நீல நிறத்துப் போர்வையை போர்த்தபடி தூக்கத்தைத் தொலைத்துவிட்டது அந்த அலைகள். ஓய்வென்பது இன்றி மணல் மேடுகளுடனும், தமிழீழ நிலத்தைடனும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் அலைகளின் நர்த்தனத்தில் எப்போதும் பூரித்துக் கிடக்கும் அக் கிராமம். யாழ்ப்பாணத்தின் வடமராட்சிக் கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த அழகான பூமி தான் உடுத்துறைக் கிராமம் என அழைக்கப்பட்டது. தென்னைகளின் வளர்ச்சியும், வெண்ணிறத்து மணல் வெளியின் அழகும், கடல் மடி ஏறி வரும் காலைச் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறிக்கும் பொன் மஞ்சள் நிறமும் உடுத்துறைக் கிராமத்துக்கு மிகவும் அழகு சேர்ப்பவை. இவ்வியற்கை அழகுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, யானையின் பாதங்களில் மிதிபட்ட புல்வெளிகளின் தடங்களைப் போல அப் பிரதேசத்தின் போர்வடுக்களின் சாட்சியமாகவும், சிங்கள தேசத்தின் இனவழிப்பின் சான்றுகளாகவும் வெடி பொருட்களின் சிதறல்களைத் தாங்கி நிற்கிறது உடுத்துறை.

தினமும் சிங்களக் கடற்படையின் மக்கள் மீதான தாக்குதல்களினாலும், வான்படைகளின் கொடுமையான தாக்குதல்களாலும் ஆனையிறவில் அமர்ந்திருந்த தரைப்படைகளின் இனவழிப்புக் கோரத்தாண்டவத்தாலும் வதைபட்டுக் கொண்டிருந்த அந்த அழகிய கிராமத்தில் இருந்து பல நூறு வீரர்கள் உருவானார்கள். சிங்களத்தின் கொடூரங்களைத் தகர்த்தெறிய வேண்டும் என்று வீரப்புலிகளாய் நிமிர்ந்து நின்றவர்களின் நிமிர்வால் நிமிர்ந்து நின்றது அக் கிராமம்.

அங்கே அணிவகுத்து நிற்கும் சண்டைப் படகுகளும், சண்டை அணிகளும், கடற்புலி அணிகளின் பணிகளும் கொள்ளை கொள்ளும் அழகைத் தருபவை. தமிழீழம் என்ற புனித நோக்கத்தோடு படகேறும் எம் நீலப்புலிகளைத் தாங்கி நின்ற அக் கிராமத்தில் தான் சிங்கள வெறியர்களின் துயரத்தை சுமந்தபடி கார்த்திகை மலர் ஒன்று, 14.04.1975 அன்று திரு. திருமதி. இராசரத்தினம் மனோன்மணி தம்பதிகளுக்கு மகளாகவும் 2 தம்பிகளின் அக்காவாகவும் வந்து பூத்தது.

சுமதி என்று பெயரை வைத்து தாலாட்டிச் சீராட்டி தம் மகளை ஆரத்தழுவும் அந்தத் தாய்க்கோ தந்தைக்கோ இந்தப் பிள்ளை தான் ஒருநாள் சிங்களத்தின் கோட்டைக்குள்ளே நெருப்பை மூட்டப் போகும் அக்கினிப் பொறி என்று தெரிந்திருக்கவில்லை. தாயின் உருவத்தின் பிரதி போல வந்துதித்திருந்த சுமதிக்கு தமிழையும், தமிழீழத்தையும் தன் உதிரத்தில் இருந்து ஊட்டி ஊட்டி வளர்த்த அந்தத் தாய், தன் மகளுக்கு வீரத்தமிழ் உணர்வை மட்டுமல்லாது கல்வியின் உச்சத்தையும் தொட்டுவிடும் பாதையைச் சரியாகவே நெறிப்படுத்தினார். அதனால் தனது ஆரம்பக் கல்வியை தன் சொந்தக் கிராமத்தில் இருந்த உடுத்துறை மகா வித்யாலயத்தில் கற்கத் தொடங்கினாள் சுமதி.

சிங்கள வல்லாதிக்கத்தின் கொடுமையான இனவழிப்பு நடவடிக்கைகளையெல்லாம் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தீயாக மூட்டியபடி ஆரம்பக்கல்வியை கற்றுக் கொண்டாள் சுமதி. அங்கே நடந்த போட்டிகளில் முதல் நிலை மாணவியாகவும், விளையாட்டில் சிறந்தவளாகவும் விளங்கினாள். வலய மட்டத்திலான போட்டிகளில் முதல் நிலை மாணவியாகி மாவட்டப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற சுமதி முதன்முதலாக பரிசாக பெற்ற ஆங்கிலத் தமிழ் அகராதி இன்றும் அவள் நினைவாக தம்பியிடம் வாழ்கிறது. ஆரம்பக் கல்வியை முடித்த அவள் தொடர்ந்து உயர் கல்வியை பெறுவதற்காக பருத்தித்துறையில் அமைந்திருந்த மெதடிஸ் பெண்கள் கல்லூரிக்குச் சென்றாள். அங்கும் தன் கெட்டித்தனத்தை எல்லாம் தடம் பதித்து முன்னிலை மாணவியாக அனைவரிடமும் தன் அடையாளத்தைப் பதித்தாள்.

குறித்த காலக் கல்விப் பயணத் தூரத்தைக் கடக்க முன்பே சுமதியால் தானும், தன் குடும்பமும், தனது உயர்கல்வியும் என்ற குறுகிய வட்டத்துக்குள் தன்னை கட்டிப் போட முடியவில்லை. சுதந்திரக் காற்றுக்காக அவள் ஏங்கத் தொடங்கிவிட்டாள். சிங்கள தேசத்தின் வல்லூறுகளின் எச்சில் காற்றைச் சுமந்தபடி அவளால் தொடர்ந்தும் தன்னை ஒரு சுற்றுவட்டத்துக்குள் நிலைப்படுத்த முடியவில்லை. கனன்று கொண்டிருந்த தீப்பிளம்பை எல்லாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க என்று ஒருங்கிணைக்கத் தொடங்கியிருந்தாள். 1993 ஆண்டு சூரியனின் கொடூர கதிர்களைச் சுமந்து நின்ற உடுத்துறைக் கிராமத்தில் இருந்து சிங்களக் காடையர்களின் கொடுங்கோலை எதிர்த்து விலையில்லா இலக்கோடு புறப்பட்டாள் சுமதி என்ற கார்த்திகை மலர்.

காஞ்சனா -2 அடிப்படைப் பயிற்சி முகாம் சுமதியை விக்னா / விக்கி ஆக மாற்றியது. அது மட்டுமல்லாது இராணுவப் பயிற்சிகள் பெற்ற போராளியாகவும் மாற்றி இருந்தது. புது மிடுக்கோடு அவள் அணிந்து கொண்ட நஞ்சுக் குப்பியும், தகடும் அவளது கழுத்தில் அவளுக்கே உரித்தான அழகோடு ஒன்றிப் போய் கிடந்தது. தங்க மாலையும் அணிகலன்களும் இருந்த இடங்களில் எல்லாம் அலுமினியத் தகட்டில் எழுதப்பட்ட இலக்கமும் கறுப்பு / சிகப்பு நிறத்திலான கயிறும் மின்னிக் கொண்டிருந்தன. அழகான சேலையையும், வெள்ளை நிறத்து பள்ளி உடையையும், வண்ணம் வண்ணமாக அணிந்த உடைகளையும் தூக்கி எறிந்து விட்டு அவளது உடலில் பச்சை நிறத்து வரி அங்கி அழகை சேர்த்துக் கொண்டிருந்தது.

அவளின் தாய் மாமாவான கப்டன் விக்னம் என்ற மாவீரனின் வீரம் கொஞ்சமும் அவளிடம் குறைவாக இல்லை. “சாறம் கட்டின பெடியள்” என்று இந்திய வல்லாதிக்கம் நக்கலடித்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்ப கால வீரர்களில் ஒருவராக இருந்தவர் அவர். இந்திய இராணுவம் தமிழீழம் விட்டு வெளியேறும் வரை இந்திய வல்லாதிக்கத்தைத் திகிலடைய வைத்த போராளிகளுக்குள் முதன்மையானவன். தொடர்ந்து சிறீலங்கா கொடூரர்களைத் திணறடித்த போர் வீரன். யாழ்ப்பாண கோட்டையை தமிழீழ விடுதலைப்புலிகள் கைப்பற்றிய பொழுது, தாக்குதலில் ஒரு அங்கமான கோட்டை முன் வாயில் மூலம் உள்நுழைந்த அணியின் பொறுப்பாக கப்டன் விக்னா இருந்தார்.

அப்பாதை பயங்கர ஆபத்தானது என்று தெரிந்தும் அப்பாதையால் உள்நுழையும் போது குறிவைத்துக் காத்திருக்கும் எதிரியின் துப்பாக்கிகள் நிச்சயமாக தன் உயிரைப் பறிக்கலாம் என்று தெரிந்தும் கோட்டையின் முன்பக்க மதில் ஏறி உள்நுழைந்த போராளி. தமிழீழம் என்ற உன்னத இலக்குக்காக தன் அணியோடு நகர்ந்து சென்று பலமான எதிர்ப்பிலும் எதிரியைத் திணறடித்த தன் மாமனின் வீரத்தை தன்னுள்ளே கொண்டு அவரைப் போலவே துணிவுள்ள போராளியாகவும், சாதிக்கும் பெண்ணாகவும் அவள் உருமாறி இருந்தாள்.

அவளின் உடல் திடம், மனதின் இருக்கும் ஓர்மம் என்பன அவளை இலகுரக எறிகணை அணியின் போராளியாக உருவாக்கியது. தமிழீழத்தில் நடந்த அதிகமான சண்டைகளில் தன் அணியினரோடு பாரதியார் கண்ட சாதனை செய்யும் புதுமைப் பெண்ணாக இருந்தாள். ஆனையிறவு படைத்தளத்துக்கு வலுச்சேர்க்க என்று தரையிறங்கி அங்கேயே தங்கி விட்ட வெத்திலைக்கேணி படைத்தளத்தின் மீது நடாத்தப்படும் மோட்டார் தாக்குதல்களில் எல்லாம் அவளது களச் செயற்பாடுகள் முன்நிலை வகித்தது. அச்செயற்பாடுகள் அவளின் தலைமைத்துவப் பண்புகளைப் பொறுப்பாளர்களுக்கு அடையாளம் காட்டி, கடற்புலிகளின் மகளிர் அணியில் அவள் ஒரு சண்டை அணியின் அணித்தலைவியாக உருவெடுத்தாள்.

ஆனையிறவு படைத்தளத்துக்கான பிரதான விநியோகத் தளமாக இருந்த வெற்றிலைக்கேணி / கட்டைக்காடு இராணுவத் தளத்தை நோக்கி செம்பியன்பற்றில் போடப்பட்டிருந்த எல்லை வேலியின் (FDL ) ஒரு பகுதியை பொறுப்பெடுத்துக் கொள்கிறாள். அணித் தலைவியின் வீரமும் நிதானமும் போலவே அவளின் போராளிகளும் திடமானவர்களாக இருந்தார்கள்.

தம் உயிரற்ற உடல்களைத் தாண்டியே எதிரி தம் எல்லையை கடக்க முடியும் என்ற துணிவோடு இருந்தார்கள். களமுனை பெரும்பாலான நாட்களில் நெருப்பின் தணல்களால் உண்ணப்படும். அவ்வேளைகளில் எல்லாம் விதையாகும் தோழிகளின் மீது உறுதியெடுத்துக் கொண்டு தேசத்தை காத்தார்கள் அவர்கள். அக் காலம் ஒன்றில் தான் விக்கி, RPG என அழைக்கப்படும் உந்துகணை செலுத்திப் பயிற்சிக்காக தெரிவாகி மிகத் துல்லியமாக இலக்கைத் தகர்க்கும் வகையில் இலக்குகளைப் பொருத்தும் இலக்காளியாக தன்னை வளர்த்துக் கொண்டாள். அனைவருக்கும் நல்ல ஒரு சூட்டாளராக தன்னை அடையாளப்படுத்தினாள்.

சண்டைக் களங்களில் விக்கியின் உந்துகணை செலுத்தி வைத்த இலக்குகள் தவறுவது மிக அரிது. அவ்வாறான இலக்குத் தவறாத தாக்குதல்களால் எதிரியைத் திணறடித்துக் கொண்டிருந்த விக்கி படகு ஓட்டுதல், இயந்திரம் திருத்துதல் என்று கடற்புலிகளின் முக்கிய பயிற்சிகளையும் பெற்று முன்னணி வகித்தாள். இவ்வாறான பணிகளில் ஒரு புறம் விக்கி சார்ந்த அணி ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் தான் கரும்புலிகள் அணிக்கான கோரிக்கையை தேசியத்தலைவரிடம் வைத்தாள் விக்கி.

கரும்புலி அணிக்கான தேர்வு என்பதை சாதாரணமானதல்ல. ஒவ்வொரு போராளிகளினதும் மனதிடம், ஆற்றல் அவர்களது குடும்பப்பின்னணி போன்றவை ஆராயப்பட்ட பின்பே அனுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் அதன் அடிப்படையில் கரும்புலிகள் அணிக்கான அனைத்து தகுதிகளையும் விக்கி பெற்றிருந்தது அவளை கரும்புலிகள் அணிக்குள் உள்வாங்குவதற்கு சாதகமாக அமைந்தது. அவளது விடா முயற்சியும், மக்கள் மீது இருந்த நேசமும் தமிழீழம் மீது இருந்த நம்பிக்கையும் அவளை கரும்புலி ஆக்கியது. அதன் பின்பு தான் அவள் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிகளைப் பெறுவதற்காக நீரடி நீச்சல் பிரிவுக்கு மாற்றப்படுகிறாள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அதி திறன் வாய்ந்த கடல் அணிகளில் ஒன்றான சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவு மகனார் மற்றும் மகளிர் என இரு அணிகளையும் இணைத்து நின்றது. இவ்வணியில் இருந்த கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி யாழ்ப்பாணத்தின் மிக முக்கிய கேந்திர நிலையமாக இருந்த காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் தாக்குதல் ஒன்றுக்கு தயாரானாள். அங்கே தரித்து நின்ற, சிறீலங்காவின் A516 என்ற இலக்கத்தை கொண்ட கட்டளைக் கடற்கலத்தை சிதறடித்து வீரச்சாவடைந்தாள். அதன் பின்பு தான் கப்டன் அங்கையற்கண்ணி நீரடிநீச்சல் பிரிவு என்ற மகளிர் அணி தனித்துவமாக உருவாக்கப்பட்டது அப்போது தான் முதலாவது அணியில் கடற் கரும்புலி மேஜர் முத்துமணியின் அணியில் ஒருத்தியாக விக்கியும் நீரடிநீச்சல் பயிற்சிக்காக உள்வாங்கப்படுகிறாள்.

இங்கு தான் அவளின் கரும்புலிகள் அணிக்கான கனவு அடித்தளமிடப்பட்டது. ஆரம்ப நாளில் சாதாரண நீச்சல், நீரில் மிதத்தல் என ஆரம்பித்த நீச்சல் பயிற்சி கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கப்பட்ட போது, எதற்கும் தளராத பெண் அணி அப்பயிற்சிகளை இலகுவாக செய்து கொண்டிருந்தது. நீரடி நீச்சல் பயிற்சி என்பது அத்தனை சுலபமானதல்ல, முகக்கவசம் ( Mask ) மற்றும் சுவாசக்கருவி ( Snorkel ) போன்றவற்றை அணிந்து கொண்டு பயிற்சிகளில் ஈடுபடுதல் என்பது கடினமானது என்றாலும் அவற்றை சாதாரணமாக செய்து கொண்டிருந்தது அம்மகளிர் அணி. நாகர்கோவில் பகுதியில் நடந்து கொண்டிருந்த அந்த பயிற்சியில் மிக ஆர்வமாக அப் பெண் போராளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

மூச்சுப்பயிற்சி, நீச்சல்ப் பயிற்சி எனத் தொடர்ந்த பயிற்சிகளில் ஒவ்வொருவருக்கும் தேவையான நீச்சல் உபகரணங்கள் வழங்கப்பட்டபின் அவற்றைப் பாதுகாப்பதும் அவர்களது கடமை ஆகியது. Diving Fins, Mask, Snorkel போன்ற பொருட்கள் மிக பாதுகாப்பாக பேணப்பட்டன. காலையில் இருந்து கடற்கரையில் ஓட்டம், உடற்பயிற்சி என்று தொடங்கி நீச்சலுக்கான உபகரணங்களோடு கிட்டத்தட்ட 10 NM ( கடல்மைல்) தூரம் நீச்சல் பயிற்சியை செய்து திரும்பும் அவர்களுக்கு பிரத்தியேக பணிகளுக்காக வழங்கப்படும் நேரத்தில் கூட நீச்சல் பயிற்சிக்கான உபகரணங்களைப் பாதுகாத்தல், உணவுக்கான பணிகளைச் செய்தல் என்று அவசரம் அவசரமாக நேரம் ஓடிச்செல்லும். அவற்றை எல்லாம் செய்து முடித்துவிட்டு வகுப்புக்களுக்குச் செல்ல வேண்டும். எந்த ஓய்வும் இல்லாது இவற்றை எல்லாம் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அனைவருக்குள்ளும் விக்கி முன்நிலை வகித்தாள். விக்கியும், கடற்கரும்புலி மாலிகாவும் இப்பணிகளில் என்றும் பின் நிற்பதில்லை.

இலகுவான பயிற்சிகள் கொஞ்சம் கடினமாக்கப்பட்டன. தொடர்ந்து கடினமான இன்னும் கடினமானவையாக மாற்றப்பட்டு பயிற்சிகள் தொடர்ந்தன. சாதாரணமாக நீச்சல் செய்தவர்களுக்கு Wetsuit, Oxygen Cylinder, Buoyancy Compensator, Weight Belt ஆகிய உபகரணங்கள் இணைந்து கொண்டன. அது மட்டுமல்லாது, 20 கிலோ எடை கொண்ட பொருட்கள் முதுகிலும், 50,100,200 கிலோ கொண்ட குண்டுகளை இழுத்துக் கொண்டும் தினமும் 10 கடல் மைல்களுக்கு மேலாக நீந்திப் பழகினார்கள் விக்கியுடைய அணி.

இது மட்டுமல்லாது. குறிப்பிட்ட இலக்கின் புவி நிலையை புவிநிலை அறி கருவியின் (GPS) உதவியோடு இனங்கண்டு அங்கே எதிரிகள் போல வேடமிட்டு இருக்கும் போராளிகளை ஏமாற்றி இலக்கைத் தகர்க்க வேண்டும். இது சாதாரணமானதல்ல.

பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்களின் கண்ணிலே மண்ணைத்தூவி அவர்களையே ஏமாற்றி அவ்விலக்கை அழிக்க வேண்டும். அதை விட குண்டின் சுமை இவர்களை விட அதிகமாக இருப்பதால் நீரோட்டம் இவர்களை நீந்த விடாது நீச்சலைக் கடினமாக்கும். அதையும் தாண்டி அவர்கள் இலக்கை அடைய வேண்டும் அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்குள். இவ்வாறு பல இறுக்கமான கட்டளைகளோடு நடந்து கொண்டிருந்த பயிற்சிகள் அனைத்தையும் இலகுவாக முடித்துக் கொண்ட விக்கி தொடர்ந்தும் இலக்குக்காக பயிற்சிகளைச் செய்து கொண்டே இருந்தாள்.

இவ்வாறான நாட்களில் தான் விக்கி தன் உறவுகளை விட தமிழீழ மக்களை எவ்வளவு தூரம் நேசிக்கிறாள் என்பதை அங்கிருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அவ்வணிப் பயிற்சி மேற்கொண்டிருந்த இடம் அவளது உறவுகளும் வசித்த கிராமம் என்பதால் அவர்களது பயிற்சிமுகாமுக்கு அருகில் தான் அவளது குடும்பமும் இடம்பெயர்ந்து வந்திருந்தது.

அப்போது போராளியாகி விட்ட தன் மகளை பார்த்துவிடத் துடித்த தாய்க்கும், அக்காவை பார்த்துவிடத் துடித்துக் கொண்டிருந்த தம்பிகளுக்கும் உறவுகளினூடாக விக்கி அங்கே பயிற்சி செய்வது தெரியவந்தது. அதனால் அவ்விடத்துக்கு வந்த கடைசித்தம்பி அக்காவை பார்க்க என்று அம்முகாமுக்கு வந்தான். தம்பியைக் கண்ட விக்கி உடனடியாக மறைந்து கொண்டதும், தம்பியைச் சந்திக்காது விட்டதும் வரலாறு.

நாகர்கோவிலுக்கு அருகில் இருந்த கிராமத்தில் இருந்து தம்பி அக்காவைத் தேடி வருவதும், இவள் மறைவதும் தினமும் நடக்கும் செயற்பாடு. இதை அறிந்த பொறுப்பாளர் உடனடியாக விக்கியைக் கூப்பிட்டுத் தம்பியை சந்திக்க அனுமதித்த போதும் உடனடியாக அதை மறுத்துவிட்டு, அவனுக்கு எங்கட முகாம் கரும்புலிகளுக்கானது என்று எதாவது சந்தேகம் வந்திருந்தால் அவன் என்னை கரும்புலி என்று உறுதிப்படுத்திப்போடுவான். அவனுக்குத் தெரிஞ்சால் தாங்க மாட்டான். அம்மாக்கும் சொல்லிப்போடுவான். அதனால என் இலக்குக்குப் பிரச்சனைகள் வரும் நான் இங்க நிக்கிறது அவனுக்குத் தெரியக்கூடாது என்று உறுதியாக சொன்னாள்.

பொறுப்பாளர் அதையும் தாண்டித் தம்பியைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அவள் சந்தித்து கதைத்து முகாம் திரும்பிய பின் தம்பிக்கு அவள் கரும்புலி எனத் தெரிந்திருந்தும் அந்தத் தகவல் தாய்க்குச் செல்லாதவகையில் பார்த்துக் கொண்டான். விக்கி வீரச்சாவடையும் வரை அந்தத்தாய்க்கு தன் மகள் கடற்புலி என்ற நினைப்பே இருந்தது. தினமும் தன் தமக்கை நீந்துவதை பார்க்க வந்தவனுக்கு அக்கா கூட அவனது சித்தியும் பயிற்சியில் ஈடுபடுவது தெரிந்தது. கடற்கரும்புலி கப்டன் மதனி விக்கியுடைய அம்மாவின் தங்கை. அங்கே சித்தியும், மகளுமாக பயிற்சியில் ஈடுபடுவதைத் தம்பி பார்த்துவிட்டு ஒருபுறம் கவலைப்படுவதும், சித்தியையும் கண்டதை நினைத்து மகிழ்ந்தும் இருந்தான். தினமும் அவர்களைப் பார்த்துச் செல்லும் தம்பி கூட அக்காவும், சித்தியும் வீரச்சாவடைந்துவிடுவார்கள் என்று அறியவில்லை.  அவளோடு பயிற்சி எடுத்த போராளிகளின் சொந்த வீடாகிப் போனது அவளின் வீடு ஆனால் அவள் தன் வீட்டுக்கு செல்வது இல்லை. அவள் வீட்டுக்கு செல்ல விரும்புவதில்லை. தன் இலக்குக்கான பணிகளை மட்டும் செய்து கொண்டிருந்தாள்.

காலம் கடந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று நாட்களாக அக்காவையும், சித்தியையும் காணவில்லை என்றதும் முகாமுக்குச் சென்று விசாரித்த தம்பிக்கு அக்காவும், சித்தியும் வேற இடத்துக்கு போட்டினம் என்றும் வந்தவுடன் வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று பதிலுரைக்கப்பட்டது. அக்காவும் சித்தியும் வருவார்கள் என்ற நினைப்போடு அவன் சென்றான்.

அவன் வீட்டுக்குச் சென்ற அந்த நேரம் சிங்களத்து கோட்டையான கொழும்புத்துறைமுகத்தில் தரித்து நின்ற கடற்கலங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவின் வேவாளர்கள் தமது இலக்காக கண்டு பிடித்திருந்தனர். கடற்புலிகளின் இரகசிய அணி ஒன்று அவ்விலக்கை உறுதிப்படுத்தி அவற்றைத் தாக்கி அழிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி இருந்தனர். பல இரகசிய அணிகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் கொழும்புத்துறைமுகத்தில் பெரும் அதிர்வொன்று ஏற்படுத்துவதற்கு புலிகள் தயாராக இருந்தனர். ஏற்கனவே இருந்த தகவல்களோடு வேவுத்தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

தேசியத்தலைவரின் கண்பார்வையில் லெப். கேணல் கங்கையமரன் இத்திட்டத்தினை நெறிப்படுத்தினார். லெப்.கேணல்.ரதீஸ் தலைமையில் மேஜர்.ஜனாத்தணன், மேஜர்.பரண், மேஜர்.பொய்யாமொழி, மேஜர்.சுபாஸ், கப்டன் மதனி, கப்டன்.விக்கி மேஜர்.ரதன், மேஜர்.ரவாஸ் ஆகிய கரும்புலிகள் அணி இச்சண்டைக்குத் தெரிவாகியது. அவர்களுக்கான மாதிரிப் பயிற்சி முடித்து கரும்புலிகள் உறவுகளைச் சந்திக்க வீடுகளுக்கு விடுமுறையில் சென்றார்கள். உறவுகளோடு மகிழ்ந்திருந்தார்கள்.

அவர்களைப் போலவே விக்கியும், மதனியும் ஒன்றாக வீடு வந்தார்கள். எல்லோருடனும் சந்தோசமாக இருந்தார்கள் விக்கி தன் தம்பியரோடும் அப்பா அம்மாவோடும் தன் இறுதிப் பொழுதுகளை சந்தோசமாக கழித்தாள். தான் வெடியோடு கலக்கப்போகும் பொழுதும் இடமும் தெரிந்தும் அவள் அவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளின் நெஞ்சுக்குள்ளே கொழும்புத் துறைமுகத்தில் எரியப் போகும் தீயின் அனல் கந்தகப்புகையாக புகைந்து கொண்டிருந்தது. உறவுகளுடனான விடுமுறையைக் கழிந்து அவர்கள் முகாம் திரும்பிய பொழுதில் அவர்கள் இனி மீளவும் வரப்போவதில்லை என்பதை யாரும் அறியவே இல்லை. புன்னகைத்தபடி கையசைத்து விடைபெற்ற அவர்கள் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

தேசியத்தலைவர் சந்திப்புக்காக வந்து விடைகொடுத்துச் சென்ற போது உறவுகளைச் சந்தித்த பொழுதுகளை விட அதிகமான மகிழ்வை அடைந்த புலிகள் தமது இறுதிப்பயணத்தை ஆரம்பித்தார்கள். படகில் செல்லும் போது சண்டை நடந்தால் எதிர் தாக்குதலுக்குத் தயாராக RPG உந்துகணையைத் தோழிலும், அதற்கான எறிகணைகளை முதுகிலும் சுமந்தபடி அவள் நின்றாள். அதையும் தாண்டி அவளது உடலில், விடுதலைப்புலிகளின் போர்க்கருவித் தொழிலகப் போராளிகளால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருந்த, கிட்டத்தட்ட 70 கிலோ எடை கொண்ட வெடிபொருளையும் சுமந்தபடி படகேறினாள் விக்கி.

சாகும் வயதாகியும் சாக விரும்பாது தினமும் வாழத்துடிக்கும் முதியவர்கள்  மத்தியில் சாவதற்காக தம்மை வெடிபொருட்களால் அலங்கரித்தபடி தயாராகியது இந்த இளம் புலியணி. ஏற்கனவே தயாராக இருந்த கடற்புலிகளின் இரகசிய அணி அவர்களைச் சுமந்தபடி நகரத் தொடங்கியது. குறித்த நேரத்தில் துறைமுகத்தில் இருந்து 6 கடல்மைல் தொலைவில் கரும்புலிகள் நீருக்குள் இறங்குகிறார்கள். தாம் சாவதற்காக எப்படிப் பயணிக்க வேண்டும் என்பதை பயிற்சிகளாக எடுத்தார்களோ அதை இப்போது நியமாக செய்யத் தொடங்கினார்கள். லெப்.கேணல்.ரதீஸ், மேஜர்.ஜனாத்தணன், மேஜர்.பரண், மேஜர்.பொய்யாமொழி, மேஜர்.சுபாஸ், கப்டன் மதனி, கப்டன்.விக்கி ஆகியோர் நீருக்கடியில் நீந்திச்சென்று இலக்கை தகர்க்க ஏனையவர்கள் படகோடு உள் நுழைந்து தாக்குவதாக போடப்பட்ட திட்டத்தை அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள்.

கொழும்புத் துறைமுகம் என்பது சாதாரண பாதுகாப்போடு உள்ளதல்ல. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு இருக்கும் ஒரு படைத்தளம். சிங்களத்தின் கடற்படையின் நீரடி நீச்சல் பிரிவின் தொடர் ரோந்து அணியின் பாதுகாப்பு, கடலோர காவல் அணியின் தொடர் ரோந்துப் பாதுகாப்பு, சுற்றித்திரியும் சண்டைப் படகுகள், கண்காணிப்புப் படகுகள், சுற்றிவர வெளிச்சம் பாச்சப்பட்டு பகல் போலிருக்கும் சாதகமற்ற சூழ்நிலை. சின்ன அசைவுகளைக் கூட கண்காணிக்கும் கடற்படையின் காவல் அணிகள்,  என சொல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன. காற்றும் புக முடியாத இடத்தில் எங்களின் கரிய புலிகள் புகுவார்கள் என்பதை நிறுவினார்கள்

இருந்தாலும் அங்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகி இருந்தது. அது இயற்கை வடிவில் எழுந்திருந்தது. அதனால் முன்னேறுவது  என்பது கடினமாக இருந்தது.  கடற்காற்று எதிர்புறமா வீசிக் கொண்டிருந்ததால் அவர்களால் நீந்த முடியவில்லை. இவர்களை எதிர்புறமாக நீரோட்டம் இழுக்கத் தொடங்கியது. முடிந்த அளவுக்கு அவர்கள் இலக்கை நோக்கி நீந்தினார்கள். அங்கே தரித்து நின்ற சர்வதேச சரக்குக் கப்பல்களை தவிர்த்து, சிங்களத்தின் சண்டைக்கலங்கள் நிற்கும் பகுதியை நோக்கி நகர்ந்தார்கள்.  சர்வதேச கப்பல்கள் தவறியும் தாக்கப்படக்கூடாது என்பது தமிழீழத் தேசியத்தலைவரது கட்டளை. அதனால் அவர்கள் அதைத் தவிர்த்து கடலடியில் சிங்களக் கப்பல்களைத் தேடிச் சென்றார்கள். எமது துர்ரதிஸ்டம் இயற்கையின் சீற்றம் கரும்புலிகள் இலக்கை நெருங்க முடியாத அளவுக்கு ஏமாற்றியது.

முடிந்த அளவுக்கு அருகில் சென்று தாக்குதல்களை நடாத்துகிறார்கள். நீரடிக்குள் இருந்து வெடித்து அதிர்ந்த கரும்புலிகளின் வெடியோசை சிங்களத்தின் கோட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்ன நடந்தது என்று கடற்படை ஊகிக்க முன் படகு மூலமாக உள்நுழைந்த ஏனைய கரும்புலிகள் தொடர் தாக்குதலை தொடுத்தனர். இறுதி ஒற்றை ரவை இருக்கும் வரை நடந்த தாக்குதல் நின்று போக, அனைத்துக் கரும்புலிகளும் இலக்குக்கு மிக அருகில் சென்று படகோடு தம்மையும் வெடிக்க வைத்தனர்.

1996 சித்திரைத் திங்கள் 12 ஆம் நாள் லெப்.கேணல்.ரதீஸ், மேஜர்.ஜனாத்தணன், மேஜர்.பரண், மேஜர்.பொய்யாமொழி, மேஜர்.சுபாஸ், மேஜர்.ரதன், மேஜர்.ரவாஸ் ஆகியோருடன் சித்தியான கப்டன் மதனியோடு பெறாமகளான கப்டன்.விக்கியும் கொழும்புத் துறைமுகத்தின் கடலலைகள் மீது வெடித்து வீரகாவியமானார்கள்.

கடலலை தாலாட்டும் உடுத்துறை மண்ணில் உதித்த விக்கி என்ற காந்தள் பூ, அக் கடற்கரையில் பிறந்து கடற்கரையிலேயே வளர்ந்து அக்கடலையே நுகர்ந்து வாழ்ந்து, எம் கடலுக்காகவும் தமிழீழத்தின் விடிவுக்காகவும் சிங்களத்தின் கோட்டையான கொழும்புக் கடலில் காவியமாகி விட்ட அந்த நொடிப்பொழுதில் தமிழீழக் கடல் தாய் அழுது துவண்டு போனாள். அவள் மீது தவழ்ந்து, அவளின் மீது தான் எப்படி சாக வேண்டும் என்று சாவுக்கான பயிற்சியைப் பெற்று, அவளின் உடலைக் கிழித்தபடி தினமும் மீன்களோடு மீன்களாகவும், நீரோடு நீராகவும் வாழ்ந்த தன் குழந்தை அந்நியக் கடலில் தன் உதிரத்தை நீரோடு நீராக்கி விட்டுக் கந்தகப் பூவாக உதிர்ந்து போனாள் என்று இன்றும் அழுதுகொண்டே இருக்கிறது.

எழுதியது : இ.இ. கவிமகன்.

நாள்: 27.11.2020