எமது தாயகக் கடற்கரை பகுதியின் மேட்டு மணல்வெளிகளில் இயற்கையாகவே அடம்பன் கொடிகள் தானாக படர்ந்து பரவி வளர்ந்திருக்கும். நிலம் உவராக இருந்தாலும் அவற்றின் பசுமையான நிறத்தில் மனது கரைந்து, நகர்ந்து அடம்பன் கொடிகளில் ஆங்காங்கே பூத்திருக்கும் அந்த ஊதாப் பூக்களில் வந்து நின்று தங்கி கொஞ்சம் திளைத்திருக்கும். இதனைத் தாண்டி அவற்றைப் பற்றி நாம் என்றுமே எமக்குள் உள்ளேற்றி சிந்தித்திருக்க மாட்டோம். ஊதா நிறத்தில் பூவும், சாதாரண பச்சை நிறத்தில் தடித்த இலையைக் கொண்டு பரவும் அந்தக்கொடிகள், என்நினைவுக்குள் அறிமுகமாகிய வயது ஆறு என்று நினைக்கிறேன். எமது வாழ்வில் அறிமுகமாகும் ஒவ்வொரு நபரினதும், பொருளினதும் முதல் அறிமுக நொடி என்பது எல்லாமே எமது ஆழ்மனத்திற்குச் சொந்தமானவை. அந்த ஆறு வயதில் என் தந்தையின் கைகளைப் பற்றியவாறு அந்த திருக்கோணமலை நகர்க் கடற்கரைகளில் உலாவிய பொழுது எனக்குள் பதிந்த அந்த காட்சிகளில் கடலோடு இணையும் அந்த வானமும், கரையோடு கரையும் அலைகளும், மணல் கரையோடு பரவும் அடம்பன் கொடிகளுமே நிறைந்து இருக்கின்றன. அப்படிப் பல நாட்கள் தந்தையோடு ஓய்வு நாட்களில் செல்லும் பொழுதெல்லாம் என் மனதுக்குள் பரவிய அந்த அடம்பன் கொடிகளின் மென்மையின் தளிர்கள் என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வந்திருக்கின்றன. இன்று அந்த திருக்கோணமலையின் கடற்கரைகளில் அந்த கொடிகள் இருக்கின்றனவா? இருந்தாலும் அந்த கொடிகள் யாருக்குச் சொந்தமானவை? என்று பல கேள்விகள் இங்கே. காலம் செல்லச் செல்ல, ஊர்கள் பல ஏறித்திரிகின்ற காலங்களில், என்னோடு படித்த ஒருவனது எண்ணச் சொல்லில்  சொல்வதென்றால் “ஓடுகாலி” என அலைகின்ற காலங்களில் இந்த “அடம்பன்”, என் வாழ்வோடு மட்டுமல்ல இது தமிழர் வாழ்வோடும், பண்பாட்டோடும், மொழியோடும் பின்னிப்பிணைந்து பரவிப் பற்றிக் கிடக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டேன்; தெரிந்துகொண்டேன். 

2007ம் ஆண்டில் அளம்பில், செம்மலை, மணலாறு என கடற்கரைகள் எங்கும் நண்பர்களுடன் கூடி உலாவித்த திரிந்த காலங்களில் அடம்பன் கொடிகள் நிறைந்த மணல் வெளிகள் எமக்கானதாகவே இருந்தன. நடு மதிய வெயிலில் நடக்கின்ற பொழுதில் அடம்பன் கொடிகள் இருக்கின்ற நிலமாகத்  தேடிப் பிடித்து நடந்திருக்கிறோம்.  எம்மையும் எமது ஆயுதங்கள், உடமைகளையும் உருமறைக்க என்றால் முதல் இழுத்து எடுப்பது அடம்பன் கொடிகளைத்தான். அவ்வளவும் ஏன், அதிகாலையில் பயிற்சிக்கு என புறப்படமுன் காலைக்கடன்களுக்காக ஒதுங்குவதும் இந்த அடம்பன் கொடிகளுக்கிடையில்தான். இவை தொடர்ந்து 2008 கடந்து 2009 இல் முள்ளிவாய்க்கால், வெட்டுவாய்க்கால் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலையென  நிறைகின்ற பொழுதுகளில் கூட அடம்பன் படர்ந்த கடற்கரைகள்தான் அவர்களுக்கு அடைக்கலத்தை அள்ளி வாரி வழங்கியிருந்தன. தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இன அழிப்புப் போரின் கோர வடுக்களையும் இந்த அடம்பன் கொடிகள் தாங்கியே இருக்கின்றன. அதன் சாட்சிகளாகவும் இருக்கின்றன. எமது மக்களின் அவலங்களையும், உணர்வுகளையும், உள்ளக்குமுறல்களையும் உள்வாங்கி இன்றும் மௌனமாகவே படர்கின்றன இந்த அடம்பன் கொடிகள். அது என்னவோ தெரியவில்லை, எமது மண்ணிலே நிகழ்த்தப்பட்டது “இனச் சுத்திகரிப்புப் போர்”தான் என்பதற்கு மௌன சாட்சிகள்தான் எம்மண்ணில் ஏராளம். 

சேர்ந்த, பிரிந்த, வாழ்கின்ற, கள்ள, நல்ல காதலுக்கும் காதலர்களுக்கும்  சாட்சியாக மட்டுமல்லாமல் முள்ளிவாய்க்காலுடன் முடிந்ததாகக் கூறப்படுகின்ற, தமிழினத்தின் மேல் தொடுக்கப்பட்ட இனவழிப்புத் தடங்களின் சாட்சிகளாக மட்டுமன்றி, பல- பலரது இரகசியங்களை தன்னகத்தே கொண்டு இன்றும் பற்றிப் படர்கின்றன அந்த உயிருள்ள சாட்சிகள். எமக்கானவர்கள், நாம் இனி ஒருமுறையேனும் மீண்டும் காண மாட்டோமா என ஏங்கித் தவிக்கும் சிலரது பயண இரகசியங்கள் கூட இந்த அடம்பன் கொடிகளுக்குத் தெரியாமல் இருக்காது. இன்று எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கும் பல உறவுகளின் தொலைந்து போன முகவரிகள் கூட இந்த அடம்பன் கொடிகளுக்குத் தெரிந்திருக்கும். அவர்களின் இறுதி முகப்பு பதிவுகள் கூட இந்த கொடிகளிடம் இருக்கலாம். இயற்கையாகவே கடலரிப்பைத் தடுக்கக் கூடிய மிக மெல்லிய நலிந்த இந்த அடம்பன் கொடியை முயல் வளர்ப்பவர்கள், அல்லது முயல் வேட்டைக்குச் செல்பவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். ஏனெனில் அடம்பன் இலை முயலுக்கு மிகவும் விருப்பமானது. அத்துடன் அடம்பன் கொடிகள் பரவிக்கிடக்கின்ற வெளிகளில் முயல் வேட்டைக்குச் செல்பவர்கள் அதிகம். வசந்தகாலம் தொடங்கி கோடை காலம் முழுதும் இவை பூக்கின்றன. நான்கு அங்குல நீளத்தில் கடதாசி போன்ற இதழ்களை உடையது. எமது தாயக பகுதியில் ஊதா நிறத்தில் இந்த மலர் இருந்தாலும் உலகின் பல்வேறு பகுதிகளில் பல நிறங்களில் இப்பூக்கள் காணப்படுகின்றன. சிறிய தோற்ற வித்தியாசத்தில் கரு நீலம், சிவப்பு போன்ற நிறங்களிலும்  காணப்படுகின்றன.

உவர் தன்மையை சகித்து வாழும் Ipomoea pes-caprae என்கின்ற தாவரவியல் பெயரைக் கொண்ட அடம்பன், Convolvulaceae என்கிற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழில் “அடம்பம்” என அழைக்கப் படும் இந்த கொடி இந்த பூமியில் அட்லாண்டிக் பசிபிக் இந்து சமுத்திர வெப்ப மண்டல அல்லது அயன மண்டல பிரதேசங்களில் பரவலாக வளர்கிறது. சங்கத் தமிழில் அடம்பு, அடும்பு, அடம்பம் என்று தமிழ் இலக்கியங்களில் ( குறுந்தொகை,சிலப்பதிகாரம்) குறிப்பிடப் படுகிறது. இதனை விட ஆட்டுக் கால், குதிரைக் குளம்பு போன்ற காரணப் பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Beach Morning Glory, Goat’s Foot Creeper, Ipomoea pes-caprae, Ipomoea biloba போன்ற பெயர்களில் அழைக்கப் படுகிறது. அடம்பு என மலையாளத்திலும், Adumbu-balli என கன்னடத்திலும், Adumbu என துளுவிலும், Bin-tamburu, Muhudu-bin-tambara எனசிங்களத்திலும், Tan’buru என மால்டிவியன் மற்றும்திவேகி மொழிகளிலும், m salsa-da-praia எனபிரேசிலிலும் அழைக்கப் படுகிறது. 

தமிழர்களுடைய வாழ்வியலுடன் இந்த அடம்பன் இரண்டறக் கலந்து இருக்கிறது. எப்படி என்கிறீர்களா? ஐவகை நிலங்கள் கூட இட அமைவை மட்டுமல்ல குறிப்பிட்ட பூக்கள் பூக்கும் பகுதிகளாகவும் அவை இருக்கின்றன. அந்தவகையில்  நெய்தற்பூ, தாழம்பூ, முண்டகப்பூ, அடம்பம் பூ மலரும் பகுதி நெய்தல் எனவும் பூக்களை கொண்டும் நிலத்தை ஐந்தாகப் பிரித்துள்ளனர். இந்த உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலும் தன் தாய்மொழியை தன் பெயருடன் அல்லது பெயராகவே வைத்துக் கொள்ளக் கூடியது இந்த தமிழ் மொழி மட்டுமே. இயற்கையோடு ஒன்றிவாழ்ந்து, இயற்கையிலிருந்தே மொழியைக் கற்றுக் கொண்டு இலக்கியம், இலக்கணம் என்று ஒரு கூட்டு வாழ்க்கையை வாழ்ந்திருந்தவன் இந்த தமிழன். ஆய்வின் படி என்றோ சுமார் 2500 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டவற்றை இன்று பொருள் விளங்க வாசிக்க முடிகிறது என்பதுதான் இன்றைய உலக மொழி ஆய்வாளர்களுக்கு இருக்கின்ற ஆச்சரியம். அதனால்தான் உலகம், பழமை என நம்பிய சமஸ்கிருதத்தை விட்டு விட்டு தமிழை நோக்கி மொழி ஆர்வலர்கள் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். 

இயற்கையோடு அளவளாவி வாழ்ந்ததனால்தான் “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று இயல்பு வாழ்க்கையில் சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு பழமொழி தோன்றியிருக்கிறது எனலாம். அது போல தான் வாழ்ந்த நிலத்துக்கும் இயற்கையுடன் தொடர்பாகத்தான் தமிழன் பெயர் வைத்தான். அதற்கு பல உதாரணங்கள் கூறமுடியுமென்றாலும்  “அடம்பன்” என்கிற பெயரும் அதிலொன்றுதான். எமது தாயகத்தில் “அடம்பன்” என்று வரக்கூடிய ஊர்களின் பெயர்கள் ஏராளம் இருக்கின்றன. மன்னார் மாவட்டத்தில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மிகப் பெரிய கிராமம் “அடம்பன்”. மடு வலயத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவாக வருகிறது ” மழவராயர் கட்டை அடம்பன்”. நானாட்டான் வலயத்தில் “செட்டியார் மகன் கட்டை அடம்பன்”, “மலையறுத்தான் கட்டை அடம்பன்” என இரு கிராம சேவகர் பிரிவுகள் இருக்கின்றன. மாந்தை மேற்கு வலயம் பாலையடிப் புதுக்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள வட்டாரம் ஒன்றின் பெயர் “அடம்பன் தாழ்வு”. அதே மாந்தை மேற்கில் வண்ணார் குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஒரு குளம் “அடம்பன் குளம்” ஆகும். கிளிநொச்சி மாவட்டத்தில் கரச்சி வலயத்திற்குள் உள்ள சிறு கிராமம் “அடம்பன்”. பூநகரி பிரதேசத்திற்குள் நல்லூர்க் கிராம சேவகர் பிரிவிற்குள் உள்ள ஆழமற்ற குளம் “அடம்பன் தாழ்வு வில்லு” மற்றும் “நாய் அடம்பன் வில்லு”, ஆலங்கேணி கிராமசேவகர் பிரிவிற்குள் வரும் சிறு கிராமம் “முல்லை அடம்பன்”, பூநகரி வலயம் நல்லூர்க் கிராம சேவகர் பிரிவிற்குள் வரும் “நீர் அடம்பன்”, கரச்சி வலயம் வன்னேரிக்குளம் கிராமசேவகர் பிரிவிற்குள் வரும் ஒரு சிறிய வட்டாரம் “வண்ணார் அடம்பன்”. அதே கரச்சி வலயம் உருத்திரபுரம் கிராம சேவகர் பிரிவிற்குள் வரும் ஆழமற்ற குளம் “முல்லை அடம்பன் மோட்டை வில்லு” வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு வலயத்தில் அருகருகில் “பெரிய அடம்பன்”, “சின்ன அடம்பன்”. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் வலயத்திற்குள் வரும் ஒரு கிராம சேவகர் பிரிவு “தட்டை அடம்பன்” அந்த கிராம சேவகர் பிரிவிற்குள் வரும் சிறு கிராமம் “தச்ச அடம்பன்”. திருக்கோணமலை மாவட்டம் கோமரன்கடவை (குமரேசன் கடவை) வலயம், கிவுலகடவல கிராம சேவகர் பிரிவிற்குள் வரும் குளம் மற்றும் கிராமம் “அடம்பனை” இந்த கிராமம் இன்று  “கிவுலகடவல” என்ற சிங்கள கிராமமாகிய வரலாறு தனியே இருக்கிறது. (அடம்பன் பற்றிய ஊர்களில் இன்னும் இருந்தால் அல்லது திருத்தம் இருந்தால் பதிவிடவும்). இப்படி எமக்குத் தெரிந்தவை சிலவே. தமிழன் இயற்கையோடுதான் வாழ்ந்தான் என்பதற்கும், எமது மண்ணில் நாம்தான் பூர்வீகமானவன் என்பதற்கும் கூட அடம்பன் சாட்சியாக நிற்கிறது. 

சட்டென மனதைக் கவரும் ஊதா நிற  அடம்பன் பூவை நாம் எமது அன்றாட வாழ்வில் அலங்காரமாகப் பயன்படுத்துவதை விட, மற்ற நாட்டவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்றும், எப்படி அதற்கு முக்கிய இடம் வழங்கி இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தால் கொஞ்சம் ஆச்சரியமே! பச்சை(Tattoo ) குத்திக் கொள்வது என்பது இன்று, நேற்றல்ல பன்நெடுங்காலமா ஆண் பெண் வயது வேறுபாடின்றி குத்திக் கொள்கிறார்கள். அதிலும் இன்று மிகவும் நவீன கருவிகள் கொண்டு தத்தரூபமாகக் குத்துகிறார்கள். குறிப்பாக வடக்கு, தெற்கு, மத்திய அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமாக இது இருக்கின்றது. அடம்பன் அலங்காரம் அதாவது “மோர்னிங் க்ளோரி” என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட இந்த பூக்களை பல்வேறு வடிவங்களில் குத்திக் கொள்வது பிரபலமாக இருப்பதுடன், அடம்பன் பூ அலங்காரங்களை விரும்பிக் குத்திக் கொள்கிறார்கள்.

அதிலும் தத்தரூபமாக இருப்பது மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கின்றது. இதையும் தாண்டி இந்த அடம்பன் பூ அலங்காரங்களை எங்கெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்றால், சுவர் அலங்காரங்களில் ஓவியங்களாக (wall arts,designs) , திரைச்ச்சீலைகளாக (screens), சுவர் அலங்கார சீலைகள் , மட்பாண்டங்களில், படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணைகள், ஜன்னல் சீலைகள், ஆடைகள், t சேர்ட்கள், கால்மிதிகள், சுவர் ஓடுகள் (wall tile) , ஜன்னல் கதவு கண்ணாடிகளில், மணிக்கூடு, பென்ரன்கள், நாகரீக அலங்கார நகைகள், பெண்களின் நாகரிக கைப்பைகள், விளக்குகள் (lamps) , கழுத்துப் பட்டிகள், சோபா செட் இருக்கைகள், குஞ்சங்கள், ஜாடிகள், நீச்சல் ஆடைகள்,  உள்ளாடைகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. எங்கெல்லாமோ பயன்படுத்துகிறார்கள். கிடைக்கும் இடங்களிலெல்லாம் இந்த அடம்பன் பூ சார்ந்த அலங்காரங்களை மிகவும் விரும்பி பயன்படுத்துகிறார்கள். அதுசரி நம்ம ஊரிலேயும் இந்த அடம்பன் இருக்கிறது. நாம் எங்காவது பயன்படுத்துகிறோமா? நிச்சயமாக இல்லை. ஏனைய பூ அலங்காரங்களை அறிந்த அளவுக்கு அடம்பன் பூக்களை பயன்படுத்துவது குறைவு. இன்றும் வெளிநாட்டவர்கள் இயற்கையை ரசித்து அதனோடு இணைந்து வாழ்கிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நாம் ரோஜா, ஒர்க்கிட், அந்தூரியம் என்று மேற்கத்தைய கலாசாரத்தில் பின்னிப் பிணைந்து விட்டோம். அழகாய் ரசிப்பது மனித இயல்புதான். ஆனாலும் எமக்கும் அவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதிலும் எமது மண்ணோடு தொடர்பான பண்பாட்டை பின்பற்ற அல்லது கொண்டாட  நாம் பின் நிற்கின்றோம் என்பதும் உண்மை. மேற்கு நாடுகளில் இன்றுதான் அந்த அடம்பன் பூ அலங்காரங்களை பயன் படுத்துகிறார்கள் என்றில்லை. சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரங்களை புராதன அருங்காட்ச்சியகத்தில் கவனமாக பேணிக் காத்து வருகிறார்கள். நமது நிலையில் வரலாற்றை பேணிப்பாதுகாப்பது என்பதில் அனைத்தும் பூச்சியம்தான். எம்மைப் பொறுத்தவரை “அடம்பன்” அது ஒரு கடற்கரையில் வளர்கின்ற ஒரு கொடி. அவ்வளவுதான். நாம் அதனை கவனிப்பதே இல்லை. ஆனால் பல நாடுகள் அதற்கு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெருமைப் படுத்தியிருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் கிடைக்காத பெருமை அதற்கு கிடைத்து இருக்கிறது என்றால் பாருங்கள். எடுத்துக்காட்டாக ஆஸ்ற்ரேலிய அரசு 1999 ம் ஆண்டு அடம்பன் பூ விற்காக ஒரு முத்திரை (அஞ்சல் தலை) வெளியிட்டிருக்கிறது. அடுத்து என்ன நாடு என்றே புரியவில்லை – அந்த நாடு 1985 இல் முத்திரை வெளியிட்டிருக்கிறது. 2014  ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா பலவிதமான வகைகளில் பலவித இனங்கள் கொண்ட அடம்பன் பூக்களை முத்திரையில் பதிவு செய்திருக்கிறது. இவற்றையும் விட வியட்நாம், மெக்ஸிகோ, ஆர்ஜன்டீனா, கமரூன், டோகேலு, கோகோஸ் தீவுகள், பபுவா குனியா, உகண்டா, எல்சல்வடோர், அறுபா தீவு  (கரீபியன் தீவு) போஸ்டுவான, ஹங்கேரி என்று முத்திரை வெளியிட்டு அடம்பன் பூவை பெருமைப் படுத்திய நாடுகள் பல. நிலப்பரப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்றும், இயற்கையின் வழியில் எங்கோ ஒரு புள்ளியில் அனைத்தும் இணைகின்றன என்பதுடன், உலக ஒற்றுமையைக் கூட பிரதிபலிக்கிறது இந்த அடம்பன் பூக்கள். ஆனாலும், “அடம்பன்” எமக்காக போரோசை கேட்ட, பொறிகலங்கி திமிறி நின்ற அந்த  மணல் வெளிகளில் இன்றும் காத்திருக்கின்றன. பற்றிப் படர்கின்றன. தமிழர்கள் தம் மண்ணில் இழந்தவற்றை இயற்கைதான் திருப்பித் தரவேண்டும் என்ற மனோ நிலையில்தான் அதிகமானவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது சரியா பிழையா என்று புரிந்துகொள்கின்ற காலத்தில் எல்லாமே கைமீறிப் போயிருக்குமோ என்ற அச்சமும் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது. மணல்வெளிகளில் பற்றிப் படர்கின்ற அடம்பனும் இந்த மண்ணின் உயிருள்ள மௌன சாட்சியே!

எழுதியது : ப. வித்யாசாகரர்

படம் : google இணையம்