எனக்குத் தெரியும் இன்னமும் உன் நெஞ்சில் நான் உறங்குவேனென்று. ஏனெனில் அத்தனை வலிமையான காதல் உன்னுடையது. ஆனால் என்னுடைய காதல் அப்படியில்லையடா. கிட்டத்தட்ட எனக்கு ஏழுவருடங்களாக உன் நினைவு வந்ததில்லை. உன் நியத்தை தொலைத்து உன்னை மறந்து வாழ்ந்தவள் நான். ஆனால் முகிலா இப்போது கொஞ்ச நாளாக உன் கண்களைத்தாண்டா என் கண்கள் தேடுகின்றன.

உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆசை மேலெழுந்து நிற்கிறது. என் மீது அன்பானவனே!என் நினைவுகளில் இருந்து தூக்கி எறியப்பட்டு முடக்கப்பட்டு கிடந்த உன் உருவம் இப்போதெல்லாம் அடிக்கடி மீண்டும் என் முன் எழுந்து வருகிறது. உன்னோடு பேச வேண்டும் உன்னோடு வாழ வேண்டும் என்ற ஆசை எல்லாம் மீண்டும் துளிர்க்கிறது. ஆனாலும் நான் அதற்கான அருகதையை எப்போதோ இழந்து விட்டேன்.


முகிலா நீ எங்கள் மக்கள் விடியலுக்காக போராடிய ஒரு புலிவீரன். ஆனால் நான் அதை முதலில் அறியேன் இருவரும் பல்கலைக் கழகத்தில் சந்தித்த போது உன்னை எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள்.

“என்னடா இவன் பெண்கள் பக்கமே திரும்புறான் இல்லை ”

நானும் கூடத்தான். முதலாம் ஆண்டு மாணவனாக நீ வந்த போது உன் வகுப்பறையில் முன் வரிசையில் இருந்த என்னை நீ கண்டிருப்பாய். ஆனாலும், என் பக்கமோ அல்லது நாம் இருக்கும் பக்கமோ உன் கண்கள் நோக்குவதை நாம் அறிவதில்லை. வருவாய், கற்பாய், செல்வாய். நான் அப்பிடி இருந்ததில்லை படிப்பிலும் அவ்வளவான அக்கறை காட்டியதில்லை. எனக்கு வளாகம் என்றாலே சந்தோசத்தை அனுபவிக்க வந்த ஒரு இடம் என்று மட்டுமே எண்ணம் இருந்தது.


அதனாலோ என்னவோ பல்கலைக் கழக வாழ்வில் மாணவர்கள் எத்தனை வகையில் தமது பொழுதுகளை களிப்பார்களோ, அத்தனையும் நான் அனுபவித்தேன் படிப்பை தவிர. ஆனால் என் பெண்மைக்கோ அல்லது கலாச்சாரத்துக்கோ என்னால் தீங்கு வர கூடிய அளவில் எந்த செயலிலும் ஈடுபட்டதில்லை. அனைத்தும் பெண்மை என்ற கட்டுப்பாடுடனேயே இருந்தேன்.முகிலா! உன்னைச் சீண்டுவதே அந்த நாட்களில் எமக்கு ஒரு பெரும் பொழுது போக்கு ” டேய் பொட்ட இங்க வா ” நாம் அழைத்தால் சிரித்து கொண்டு செல்வாய்.


நீ வந்த கடமைக்காய் நீ உன்னை எமக்குள் மூழ்க விடாது பார்த்து கொண்டாய் தேசத் தலைவன் வளர்த்த பிள்ளையல்லவா நீ? கண்ணியமும் கட்டுப்பாடும் உன்னிடம் நிறையவே இருந்தது. அந்த ஒரு குணமே என்னை உன்னிடம் தோற்றுப் போக வைத்தது. முகிலன் எனக்கு வேணும். காலம் முழுவதும் அவனது அனைத்தும் சொந்தமாக வேணும் என்று எண்ணம் கொள்ள வைத்தது. அனைவரிடத்திலும் நீ பாராட்டும் அன்பின் வரையறை என்னை உன்னிடம் மீண்டும் மீண்டும் தோற்று போக வைத்தது. உன்னிடம் நெருங்கினேன். பலமுறை தோற்றுப் போனேன். ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீ என்னுடன் பேசியதே இல்லை. அதுவும் கற்றல் தொடர்பாகவே உனது பேச்சுக்கள் இருக்கும். ஆனால் நான் உன்னை அடையத் துடித்து கொண்டிருந்தேன்.

உன்னைத் தேடி தேடி வந்தேன். உன்னை பற்றிய தரவுகளை சேகரிக்கத் தொடங்கினேன். உன் நட்புக்களை தேடிப் போனேன். அவர்களுடன் பேசினேன். ஆனாலும் நீ கொஞ்சமும் அசைவதாக இல்லை. அப்போது தான் ஒரு நியத்தை கண்டு பிடித்தேன். உனது தங்கை எமது பிரிவின் முதலாம் ஆண்டு என்பதை அறிந்து ஆவலுடன் அவளைத் தேடி சென்றேன். ஆனால் அவளும் உன்னை யாரென்றே தெரியாது என்று சாதித்து கொண்டாள். எதுக்காக இந்த உரு மறைப்பு என்பது எனக்கு அப்போது புரிந்திருக்கவில்லைடா முகிலா. மிக விரைவிலே அதை நான் உணர சந்தர்ப்பம் வந்தது.
நீ அன்று எம்மிடம் வந்தாய் நான் நாளைக்கு வரமாட்டன் என்றாய்; நாம் செய்து கொண்டிருந்த செயற்றிட்ட அறிக்கையை என்னிடம் தந்தாய் இதை முடித்து HOD கிட்ட குடு என்று சொன்னாய்.

உடனே சென்று விட்டாய். நீ பிரிந்து சிறு மணித்துளிகள் ஆகியிருக்கும் எம்மை சுற்றி வளைத்து கொண்ட சிங்கள இராணுவம் உன்னைப் பற்றியே விசாரித்து சென்றது. முகிலா அது அறிந்து தான் நீ சென்றாயோ என்னை விட்டு நான் அறியேன். ஆனால் இராணுவம் எங்களை கேட்ட கேள்விகளே உன்னை எமக்கு இனங்காட்டியது. நீ இரகசியப் போராளி என்பதை நான் அறிந்து கொண்டேன்.


உன் நிலை அறியாது என் மனம் பதைபதைத்தது அறியத்துடித்து அலைந்தேன். ஆனால் எங்கும் நீ கிடைக்கவில்லை. உன் தங்கையிடம் சென்றேன் அவள் என்னை திட்டி அனுப்பினாள். எனக்கு யார் என்றே தெரியாது என்னை தொந்தரவு பண்ணாதீங்க என்று எத்தின தடவை சொன்னாலும் கேட்கிறீங்க இல்லை என்றாள். நிலை அறியாத நான் தவித்து கிடந்தேன் என் நட்புக்களை துறந்து தனிமையில் கிடந்தேன். அப்போது தான் முகிலா அந்த தகவல் என் கைபேசிக்கு குறுந்தகவலாக கிடைத்தது நீ வன்னிக்கு சென்றதாக, யார் அதை அனுப்பினார்கள் நான் அறியேன் இது நியமா என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனால் உன்னை தேடி நான் வந்தேன். உன்னை சந்திக்க கடுமையான முயற்சி….

இறுதியில் என் பிடிவாதம் வென்றது. நீ வந்தாய் சந்தித்தாய் நீண்ட நேரம் விவாதங்கள் இருவருக்கும் இடையில், முதன்முதலாக என்னிடம் மணித்தியாலம் ஒன்று கடந்து பேசிக் கொண்டிருந்தாய். இறுதியாக என் காதல் வென்றது. உன்னை கட்டி அணைக்க துணிந்த போது நான் ஒரு போராளி என்பதை மறந்திடாதே என்றாய். ஏனடா இத்தனை நாளாக என்னை ஏமாத்தினாய் என்று கண்ணீர் மல்க கேட்ட போது தான் உண்மையை உன் வாயால் சொன்னாய்.


நான் வந்ததே ஒரு வேலையாக அதில் நீ குறுக்க வந்தால் உனக்கும் ஏதாவது நடக்கும் என்ற பயம். எனக்கும் உன்னை முதலே பிடிக்கும் உன் மகிழ்ச்சியான நடவடிக்கைகள் பிடிக்கும் ஆனால் தூர இருந்து இரசித்தேன். இராணுவ புலனாய்வு என்னை இனங்கண்டால் என்னை சுற்றி உள்ளவர்களுக்கு ஆபத்து வரலாம் அதனாலே நான் உன்னை விட்டு விலகி நின்றேன். ஏன் என் தங்கையுடன் கூட நான் கதைப்பது இல்லை. அவளும் என்னை அண்ணனாக காட்டி கொள்வது இல்லை. பல தடவை உனக்கே அவள் அதை கூறி இருக்கிறாள்.


நீ அங்கே என்னை தேடி எப்படி எல்லாம் அலைந்தாய் என்ன எல்லாம் செய்தாய் என்பது அனைத்தும் எனக்கு தெரியும். அதனால் தான் தங்கையிடம் சொல்லி உனக்கு தகவல் தர சொன்னேன் நீ என்னை இங்கே தேடி வருவாய் என்பது நான் அறிந்த விடயம். இந்த வார்த்தைகளின் பின் உன் மீது இன்னமும் மதிப்பு அதிகரித்ததடா.
நான் பட்டப்படிப்பை முடித்து திரும்பிய போது நீ முற்றிலும் மாறி போய் இருந்தாய். வரி உடையில் தான் உன்னை அதிகம் பார்க்க முடிந்தது, இடுப்பில் மறைவாக தூங்கி கொண்டிருந்த கைத்துப்பாக்கி வெளிப்படையாக உன் இடுப்பில் பயணிக்கத் தொடங்கி இருந்தது. மாதம் ஒரு முறையாவது உன்னைச் சந்திக்கும் அந்த நாளுக்காக நான் காத்திருக்கத் தொடங்கினேன். பள்ளி ஒன்றில் ஆசிரியராக பொறுப்பேற்ற நான் உன்னால் வரையப்படும் காதல் கடிதத்துக்காக தினமும் எதிர்பார்த்து காத்திருப்பேன்.


நீயும் சந்திக்கத் தவறினும் கடிதம் மூலம் பேச தவறுவதில்லை. அந்த கடிதங்களே எனது காதல் ஆதாரங்களாக பயணித்தது. ஆனாலும் எனது வாழ்க்கையோடு இணைந்து விட்ட சின்ன, சின்ன சந்தோசங்களுக்காக நான் தினமும் போராடத் தொடங்கினேன். உன்னைப் போராளியாக கண்டு இன்புற்ற கண்கள் இயக்கத்தை விட்டு வெளியேறி வா நாம் திருமணம் செய்யலாம் என்று தூண்டிய படி இருந்தன நீ மறுத்து கொண்டிருந்தாய்.


இத்தனையும் நினைவில் வருகுதுடா முகிலா, எங்கோ ஆழ புதைந்து போய் கிடந்த அந்த நினைவுகள் மீண்டு எழுந்து வருகின்றன. விடுதலை உணர்வு உன்னில் ஊறிப்போன ஒன்று. சந்தோஷ வாழ்வு என்னில் ஊறிப்போய் கிடந்தது. அதுக்கான ஏக்கத்தோடு நான் உன்னைத் தூண்டிக் கொண்டே இருந்தேன். ஆனால் நீ உன் நிலையில் இருந்து இறங்கி வருவதாக இல்லை இப்படியான நேரத்தில் தான் அந்த இனிய செய்தியோடு நீ என்னை பார்க்க வந்திருந்தாய். அண்ண திருமணத்துக்கு அனுமதி தந்துவிட்டார் என்றாய். என்னை விட உன் புன்னகையே அதிகமாக இருந்தது. பல துன்பங்கள் துயரங்களோடு பயணித்த உனது வாழ்வில் அடுத்த படிக்கு தலைவர் அனுமதி தந்ததை என்னோடு பகிர்ந்து கொண்டு அப்படி சந்தோசமாக இருந்தாய். வலிக்குதுடா முகிலா இப்போது எனது நிலை எண்ணி என்னை நானே சாகடிக்கலாம் என்ற நிலை தோன்றுகிறது.


அந்த இனிய நாளின் இறுதி மணித்துளிகள் கடந்து கொண்டிருந்தன. முதன் முதலாக என் அருகே நீ வந்தமர்கிறாய் என் கரத்தை உன் கரத்துக்குள் அழுத்தி கொண்டு ஒரு புன்னகையோடு கூறுகிறாய்.

“எதுக்கும் கவலைப்படாத நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை நான் தருவேன் ”

எனக்கு என்ன செய்வது தெரியவில்லை. அப்படியே உன்னை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த நான் திடீர் என்று உன்னை கட்டி அனைத்து கன்னத்தில் ஒரு முத்தமிடுகிறேன்.

“கயல் நான் போகவா ”

கொஞ்சம் இரு

உன்னை விட்டு அதன் பின் பிரிய எனது மனசு கேட்கவே இல்லை. நான் உன் கரத்தை விடவே இல்லை ஆனால் நீ வேலை இருக்கு என்று சென்று விட்டாய்.


திருமணக்கனவில் நானும் படுக்கையில் வீழ்ந்தேன். இந்த நாள் போல எனக்கு உன் நினைவுகளால் சூழ்ந்த இனிய நாட்கள் எதுவும் இல்லைடா. முகிலா உன் பெயரை உச்சரிக்க கூட நான் நாதி அற்றவள் என்பதை நான் அறிவேன் ஆனாலும் என்னால் அதை உச்சரிக்காமல் இருக்க முடியவில்லை.நீ சென்ற மறுநாள் அதிகாலை புலிகளின் குரலில் ஓர் செய்தி. “இரணைமடு பகுதியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் அரச வான்படை நடாத்திய கண்மூடித்தனமான வான்வெளித் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் சாவு பலர் படுகாயம்.” அந்த செய்தியின் மேலதிகமான ஒரு செய்தி என் காதுகளுக்கு அப்போது வந்திருக்கவில்லை.
எனது மனதின் உறுத்தலில் உன் நண்பன் மூலம் உன்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். எனக்குத் தெரியும் அந்த பிரதேசத்தை அண்டிய பகுதி ஒன்றில் தான் உனது முகாம் இருந்தது. உனக்கும் ஏதாவது ஆகி இருக்கலாம் என்ற மன சஞ்சலம் எழுந்து ஆடிய போது உன் நண்பனே அதை உறுதிப்படுத்தி என்னை நிலைகுலைய வைத்தான்.

“கயல்! முகிலனுக்கு காயம் மெடிக்ஸ்ல இருக்கான் “.


அவன் கூறிய வார்த்தைகளைத் தவிர எனக்கு எதுவுமே புரியவில்லை மயங்கி வீழ்ந்த நான் கண்முழித்து பார்த்தது மருத்துவமனையில். முகிலா உன் நிலை அறிய உன்னிடம் ஓடிவர நான் முனைந்த போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நீ தங்கி இருந்த இடத்தின் பாதுகாப்பு கருதி என்னை அனுமதிக்க மறுத்தனர். நானும் பல நாட்களின் போராட்டத்தின் பின் உன்னை பார்க்க வருகிறேன். இடுப்பு வரை போர்க்கப்பட்டிருந்த போர்வைக்குள் அந்த இரகசியம் மறைந்து கிடந்தது.
இருவரும் கண்ணீரை மட்டுமே விடுகிறோம் எதையும் பேச வார்த்தைகள் வரவில்லை உன் கரத்தை பிடித்து அழுத்தி குடுக்கிறேன். கவலைப்படாதே. எல்லாம் சரியாகும் நீ உடைந்து போய்விட கூடாது என்பதற்காக நான் என்னை தேற்றி கொண்டு உனக்கு ஆறுதல் தருகிறேன். முகிலா வரி உடையோடு மிடுக்கான இராணுவமாய் வலம் வரும் நீ அன்று கசங்கிய கந்தல் உடையாக சுருங்கி போய் கிடந்த கோலம் இறைவனை சபிக்கவே தோன்றியது.


பார்வை நேரம் முடிந்ததாக என்னை வெளியில் அனுப்பும் போது தான் உனக்கு உதவிக்கு நின்ற பையன் அந்த உண்மையை கூறுகிறான். “அக்கா அண்ணைக்கு இடுப்புக்கு கீழ இயங்காது ஆள் இப்ப பரலைஸ்” செத்துவிடனும் போல இருந்திச்சுடா முகிலா. என் வாழ்க்கை முடிந்து விட்டதாகவே உணர்ந்தேன். என் சின்ன சின்ன ஆசைகள் எல்லாம் இணைந்த சந்தோசமான வாழ்க்கை எல்லாமே அந்த கிபீர் தாக்குதலால் சிதைந்து போனதை என்னால் தாங்க முடியவில்லை. சாவதற்கு முடிவெடுத்து முயல்கிறேன். ஆனாலும் தாயாரால் காப்பற்றப்பட்டு உன்னை மறக்க சொல்லிய வாக்குறுதி வாங்கப்படுகிறேன்.


இந்த இடத்தில் தான் முகிலா நானும் தவறிழைத்தேன் தாய் கூறிய வாரிசுகளின் ஆசை என்னையும் ஆட்கொண்டிருந்தது. என்பது நியமே. அதையே மீண்டும் மீண்டும் எனது தாய் உரைத்த போது எனது மனதும் உன்னை விட்டு வேறு ஒருவனை தேட தொடங்கியது. உனக்காக எதையோ எல்லாம் இழக்க துணிந்த நான் ஒரு பிள்ளை பெற்றுக் கொள்ளும் ஆசையில் உன்னை விட்டு பிரிந்து விட துணிந்தேன் அன்று. முகிலா இந்த செய்தியை அறிந்து நீ எப்படி துடித்திருப்பாய் என்பதை நான் அறிவேன் ஏனெனில் உன் காதல் நியமானது. என் காதல் ஒரு பிள்ளைக்காக பொய்யாகி போனது. இன்று அழுகிறேனடா அன்று நான் எடுத்த அந்த முடிவு எத்தனை கொடியது என்பதை நினைத்து இன்று அழுகிறேனடா.


தாய் மாமன் மகன் என்று கரம் பிடித்தவன் ஒரு ஆண்மை அற்றவன் முகிலா. பெண்மையை மதிக்கத் தெரியாதவன். குடியும், கும்மாளமும் என்று வாழ்பவன். அவனுக்கு நான் ஒரு இயந்திரம் பணமும், ஆண்மை முறுக்கேறும் போதெல்லாம் சுகமும், வழங்கும் இயந்திரம். உன்னை விட்டு, என் தேசம் விட்டு பிரிந்து ஜேர்மன் வந்த போது கொஞ்சமும் வலிக்கவில்லை எனக்கு. ஒரு இயங்காநிலையில் இருப்பவனுக்கு வாழ்க்கைப்பட்டு சீரழிவதை விட வெளிநாட்டு வாழ்க்கை சுகபோகமானது என்பது மட்டுமே நினைவில் இருந்தது. அதனால் மனதில் மகிழ்வுடனே அவனை அணைத்தேன்.

ஆனால் என் வாழ்வில் நான் அனுபவித்திராத அத்தனை கொடுமையையும் நான் அனுபவிக்கத் தொடங்கினேன். குடித்து விட்டு வரும் அவனுக்கு சுகமளிக்கும் அல்லது பணமில்லை எனில் “சீதனம் தரல்ல தானேடி உன் கொண்ணன் நல்லாத்தானே இருக்கிறான் போய் வாங்குடி” என்று பண இயந்திரமாகவும் நான் மாறி போனேன்.


சொல்ல வெட்கமாக இருக்குடா முகிலா என் குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் அவன் என்னை சுகமளிக்க வற்புறுத்தினான். அத்தகைய கொடியவன் அவன். இல்லை இல்லை கொடியவன் அவன் இல்லை நானே கொடியவள். இந்த குழந்தை பிறப்புக்காகத் தானே உன்னை விட்டு இங்கே வந்தேன். அதை நான் இப்போது அனுபவிக்கிறேன். முகிலா இப்போது அவனது தொல்லைகள் எல்லை மீறி விட்டன என்னால் பொறுத்து கொண்டு வாழ முடியவில்லை. என் பிள்ளைகள் நால்வரும் அவனைக் கண்டு அச்சம் கொள்கின்றனர்.

அதனால் தான் இப்போது நான் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்கிறேன் 27 வயதில் நான்கு பிள்ளைகள் நடந்த திருமணம் முறிவு பெற்று தனிமை வாழ்க்கை. இப்போது தான் உன் நினைவுகள் அலை மோதுகின்றன. உன்னை விட்டு பிரிந்த வேதனை என்னுள் எழுகிறது. உன் தங்கை என் அருகில் தான் வசிக்கிறாள். அவளது கணவனும் ஒரு கால் இல்லாத போராளி என்று அறிந்தேன் என்னைக் காண்பாள் ஆனால் பேசக்கூட மாட்டாள் அப்போதெல்லாம் வலிக்குமடா. உன்னை விட்டு வந்த அன்றைய நாள் நெஞ்சில் முள்ளாகி குத்துமடா முகிலா.

நீயும் இப்போது திருமணம் செய்து விட்டதாக அறிகிறேன். அந்த பெண் குடுத்து வைத்தவள் என்பதை நான் அறிவேன். ஏனெனில் உன்னால் அவள் வாழ்க்கை பிரகாசம் அடையும் அது மட்டும் எனக்கு வெளிச்சம். நீ இப்போது பெரிய கணணி கற்கை நெறி பள்ளி ஒன்றை நடாத்துவதாகவும் அறிகிறேன். தொடர்ந்து பயணி உன் வாழ்க்கை என்றாலும் சிறப்பாக அமையட்டும் இயங்காமல் இருக்கும் உனது கால்கள் விரைவில் சுகமடைய கடவுளை வேண்டுகிறேன்.


ஒரே ஒரு வேண்டுகோள் உன்னிடம் அடுத்த வருடம் நாட்டுக்கு வர இருக்கிறேன். அங்கே வந்தால் உன்னை ஒரு தடவை வந்து பார்க்க வேண்டும் போல் உள்ளது. உன் மனைவியிடம் அனுமதி கேட்டுச் சொல் உன்னையும், உன் மனைவியையும் என் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதுவும் உனக்கு மிக பிடித்த பெயரில் வாழ்ந்து வரும் என் மூத்த பெண் பிள்ளை நிலாவினிக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் அனுமதி தருவாயா என்ற எதிர்பார்ப்போடு முடிக்கிறேன் முகிலா.

அன்பு வணக்கங்களுடன்

கயல்விழி

எழுதியது இ.இ. கவிமகன்