உலகம் திரும்பிப் பார்க்கிறது.

ஓரிரு கிழமைகளாக உலக நாடுகளின் அரசியல் பரப்பிலும், சூழலியல் பாதுகாவலர்களின் கூக்குரல்களும், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் தொண்டு நிறுவனங்களின் அறிக்கை மேல் அறிக்கைகளும், இயற்கை விரும்பிகளின் கண்ணீர் கருத்துக்களும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருந்த #PrayForAmazonia என்கின்ற hashtag நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு, உலகம் முழுவதும் அது பற்றிய பல ஆயிரம் கேள்விகளையும், சந்தேகங்களையும், மனக்கொதிப்புகளையும், எதிர்காலச் சந்ததியின் உயிர்மூச்சு பற்றிய பயத்தையும் ஏற்படுத்திச் சென்றிருந்தாலும், அது என்னவோ அந்த “அமேசான் காட்டுத்தீ” என்கின்ற சம்பவத்துடன், எங்கோ தொலை தூரத்து நாடொன்றில் வசித்துக் கொண்டிருக்கும் என்வீட்டு வாசல் படியும் சம்பந்தப் பட்டிருக்கிறது என்பது கொஞ்சம் சஞ்சலத்தையும், மனப்பயத்தையும் தந்துவிட்டு சென்றிருக்கிறது.

என்ன? என்வீட்டு வாசல்படியும் சம்பந்தமா? அந்த ஆக்ஸிஜன் பிரச்சனையா? என்று நீங்கள் கேட்கலாம். மரங்கள் காடுகள் அழிக்கப்பட்ட பின்னால் வரும் ஆக்ஸிஜன் பிரச்சனை என்பது, எதிர்காலப் பிரச்சனை. அப்போது நீங்களும் நாங்களும் இருக்கப் போவதில்லை. ஆனால், சம்பந்தப் பட்டிருப்பது இன்றைய எமது வாசல்படி. அன்றாடம் ஏனோதானோ என்றும், “எமது பிரச்சனை” என்ற தெளிவின்றி அது அவர்களது பிரச்சனை என்றும், அது மதப் பிரச்சனை என்றும் அன்றாடம் எமது வீட்டு வாசல்படியைக் கடந்து கொண்டிருக்கிறோம். தேடலாம், அமேசான் காட்டுத் தீயில் இருந்து எம்வீட்டு வாசல்படி வரை. அமேசான் காடுகளில் பரவியிருக்கிற தீ வெறும் காட்டுத் தீ மட்டுமல்ல. அந்த தீ பற்றி புரிந்து கொள்ள பல சமகால நிகழ்வுகளை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதனால் இந்த கட்டுரை நீண்டதாக இருக்கலாம். இயலுமானவரை குறுகிய பரப்பில் உங்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறேன்.

இது போல நீங்கள் அன்றாடம் கடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் பின்னால் யாரோ சிலரின் கொள்ளை இலாபம் இருக்கிறது என்றே நீங்கள் கடந்தாக வேண்டும். இதற்கெல்லாம் தீர்வில்லையா? என்றால், இருக்கிறது. அதனை நோக்கி பயணிப்பது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. நீங்கள் உங்கள் விருப்பப்படி பயணிக்க இந்த உலகமும் சமூகமும் ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை. மனத்திடமும், உடல்பலமும் இருந்தால் மட்டுமே நீங்கள் இப்படியான உலகத்தில் இருந்து விலகி வாழ்ந்துவிட முடியும்.

பிரேசில் என்றொரு நாடு.

பிரேசில். எமக்குள் அறிமுகமாகியது பள்ளிப் பருவ காலத்தில் சமூகக்கல்விப் பாடத்திலாக இருக்கலாம். உலகிலேயே மிகவும் அகலமான நதி என்றால் அமேசான் நதி என்றும், அந்த நதி சிலகாலங்களில் சில இடங்களில் பின்னோக்கி கூட பாயும் என்றும், அது அள்ளிப் போட்ட வளத்தில்தான் பரந்து விரிந்து கிடக்கிறது அந்த வளமான அமேசான் மழைக்காடுகள் என்றும் கற்ற நினைவு. அத்தனையும் தாண்டி அறிவு தெரியும் காலத்தில் உதைபந்தாட்டத்தில் பிரேசில் உலகக் கிண்ணத்தை வென்ற இன்னுமோர் அறிமுகமும் எமக்குள் உண்டு. இவற்றைவிட அவ்வளவு அதிகம் நாம் பிரேசில் பற்றி கேள்விப்பட்டதும் இல்லை. தேடியதும் இல்லை.

2014 இல் நடந்த உலகக் கோப்பை உதைபந்தாட்ட நிகழ்வையும், அடுத்து 2016 இல் உலக ஒலிம்பிக் நிகழ்வையும் செம்மையாக நிகழ்த்தி பெயர் பெற்றிருந்தது இந்த பிரேசில். வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடு என்பதையும் தாண்டி, எதிர்வரும் ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாக வரக்கூடும் என எதிர் பார்க்கின்ற ஒரு நாடாகவும் இருக்கிறது. இன்று உலகத்தில் ஆகப் பெரிய நிலப்பரப்பிலும், மக்கள்தொகையிலும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டில், மனித இனங்களின் ஆகக் கூடிய தொல்லியல் வரலாறு 11000 வருடங்களாக இருக்கின்றது. (ஆனால் இலங்கையில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்டதில் கட்டுக்கரை அகழாய்வின்படி 2600 வருடங்கள் மட்டுமே என்பதையும் கவனிக்க.) பிரேசிலில் மிக நீண்ட மனித இனப்பரம்பல் வரலாற்றைக் கொண்ட அங்கே ஏற்கனவே குடியிருந்த பூர்வீக பழங்குடியினங்களை காடுகளுக்குள் கலைத்துவிட்டு, ஐரோப்பாவில் இருந்து நாடுபிடிக்க கிளம்பி அங்கு சென்று குடியேறிய பல ஐரோப்பிய நாட்டவர்கள் இருந்தாலும், போர்த்துக்கல் நாட்டின் குடியேற்ற நாடாகவே அது இருந்தது. September 7, 1822 இல் தமது சுதந்திர பிரகடனத்தைச் செய்து அரச மொழியாக போர்த்துக்கீசை ஆக்கிக் கொண்டார்கள். 1889 இல் குடியரசு நாடாகவும் மாற்றியமைத்தார்கள்.

அமேசான் காடுகள்.

“அமேசான் காடுகளுக்குள் இருந்து பெறப்பட்ட அபூர்வ எண்ணெய்” மொட்டைத்தலை என்றாலும் இந்த எண்ணெய் வைத்து சிலநாட்களில் அடர்ந்த கூந்தலைப் பெறலாம் என்ற விளம்பரம். இன்னும் நினைவிருக்கிறது.

ஒரு நண்பர் போனவருடம் வரையும் அதனை உபயோகித்துக் கொண்டிருந்தார். வயிறு பற்றி எரிந்ததாலோ என்னவோ விட்டுவிட்டார். இன்னொரு நண்பர் அவரை அந்த தலையுடன் ஒருத்தி கல்யாணம் செய்வதாக சொன்னபடியால் அந்த எண்ணெய் தடவுவதை விட்டு விட்டார். இப்படியும் அமேசான் காடு என்ற பெயர் காதுகளுக்கு வந்திருக்கிறது. ஆனால் அங்கே வாழ்ந்த மூதாதையர்களால் வைக்கப்பட்ட “Amazon” என்ற பெயர்தான் இப்பொழுதும் இருக்கிறது.

பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்த அமேசான் காடுகளில், இன்று 2.124 மில்லியன் சதுர மைல் பரப்பளவைக் கொண்ட இந்த மழைக்காடுகளில் 60% பிரேசில் நாட்டுக்குச் சொந்தமாக இருக்கிறது. மற்றைய பகுதிகள் Peru, Colombia, Venezuela, Ecuador, Bolivia, Guyana, Suriname, France (French Guiana) போன்ற நாடுகளுக்குச் சொந்தமாக இருக்கின்றன. ஒட்டு மொத்த உலகின் மழைக்காடுகளின் சரி அரைவாசியான இந்த அமேசான் காடுகள் கொண்டுள்ள உயிர் பல்வகைமைக்கு ஈடிணை வேறெங்கும் இல்லை. ஏன் இந்த காடுகள் அவ்வளவு பெறுமதியானவை? என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது. உலகின் ஒக்சிஜனின் 20% தருவதனால் மட்டும்தான் இது பெறுமதியானதா? இல்லை. இந்த உலகில் வேறெங்குமே இல்லாத ஏறக்குறைய 40,000 தாவர இனங்கள் இந்த காட்டில் மட்டுமே காணப்படுகின்றன. 16,000 மர இனங்கள், தனித்துவமான 2.5 மில்லியன் பூச்சியினங்கள் இங்குமட்டுமே வாழ்வதாகவும், அவற்றில் பாதிக்கு மேலே மரங்களின் விதானங்களில் வாழ்வதாகவும் கருதப்படுகிறது. தனித்துவமான 5600 க்கும் மேற்பட்ட மீனினங்கள், 1300 பறவையினங்கள், 430 க்கும் மேற்பட்ட பாலூட்டியினங்கள், 1000 க்கும் அதிகமான ஈரூடக வாழிகள், 400 க்கும் அதிகமான ஊர்வன இனங்கள் யாவற்றையும் இந்த அமேசான் மழைக்காடுகள் மட்டுமே பதுக்கி வைத்திருக்கின்றன.

அதனைவிட விடைகாண முடியாத பல இயற்கையின் ஆச்சரியங்களையும் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. சூரியனிலிருந்து 90 பாகை கோணத்தில் சூரிய ஒளி இந்த காடுகளுக்குள் ஊடுருவதால் ஏற்படும் அதிகூடிய ஒளிச்சேர்க்கை காரணமாக இந்த அமேசான் காடுகளின் அடர்த்தியையும் நெருக்கத்தையும் பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், வானிலிருந்து விழும் மழைத்துளிகள் இலைகளில் பட்டுத் தரை வந்து தொட பத்து நிமிடங்கள் கூட ஆகின்றன என்று வியக்கின்றார்கள் என்றால் பாருங்கள். மாமிசம் உண்ணும் தாவரங்கள், பூக்கள் என்றும், அபூர்வமான விலங்குகள், அழகான தரை அமைப்புகள், நீர்நிலைகள், மர்மமான இடங்கள் என்று ஆச்சரிய விழிப்புகள் அதிகமாகவே தனக்குள் அடக்கி வைத்திருக்கின்றன இந்த அமேசான் காடுகள்.

அடுத்து, “அமேசான்” என்கின்ற பெயர் இன்று உலகை ஆள்கிறது என்று சொன்னாலும் பொருத்தம். உலக பணக்காரர்களின் முதலாமவர் “அமேசான்” நிறுவனர் Jeff Bezos என்பவரை உலகம் அறியும். அந்த அமேசான் என்கின்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவதாலோ என்னவோ அமேசான் காடுகளை மறந்தே போய்விட்டோம். அதனால் காட்டுத்தீ வந்து நினைவுபடுத்தி போயிருக்கிறது. இந்த உலகத்தை கொஞ்சம் விழிப்படைய இயற்கை அப்பப்போ சில வினைகளை ஆற்றத் தவறவில்லை. ஆனால் அமேசான் காடுகளில் வினைகளை ஆற்றியது முதலாளி நிறுவனங்களும், அவர்கள் கைப்பாவையாக இருக்கும் பிரேசில் அரசும், அவர்கள் அடிமைகளும்தான் என்பது வருத்ததத்துக்குரிய விடயமாகும்.

அமேசான் காட்டின் காவலர்கள்.

“Lungs of the Earth” என வர்ணிக்கப்படும் அமேசான் மழைக்காடுகளுக்குள் வாழும் அவர்களை “பழங்குடிகள்” என்று சொல்கிறோம். சொல்கிறார்கள். ஆனால் அவர்களா பழங்குடிகள்? இயற்கையோடு ஒன்றித்து இயற்கையை நேசித்து வாழ்பவர்கள் பழங்குடிகள் என்றால், இயற்கை அழித்து, அதனை எரித்து மாசுபடுத்தி ஆசைகளின் மிகுதியால் தொழில்நுட்ப வளர்ச்சி என்கின்ற பெயரில் இயற்கையின் விதிகளுக்கு மாறாக வாழும் நாம் எல்லோரும் ”கனவான்கள்” (gentlemen) அப்படித்தானே? உண்மையில் நாம் கேவலமான பிறப்பாக பிறக்கவில்லை. ஆனால், இயற்கைக்கு முரணாக வளர்க்கப் பட்டவர்கள். இந்த உலகில் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு பணம் பண்ணும் ஒவ்வொருவரும், நாம் முரண்பாடாக வளரவே ஆசைப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய சுகபோகம், உல்லாசம் எல்லாமே இயற்கைக்கு முரண்பட்ட எமது வளர்ச்சி அல்லது வாழ்வில்தான் தங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாகவும் இருக்கலாம்.

நீங்கள் சொல்கின்ற பழங்குடிகளான அவர்கள்தான் அந்த அமெரிக்க கண்டங்கள் முழுமைக்குமான பூர்வீக குடிகள். அந்த காடுகளின் பாதுகாவலர்கள். அந்த மண்ணின் வழிவழி வந்த சொந்தக்காரர்கள். அங்கே தோன்றியிருந்த நாகரீகத்தின் கதாநாயகர்கள். ஆய்வின்படி அமேசான் காடுகளின் 11.8 % காடுகள் அந்த பூர்வீகக் குடிகளினால் பல்லுயிர் மேலாண்மை செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு பாதுகாக்கப் படுவதாக தரவுகள் சொல்கின்றன. அவர்கள் ஆற்றும் இந்தப் பணி அவர்களுக்கே தெரியாதது. அவர்களுடைய வாழ்க்கை முறை அப்படியானது. ஏற்கனவே இருந்த நிலத்தை 1492 இல் கண்டு பிடித்ததவர் எனச் சொல்லப்படுகின்ற Christopher Columbus வருகையின் தாக்கத்தால் நிகழ்ந்த ஐரோப்பியரின் நில, வள ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களுக்கு முன்னரே, தனித்துவமான நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டு, விவசாயம், மட்பாண்ட உற்பத்தி என்றும், காட்டு வளத்தில் உருவாக்கப்படும் பொருட்களை உற்பத்திசெய்தும், அவர்களுக்கென்று வானியல், கட்டடக்கலைகள் என்றும், பண்பாடு கலாசாரங்கள் என்றும் தனித்துவமாக வாழ்ந்து வந்த சமூகம்தான், ஐரோப்பியர் வருகையால் தமது கன்னித் தன்மையை இழந்து, கலந்து பல பூர்வீக குடி சமூகங்கள் சின்னாபின்னமாகிப் போயின.

பரந்து விரிந்த நீண்ட கடற்கரைகள், காடுகள், மலைகள், ஆறுகள் என இருந்த அந்த அமேசான் காடுகள் ஐரோப்பியர்களின் வருகையின் பின்னர் நகர மயமாகியதுடன், காட்டிடை ஊடறுத்த பெருந்தெருக்கள் என்றும், அபிவிருத்தி என்றும், பெருகிய மக்கள்தொகைக்கு விவசாயம், மற்றும் கனிம வள உற்பத்தி என்றும் அமேசான் காடுகளின் பரப்பளவு குறையத் தொடங்கின. கடந்த ஐம்பது வருடத்தில் மட்டும் சுமார் 17 % காடுகள் அனைத்து தேவைகளுக்காகவும் அழிக்கப்பட்டிருக்கின்றன என தரவுகள் சொல்கின்றன. இதனால் அந்த பூர்வீக குடிகளின் வாழ்விடங்கள், அவர்கள் என்றும் கூறுவதுபோல “மூதாதையரின் மூச்சுக் காற்று கலந்த புனித தேசங்கள்” என்று அனைத்தையும் இழந்து அந்த மக்களின் தொகையும், இடமும், காடும் சுருங்கிப் போனது.

வரலாற்றுக்கு காலக்கோட்டின் (time line) வழியில், கொலம்பஸ் வருகைக்கு முன்னர் தோற்றம் பெற்ற தென்னமெரிக்காவின் பழமையான இன்கா சாம்ராச்சியத்தினை (Inca empire) ஐரோப்பியர்கள் கைப்பற்றிய பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, பெருமெடுப்பில் பிரேசிலில் விளைவிக்கப்பட்ட இறப்பர் செய்கை வீழ்ச்சியடைந்து முடிவுற்றதாக சொல்லப்படுகின்ற முதலாம் உலகப் போர் வரை, இஸ்பானிய மற்றும் போர்த்துகீசிய கத்தோலிக்க மத போப் களின் ஆசீர்வாதங்களுடன் நிகழ்ந்த மதமாற்றக் கொடுமைகளால் அந்த பூர்வீக மக்கள் பட்ட துன்பங்கள் அளவு கணக்கற்றவை. மிகவும் வக்கிரம் நிறைந்த, மனித நேயம் அற்ற அவர்களது செயற்பாடுகளுக்கு காலனித்துவ அரசும், இறப்பர் முதலாளி நிறுவனங்களும், உற்பத்தி ஏற்றுமதியாளர்களுக்கு உடனிருந்து நிகழ்த்திய, பலவாயிரம் இரத்தக் கறைகள் படிந்த நிகழ்வுகளை வரலாறு கண்ணீரோடு பதிந்து வைத்திருக்கிறது.

பெரும்பாலும் இன்றைய உலகத்துடன் கலந்துவிட்ட பூர்வ குடிகள், மற்றும் காடுகளை அண்டி கலந்தும் கலக்காமல், வெளியுலகத்துக்குப் புலப்படாமல் என்று அமேசான் காடுகள் பரந்த அனைத்து நாடுகளிலும் சுமார் 20 மில்லியன் பூர்வீக குடி பழங்குடியினர் வாழ்வதாக சொல்லப்படுகின்றது. உலகில் கண்களுக்குப் புலப்படாமல், நவநாகரீகத்துடன் கலக்காமல் இன்றும் கன்னித் தன்மையான அதே வாழ்வு நெறியில், எல்லா நாட்டு அமேசான் காடுகள் எங்கும் கிட்டத்தட்ட 110 இனக்குழுக்கள் இருப்பதாகவும், அவர்களில் சில ஆயிரங்கள் தொகையளவிலேயே மக்கள் வாழ்வதாகவும் தரவுகள் சொல்கின்றன.

பற்றியதா? தீ பற்றவைக்கப் பட்டதா?

உலகம் இந்த காட்டுத் தீயைக் கண்டு கொள்ள முன்னரே தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஒரு பரந்த தேசமாக, சீராக தொடராக எரிகிறதா? என்றால் இல்லை. தொட்டம் தொட்டமாக ஆங்காங்கே சிறிய சிறிய பகுதியாக எரிந்து கொண்டிருக்கிறது அல்லது பற்ற வைக்கப் பட்டிருக்கிறது. பொதுவாக ஆடி மாதம் தொடங்கி புரட்டாதி வரை கோடைகால அனல், வெப்பம் காரணமாக இயற்கையாக ஆங்காங்கே தீ பற்றுவது வழமை எனவும், சிலவேளைகளில் மின்னல் தாக்கியும் தீ பரவுவதாகவும் சொல்கிறார்கள்.

பெருமெடுப்பில் எரியத் தொடங்கிய கடந்த நாட்களில், பிரேசில் அமேசான் காட்டுப் பகுதிகளுக்கு மேல் பெரும் பரப்பில் புகை மண்டலம் தொடர்ச்சியாக தெரிவதாக அமெரிக்க NASA தான் தகவலை அறிவித்தது. அடுத்தநாள் அமேசான் காடுகளில் இருந்து 3000 மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற பெரு நகரங்கள் கூட புகை மண்டலத்தால் பகல் பொழுதை இழந்தன என்று செய்திகள் சொல்லியிருந்தன. ஒட்டுமொத்த கணிப்பில் ஒரு நிமிடத்துக்கு இரண்டு காற்பந்தாட்ட மைதானம் அளவில் எரிகின்றதாக சொல்கிறார்கள். சுமார் 80,000 இடங்களில் தீ பற்றி எரிகிறது என்றும், அந்த எண்ணிக்கையை விட அதிகமாகும் என்று பிரேசில் விண்வெளி மையம் தகவல் வெளியிட்டது. கடந்த வருடத்தைவிட இது 85 % அதிகம் என்று BBC சுட்டிக் காட்டியது. இங்கேதான் உலகம் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியது. சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. உலக நாடுகள் தமது ஆதங்கத்தை வெளிப்படையாக தெரிவித்தன. உலக ஊடகங்கள் சில கவனமெடுத்து, தமது ஊடகவியலாளர்களை அங்கே அனுப்பி செய்திகளை வெளியிட்டாலும் கூட, அமெரிக்கா உட்பட உலக அளவில் அறியப்பட்ட பல பிரபலமான ஊடகங்கள் சும்மா ஒரு சில தரவுகளுடன் தலையங்கத்தைப் போட்டு மூடி மறைத்தன.

ஏற்கனவே இவ்வருடம் 3,571 சதுர மைல்கள் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்பட்டு செம்மையாக்கப்பட்டுவிட்ட நிலையில், அமேசான் காட்டுத் தீயை உலங்கு வானூர்தியில் பறந்து பார்வையிட்ட செய்தியாளர் ஒருவர் “this is almost cemetary!” என்று கண் கலங்கியவாறு குறிப்பிட்டார். கருகிப்போன மரங்கள், விலங்குகள், மிருகங்கள் என்று பரவிய புகைப்படங்கள் பல, உலக மனித இதயங்களை கொஞ்சம் அசைத்துப் பார்த்தன. சூழலியலார்கள் பல இடங்களிலும் தமது ஆதங்கத்தை வெளியிட்டவாறு அரசுகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்தார்கள். பிரேசில் தவிர்ந்த அமேசான் காடுகள் பரவியிருக்கின்ற மற்றைய நாடுகள் பல நாடுகளின் உதவியை நாடி தீயணைக்க ஏதுவான முயற்சிகளில் இறங்கின. ஆனால் பிரேசில்?

தீ பரவத் தொடங்கிய நாட்களில் பிரான்ஸ் நாட்டின் தலைமைத்துவத்தில் பிரான்சிலேயே நடைபெற்ற G7 மாநாட்டின் நடுவில், அந்தந்த நாடுகள் சார்பாக 20 million டொலர்கள் வழங்குவதாக அறிவித்த பொழுது, பிரேசில் சனாதிபதி Jair Bolsonaro அதனை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பிரான்ஸ் நாட்டு சனாதிபதிக்கும், பிரேசில் நாட்டு சனாதிபதிக்கும் இடையில் Twitter சமூக வலைத்தளத்தில் நடைபெற்ற வாக்குவாதம் தான் காரணம் என்று ஊடகங்கள் தெரிவித்தன. “எமது பிரச்சனையை நாமே பார்த்துக் கொள்கிறோம்” என்று பிரேசில் அறிக்கை விட்டது. அத்தோடு நின்று விடாமல் ” அமேசான் காட்டுப் பாதுகாப்புக்கு என அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கான நிதியை உலகநாடுகள் சில தர மறுத்ததால், கோபம் கொண்ட அந்த நிறுவனங்களால் அந்த காடுகள் பற்றவைக்கப் பட்டிருக்கின்றன” என்றும் சனாதிபதி Jair Bolsonaro குற்றம் சுமத்தினார். விவசாயம் மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்காக உள்ளூர் விவசாயிகள் பற்ற வைத்திருக்கக் கூடும் என்றும் செய்திகள் பரவின. ஆனால் தீ அணைந்த பாடில்லை. தொடர்ந்து மூண்டு எரிந்துகொண்டே இருக்கிறது.

காட்டுத் தீ தொடர்ந்து பரவுகிறது.

ஏன் அந்த அமேசான் காடுகள் பற்றி எரிகின்றன? என்பதை கொஞ்சமாவது புரிந்து கொள்ள, உலகப்பரப்பின் நாடுகளின் தற்போதைய அரசியல் அதிகார மையங்கள் பற்றி நீங்கள் கொஞ்சம் மேலோட்டமாக இங்கே கவனித்தாக வேண்டும். 90 களின் பிற்பகுதியிலும், 2000 இன் ஆரம்ப வருடங்களிலும் உலகின் போக்கு என்பது “உலகமயமாக்கல்” (globalization) என்கின்ற ஒற்றைப்புள்ளியை நோக்கி நகரத் தொடங்கின என்பதை விட, முதலாளித்துவ நாடுகளால் நகர வைக்கப் பட்டன என்பதே சரியானதாகும். வணிக மேலாதிக்கப் போட்டியுடன், உலக சந்தையைக் கைப்பற்ற இந்த நிறுவனங்கள் முனைப்புடன் போட்டியிட்டன. போட்டியிடுகின்றன. இந்தப் போட்டிகளுக்கிடையில் முதலாளித்துவ நாடுகளாலும், அதன் கைப்பாவை பல்தேசிய வணிக நிறுவனங்களாலும் (multinational companies) உலக மக்களுக்கு இதுவரை நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்னல்களுக்கும், அசௌகரியங்களுக்கும் கணக்கே இல்லை.

சிறு வணிகம், கைத்தொழில் வேளாண்மை, தேசிய வேளாண்மை, பாரம்பரிய விவசாயம், பாரம்பரிய சொத்துக்கள், சுதேச இன அடையாளங்கள், சுதேச மண் வளங்கள், தொன்மை மொழிக் கூறுகள், நியாயமான இனப் போராட்டங்கள், தனிமனித கருத்துக்கள், தனிமனித சுதந்திரங்கள், தனிமனிதனின் தனிப்பட்ட விடயங்கள், மனித மற்றும் சமூக சுகாதாரம் ஆரோக்கியம் என்று உலக மயமாக்கலினால் பாதிப்புக்குள்ளான பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

அதன் நல்ல விளைவு ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது கண்ணுக்குத் தெரியாத யாரோ சில முதலாளிகளின் கொள்ளை இலாபம் ஒன்று மட்டுமே. இந்த பூகோள மயமாக்கலில் உலகிலே வாழும் மனித இனம் ஒரு பரிசோதனைக்கு கூட எலிகள்தான். அடிமை ஆட்டு மந்தைகள்தான். இந்த மனித இனத்தின் பெறுமதி என்பது பெரு முதலாளிகளின் கால்தூசிக்கும் கீழேதான். மனித இனத்துக்கே இந்த நிலை என்றால் இந்த பூமியில் வாழும் ஏனைய உயிரினங்களின் நிலை? காடுகளின் நிலை? ஆழக் கடல்களின் நிலை? ஏனைய விலைமதிக்க முடியாத இயற்கை வளங்களின் நிலை? இப்படியிருக்க அமேசான் காடுகள் மட்டும் முதலாளிகளின் எந்த மூலைக்குச் சமனாகும்? இந்த உலகில் முக்கிய நாடுகளின் அதிகார மையங்களை கொஞ்சம் உற்றுப் பாருங்கள். ஏற்கனவே முதலாளியான அமெரிக்க சனாதிபதி ட்ரம்ப் ஆட்சி பீடம் ஏறியதும், காலநிலை மாற்றத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற வாதத்தை முன்வைத்து, தொழில் வளர்ச்சிக்காக சொந்த நாட்டிலேயே இயற்கை வளங்கள், காடுகள், நிலங்கள், மலைகள் யாவற்றையும் அழித்துப் பயன்படுத்த சட்ட திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினார்.

இது ஒரு புறம் இருக்க, பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற படாத பாடு படுகிறது. தனித்து நின்று பொருளாதாரத்தில் நின்று நிலைக்கவும், மீண்டும் தனது பொருளாதார பலத்தை உலகத்தில் நிறுவ பல முயற்சிகளை பிரித்தானியா செய்துவருகிறது. இந்தியா ஒரே வரி, ஒரே தேசம் என்று, அடிப்படை மதவாத கட்சியின் கடைந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி அவர்கள், புளுகு மூட்டைகளை கொட்டிக் குவித்து வைத்திருக்கிறார். சொல்லப்போனால் இதுவரை அவர் தலைமையிலுருக்கும் அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கிற அதேநேரம், இன்றைய நிலையில் மிகப்பெரிய பொருளாதார சரிவை நோக்கி இந்திய போய்க்கொண்டு இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. இயற்கை வளங்களை கூறுபோட்டு விற்கும் தரகர்களாகவே இந்திய அதிகார மையம் இருக்கிறது என்ற விமர்சனத்தில் பொய் இருப்பதாகத் தோன்றவில்லை.

நிலத்தை, நீரை, இயற்கை விதைகளை, கடற்ப் படுக்கைகளை வெளிநாட்டு முதலாளி நிறுவனங்களுக்கு விற்று விட்டு தரகுப் பணத்தில் சுகமாக வாழ்கிறது இந்திய அரச மையம். “அமேசான் காடுகளை எம் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்துவேன்” என்கின்ற தேர்தல் வாக்குறுதியை, பிரேசிலுக்கு வழங்கிய இன்றைய சனாதிபதி Jair Bolsonaro யை, அந்த முட்டாள் மக்களே அதிகாரத்தில் இருத்தி அழகு பார்த்ததற்கு, காட்டிற்கு தீயை வைக்காமல் வேறு எதனை வைப்பார் அவர்? தொடர்ந்து அமெரிக்காவின் சனாதிபதி Trump அவர்களின் ஆட்சி பாணியை அப்படியே இவரும் கைக்கொள்வதாகவே சொல்கிறார்கள். அமெரிக்காவின் Trump சார்பான ஊடகங்கள், இந்தக் காட்டுத் தீ பற்றி அதிகம் வாய்திறக்காததில் இருந்தே புரிந்து கொள்ளமுடியும். 2018 இன் இறுதியில் பிரேசிலில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த Jair Bolsonaro அவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்வான் போன்ற நாடுகளுடன்தான் வர்த்தக உடன்படிக்கைகளுக்காக கைகோர்த்தார். காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா வின் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். அடுத்து காலநிலை மாற்றம் தொடர்பான உலக மாநாட்டை புறக்கணித்தார். உலக நாடுகள் சில எதற்காக காட்டுப் பாதுகாப்புக்கு பணம் வழங்கவில்லை என்பது இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும். இப்படி அவரது செயற்பாடுகள் இருந்த நேரத்தில்தான் அமேசான் காடுகளில் தீ ஆங்காங்கே பல இடங்களில் அதிகளவில் வைக்கப்பட்டிருக்கிறது.

உலகம் முழுக்க எல்லா தேசங்களிலும் இருக்கும் பெரும்பாலான அரச மையங்களின் ஒப்புநோக்கும் பார்வையில் அவர்கள் செயற்பாடுகள் “கோமாளிகள்” போன்ற தோற்றப்பாடு வெளித்தெரிகிறதா? அதுவே மிகவும் ஆபத்தானது என நான் நினைக்கிறேன். திரைக்குப் பின்னால் எதற்காகவோ மும்முரமாக செயற்படுகிறார்கள் என்று அர்த்தம்.

காலநிலை மாற்றம் என்பது உண்மையா?

கொஞ்சம் எமக்குள் மனப்பயத்தைத் தந்தது அந்தக் காட்டுத் தீயா? அல்லது அந்த சமயத்தில் சூழலியலாளர்கள் சொன்ன கருத்துகளா? நிச்சயம் அந்த கருத்துகள்தான். ஆம்! இந்த உலகம் சுவாசிக்கும் 20 % சதவீத உயிர்வாயு அதாவது oxigen ஐ மீளுருவாக்கித் தருவது அந்த அமேசான் மழைக்காடுகள்தான். இன்று அவை எரிகிறது என்றால் மூச்சுக்காற்றுக்கும் தட்டுப்பாடு வரலாம். மூச்சுக் காற்றும் அன்றாட விற்பனைக்கு வரலாம். நாம் எல்லோரும் சிலிண்டர்களும் கையுமாக, முகமூடிகளை அணிந்தவாறு வாழும் நிலையும் வரலாம் என்ற கருத்துக்கள்தான் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தி இருந்தன. நிலங்களை கூறுபோட்டு விற்றுத் தீர்த்தாயிற்று. வானையும் ஆள செய்மதிகள் அணு ஏவுகணைகள் என்று செய்து நிலைப்படுத்தியாயிற்று.

நீரையும் போத்தல்களில் அடைத்து விற்பனைக்கு கொண்டு வந்தாயிற்று. அடுத்தது என்ன? இதற்கான பதில்களைத் தேடிய முதலாளிகளுக்கு இனி வருங்காலத்தில் கைகொடுக்க இருப்பது இந்த “காற்று” ஒன்றுதான். எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவிருக்கும் காற்று அடைத்த சிலிண்டர்கள் பற்றி பயக்கனவுகளை ஏற்படுத்தி இருக்கிறது இந்த “அமேசான் காட்டுத் தீ”. உலகிலே வாழும் மக்களின் பொறுப்பற்ற செயற்பட்டாலும், கவனயீனத்தாலும், ஆசைகளாலும் இயற்கையை வன்புணர்வு செய்கின்ற மனித செயற்பாடுகளால் இனிவருங்காலங்களில் குறைந்தது 3′ c ஆல் உலக வெப்பநிலை அதிகரிக்குமாயின், இன்று பெய்கின்ற மழையில் 75% பெய்யாமல் போகக் கூடும் என அவதானிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

எவர் மறுத்தாலும், அவமதித்தாலும் காலநிலையின் மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை அன்றாடம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம்; செய்திகளில் கேட்கிறோம். அதிகரிக்கும் சூழல் வெப்பநிலை, மாசு நிறைந்த காற்று, புதிய புதிய நோய்கள் என்று பிரச்சனைகளை எதிர்கொண்டு கொண்டே இருக்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் காரணம் நாம்தான். நாம் மட்டுமே! அமேசான் காட்டுத் தீயின் விளைவாக காலநிலை மாற்றம் என்கின்ற ஒரு பக்க பிரச்சனையாக இருந்தாலும், உலகமே மூச்சுக் காற்றுக்காக ஏங்கி கண்ணீர் விட்டாலும், தீக்கு காரணமாக உள்நீரோட்டமாக இருப்பது, இந்தக் காடுகள் பதுக்கிவைத்திருக்கும் விலைகூடிய மரங்கள், சோயா உற்பத்திக்கான வளமான நிலங்கள், சுரங்க கனிமங்கள், நிலத்தடி கச்சா எண்ணெய், மற்றும் முக்கியமானது புல்நிலங்களும் மாட்டிறைச்சி உற்பத்திகளும்.

அமேசானில் எண்ணெய், கனிம உற்பத்தி மற்றும் சோயா உற்பத்தி.

அமேசான் காடு இக்குவடோர் நாடுக்குள்ளும் பரவியிருக்கிறது என பார்த்தோம். அமேசான் காடுகள் எங்கும் பரவலாகவே தீ வைக்கப் பட்டிருப்பதாக பார்த்தோம். இரண்டரை இலட்சம் சதுர மைல் காட்டை இக்கவடோர் அரசு நிலத்தைத் துளையிட்டு எடுக்கும் எண்ணெய் மற்றும் சுரங்க கனிம உற்பத்திக்காக ஏலத்தில் விட்டு பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்றிருக்கிறது. ஆ

னால் அதை எதிர்த்து காலம் காலமாக அங்கே வாழும் அமேசான் மழைக்காடுகளின் பூர்வீக குடிகளான Pastaza வின் Waorani இன மக்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டு, அவர்களின் பாரம்பரிய நிலத்தை அவர்களிடமே கொடுக்கச் சொல்லி தீர்ப்பாகிய வழக்கு கடந்த ஜூலை மாதம் நிறைவுற்றது. அதற்குப் பின் சில நாட்கள் கழித்து அந்த காடுகளில் ஆங்காங்கே தீ பற்ற ஆரம்பித்திருக்கின்றன.

அங்கு வாழ்கின்ற மக்களே அந்த நிறுவனங்கள் மீதான சந்தேகத்தை எழுப்பிய அதே நேரம், தீயை அணைக்க உடன் நடவடிக்கை எடுக்க சொல்லியும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அவர்கள்தான் தீ வைத்தார்கள் என்பதற்கு ஆதாரம் எவரிடமும் இல்லை. மற்றும் அமேசான் காடுகளை அழித்து, விலங்கு உணவுகளுக்காக, மாட்டிறைச்சிக்காக உற்பத்தி செய்யப்படும் சோயா பயிர்ச்செய்கை. அதிலும் முக்கியமான சோயா உற்பத்தி நிறுவனமான Cargill பண்ணைகளை அண்டிய பல இடங்களில் தொட்டம் தொட்டமாக தீ வைக்கப் பட்டிருப்பது அவதானிக்கப் பட்டிருக்கிறது.

இந்த Cargill நிறுவனம்தான் உலகம் முழுக்க உள்ள மிகப்பெரிய வர்த்தக கடைகளுக்கும் (super markets and malls) தொழிற்சாலைகளுக்கும் முக்கிய மூலப்பொருள் விநியோகஸ்தராக இருக்கிறது. அதிக காட்டை அழித்ததும் இவர்கள் மட்டுமல்லாது JBS, Marfrig போன்ற மாட்டிறைச்சி விநியோகஸ்தர்களும்தான் என்பது கவனிக்க வேண்டியவை. இந்த Cargill நிறுவனம் பற்றி ஆய்வு செய்தால், செய்து கொண்டே இருக்கலாம். அவ்வளவு பிரமாண்ட வலைப்பின்னலை உலகம் முழுக்க செய்திருக்கிறார்கள்.

பிரேசில் அரசாங்கம் ஒரு கடமைக்காக தீயணைப்புத் துறையையும், பிரேசில் இராணுவத்தையும் தீயணைக்க இறக்கி விட்டிருந்தாலும், தீ தொடர்ந்து எரியவே இந்த நிறுவனங்கள் விரும்புகின்றன.

அமேசானும் மாட்டிறைச்சியும்.

என்னடா சம்பந்தமே இல்லாமல் மாட்டிறைச்சி என்கிறாயே? என்று நீங்கள் கேட்கிறீர்களா? இப்பொழுது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் நடக்கும் மாட்டிறைச்சிக்கெதிரான வன்முறைகளும், கொலைகளும், மதவெறியாட்டங்களும் உங்கள் கண்முன்னால் வந்து போனால் நீங்கள் இதன் தொடர்பையும், பிரச்சனையின் தீவிரத்தையும் கொஞ்சம் உணரத் தொடங்குகிறீர்கள் என்று அர்த்தம். ஆம் நண்பர்களே! கச்சா எண்ணெய்க்கு அடுத்து இந்த உலகின் அதிகூடிய பெறுமதியுடைய சந்தைப் பொருளாக இந்த “மாட்டிறைச்சி” மாறிவருகிறது.

உண்மையில், அமேசான் காட்டிற்கு தீ உள்ளூர் விவசாயிகளாலும் கைக்கூலிகளாலும், முதலாளி அடிமைகளாலும் தீ வைக்கப்பட்டிருக்கிறது. அது எதற்காக? காடழித்து சேனை செய்யும் விவசாயிகள், தமது நிலைத்த அதிகரிக்கவும், புதிய வளமான நிலத்தில் பயிர் செய்ய காலத்துக்கு காலம் காட்டுக்குத் தீ வைக்கிறார்கள். அடுத்து, கனிமங்களை அகழ்ந்து, துளையிட்டு எடுக்கும் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் எடுக்கும் நிறுவனங்கள், மற்றும் மாட்டுப் பண்ணைக்கான மேய்ச்சல் நிலங்களுக்காக இந்த காடுகள் அழிக்கப்பட்டு புதிய நிலங்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன.

2014 வரை உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த பிரேசில் நாட்டை, 2015 ல் இந்தியா முன்னோக்கி நகரத் தொடங்கிய பொழுது, 2016 இல் இந்த உலகிற்கான ஒட்டுமொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 20% ஐ பிரேசில், 20% இந்தியாவும் சரிசமமான இடத்தைப் பிடித்துக் கொண்டன. கடந்த ஆண்டுகளின் தரவின் படி மீண்டும் பிரேசில் முன்னோக்கி நகர்ந்துவிட்டதாக தரவுகள் குறிகாட்டுகின்றன. அவுஸ்ரேலியா, அமெரிக்க, நியூஸிலாந்து என்பன அடுத்தடுத்த நிலையில் தம்மை தக்க வைத்திருக்கின்றன. இந்த பிரேசில் ஒவ்வொரு வருடமும் தனது மாட்டிறைச்சி உற்பத்தியை கிட்டத்தட்ட 50% ஆல் அதிகரிக்க முயல்கிறது என சொல்கிறார்கள்.

அப்படியென்றால் மாடுகளுக்கான உணவுக்கு மேய்ச்சல் நிலங்களை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரம் கால்நடைகளுக்கான உணவு உற்பத்திக்கும் பயிர்செய்யும் நிலங்கள் தேவைப் படுகின்றன. அதனால் வளமான நிலங்களை நோக்கி பெரும் நிறுவனங்கள் நகர்கின்றன. அதில் அவர்களுக்கு கிடைக்கிற பதில் “அமேசான் காடுகள்”. அதனை விட உலகம் எங்கும் Fast food supply chain ஐ வைத்திருக்கும் முக்கியமான Burger King, McDonald’s, Wendy’s போன்றன சொந்தமாக பிரேசிலில் பண்ணைகளை வைத்து தமக்கான இறைச்சியை உற்பத்தி செய்கின்றன.

எதோ நாடுகளுக்குச் சொந்தமான இந்த நிறுவனங்கள், எதோ நாட்டில் காட்டை அழித்து பண்ணைகளை உருவாக்கி இறைச்சியை உற்பத்தி செய்து, எங்கோ பல நாட்டில் தமது கடைகளில் மெருகேற்றிய, சுவையேற்றிய இறைச்சிகளுடனான Fast food கடையில் நாமும் இருந்து கொண்டு “having fun with friends at Mc Donald’s” என்கின்ற status உடன், விரல்களையும், நாக்கையும் கோணிக்கொண்டு எடுத்த புகைப்படங்களுக்கும் தெரியாது அமேசான் காட்டுத் தீயின் வெப்பமும் கண்ணீரும்.

அமேசான் காடழிப்பின் தீவிரத்துக்கு ஒரு தகவல் உங்களுக்காக – “2014 New York Declaration on Forests” என்பதற்கிணங்க, Cargill, McDonald’s, Lloyds Banking Group, Stop & Shop, Costco, McDonald’s, Walmart/Asda, and Sysco உட்பட உலகில் மிகப்பெரிய 50 முதலாளி நிறுவனங்கள், 2020 பிரேசிலில் தாம் செய்கின்ற காடழிப்பினை 50% ஆகக் குறைப்பதாக ஒத்துக்க கொண்டிருக்கின்ற அதேவேளை, 400 சர்வதேச நிறுவனங்கள் வரும் 2020 இல் palm oil, soy, beef and pulp and paper போன்றவற்றிற்காக தாம் செய்த காடழிப்பை ௦% க்கு கொண்டுவருவதாக உறுதி அளித்திருக்கின்றன.

அப்படி என்றால் இந்த நிறுவனங்களை தக்கவைக்க பிரேசில் அரசு ஏதாவது செய்தாகவேண்டும். தாமே களத்தில் இறங்கி செயற்பட ஆரம்பித்ததன் விளைவுதான் 80,000 க்கும் அதிகமான இடங்களில் பற்றி எறிந்த தீயாகக் கருதலாம். எரிந்தது எரிந்ததுதான். உலகம் கத்திவிட்டு அப்படியே அடுத்த பிரச்னைக்கு கத்தப் போய்விடும். ஒன்று – உலகத்தைப் புறந்தள்ளி தனது வர்த்தகத்தை மேம்படுத்துகிறது பிரேசில். இரண்டு – இருப்பதை ஊதிப் பெரிதாக்கி பிரித்தானியா, பிரான்ஸ், இந்தியா போன்ற மற்றைய நாடுகள் பிரேசிலை பொருளாதாராத்தில் கீழே தள்ள “சூழல் பாதுகாப்பு” என்ற ஆயுதத்தை பிரயோகித்திருக்கிறது என்றும் கருதலாம்.

நம்மைச் சுற்றி மாட்டிறைச்சி.

இன்றைய நிலையில் பிரேசில் ஏற்றுமதி செய்யும் மாட்டிறைச்சியை கொள்வனவு செய்யும் நாடாக ஹொங்கோங் இருக்க, இந்தியா ஏற்றுமதி செய்யும் இறைச்சியை மிகப்பெரிய அளவில் கொள்வனவு செய்யும் நாடாக வியட்நாம் இருக்கிறது. 2015 சீனாவின் பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அங்கே மாட்டிறைச்சி சந்தையை விரிவுபடுத்த எண்ணிய இந்தியா, 2016 தொடக்கத்தில் இருந்து மாட்டிறைச்சியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. ஒன்றுக்கொன்று எதிரிகள் போல மக்களை உசுப்பிவிடுகின்ற இந்த அரசுகள், வர்த்தகத்தில் ஒன்றை ஒன்று சார்ந்து வணிகத்தை செய்து கொள்கின்றன.

சாதாரண பாமர மக்கள் முட்டாள்களாகவே ஆயுளைக் கரைத்து மடிந்து போவார்கள். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும், மாட்டிறைச்சியை வைத்து மதப் பிரச்சாரங்கள், அரசியல்கள், சல்லிக்கட்டுப் பிரச்சனைகள் எல்லாமே வந்த காலத்தை சேர்த்துப் பார்த்தால் ஒன்றுக்கொன்று கிட்டக் கிட்ட நடந்த சம்பவங்களாகத்தான் இருக்கும். புதிய சந்தைகளை திறக்க நினைக்கும் இந்தியா உள்ளூர் நுகர்வை மட்டுப் படுத்தி அதனை தமது முதலாளி நண்பர்கள் ஊடாக வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல அவர்கள் போடுகின்ற அரசியல்தான் மாட்டிறைச்சிக்கு எதிரான சட்டங்களும், நுகர்வோர் வன்கொடுமைகளும் ஆகும்.

உள்ளூரில் மாடைக் கொல்லக் கூடாது, இறைச்சி சாப்பிடக் கூடாது, மாடும் பசுவும் எங்கள் தெய்வங்கள் என்றெல்லாம் சொல்கின்ற இதே மதவாத அரசு, 2016 ஆம் ஆண்டில் 1,850,000 metric tons மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்திருக்கிறது. “கொல்லலாம் முதலாளிகளின் பண்ணைகளில் கொல்லலாம்” என்ற சட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக இஸ்லாமியருக்கு எதிரான மத எதிர்ப்பைத் தீவிர படுத்தும் இந்திய மதவாத அரசு இன்று சொந்த நாட்டிலும், அயல்நாடான இலங்கையிலும் “உணவு” என்கின்ற ஒன்றை வைத்து பிரித்தாளும் தந்திரோபாயத்தால் தனக்கான இலாபத்தை அள்ளிக் கொண்டிருக்கிறது.

உங்களுக்காக இன்னொரு தகவல் – இந்திய அரசால் அனுமதியளிக்கப்பட்ட இறைச்சி பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பெரும் முதலாளி நிறுவனங்கள் 74 இல், பத்து நிறுவனங்களின் முதலாளிகள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் செவ்வி கண்ட ஊடகத்துக்கு “தொழில் வேறு, சமயம் வேறு” என்று இயல்பாக சொல்லிக் கடந்து செல்கிறார்கள்.

இலங்கையிலும் மாட்டிறைச்சிப் பிரச்சனை ஆங்காங்கே மதங்களின் பெயரால் தலை தூக்கியிருக்கிறது. மாட்டிறைச்சிக்கு எதிரான குரல்களும், கருத்துப் பதிவுகளும், எதிர்ப்புகளும் அடிக்கடி, குறிப்பாக சமூக வலைத் தளங்களில் பதிவு செய்யப் பட்டாலும், மாட்டிறைச்சிக்கான எதிர்ப்பை, சில மதங்களுக்கு எதிரான மன நிலையுடன், தம் மத நிறுவனங்களுக்கு ஊடாக ஏற்படுத்துவது குறிப்பாக சிவசேனை மற்றும் இந்து, பெளத்த அமைப்புகள் போன்றன இப் பிரச்சனையில் அதி தீவிரம் காட்டுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனியாவது கவனியுங்கள்.

மத நிறுவனங்களுக்கு ஊடாக, தம் மதங்களுக்கு எதிரானது என்று மாட்டிறைச்சிக்கான எதிர்ப்பை தீவிரப்படுத்தும், மத நிறுவனங்களின் முதலாளிகள் அல்லது நிதி வழங்குனர்களின் கட்டுப்பாட்டிலேயே, மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வணிக நிறுவனங்களும் இருக்கும்.

மாட்டிறைச்சிக்கான எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி உள்நாட்டு நுகர்வைக் குறைத்து அல்லது தடுத்து அதனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த கண்ணுக்குப் புலப்படாத பெரு முதலாளிகள் அல்லது முதலாளிநாடுகள் கொள்ளை இலாபத்தை பார்க்கும். இப்படி முட்டுக் கொடுக்கும் மத நிறுவனங்களின் செயற்பாட்டை சுருங்கச் சொன்னால் “படிப்பது தேவாரம் இடிப்பது கோயில்” என்று சொல்வார்கள். ஆனால் உள்ளூரில் மதம், சமயம் என்கின்ற பெயரில் நாம் ஒருவருக்கொருவர் அடிபட்டு வெட்டுப்பட்டு கொத்துப் பட்டு நாங்கள் செத்துக் கொண்டிருக்கும் அதே நேரம், முதலாளிகள் கடவுள்களின் பிரமாண்ட சிலைகளுக்கு முன்னாள் ஆடல் பாடல்களுடன் களித்துக் கொண்டிருப்பார்கள்.

அதற்கான விளம்பரமும் “சிவனோடு ஒரு இராத்திரி” என்று இரட்டை அர்த்தத்தில் விளம்பரங்கள் ஊடகங்களை கிளுகிளுப்பாக்கும். கடவுளின் பெயரால் நிகழும் அந்த களியாட்டங்களுக்கு அழைக்கப் படுபவர்கள் யாரென்று பார்த்தால், மதங்களுக்காக வெட்டுக் குத்து வாங்கும் கீழ்மட்ட அல்லது நடுத்தர மக்களாகிய நாங்கள் அல்ல. எம்மை ஏவிவிட்ட, எம்மைப் பகடைக் காய்களாக்கும் பெரும் பணம் படைத்த அந்த பெரு முதலாளிகளாகத்தான் இருக்கும். எங்கள் தனிமனித விருப்பு வெறுப்புகள் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இன்றைய எமது வாசற்ப் படிகளைக் கால் வைத்துக் கடக்கும் ஒவ்வொரு தடவையும், எமக்காக யாரும் வாழவும் முடியாது, அதனை மற்றவன் தீர்மானிக்கவும் முடியாது என்கின்ற ஒன்றையாவது எமது நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

என் உணவையும், என் சுவாசத்தையும் எப்படி மற்றவன் தீர்மானிக்க முடியாதோ, அதுபோல நானும் மற்றவனுக்குத் தீர்மானிக்க எனக்கு அதிகாரம் இல்லை. அதே நேரம், எமது அன்றாட சந்தைகளில் இறக்குமதியாகும் உடன் இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வாங்கி உண்ணாமல் விடுவது என்பது தீர்வல்ல. இன்று உலகிலே படித்த அதிகமானோர் எது பிரச்சனையோ அதனை புறக்கணிக்கும் இலகுவான முறைக்குள் நுழைந்துவிடுகிறார்கள். எமது நுகர்வு இப்படி இறக்குமதி செய்யும் பெரிய முதலாளி நிறுவனங்களைத் தவிர்த்து நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பொருள்களை இயலுமானவரை நுகர்ந்து பயன்படுத்த எத்தனிக்க வேண்டும்.

அதாவது கிராமங்கள் நோக்கி நகர வேண்டும். நண்பர்களே! வேட்டையாடி தின்ற சமூகம்தான் நாங்கள் எல்லோரும். முதலில் வயிற்றுப் பசி அது ஆறியதன் பின்னர்தான் மொழி, பண்பாடு, கலை, கலாசாரம், சமயம், மதம் என்று எல்லாமே வந்தன. இப்பவும் சொல்கிறேன். ஒரு தனித்தீவில் நீங்கள் கைவிடப்பட்டால் இயல்பாகவே நீங்கள் வேட்டையை கையிலெடுப்பீர்கள்; வேட்டையாடுவீர்கள். முதலில் பசியாற்ற இறைச்சியை பச்சையாகவே உண்பீர்கள், பசியாறிய பின்னரே தீ வளர்த்து இறைச்சியை தீயில் சுட்டு சாப்பிடத் தொடங்குவீர்கள். இடையில் வந்த ஆயிரம் மத சம்பிரதாயங்கள் இருந்தாலும் முன்னே வந்த மரபணு என்கின்ற ஒன்றின் திருவிளையாட்டை யாராலும் மாற்ற முடியாது.

அந்த திருவிளையாட்டுக்குப் பெயர்தான் “விதி” என்று நீங்கள் சொல்கிறீர்கள். முந்திவந்த செவியை பிந்திவந்த கொம்பு மறைப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் அதனதன் தேவை வரும்பொழுது அதுவது வீரியம் பெறும். சம்பிரதாயங்கள் ஆகமங்கள் எல்லாம் உங்கள் கண்முன்னேயே உடைந்து தகர்ந்து போகும். இனி என்ன செய்யலாம்? இந்த உலகில் போக்கில்தான் எங்கள் நியாயமான விடுதலைப் போராட்டமும் நசுக்கப் பட்டிருக்கலாம். எங்கள் மண்ணிலும், எங்கள் கடற்கரைகளிலும் கொட்டிக் கிடக்கும் வளங்களை ஆளுமை செய்து அள்ளிக் கொள்ள சர்வதேச பல்தேசிய நிறுவனங்களின் பணத்தினவுக்கு எங்கள் மக்களின் நியாயங்கள் மண்ணுக்குள் புதைக்கப் பட்டன.

மன்னாரில் எண்ணெய் வளமும், புல்மோட்டை கனிம மணலும், காட்டு வளமும், கடற்ப் படுக்கைகளில் கொட்டிக் கிடக்கும் மீன் வளமும் யார்யாருக்கோ சொந்தமாகியிருக்கின்றன. ஒரு பேச்சுக்கு எங்களுக்கான தமிழ் தேசம் மலர்ந்திருக்கும் என்றால், எங்கள் பொருளாதார வளர்ச்சியையும், எமது சந்ததியின் தொழில் முனைப்பையும் இங்கே கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அடிமையாகவா இருந்திருப்போம்? இன்னொரு நாட்டை சார்ந்து இறக்குமதி பொருளாதாரத்தை நம்பி நடந்திருப்போமா? வாழ்ந்திருப்போமா? பெருமூச்சுடன் கடக்கின்ற தருணமிது. அமேசான் காடு எரிகிற இந்த வேளையில், அதற்காகக் குரல் கொடுக்க, இந்த உலகமும், சூழலியலாளர்களும், பல நாடுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அலையென இருக்கிறார்கள். மகிழ்ச்சி!

ஆனால் 2009 இல் நாம் எதற்காகச் சாகடிக்கப் படுகிறோம் என்று தெரியாமலே சாகடிக்கப் படும் பொழுது இந்த உலகமும், மனித உரிமை அமைப்புகளும், எந்த நாடுகளும் எமக்காக ஒரு குரலைக் கூட தரவில்லை. இதுவரைக்கும் பதில் கிடைக்கவே இல்லை. அவை நிற்க, எங்கள் வீட்டு சமயலறையில் தொடங்கி நமது ஒவ்வொரு பயன்பாட்டு பொருளையும் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் எமக்கு தற்பொழுது ஏற்பட்டு இருக்கிறது. எங்கள் அம்மாவுக்கு “இதயம் நல்லெண்ணெய்” மட்டும்தான் வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது என்று சொல்கிறார். உலகம் முழுக்க இதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு கிடைக்கிறது. அப்படி என்றால் உலகம் முழுக்க உற்பத்தி செய்யப்படும் “எள்ளு” பற்றி நாம் கொஞ்சம் என்றாலும் சிந்திக்க வேண்டாமா?

“உதயகிருஷ்ணா அசல் நெய்” இல்லாமல் சாப்பாடு இல்லை. இந்தியாவின் பாலுற்பத்தி தொடர்பான அறிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டாமா? தென்னை இல்லாத அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் சொக்லேட் மற்றும் சிற்றுண்டிகளில் பாவிக்கப்படும் தேங்காய்ப் பூவுக்கும், இலங்கையில் அதிகரித்த தேங்காய் விலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது என்று இலகுவாக கடந்து விட முடியுமா? ஆரோக்கியமான தேங்காய் எண்ணையை எம்மிடம் இருந்து பறித்து விட்டு, சுவை, மணமேற்றப்பட்ட குரூட் எண்ணெயை எம்மிடம் தந்தமைக்கு என்னகாரணம் இருக்கலாம் என சிந்திக்க வேண்டாமா? இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, கேரளா அரசு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் “ஆச்சி மசாலா” வில் பயிர்களுக்கு பிரயோகிக்கும் பூச்சி மருந்து கலந்திருப்பதாக தடை விதித்து இருக்கிறது.

பால்குடித்த வரைக்கும் வராத சலரோகம், பால்மா என்று சந்தைக்கு வந்த பின்னர் நோய் அதிகரித்தமைக்கு காரணம் என்னவாக இருக்கலாம் என்பதை தேட வேண்டாமா? அன்று பாடசாலைகளில் வகுப்பிற்கு சராசரி ஒருவர்தான் கண்ணாடி அணிந்திருப்பார். இன்று வகுப்பிற்கு சராசரி ஐந்து என்றளவில் வந்து நிற்கிறது. பெயர் வாய்க்குள் நுழையாத நோயின் தீவிரம் கண்டறிய முன்னரே உயிர் பிரிகிறது. பெண்களின் மார்பகப் புற்று நோய் பற்றிய விளம்பரங்களும் இன்னும் பல நோய்கள் பற்றியும் அதிகம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். சிலகாலங்களுக்கு முன்னர் இப்படி பயந்ததில்லை. நூறு மீட்டர் நடக்கவே மூச்சு வாங்குகிறது. அன்று “எப்ப பார்த்தாலும் விளையாட்டுதான்” என்று அடித்து வீட்டுக்குள் இழுத்து வந்த பெற்றோர்கள், இன்று “டே கொஞ்சம் வெளிய போய் விளையாடன்” என்று சொல்லும் நிலைக்கு வந்தாயிற்று.

தொழில் நுட்ப வளர்ச்சி என்றும், உலகம் வேகமாக பயணிக்கிறது என்றும் சப்பைக் காரணங்களை சொல்லிக் கொண்டு சோம்பேறியாகத் திரிகிறோம். தத்தியாகத் திரிகிறோம். சொல்லப் போனால் எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் வைத்திருக்கும் முதலாளி நிறுவனங்களின் தந்திரோபாயத்துக்குள் நாம் சிக்குண்டு போனோம் என்பதுதான் உண்மை. அங்கேதான் அவர்கள் வெற்றி அடைகிறார்கள். சொல்லப்போனால் “தேடல்” என்கின்ற ஒன்றுதான் இனி நம்மை நிமிர்த்தும். வரலாற்றை படிப்பது ஒன்றுதான் நமக்கான வழி. “அமேசான்” எரிந்து கொண்டுதான் இருக்கும். அதுக்கான காரணங்கள் போல, என் வீட்டுக்கு அருகில் இருக்கும் காடுகள் எரியும் போதும், மலைகள் வெட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போதும் எமக்குச் சொல்லப்படும் என்பதையும் நினைவில் கொள்க.

எழுதியது: ப.வித்தியாசாகர்