்டும் எப்போது கிடைக்கும் என்பது கேள்விக்குறியே.

அக்கா சாப்பாடா முக்கியம் எங்கட தேசம் தானக்கா முக்கியம். நான் முன்னுக்கு போய் வந்து சாப்பிடுறன் என்ட சாப்பாட்ட எடுத்து வையுங்கோ…

அவனின் உறுதிக்கு முன் அவளால் எதையும் கூற முடியவில்லை. அவள் அமைதியாகிறாள். அவனும் அவனின் உதவியாளனும் நிலத்தோடு நலமாக ஊர்ந்தபடி தமது எல்லையை விட்டு முன்னே நகர்கின்றனர். தமது இலக்கு தெளிவாக தெரியக் கூடிய இடத்திற்கு வந்தவுடன் RPG யை இலக்கோடு பொருத்துறான். இலக்கு சரியாக அமைகின்றது.

அடிச்சால் 10 க்கு மேலான இராணுவம் கொல்லப்படும். ஆனால் அது நடக்கவே இல்லை. அவனது RPG யில் இயங்குநிலைத் தடை ஏற்படுகிறது. “வெடிப்பி“ (firing pin ) வேலை செய்யவில்லை. ஏமாற்றத்தோடு பின் திரும்புகிறான்.

அக்கா அடிச்சிருந்தா 10 பேர் காலி ஆனால் அடிக்க ஏலாம போச்சு. firing pin வேலை செய்யல்ல. அது தான் திரும்பி வந்திட்டன். இவன் அவளுக்கு நிலமையை விளக்கிக் கொண்டிருந்த நேரம் சிங்கள இராணுவத்தின் எறிகணை பிரிவு இவர்களின் இருப்பிடத்தின் ஆள்குறியை தமது வேவாளர்களுடனாகவோ அல்லது வேவு விமானத்தின் ஊடாகவோ பெற்று இலக்காக்கியது. 60mm மோட்டார் எறிகணைகளால் தாக்குதலை தொடுத்தது சிங்களப்படை. எறிகணைகள் சுடப்படும் போது எழுந்த “டுப்” என்ற சத்தத்தை வைத்து

டேய் எல்லாம் அலேட் 60 Mm அடிச்சிட்டான். டேய் தம்பி இங்க ஓடியாங்கோடா இந்த I க்குள்ள வாங்கோடா எழிலினி கட்டளை இடுகிறாள். ஆனால் அதைச் சொல்லி முடிக்கும் முன்னமே எறிகணை இவர்களுக்கும் பெண் போராளிகளுக்கும் இடையில் விழுந்து வெடிக்கிறது.

நிலத்தில் படுத்திருந்தவனை சின்னாபின்னமாக்கியது அந்த ஒற்றை 60MM எறிகணை. அவனது உடல் முழுக்க காயம். ஆனால் உயிர் இருந்தது. உடனடியாக அவனை இழுத்தெடுத்து பதுங்ககழிக்குள் படுக்க வைத்து சிறிய முதலுதவிகளோடு பின்னாலே இருந்த மருத்துவப் போராளிகளிடம் கையளிக்கின்றார்கள் அப் பெண் போராளிகள்.

தன் பசியை விட தேசம் முக்கியம் அக்கா என்று சொல்லிவிட்டு எதிரியைத் தேடிச் சென்றவன் வயிற்றில் ஒரு துளி நீரைக் கூட பருகாது சண்டைக்கு சென்றவன் கசங்கிப் போன காகிதமாக கிடந்த கோலம் நெஞ்சின் வலியாக இருக்கின்றது. அவனின் நினைவுகளை சுமந்து கொண்டு அவன் உயிரோடு மீண்டு வருவான் என்ற நம்பிக்கையோடு அவர்கள் எதிரிக்காக காத்திருந்தார்கள். அன்றைய இரவு முடிந்து காலை விடிந்த போது புலிகளின்குரல் வானொலி அமைதியாக லெப். காவியன் வீரச்சாவு என்ற செய்து தாங்கி காற்றலையில் வந்த போது, அவன் மீள மாட்டான் என்று தெரிந்து விட்ட பின் அப் பெண் போராளிகள் தம்மை இன்னும் இன்னும் உறுதியாக்கிக் கொள்கிறார்கள்.

நினைவுப் பகிர்வு : கடற்புலிப் போராளி எழில்

எழுதியது : இ.இ. கவிமகன்

நாள் : 22.11.2020