இலட்சியக் கனவொன்றை இனிதாக்க
எமை விட்டுத் தூரம் சென்றீர்களே
எட்டி எட்டிப் பார்க்கிறோம் உங்களை
எங்குமே நீங்கள் இல்லை

காலனவன் கைகளில் காணிக்கையானீர்களா
கண்ணீர் நிறைந்த கண்கள் தினமும்
உங்களுக்காய் காத்திருக்க
காலத்தை வென்றெடுக்க மறந்து ஏன் போனீர்கள்.

பள்ளிக்கு செல்லும் போதும் படுத்து உறங்கும் போதும்
அள்ளித் தினம் அணைத்திடும் உங்கள் கைகளின் அசைவு எங்கே அப்பா?
ஆண்டுகள் பத்து கடந்தாலும்
நீண்ட தூரம் நாம் உயர்ந்தாலும்
மீண்டு வரா உங்கள் கைகளைத் தான்
தினம்தினம் தேடுகிறோம் அப்பா

களம் உங்களை அணைத்தாலும்
எட்டி எமை நோக்கி நிற்கும்
உங்களின் விழிகள் எங்கே?
முட்டிப் பகை வெல்லும் உங்கள்
இலட்சியக் கனவுகளுக்குள்
எங்கள் வாழ்க்கையையும் இலக்காக்கினீர்களே
அவ்விலக்கு இப்போது எங்கே?

நாங்கள் வாழ வேண்டும் என்று தானே
நீங்கள் கருவி ஏந்தினீர்கள்
நாங்கள் வாழ்வதை காணாது
விட்டு எங்கே போனீர்கள்?
ஒவ்வொரு நிமிடமும் எமைத் தாங்கிய
அப்பாவே இடைநடுவே அறுத்துவிட்டு போய் சேர்ந்ததேனோ?

திட்டங்கள் நீங்கள் கொண்டீர் நாங்கள்
பல பட்டங்கள் வெல்ல என்று
விட்டு போய்விட்டீர் எங்கள் வெற்றிகள்
காண முன்பு

முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்று இரட்டையராய் இருந்த போது
அம்மாவும் அப்பாவும் எமக்கு வழிகாட்ட இணைந்திருந்தீர்கள்.
அம்மாவை மட்டும் எமக்காய் விட்டு
தூர தேசம் போனதேனோ?
அப்பா என்று உரக்க அழைக்கின்றோம் நிதம்
அருகில் வர நீங்கள் இல்லை
அணைத்து கொஞ்ச வரவுமில்லை
ஏங்கி ஏங்கி தவிக்குது எங்கள் நெஞ்சம்
ஆறுதலுக்கு யாரும் இல்லை.
அணைக்க எம் கரங்களுக்கு அப்பா இல்லை