நான் உங்களை பத்து வருடங்களாக காணவில்லை. நீங்கள் எங்களைப் பிரிந்து சென்றதால் நாங்கள் மிக கவலையாக இருக்கின்றோம் அப்பா. என் அப்பப்பாவும் என்னை விட்டு சென்று விட்டார். அவரை நான் நேரே பார்த்ததில்லை ஆனால் தினமும் தொலைபேசியில் என்னோடு பேசி மகிழ்வு தந்தார். இடைநடுவில் அந்த மகிழ்வைப் பறித்தெடுத்துச் சென்றுவிட்டார். 

முள்ளிவாய்க்கால் மண்ணில் நான் கைக் குழந்தையாய் இருந்த போது, மரணத்தின் வாசலை அடிக்கடி தொட்டு வந்ததாய் அம்மா சொல்வா. விடியலுக்காய் நீங்கள் விடியல் பறவையாய் பறந்த போது எனக்கு உங்கள் மடி அமர்ந்து சுகம் காண என்னால் முடியவில்லை. அதைப் போலவே இன்றும் உங்களை மனம் முழுக்க சுமந்து கொண்டு ஒற்றை மகனாய் வாழ்வதை நீங்கள் ஏன் அறியவில்லை. 

என்னைப் போலவே அம்மாவும் அப்பம்மாவும் உங்களை பிரிந்து கஸ்டப்படுகினம். மற்றப் பிள்ளைகள் தமது பெற்றோர் இருவரோடும் வரும் போது நான் அம்மாவோடு மட்டும் உங்களை எதிர்பார்த்து காத்திருப்பேன். 

பள்ளிக் கூடத்தில் எல்லோரும் அப்பா பற்றி கதைக்கும் போது நான் வெக்கித்துப் போயிருப்பேன். வீட்டில் படிக்கும் போதெல்லாம் உங்களின் முகம் தான் புத்தகத்தில் தெரியும். எனக்கு அறிவுரை கூறி என்னை வளர்த்திருப்பீர்கள். 

நல்ல பெறுபேறுகளை நான் பெறும் போதெல்லாம் பகிர்நது கொள்ள நீங்கள் இல்லை என்று கவலையில் நான் கிடப்பேன். நீங்கள் வாழ்த்தினால் என் மனம் நிறைவடையும் அப்பா. 

அப்பா 18.05.2009 நீங்கள் இறுதியாக கண்டு என்னை கட்டி அணைத்து விழிகளை கசக்கியபடி பிரிந்து போனதை நான் கண்டும் நினைவில்லை. ஆனால் அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் நீங்களாகி நிற்பதால் உங்களை அறிய தடைகள் இல்லை. 

அப்பா என் வலிக்கு மருந்து நீங்கள் தான். உங்களின் வருகை ஒன்று தான் அதற்கு வழி. காத்திருந்தது போதும் அப்பா. வழிகள் நெடுகிலும் உற்று உற்றுப் பார்க்கும் கொடுமையை தொலைத்துவிட வேண்டும் அப்பா. தயவோடு வந்திடுங்கள் என்னோடு வாழ்ந்திடுங்கள்.

அன்புடன் உங்கள் மகன்…