அன்பான தந்தையே…
உங்கள் நினைவலைகள்
ஒவ்வொரு நொடியும்
எங்களை வாட்டி வதைக்கின்றன

வார்த்தையால் வழி நடாத்தி
அன்பினால் ஒளி காட்டி
எம் நெஞ்சங்களில் என்றுமே
நிறைந்தவர் நீங்கள் அப்பா

நீங்கள் இல்லாத நாளை
கனவிலும் நினைத்ததில்லை
இன்று நீங்கள் இல்லாத நாட்கள்
பத்து ஆண்டுகளை கடக்கிறது.

ஈரைந்து ஆண்டுகளில்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு நொடியும்
எங்கள் துன்பம் ஏராளம் அப்பா

வேதனைகளை சாதனையாக்கி
சங்கடங்களை சருகாக்கி
வெற்றி படி ஏற தினமும் உங்கள்
நினைவுகளோடு நடக்கின்றோம்

உங்கள் அன்பென்ற பெரும்
கடலில் விளைந்த இரு முத்துக்கள்
நீங்கள் இல்லாது தனித்துவிட்ட
அம்மாவின் சொத்துக்கள்

அகரம் சொல்லித் தந்த போதும்
அனலை நெஞ்சில் சுமந்த போதும்
இன்று சிகரம் ஏறி நிற்கும் போதும்
நீங்கள் அருகில் இல்லை அப்பா.

நினைவிருக்கு அப்பாவே!
எனது சிறுவர் பள்ளியில் விளையாட்டில்
முதலிடம் பெற்றதற்கு முதல்
பரிசுகள் உங்கள் கையால் வாங்கினேன்

இன்று முதலிடங்களை பல பெற்று
பரிசுகளும் பெறுகின்றோம்
அருகிருந்து அன்பு தர
நீங்கள் மட்டும் இல்லையப்பா

நீங்கள் இல்லா ஒவ்வொன்றும்
உயிரற்ற வெறுமை அப்பா
காலங்கள் கனியாதா – எம்
கலக்கம் தீராதா?

எம் அருகில் நீங்கள் இல்லை
அம்மாவோடு நீங்களும் எம்மருகில்
இருந்திருந்தால் எம்
சாதனைக்கு ஏது எல்லை?

தொலைத்து விட்டு அழுகின்றோம்
அப்பா எனும் பொக்கிசத்தை
முள்ளிவாய்க்கால் எனும் ஊரில்
முத்தாய் உன்னை தவற விட்டோம்.

மே திங்கள் ஒன்பதாம் நாள்
மாலை நேரத்தை எங்களால்
என்றென்றும் மறக்கவே முடியாமல்
கண்கள் குளமாகின்றதப்பா.

உங்கள் அன்புக்கும்
உங்கள் அமைதிக்கும்
உங்கள் கனிவுக்கும்
உங்கள் உறுதிக்கும்
உங்கள் பலத்துக்கும்
உங்கள் பொறுமைக்கும்
உங்களை போற்ற
ஓர் நாள் போதுமா அப்பா?

தினமும் பல தடவை
போற்றப்பட வேண்டியவர்
நீங்கள் அப்பா உங்களைப் பாட
எங்களுக்கு புலமை இல்லை.

உங்கள் இழப்பை எங்களால்
ஈடு செய்ய முடியவில்லை
நாங்கள் வாழும் காலம் வரை
உங்கள் எண்ணமும்
எங்களோடு உயிர்
வாழும். தந்தையே…!!!
இது உறுதி இது உறுதி