நிஜம் என் கண் முன்னே மிக மிக நெருக்கமாக இருக்கின்றது. ஆனால் அதனை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அப்பா! இந்த சொல்லின் மகிமை உலகம் அறிந்ததுதான். அப்பா என்றால் அனைவருக்கும் பிடிக்கும் தான், ஆனால் என் அப்பா வித்தியாசமானவர். அப்பா என்ற வரையறையில் இருந்து மாறுபட்டவர். அவரை என் அப்பா என்று சொல்வதில் அத்தனை பெருமை எனக்கு.

என் மனதிற்கு எத்தனையோ தடவை சொல்லி விட்டேன். நிஜத்தை ஏற்றுப் புரிந்து கொள் என்று. ஆனால் அது ஏனோ என் சொல்லை காதில் ஏற்றுக் கொள்கின்ற மனநிலையில் இல்லை. அதனால் அடிக்கடி நிஜத்தை உணராமல் அழுது தீர்க்கிறது. “அப்பா இல்லாத எனது பல்கலைக்கழகம், அப்பா இல்லாத என் வீடு, அப்பா இல்லாத என் வாழ்க்கை. அப்பா இல்லாத … என்று ஒவ்வொன்றையும் நினைக்கத் தொடங்கும் போதே எனது நேத்திரங்கள் முழுதாய் நனைந்து போகிறன. வெளியே சொல்ல முடியவில்லை. என் மனதில் உள்ள வேதனைகளை நிச்சயம் என் பேனாவால் எழுதிவிட முடியாது.

கடவுள் உண்மையில் இரக்கமற்றவர். என்னையும் என் அப்பாவையும் பிரித்து வேடிக்கை பார்க்கும் கொடியவர். இரண்டு வருடத்துக்கு முன் என் அம்மா எம்மை விட்டு பிரிந்த போது எம் அப்பா இருந்தார். இப்போது அப்பாவும் இல்லை என்ற போது தான் எமக்காக யாரும் இல்லை என்று தோன்றுகிறது. சுற்றி அத்தனை பேர் இருந்தும் தனியே உள்ளது போன்று ஒரு தவிப்பு. அதன் காரணமும் அப்பா தான். ஏனெனில் எமக்கு அவரே எல்லாமாக இருந்து பழகி விட்டார். நல்ல அப்பாவாக, அன்பான அம்மாவாக, எதையும் பகிர்ந்து கொள்ளும் தோழனாக, இன்னும் எத்தனையோ உறவாக எம் அப்பா எம்மோடு வாழ்ந்தார். எங்கள் அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்பி விட முடியாது. அது என்றும் வெற்றிடமாகவே இருக்கும்.

நான் வீட்டுக்கு விடுமுறையில் வந்து பல்கலைக்கழகம் திரும்பும் போது, மறைத்து வைத்த பூந்தி லட்டை கையில் வைப்பார். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல பத்துப் பதினைந்து இருக்கும். வீட்டில் இருந்து விடைபெறும் ஒவ்வொரு நொடியும் அத்தனை கனமாக இருக்கும். பல்கலைக்கழகம் சென்ற பின் தினமும் எனக்கான அலாரம் அவரின் தொலைபேசி அழைப்புத் தான். காலை மாலை என்று தினமும் குறைந்தது 5 முறையாவது அழைப்பார். அதற்காகவே என் கையில் எப்போதும் என் கைபேசி இருக்கும். தவறுதலாக நான் எடுக்கவல்லை என்றால், என் நண்பிகளான அபிக்கோ பவானிக்கோ எடுத்துவிடுவார். அதனால் நான் அப்பாவின் அழைப்பை தவற விடுவதில்லை.

இப்போதெல்லாம் என் கைபேசிக்கு வரும் அழைப்புக்களை பெரும்பாலும் தவற விட்டுவிடுவேன். இப்போது கைபேசியை நான் கவனிப்பதே இல்லை. அதில் வரும் அழைப்புக்களையும் எதிர்பார்ப்பதில்லை.

எனது ஒவ்வொரு பிழைகளுக்குமான தீர்வு என் அப்பா தான். நான் பிழை விடும் போதெல்லாம் ஒற்றை வார்த்தையால் என்னை கட்டிப் போடுவார். “ அதை விடு இனி அப்பிடி நடக்காமல் பார்த்துக் கொள்…” இது தான் எனக்கு என் பிழைகளைத் திருத்துவதற்கான மருந்து. ஆனால் இப்போதெல்லாம் எதாவது பிழை வட்டால் நெஞ்சம் அவ்வாறு பதறுகிறது. தவறு விடும் போது அந்த வார்த்தையை கேட்காது இருப்பது அப்பா அருகில் இல்லை என்பதை குத்திக் காட்டுகிறது. ஏனெனில் என் ஒவ்வொரு நாட்களின் ஒவ்வொரு வினாடியும் அவர் என்னோடு இருந்திருக்கிறார். அப்பா நிச்சயமாக கண்டிப்பானவர். ஆனால் வரையறைகளை வகுப்பவர் அல்ல. சுதந்திரமாக எம்மை வளர்த்தார்.

எந்த விடயத்தையும் அப்பாவிடம் நாம் கதைக்க முடியும் என்ற துணிவை எமக்குள் விதைத்திருந்தார். அதனால் எமக்கு எதனையும் மறைக்கக் கூடாது, நாமும் எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவராக இருந்தார். எம்மில் அத்தனை நம்பிக்கை அவருக்கு. காசு என்று கேட்டால் இல்லை என்றால் கூட எப்படியோ எமக்குத் தந்து விடுவார். ஆனால் ஒரு ரூபாவிற்குக் கூட கணக்கு கேட்க மாட்டார். நாங்களாக கூறினாலும் காதில் எடுக்க மாட்டார். எமக்கான தேவைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்துச் செய்வார். உடைகள் தொடக்கம் அத்தனையும் சிறந்தவற்றையே நான் அனுபவிக்க வேண்டும் என்பதில் திடமாக இருந்தார். மற்ற பிள்ளைகளை விட நாம் எந்த விதத்திலும் குறைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அவரைப் பற்றி என்னால் துளியளவு கூட எழுதிட முடியாது. “ அப்பா “ என்ற சொல்லுக்குள் அடக்கி விட முடியாத உன்னதம் அவர். எம் நெஞ்சங்களை அனலாக்கி விட்டு பிரிந்து விட்ட உயர்வான உறவு அவர். அப்பா பற்றி எழுத என் பேனாவோ காகிதமோ இடம் கொடுக்குதே இல்லை. ஆனால் என்றும் அவர் நினைவுகளுடனே பேசிப் பேசி இவர் கண்ட கனவுகளை நினைவாக்குவோம் என்பது மட்டும் நியம். நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து விட்டாலும், எம்முள் ஓடும் குருதித் துணிக்கைகளில் நிறைந்து கிடக்கும் உங்களின் எண்ணங்கள் யாவும் நிச்சயமாக இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதனின் பிள்ளைகளூடாக நிறைவேறும். இது உங்கள் மீது உங்கள் பிள்ளைகள் கொண்ட அன்பின் மீது சாட்சியம்…