“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே… “ இது சினிமாவில் வரும் பாடல் வரிகள் என்றாலும் மிக மிக உண்மையான வரிகள். இதற்கு என் அப்பா பொருத்தமான உதாரணம். அவர் வார்த்தைகளில் எங்கள் எதிர்காலத்துக்கான நல் வழியே அதிகம் இருக்கும். அவர் உளியாக இருந்தே எம்மை செதுக்கினார்.


“ உளி விழுகையில் வலி என நினைக்கும் எப்பாறையும் சிலையாவதில்லை” என்பதைப் போல அப்பாவின் சொற்களில் இருக்கும் கடினமும் இறுக்கமும் வலி என்று நாம் நினைத்திருந்தால் உயர்ந்திருக்க மாட்டோம் என்பது தான் உண்மை. “அப்பா…” என் மீது அதிக அக்கறையும், அன்பும் கொண்டவர். சாதாரண குடும்பங்களைப் போலவே நானும் அவர் மீது அதிக அன்பை
கொண்டிருந்தேன். எப்போதும் என் அம்மா கூறுவதைப் போல நான் அப்பா பிள்ளை தான். அதில் எனக்கு எதிலும் இல்லாத பெருமையும் சந்தோசமும். என் அப்பா தான் என் முதல் ஆசான், முதல் காதலன், முதல் தோழன்… இவ்வாறு பல முதல் என்ற வார்த்தைகளுக்கு சொந்தமானவர்.

என் அப்பா கிருஸ்ணபிள்ளை சாந்தகுமார். ஒரு அரசாங்க பாடசாலையில் பணி புரிந்த வரலாற்று ஆசிரியர். 2009 இற்கு முன்னான நிழலரசு காலத்தில் அவரும், அம்மா 2 தம்பிகள் அம்மம்மா மாமா என அழகான குட்டிக் குடும்பமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் திட்டமிட்டு வல்லாதிக்க சக்திகள் எனது குடும்பத்தின் மொத்த சந்தோசத்தையும் 2009 ஆம் ஆண்டு பறித்தெடுத்தது.

16 வயது இளையவளாக நான் பள்ளியில் பல கனவுகளை சுமந்து வாழ்ந்த காலம் அது. க.பொ.த சாதாரண தரத்தில் கற்றுக் கொண்டிருந்த போதே என் இலக்கு ஒன்றே ஒன்று தான். எமது தமிழீழ நிழலரசின் நீதித்துறை தான். சட்டவாளராக, நீதியாளராக… என எம் தாயகத்தின் சட்டத்துறைக்குள் பணியாற்ற வேண்டும். இக் கனவு கூட இந்த கொடியவர்களால் நிர்மூலமாக்கப்பட்டு மாத்தளன் மண்ணோடு மண்ணாகி விட்டது. அடிக்கடி என் அப்பா இவ் விலக்கை கூர்மைப் படுத்திக் கொண்டே இருப்பார். “நீ லோயராக வேணும்…” இதை மட்டுமே எனக்குள் விதைத்தவாறு இருந்தார். அவர் கனவோ, என் கனவோ இன்றுவரை நிறைவேறவில்லை.

வழமையாக என் பிறந்தநாள் வந்தால் வீட்டில் கோழிக்கறி தான் சமையலாக இருக்கும். எல்லோரும் ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டு சந்தோசமாக வாழ்ந்த காலத்தை தொலைத்து, எப்போது மரணிப்போம் என்று தெரியாத நிலையில் ஒவ்வொரு நொடிகளையும் கடந்து கொண்டிருந்த போது என் பிறந்தநாள் வருகிறது. அப்போது மாத்தளனில் நாம் இருக்கின்றோம். திரும்பும் இடமெங்கும் எறிகணைகளும், வான் தாக்குதல்களும் நிறைந்து போய் ஊரே சிதறிப் போய்க் கிடக்கிறது. இரத்த வாடை தான் அதிகம் காற்றோடு கலந்து வருகிறது. இந்த நிலையிலும் என் அப்பா யாரிடமோ ஊர்க் கோழி ஒன்றை வாங்கி வந்தார்.

அச் சாப்பாடு தான் அவரும் நாமும் சேர்ந்து சாப்பிடும் இறுதிச் சாப்பாடு என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அது தான் நடந்தது. என் பிறந்தநாள் சாப்பாடுதான் நாம் சேர்ந்து சாப்பிட்ட இறுதி உணவு. நினைத்தாலே நெஞ்சம் வெடிக்கும் கணம் அது. என் தந்தையோடு வாழ்ந்த அக் கணத்தை தாங்க முடியாத வேதனையோடு தான் நான் மறக்க முடியாமல் தவிக்கிறேன்.

என் அப்பாவிடம் எம்மை விட எம் நிழலரசின் மீது உள்ள பற்றுதலை யாராலும் மாற்ற முடியாது. நாம் எத்தனையோ தடவை கெஞ்சி மன்றாடிப் போர்த்தோம். அவரின் செல்லப்பிள்ளையான நான் அப்பாவை விட்டுப் பிரிய மாட்டேன் என அழுது புரண்டு கெஞ்சினேன். ஆனால் என் தந்தைக்கு அக் குரலை விட, தேசத் தாயின் அழுகுரலே சத்தமாக கேட்டது. அதனால் தான் 20.04.2009 அன்று நாம் அவரை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை வந்தது. பிரிந்து விட்டோம். “நாங்கள் தோற்றுப் போக மாட்டோம். நாங்கள் சாக மாட்டோம். இது தற்காலிக தோல்விகள் தான். எமது படையணிகள் இச்சண்டையில் நிச்சயம் வெல்லும் அதனால் நாம் நிம்மதியாக வாழலாம்” என்று பல தடவை உறுதியாக சொல்லிய என் தந்தையை நாம் அன்று தனித்து விட்ட நிலையில் பிரிந்து விட்டோம்.

அவரது பிறந்தநாள் அடுத்தநாள் (21.04.2009) வந்த போது அவரது முகத்தை பார்க்கக் கூட முடியாதவளாக சிங்களத்தின் முகாம் ஒன்றின் திறந்தவெளிச் சிறையில் இருந்தோம். என்னால் படிக்க முடியவில்லை. நினைவுகள் முழுக்க அப்பாவே நிறைந்து கிடந்தார். அப்பாக்கு என்ன ஆச்சுதோ? அப்பா சாப்பிட்டாரோ? என்ன செய்யுறாரோ ? என்று மனசு முழுக்க அவரின் நினைவே மட்டும் சுமந்து படிக்க கூட முடியாத நிலையில் நான் இருந்தேன்.

அப்பாவைத் தேடித் தேடி களைத்துப் போனோம். சிங்கள தேசத்தால் செய்யப்பட்ட இனவழிப்புப் போர் முள்ளிவாய்க்காலில் நிறைவுற்ற போது வட்டுவாகல் எனும் இடத்தில் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்த அப்பா இன்றுவரை எம்மிடம் வரவே இல்லை. அங்கே சரணடைந்து எனக்கு எவ்வாறு தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். அப்பா சரணடைந்த அந்த இடத்தில் அப்பாவைக் கண்ட அப்பாவின் விருப்பத்துக்குரிய மாணவன் ஒருவர் உறுதியாக கூறினார். அப்பா தன்னை “கவனமாக இருடா, பயப்பிடாத இனி என்ன நடந்தாலும் நடக்கட்டும். மாஸ்டர கவனமாக பாருடா “ என்று அவரது தந்தையைப் பற்றி கூறிவிட்டுச் சென்றாராம். யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியாத நிலையிலும் தான் நேசித்த மாணவனோடு பேசிவிட்டுத் தான் சென்றிருக்கிறார். இம் மாணவன் மட்டுமல்ல பல உறவுகள் அப்பாவை வட்டுவாகல் பாலம் கடந்து இராணுவம் மக்கள் அனைவரையும் அடைத்து வைத்திருந்த முல்லைத் தீவு வெளிக்குள் கண்டிருக்கிறார்கள். அப்பா அவர்களோடு கதைத்து விட்டுத் தான் சென்றிருக்கிறார். அதன் பின்னாலே அப்பாவும் அவருடன் கூடி நின்ற பலரும் காணாமால் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று வரை எந்த தகவலும் இல்லை. தேடித் தேடி என் கால்களும், தாயின் உடல் நலமும் கெட்டுப் போய்விட்டது. இப்போது என் தம்பிகள் பெரியவர்கள் ஆகி விட்டார்கள். அவர்கள் அப்பா பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லாமல் தவிக்கிறேன். யாரிடம் முறையிடுவது? மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடமா? சர்வதேசத்திடமா? அல்லது அப்பாவை வலிந்து காணாமல் போகச் செய்த இந்த கேடுகெட்ட இலங்கை அரசிடமா? என்ற வினாவுக்கு, நாம் யாரிடம் முறையிடவில்லை? என்ற வினாவே விடையாகிறது. சர்வதேச ஊடகங்கள் தொடக்கம் அமைப்புக்கள் வரைக்கும், அரச , அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடக்கம் சர்வதேச அரசுகள் பலவற்றுக்கும் எம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட என் அப்பாவை பிரிந்து 10 வருடங்களை கடந்து செல்லத் தான் முடிந்ததே தவிர, அப்பா எங்கே என்று அறிய முடியவில்லை. ஆனாலும் “அப்பா வருவார் “ என்ற நம்பிக்கை மட்டும் என் வாழ்க்கையில் விட்டுப் போகாது… அந்த நாளுக்காகவே நான் இப்போதெல்லாம் காத்திருக்கிறேன். ஏனெனில் அவரது மகள் அவரின் ஆசையான சட்டவாளராக வர முடியவில்லை என்பதற்கு மன்னிப்பும், அவரது வழியிலையே ஆசிரியையாக வந்ததற்கான வாழ்த்தையும் பெற வேண்டும்…

தாயகனின் மகள் தர்சிகா…