உங்களோடு நான் வாழ்ந்த நாலு வருடங்களில் கூட நீங்கள் வீட்டுக்கு வந்து என்னோடு இருப்பது எப்போதோ ஓரிரு நாட்கள் தான். நீங்கள் வந்தால் உங்கள் மடியை விட்டு இறங்காது உங்களோடையே இருப்பேன். அம்மாவை கண்டு கொள்ள மாட்டேன். மழலை மொழியில் எதையோ எல்லாம் பேசுவேன். இதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்போது நினைவில் இல்லை. அதைப் போலவே என்னைத் தூக்கி உங்கள் மடியில் வைத்தபடி நாங்கள் இருந்த பங்கருக்குள் இறுதியாக கதைத்த கதை இப்போது எனக்கு நினைவில்லை. அம்மாவிடம் கேட்டாலும் அதைப்பற்றி கதைக்க முடியாது அழுதிடுவா அதனால் அதைப் பற்றி இப்போதெல்லாம் நான் கேட்பதில்லை.

எனக்குள்ளே உங்களுக்குச் சொல்லுவதற்கு ஆயிரம் விடயங்கள் இப்போது உண்டு அப்பா. நீங்கள் இருக்கின்றீர்களா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஏனெனில் உங்களின் மகள் கடந்த வருடம் நாம் வாழும் நாட்டில் நடந்த கணிதபாட பரீட்சை ஒன்றில் நாடு தழுவிய அளவில் சிறந்த முதல்நிலை மாணவியான சந்தோசத்தை உங்கள் மடியில் தலை வைத்துப் படுத்தபடி உங்களுக்கு சொல்ல வேண்டும். அப்படி நான் பெறுபேறெடுத்த போது உங்களை அறிந்த எல்லோரும் அப்பாவைப் போலவே கெட்டிக்காறப் பிள்ளை என்று பாராட்டினார்கள். அப்போதெல்லாம் நீங்கள் அருகில் இல்லையே என்ற ஏக்கமே இருந்தது. இப்போதும் இருக்கிறது அப்பா.

அதைப் போல உங்களின் மகள் வரையும் ஓவியங்களை உங்களுக்குக் காட்டி மகிழ வேண்டும். அதைப் போல நான் வெற்றி பெறுகின்ற ஒவ்வொரு தருணங்களையும் உங்களுக்கு சொல்லி மகிழ வேண்டும். எனக்கு நீங்கள் மீண்டும் அருகில் வருவீர்களா என்று தெரியாதப்பா ஆனால் வாருங்கள் அப்பா. அப்பா நாலு வயதில் என்னை விட்டு நீங்கள் பிரிந்த அக் கணத்தில் இருந்து இப்போது வரை நீங்கள் எங்கே என்ற கேள்வி தினமும் எழும். அப்பா இருந்திருந்தால் இன்னும் நான் நல்லா படிப்பேன் என்று கூட அம்மாவோடு சண்டை போட்டிருக்கிறேன். அதைக் கேட்டு அம்மா அழுதிடுவா. அப்போது தான் உங்களை விட்டுப் பிரிந்ததில் இருந்து அம்மாவும் எவ்வளவு கவலையோடு இருக்கின்றா என்பது எனக்குப் புரியும். சிறிய வயதோ என்னவோ அம்மாவோடு அடிக்கடி சண்டை வரும் போதெல்லாம் அவ்வார்த்தையை நான் பிரயோகித்திருக்கிறேன். ஆனால் இப்போது பத்து வருடங்களைக் கடந்து விட்ட பின் அம்மாவின் மனநிலையைப் புரிந்து கொள்ளக் கூடிய நிலைக்கு வந்ததாலோ என்னவோ மனதுக்குள் வலித்துக் கொண்டிருக்கும் உங்களின் நினைவால் அம்மாவுடன் சண்டை போடுவதில்லை. அம்மாவுக்கு அவ்வார்த்தையை கூறுவதில்லை.

அம்மாவின் வலிகள் இப்போது எனக்குப் புரிகிறது. நீங்கள் எங்களுடன் இருந்திருந்தால் அம்மா நிம்மதியாக இருந்திருப்பார். அது மட்டும் நியம் அப்பா. ஆனால் அவ்வாறு நாங்கள் இருவருமே இல்லை அப்பா. எதிர்பார்த்து எதிர்பார்த்து இப்போதெல்லாம் எதிர்பார்ப்பது தவறோ எனத் தோன்றுகிறது.

அப்பா உங்களுக்குத் தெரியாது. நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்த பின் நாம் சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருந்தோம். நான் பயத்தில அம்மாவை இறுக பற்றிக் கொண்டிருந்தேன். பார்க்கும் இடங்கள் எங்கும் ஆமி பெரிய துவக்குகளோட நின்டாங்கள். எனக்கு அவங்களை கண்டு பழக்கமே இல்லை. அவங்கள் எங்களை சுட்டுப் போடுவாங்களோ என்று பயமா இருந்தது. அதே நேரம் உங்களின் நினைவில அம்மா அழுது கொண்டே இருந்தா. எனக்கு அம்மா ஏன் அழுகிறா என்றது கூட புரியவில்லை. நான் அம்மாவை இறுக்கமா கட்டிப் பிடிச்சபடி இருந்தேன்.

அம்மம்மா தான் அம்மாவுக்கு “பிள்ள அழாதடி அவர் வருவாரடி” என்று ஆறுதல் சொன்னவா. ஆனால் அம்மா அழுதபடியே தான் இருந்தா. அப்பா எனக்கு பயங்கர பசி. தண்ணியும் சரியா விடாச்சுது அம்மாவ கேட்டன் ”அம்மா தண்ணி தாங்கோ” என்று. அம்மா மீண்டும் அழத் தொடங்கி விட்டா எனக்கு என்ன பண்ணுறது என்று தெரியவே இல்லை அம்மாவ கட்டிப்பிடிச்சு கொண்டு அம்மாவின் கண்ணை துடைச்சு விட்டேன். அம்மாவை விட்டு இறங்கவே இல்லை. கட்டிப்பிடிச்சபடியே இருந்தன். பயங்கரமா பசிச்சுது அப்பா. ஆனால் அம்மாவிடம் கேட்க பயமா இருந்திச்சு. அம்மா திரும்பவும் அழுதிடுவா என்ற பேசாமல் இருந்தன்.

அப்பத் தான் பக்கத்தில இருந்த சித்தி யாரோ ஒருவரிடம் 1000 ரூபா கொடுத்து வாங்கியதாக ஒரு டின் மீனைக் (Tin Fish) கொண்டு வந்து பச்சையாக சாப்பிட தந்தார். அந்த மணம் வயிற்றை குமட்டினாலும் பசியும் தண்ணீர் விடாயும் என்னால் அந்த மீனையும் அதன் சாறையும் ஒதுக்க முடியாது இருந்தது. அப்பிடியே அதனை சாப்பிட்டு அச் சாற்றையும் குடித்தேன். அன்றில் இருந்து எனக்குப் டின் மீனையே பிடிக்கவில்லை. இன்றுவரை சாப்பிடுவதே இல்லை.

அதை சாப்பிட்ட பின் எனக்கு இன்னும் பயங்கரமா தண்ணி விடாச்சுது. அம்மாவ கேட்டன். “அம்மா வாங்கோ தண்ணி வாங்கி வருவம் “ என்று சரி என்று ஆமிக்காரங்கள் பெரிய பவுஷரில தண்ணி குடுத்த இடத்துக்கு கூட்டிப் போனா. அப்ப அதில தண்ணி குடிக்க போன எங்கட அண்ணாக்கள் அக்காக்கள ஆமிக்காறர் அடிச்சு உதைச்சாங்கள். தடிகளாலும் கை, கால்களாலும் அடிச்சாங்கள். அவை அடி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்திச்சினம். பாவம் அப்பா அவை தண்ணி குடிக்கிறதுக்காக கூட ஆமியட்ட அடி வாங்கிச்சினம்.

அதை பார்த்தவுடன் எனக்கு தண்ணி குடிக்க பிடிக்கவில்லை அம்மாட்ட சொன்னன். “அம்மா எனக்கு தண்ணி வேண்டாம். வாங்கோ போவம் ஆமின்ட தண்ணி வேண்டாம். அப்பா சொன்னவர் ஆமிக்காறன் கூடாது என்று. வாங்கோ அம்மா போவம்” நான் சொன்னவுடனே அம்மாவும் அங்க நிக்காது வந்திட்டா. அதுக்குப் பிறகு அந்த இடத்திலையே 2 நாளா இருந்தம். எதுவுமே சாப்பிடவில்லை பயங்கரமா பசிச்சது. ஆனால் சாப்பிட எதுவும் எங்களிடம் இல்லை. அதுக்கு பிறகு தான் பஸ்ல ஏற்றிக் கொண்டு எங்கையோ கொண்டு போனவங்கள்.

அங்க போய்த்தான் அம்மா வாழைப்பழமும் பாணும் வாங்கி தந்தவா. 2 நாளைக்குப் பிறகு அப்பத் தான் சாப்பிட்டனான். அப்பா பசி என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த சின்ன வயசுப் பிள்ளைக்கு 4 வயசிலையே பசியையும் உங்களின் பிரிவையும் தந்துவிட்ட இக் காலத்தை வெறுக்கிறேன் அப்பா. உங்களின் பிள்ளையாக நான் இருக்க வேண்டும். நீங்கள் என்னுடன் இருந்தால் மென்மேலும் வளருவேன் அப்பா. வர மாட்டீர்கள் என்று மனசு ஒருபுறம் சொன்னாலும் வர வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகிறேன் அப்பா. வந்திடுவீர்களல்லவா…!