அது ஒரு பொல்லாத நாள். தமிழீழத் தமிழனின் ஒட்டு மொத்த அபிலாசைகளும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் ஒன்று. ஓரிரு கிலோ மீட்டர்களுக்குள் எங்களது வாழ்க்கை முடக்கப்பட்டு சிறீலங்காவின் சிங்களப் பேய்கள் எம்மை கொன்று தின்ற நாட்களில் ஒன்று. வழமை போலவே அன்றும் அலன் மருத்துவமனை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருக்கின்றது.


தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றின் இறுதியான விடுதலைப் புலிகளின் இராணுவ மருத்துவமனை என்ற வரலாற்று வகிபாகத்தைக் கொண்ட அந்த மருத்துவமனை வட்டுவாகல் பகுதியில் மருத்துவ போராளி அலனின் பொறுப்பாள்கையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அது ஒரு இராணுவ மருத்துவமனையாக இருந்தாலும் கூட போராளிகள் மக்கள் என்ற எந்த பாகுபாடுமின்றிய பொது மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தது. அப்போது உயிர் காத்தல் ஒன்று மட்டுமே தலையாய பணியாக்கப்பட்டிருந்தது.


ஒருபுறம் சாவுகளையும் , மறுபுறம் சிதறிக் கிடந்த காயப்பட்டவர்களின் கனதியையும் தாங்க முடியாது தகித்துக் கொண்டிருந்த மருத்துவமனையில் அந்த இறுதி நாட்களில் மருத்துவர் தணிகை, மருத்துவப் போராளி இசையருவி, மருத்துவப் போராளி உயர்ச்சி, மருத்துவப் போராளி சுகுகுமாரன் மற்றும் மருத்துவர் அலனுடன் அவரின் துணைவியான மருத்துவப் போராளி குலமகள் ஆகிய போராளிகள் தமது தமிழீழத்திற்கான மருத்துவப் பணியின் இறுதி வரலாற்றுப் பக்கங்களை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.


சுற்றிவர சிறீலங்காப்படைகளின் முற்றுகைக்குள் தமிழீழம் தகித்துக் கொண்டிருந்த போது தமது உயிரையும் துச்சமென மதித்த தமிழீழ மருத்துவர்களும் பலநூறு மருத்துவப் போராளிகளும் தமது மருத்துவக் கடமைகளை செய்து கொண்டிருந்தாலும், அலன் மருத்துவமனை என்று குறிப்பிடப்படும், நெய்தல் மருத்துவமனையே தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவமனைக் கட்டமைப்போடு அப்போது இறுதியாக இயங்கிக் கொண்டிருந்தது. மற்றைய மருத்துவமனைகள் யாவும் செயலிழந்து போன நிலையில் மருத்துவப் போராளிகள், மருத்துவர்கள் என அனைவரும் தம்மால் முடிந்த அளவுக்கு கிடைத்த இடத்தில் கிடைத்த பொருட்களை வைத்து தமது பணியை செய்து கொண்டிருந்தார்கள்.

அதே நேரம் மறுபுறத்தில் அரச மருத்துவர்களும் தமது கடமையை உறுதியாகச் செய்து கொண்டிருந்தார்கள். இறுதியாக முள்ளிவாய்க்கால் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் இயங்கிய அரச மருத்துவமனை, இராணுவத்தின் முற்றுகைக்குட்பட்டு 15.05.2009 அன்று சிறீலங்காவின் ஆளுகைக்குள் வந்தது. அங்கே பணியாற்றிய அரச மருத்துவர்கள் சிறீலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டும், சுடப்பட்டு காயப்படுத்தப்பட்டும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படும் வரை அவர்களது பணியும் அங்கே நிறைவாகவே இருந்தது.

அதன் பின்பு அரச மருத்துவமனையின் பணி இல்லாமல் போன நிலையில் நெய்தல் மருத்துவமனை மட்டுமே முற்றுமுழுவதுமான மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை நிலையமாக மாறிப் போனது.


ஊர் முழுக்க பிணக் குவியல்கள். திரும்பும் வீதிகள் எங்கும் காயப்பட்டவர்களின் ஓலங்கள். அந்த மருத்துவமனையை சுற்றி இருந்த நிலமெங்கும் அவலக் குரல்களும் சாவின் ஓலமும் இழுத்து புதைக்கப்படாத பிணத்தின் துர்நாற்றமும் என சொல்ல முடியாத அதி உச்ச வரலாற்று அவலத்தின் நாளாக அன்றைய நாள் உதித்தது. அதனோடு தமிழீழம் தன் மூத்த காவலன் ஒருவனையும் இழந்து தவித்த நாள். தமிழீழத்தின் மூத்த தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் வீர காவியமாகிய கணப்பொழுது அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்த சேர்த்தார்கள் போராளிகள். அந்த மருத்துவமனை சத்திர சிகிச்சை கூடத்தில் அப் பெருமகனாரின் வித்துடலை மருத்துவர்கள் பரிசோதிக்கின்றார்கள். அவர் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற வரலாற்று சோகத்தை அந்த சத்திரசிகிச்சை கூடத்தின் மேசையில் தான் மருத்துவர் அலன் உறுதிப்படுத்துகிறார். தம் கண் முன்னே எங்கள் வீரத் தளபதி உயிரற்றுக் கிடந்த கோலத்தை பார்த்தவர்கள் அவருக்காக தலை குனிந்து அகம் நினைத்து ஒரு நிமிடம் விழிநீர் சொரிந்தார்கள். ஆனாலும் உடனடியாகவே தமது கடமையின் முக்கியத்தை உணர்ந்தவர்களாக அடுத்த சத்தி்ரசிகிச்சைக்கு தயாரானார்கள். அழுது கொண்டிருப்பது போராளிக்கு நற்பண்பல்ல என்பதை அப் போராளிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள். அதனால் அவரது வித்துடலுக்கான மரியாதையை செலுத்திய மறுகணம் தம் கடமைகளை தொடர்ந்தார்கள்.


அப்போது ஒரு பெரும் இக்கட்டான சூழ்நிலை உருவாகின்றது. குழந்தை பிறப்புக்காக நிறைமாத கர்ப்பிணித் தாய் ஒருவரை ஒரு பெண் போராளி இவர்களது மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டுச் செல்கிறாள். ஆயிரமாயிரம் காயப்பட்டவர்களை ஆயிரமாயிரம் வேறு மருத்துவத் தேவைக்கானவர்களை உயிர் காத்து உன்னத பணி செய்த அவர்களுக்கு இம் மகப்பேறு ஒரு இக்கட்டான சூழ்நிலையை அப்போது உருவாக்கி இருந்தது.
மருத்துவர் தணிகை மகப்பேற்று நிபுணர் மருத்துவக்கலாநிதி கெங்காதரன் அவர்களிடம் பயிற்சி மாணவனாக இருந்த போதும், அதன் பின்பான காலங்களில் மருத்துவராக பணியாற்றிய போதும் சரி அவருக்கு மகப்பேற்று சிகிச்சை அனுபவமும் பட்டறிவும் இருந்தது. ஆனாலும் ஒரு சிக்கல் நிலை, சாதாரண மகப்பேறு என்றால் எந்த சிக்கல்களும் இல்லை ஆனால், அந்த கர்ப்பிணித் தாய்க்கு சுகப்பிரசவம் இல்லாமல் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானால் சிக்கல் நிறைந்துவிடும். அதற்கான உபகரணங்களான,

Sponge Holder
Towelclips
Blade handle
Mosquito forceps curved;straight
ARM forceps
Artery forceps long
Green Army Tage
Rectractor
Suckerhandle
Scissors curved,straight
Cord clamp
Tooth forceps ,Non tooth
Alicès forceps
Needle holder
(Dialator No 4-6 if necessary)

போன்றவையோ அல்லது அதற்கான தயார்ப்படுத்தல்களோ எதுவுமே அற்ற வெறுமையான சூழலில் அவர்கள் இருந்தார்கள்.

என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்கு முதலே “ எம்மால் முடியும், நாம் செய்வோம்” என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள்.
ஒரு குழந்தை பிறப்புக்காக ஒரு தாய் காத்திருக்கும் போது, எவ்வளவு வலி என்றாலும் அதை சுகமான உணர்வாகத்தான் அந்த தாய் உணர்வாள். அவளுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவர்களும் புன்னகையோடு சிரிப்பார்கள். ஆனால் இக் குழந்தை பிறப்புக்காக அந்த தாய் வந்த போதே வழமை போலல்லாது “இந்த கொடுமையான உலகத்தில் எதுக்கு வந்து பிறக்கின்றாய் குழந்தையே “ என்றே எண்ணம் அனைவருக்கும் வந்திருந்தது.


சிறீலங்கா எனும் பேரினவாதம் ஆடும் இனவழிப்புத் தாண்டவத்தின் உச்சக்கட்டத்தில் நாம் செத்துக்கொண்டிருக்கும் இந்த கொடுமையான பொழுதில் நீ ஏனடா வந்து உதிக்க போகிறாய் சிசுவே என்று அவர்கள் எண்ணினார்கள். மருத்துவர்களின் மனங்களில் அக் குழந்தை இந்த மண்ணில் எத்தனை காத தூரம் உயிரோடு வாழ இந்த சிறீலங்காப் பேய்கள் அனுமதிக்கப் போகின்றார்கள் என்ற வலி எழுந்தது. பல மாதங்களாக ஒழுங்கான உணவில்லாமல், ஒழுங்கான ஊட்டச்சத்தில்லாமல் குழந்தையை பெற்றெடுக்கப் போகும் அத்தாய் அக்குழந்தைக்கு பாலூட்ட முடியுமா? என்பது பெரும் அதிர்ச்சிக் கேள்வியாக கண் முன்னே எழுந்தது. அல்லது பிறந்த குழந்தைக்காகக் கொடுக்கக் கூடிய பால்மாவோ அல்லது சத்தூட்டமுள்ள எந்த உணவு வகைகளோ அப்போது யாரிமும் இல்லை. அதனால் இக் குழந்தை பிறந்தவுடனே எவ்வாறு பசியாற்றப் போகிறாள் அத்தாய்…? மருத்துவர்களுக்கு எழுந்த பெரும் மனக்குழப்பங்களுள் இதுவும் இருந்தது.

இருப்பினும் அவர்கள் அந்த வலியோடும் சிகிச்சைக்காக அத்தாயை உள்ளே எடுக்கின்றார்கள். அந்த மருத்துவமனைக் கட்டிடத்தின் சிறு அறை ஒன்றில் தங்கி இருந்த பெண் மருத்துவப் போராளிகளிடம் அத் தாயை ஒப்படைத்து அவர்களைப் பாதுகாக்கும் படி பணிக்கின்றார்கள் மருத்துவர் தணிகை மற்றும் அலன் ஆகியோர். மருத்துவர்களுக்கு சத்திரைசகிச்சைகளின் போது மருத்துவப் போராளி குலமகள் தன் கைக் குழந்தையைச் சேலையால் நெஞ்சோடு அணைத்துக் கட்டியபடி உதவி மருத்துவராக கடமையாற்றிக் கொண்டிருந்ததைப் போலவே இப்போதும் பணிக்குத் தயாரானார். அவருடன் இசையருவி மற்றும் எழில் ஆகியபெண் போராளிகளும் அந்த குழந்தை பிறப்புக்கான ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கினர்.


மருத்துவர்களோடு உதவிக்கு நின்ற மருத்துவப் போராளிகள் ஓரிருவரே. அவர்களை அந்த தாய்க்கான மகப்பேற்றுக்கான சிகிச்சையில் ஈடுபடுத்தி விட்டு தம் கடமையைத் தொடர்ந்தார்கள் மருத்துவர்கள். வானம் எங்கும் புகை மண்டலம் தமிழீழத்தின் செவிப்புலனை கருவறுக்கும் பயங்கர பல்குழல், ஆட்லறி மற்றும் கிபிர் விமானத் தாக்குதல்களின் வெடிச்சத்தங்கள். தலை நிமிர்த்த முடியாத அளவுக்கு துப்பாக்கி ரவைகளின் தாக்குதல்கள். இவற்றுக்கு நடுவில் அந்த தாய் தன் குழந்தையை பெற்றெடுக்க காத்திருக்கின்றாள். அவளுக்கு உதவியாகப் பெண் மருத்துவப் போராளிகள், வேறு சிகிச்சைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் உடனடி சிகிச்சைகளை வழங்க தயாராக இரு தமிழீழ மருத்துவர்கள். அந்த மருத்துவமனை தனது வரலாற்றுப் பக்கம் ஒன்றை எழுத்த் தயாராகிக் கிடந்தது. பல ஆயிரம் மக்கள் செத்துக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில் அந்தக் குழந்தை இந்த உலகத்தில் பாதம் பதிக்க காத்திருந்தது.


அவலக் குரல்கள் வானெழுந்து கொண்டிருந்த பொல்லாத பொழுதொன்றில் அப் பெண்ணின் இடுப்பெலும்பு வலியெடுக்கத் தொடங்கியது. பிரசவத்துக்கான அறிகுறிகள் ஓவென்று கத்தி அழுது கொண்டிருக்கும் அத் தாயின் அவலக்குரல் என்று அந்த பிரதேசமே அந்தரித்துக் கொண்டிருக்க, அலன் மருத்துவமனை தன் வரலாற்றில் இறுதிப் பக்கத்தில் ஒரு உண்மையை பதிவாக்கிக் கொண்டது. அழுகுரல்கள் வானெழுந்த பொழுதொன்றில் மழலைக்குரல் ஒன்று பசியில் கத்தியபடி தமீழிழத் தாய் நிலத்தில் தன் வருகையை பதிந்து கொண்டது. பல லட்சம் அவலக்குரல்களுக்கு மத்தியில் அக் குழந்தையின் மழலைக்குரல் வானெழுந்தது.


தம்மால் முடிந்த அளவுக்கு குழைந்தைக்கான அல்லது அத் தாய்ககுத் தேவையான விடயங்களை கவனித்துக் கொண்ட அம்மருத்துவ அணி அந்த இளம் தாயைக் குழந்தையோடு முடிந்த அளவுக்கு பாதுகாத்து வைத்திருந்தார்கள். ஆனாலும் அந்த தாய் சாதாரண நிலைக்கு திரும்பிய உடனேயே தன் குழந்தையை அணைத்து மகிழ்ந்தபடி முத்தமிட்டுக் கொள்கிறாள். தமிழினத்தின் ஒரு மாபெரும் வீரத் தளபதியை இழந்து தவித்துக் கொண்டிருந்த அந்த மருத்துவமனை, அதே புனிதனின் வித்துடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு மிக அருகிலேயே ஒரு உயிரைப் பெற்றெடுத்த தன் வரலாற்றைப் பதிவு செய்தது.

எழுதியது: இ.இ. கவிமகன்
தகவல்: மருத்துவர் தணிகை
மருத்துவர் அலன்
மருத்துவப்போராளி குலமகள்

ஒப்புநோக்கியது : மஞ்சு மோகன்
நாள்: 20.07.2021

முக்கிய குறிப்பு: இந்த இறுதி மருத்துவமனையில் பணியாற்றிய பல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ போராளிகளது பெயர்களை நடைமுறையில் இருக்கும் சூழல் காரணமாக குறிக்க முடியாததுக்கு வருந்துகிறேன்.