நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் செய்தி “ சிங்களப் படைத்தளபதி புனரவாழ்வளிக்கப்பட்ட போராளிகளை சந்தித்து இப்போது நாடு இருக்கும் நிலையில் மக்களை காக்க தகவல் தாருங்கள்” என கேட்டுள்ளதாக தொடர்கிறது. இது சாதாரணமாக கடந்து செல்ல முடியாத ஒரு சந்திப்பு. ஏனெனில் எம் விடுதலைப் போராட்டம் உச்சத்தை கண்டிருந்த காலத்தில் நாட்டின் மூலை முடுக்கெங்கும் காட்டிக் கொடுப்பாளர்களை உயிர்ப்புடன் வைத்திருந்த இதே சிங்களப்படை அதற்காக தமிழ் முஸ்லீம் இனத்தவர்களை பயன்படுத்தி வந்தது.

இராணுவ நடவடிக்கைகளுக்காக வரும் போராளிகளை அந்த கட்டமைப்பு ஊடாக இனங்கண்டு அழிப்பதே அதன் நோக்கம். அதை அவர்கள் கனகச்சிதமாக கையாண்டார்கள். அதனால் எம் போராளிகள் பலர் அவர்களுக்கு இலக்கானார்கள். இந்த நிலையில் மக்களுக்காக வாழ்ந்த அப் போராளிகளை மக்களை பாதுகாக்க தமது தகவலாளர்களாக வாருங்கள் என இனவழிப்புப் படை அதிகாரி கேட்ட போது துணிவாக ஒரு போராளி “ நாங்கள் மக்களை அழிக்க ஆயுதம் ஏந்திப் போராடவில்லை காப்பதற்காகத் தான் போராடினோம்” என்று பதில் கொடுத்திருக்கிறார்.

உண்மை தான் போராளிகள் என்றைக்கும் மக்கள் மீதான வன் தாக்குதல்களை நிகழ்த்தியது கிடையாது. சில முக்கிய இலக்குகளை தகர்த்த போது தவறுதலாக மக்கள் சிலரின் உயிர்களும் பறிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் திட்டமிட்டு அவர்களின் உயிரைப் பறிப்பதற்கான தாக்குதல்களை அவர்கள் செய்தது கிடையாது. இக் கருத்துக்களை இப்போது பல சிங்கள இனவாத, இனவழிப்பு அரசியலாளர்களும் இராணுவ அதிகாரிகளும் ஒத்துக் கொண்டு பேசி இருக்கிறார்கள். அக் கருத்துக்களை இப்போது எங்களின் ஊடகங்கள் பிரபலப்படுத்திக் கொண்டருக்கின்றன.

“கண் கெட்டபின் நமஸ்காரம் “ என்பதைப் போல ஒரு விடுதலைப் போராட்டத்தையே இல்லாமல் அழித்த கொடிய வல்லாதிக்க சக்திகள் இன்று தம்மைக் காத்துக் கொள்ளும் புது முறையை இவ்வாறு கையாள்வதே உண்மை நிலை. இவ்வாறான நிலையில் தான் எம் தலைவர் மௌனிக்காது இருந்திருந்தால் இந்த வன்கொடிய தாக்குதல் பற்றிய நடவடிகை எவ்வாறு இருந்திருக்கும் என்று சற்று பார்க்கலாம்.

இது மிக முக்கியமான தருணம். நான் இதை கட்டாயம் பகிர்ந்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளேன். தமிழீழ விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப் போகாமல் இருந்தருந்தால், இன்றைய இலங்கையை நிச்சயமாக விடுதலைப்புலிகள் காத்திருப்பார்கள். இதை பலர் பலவாறு எழுதுகிறார்கள். ஆனால் அதன் உண்மைத் தன்மையை நிறுவ முடியும். ஏனெனில் அவர்கள் எதிரிகளுடன் மட்டுமே போராடினார்கள். அப்பாவி இலங்கை மக்களின் சாவுகளை கண்டு தமிழீழ மக்களோ தமிழீழ விடுதலைப் போராளிகளோ நிச்சயமாக மனம் மகிழ்ந்திருக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவும், ஊடுருவல் முறியடிப்பு பிரிவும் நிச்சயமாக இன்றைய இலங்கையின் நிலையை இத் துன்பவியல் சம்பவம் நடக்க முன்பாகவே கண்டு பிடித்திருப்பார்கள். தம்மால் இனங்காணப்பட்ட இவ்விடயத்தினை தலைமைக்கு தெரியப்படுத்தி இருப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழீழ தேசியத் தலைமை தன்னுடைய தமிழீழ தேசத்தில் இருந்து உத்தியோகபூர்வமான பிலனாய்வு அறிக்கையை கொடுத்திருப்பார்.

முஸ்லீம் தீவிரவாத அணி பாகிஸ்தானின் பின்னணியில் இயங்குகின்றது என்பதை அன்றே (2005 ) தெட்டத் தெளிவாக கூறி இருந்த விடுதலைப்புலிகளின் தேசியத்தலைமையினதும் தேசக்குரலினதும் தீர்க்கதரிசனமான பார்வை இன்றும் முன் நின்றிருக்கும். அதை அடிப்படையாக வைத்து நிச்சயமாக புலனாய்வறிக்கை தமிழீழத்தில் இருந்து அயல் நாடான இலங்கைக்கு அனுப்பப் பட்டிருக்கும் அதை அடிப்படையாக வைத்து இன்றைய நல்லாட்சி அரசு சில முன்நகர்வுகளை செய்து தமது மக்களை காத்திருக்கும்.

ஏற்கனவே வேறு அரசுகளால் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது தானே, அப்படி இருந்தும் இலங்கை அரசு கவலையீனமாக செயற்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக பேணாதது தானே காரணம் என்ற கேள்வி இப்போது எழலாம். ஆனாலும் தமது அரசை எதிர்த்து போராடும் ஒரு விடுதலை இயக்கத்தின் புலனாய்வு அறிக்கை என்பது நிச்சயமாக கவனிக்கப்படும் என்றே நான் கருதுகிறேன். அல்லது விடுதலைப்புலிகள் தாம் வேறு தாக்குதல்களை செய்வதற்காக பொய்யான அறிக்கைகளை தந்தார்கள் என்ற கோணத்திலாவது விடுதலைப்புலிகளை கண்காணிக்க என்றேனும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கப் பட்டிருக்கும்.

அதனூடாக இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப்புலிகளால் செய்யப்படாத மக்கள் மீதான வெடிகுண்டு தாக்குதல்களை முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்கள் செய்வதை நிச்சயமாக தடுத்து நிறுத்தி இருப்பார்கள். இதை நான் எழுந்தமானமாக கூறவில்லை. நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கொள்வதன் மூலமாக என்னால் நிறுவ முடியும்.

1998 ஆம் ஆண்டு எம் தாயகம் மீது மிக அழிவைத் தரவல்ல கொலரா நோய் மன்னாரின் விடத்தல் தீவு பகுதியில் தாக்கி இருந்தது. அது தொடர்பாக நான் ஏற்கனவே எழுதிய “குருதிக்குள் ஒருபயணம்” என்ற தொடர் பத்தி ஒன்றில் தெளிவாக எழுதி இருந்தேன். ஆனாலும் அவ்விடயத்தை சுருக்க கூறி இவ்விடயத்தை நிறுவ வேண்டியது இப்போது என் நிலையாகிறது.

அப் பத்தி இவ்வாறு தான் தொடர்கிறது.

—————————————————————

கொலரா Bacteria கிருமியான Vibrio Cholera எப்படி எங்கட பிரதேசத்துக்க வந்தது? என்ற வினாவுக்கு மருத்துவப் பரிவு விடை தேடத் தொடங்கியது. அப்போது தொற்றுநோய் தடுப்பு, காப்பு என்று ஒரு புறம் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது விடைதெரியாத இந்த கேள்வி அவர்கள் முன்னே எழுந்தது நியம்.

அப்போது, முதல் கொலரா நோயாளியை இனங்கண்டு அவரை பின்தொடர்ந்து அவர் எங்கிருந்து வந்தார், எங்கெல்லாம் பயணித்தார், என்ற தகவல்களை ஆராய்ந்தது தமிழீழ மருத்துவப்பிரிவு. அப்போது எம் பிரதேசத்துக்குள் வந்துள்ள கிருமி காவியாக இருந்தவர் புத்தளம் பகுதியில் இருந்து கொலரா கிருமியை கொண்டு வந்த அதிர்ச்சியான உண்மையை நாம் கண்டு பிடிக்கிறார்கள் அவர்கள்.

அப்பொழுது தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவன் வார்த்தைகளை உளத்தில் கொண்டு நிமிர்ந்து நின்ற மருத்துவர்களுக்கு மருத்துவ தர்மம் என்பதை விட தலைவரின் வார்த்தைகள் செவிகளில் ஒலிக்கத் தொடங்கின.

“எதிரியாக இருந்தாலும் அவன் நோயாளி என்ற கோணத்தில் மட்டுமே நீங்கள் பார்க்க வேண்டும்” என்ற கூற்றில் அவர் கூறியது இராணுவத்தையும் அரசையும் தான். தான் எதிர்த்து களமாடும் எதிரிக்கே இவ்வாறான உயரிய மரியாதையை கொடுக்கும் தேசிய தலைவர், மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எவ்வாறான நிலையை கையில் கொள்வார் என்பதை நான் இங்கே குறிப்பிட வேண்டியது இல்லை. அதனால் மருத்துவப் போராளிகள் செயலில் இறங்கினார்கள். 

புத்தளத்தில் இருந்து  வந்திருந்த கொலரா கிருமியால் புத்தளம் பகுதியிலும் மக்கள் பாதிக்கப்படலாம் என்ற உண்மையை உடனடியாக ICRC, மற்றும் MSF என்ற சர்வதேச அமைப்புக்கள் ஊடாக ஆதாரத்தோடு இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தி உடனடியாக புத்தளம்பகுதியை கொலரா தடுப்பு பகுதியாக இனங்காட்டுகிறார்கள். அந்த எச்சரிக்கையை தொடர்ந்தே அரச மருத்துவக்குழு அது தொடர்பாக புத்தளம் பகுதியை ஆராய்கிறது. நிலமையை கண்டு பிடித்து நடவடிக்கையை ஆரம்பிக்கிறது. இது இன்றைய அரசுக்குத் தெரியுமோ, இல்லையோ அன்றைய அரச அதிபராக இருந்த சந்திரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். 

விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவு அன்று அரச மருத்துவத்திணைக்களத்தை எச்சரிக்கவில்லை எனில் அங்கும் பல சாவுகள் நடந்திருக்கும். இது நியம். 

நாம் நினைத்திருந்தால் கொலரா எச்சரிக்கையை கொடுக்காமல் விட்டிருக்கலாம். அவ்வாறு நடந்திருந்தால், பலநூறு சிங்கள மக்கள் இறந்திருக்க கூடும். ஆனால் நாம் என்றும் மனிதாபிமானம் உள்ளவர்கள். சிங்கள மக்கள் மீது எங்கள் துப்பாக்கிகளோ அல்லது எந்த தாக்குதல் முறைமைகளோ நிமிர்ந்ததில்லை.  

—————————————————————

என்று நிறைவாகிய அப் பத்தியின் மூலமாக நான் மேலே கூறிய விடயங்களை நிச்சயமாக நிறுவ முடியும். 

நாங்கள் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், கொலைகாறர்கள் என்று சர்வதேசத்துக்கு மகிந்தவும் அவனின் அடிவருடிகளும் பரப்புரை செய்கின்ற இந்த நேரத்தில் அல்லது மைத்திரியின் நல்லாட்சி அரசு இங்கே இனப்படுகொலை நடக்கவே இல்லை என்று பரப்புரை செய்யும் இந்த நேரத்தில் எம் அமைப்பும், எம் அண்ணனும் மௌனிக்காமல்  இருந்திருந்தால், நிச்சயமாக 300 மக்கள் இறந்திருக்கவோ 500 மக்கள் காயப்பட்டிருக்கவோ மாட்டார்கள் என்பதோடு  இலங்கை அரசு இன்று படும் அவல நிலையை தாண்டி முஸ்லீம் சர்வதேச தீவிரவாதத்தை இலங்கையில் தடுத்து நிறுத்தயிருக்க முடியும் என்பது மட்டுமே திண்ணம். 

அதற்காக சில வாலறுந்த ஊடகவியலாளர்கள் என்று தம்மைத் தாமே கூறும் நபர்கள் கேட்பதைப் போல “ இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த போதும் … “ என்ற வினாவுக்கு ஒரே விடை தான் நாய்க்கு நடுக்கடலில போனாலும் நக்குத் தண்ணிதான். ஆதலால் அவர்கள் அடிக்கடி தம் வாயாலையே உளறி தம் சுயநிலையை தம்பட்டம் அடிப்பதும், விடுதலைப் போராட்டம் மீது அதிக பங்காளர்கள் என காட்ட வெளிக்கிட்டு இறுதியில் தம் உண்மை நிலையை தாமாகவே காட்டுவதும் தான் நடக்கும் நியம். இவ்வாறான ஊடகவியலாளர்களும் அவர் மௌனிக்காமல் இருந்திருந்தால் கமராவுக்கு முன் வந்திருக்க மாட்டார்கள் என்பது மட்டுமே நியம். 

இ.இ.கவிமகன்

01.05.2019