ஆற்றின் சலசலப்பு, இரவு நேரத்தின் தவளைச் சத்தங்கள். சிங்கள இராணுவத்தினர் வள்ளங்களில் ஆற்றைக் கடந்து ஊருக்குள் இறங்குகிறார்கள். அந்த இருட்டின் உதவியுடன் பதுங்கிச் சென்ற சிங்கள இராணுவ வெறியர்களினால் அந்தக் கிராமம் சுற்றிவளைக்கப்படுகிறது.

நாளை என்ன நடக்குமோ?

தம்பலகாமத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இன்று நடக்கும் சோக நிகழ்வுகள், நாளை இங்கு தொடரும். ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் வித்தியாசமில்லாமல் வெறித்தனமாகத் தாக்கப்படுவார்கள். இந்த மண்ணின் இளம் பெண்கள் காட்டுக்குள் இழுத்துச் செல்லப்படுவார்கள். அவர்களில் சிலர் திரும்பவே மாட்டார்கள்.

அந்த மிருகங்கள் விலகிய பின்…

ஊர் புகைந்து கொண்டிருக்கும், ஆற்றிலும் வயலிலும் தமிழனின் உடல்கள் வீசப்பட்டுக் கிடக்கும். துயரத்தைச் சுமந்த அந்த மக்கள் தான் புலிகளுடனும் இரண்டறக் கலந்து வாழ்நதார்கள்.

வழமை போலவே விடிந்த அந்தக் கிராமத்தில் மக்கள் தம் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். கௌரி பாலர் பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகளின் கலகலப்பு, கத்தல்கள் தொடர, தமிழீழத்தின் வருங்காலத்தை நிர்மாணிப்பவர்களின் உருவாக்கத்தில் அவள் ஈடுபட்டிருந்தாள்.

அதுவரையில்,

மறைந்திருந்த படையினர் திடீரென ஊருக்குள் நுழைந்தார்கள். அந்தக் கிராமம் அமைதியை இழந்தது. எங்கும் அந்தச் சிங்களப்படை வெறியர்களின் அதட்டும் குரல்களும்; சித்திரவதையால் எழுந்த ஓலங்களும், கலங்கி நிற்கும் அந்தச் சின்னஞ்சிறுசுகளின் கண்ணீருக்கிடையே ஒரு படை வெறியன் கௌரியை மிரட்டிக் கொண்டிருந்தான்.

“ புலிகள் இங்க வாறதா? அவங்க தானே இந்த பள்ளிக்கூடம் கட்டினது?”

ஊர் முழுக்க கேட்கப்படும் கேள்விதான். ஆனால் பதில் ஒரே மாதிரியாகவே இருந்தது.

“இங்கு எவருமே வருவதில்லை. இது நாங்கள் கட்டிய பாடசாலை.”

அவர்களின் மிரட்டல்கள் பலனளிக்கவில்லை. சிங்கள இராணுவத்தினர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். கௌரி வாய் விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இவையின்ர அநியாயத்திற்கு வலு விரைவில ஒரு முடிவு கிடைக்கத்தான் போகுது”

அந்தப் படை வெறியர்கள் திரும்பிச் செல்வதை, இறவடிசேனைக் கிராமம் பார்த்துக் கொண்டிருந்தது. 

ஆலங்கேணிக்குப் பின்புறம்தான் இறவடிச்சேனை கிராமம் இருந்தது. குளிர்தை நிறைந்த அந்தக் காட்டுப்புறக் கிராமத்திற்கு, தோணிகளில் ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். காட்டுக்கு நடுவே இருக்கும் வயல் வெளிகளில் தான் அந்த மக்கள் காலபோக நெற் செய்கையை மேற் கொள்வார்கள். மற்ற நாட்களில் எல்லாம் வயல் வெளியில் மாடுகள் தான் நிறைந்து நிற்கும். ஆலங்கேணியிலிருந்தும் அதன் அயற் கிராமங்களில் இருந்தும் இங்கு தொழில் ரீதியாக வந்த மக்கள், அங்கே நிரந்தரமாக வாழத் தொடங்கினார்கள்.

கௌரியும் அப்பிடித்தான். முதலில் தோட்டத்துக்குத் தான் வந்து போய்க் கொண்டிருந்தாள். மூர்த்தியை சந்திக்கும் வரை அது தான் அவளது வேலை. அதன் பின்பு அந்தக் கிராமத்தின் இளங்குடும்பங்களில் ஒன்றானார்கள்.

விடுதலைப் பற்றுடைய இருவரின் சேர்க்கை அந்தக் குடும்பம்.

“இந்த மண் பாதுகாக்கப்படுவதற்கு, தேவை என்றால் நாங்களும் ஆயுதம் தூக்க வேண்டும்”

என்பாள் கௌரி

அவர்களின் இனிமை நிறைந்த வசந்த காலம் அந்தக் கிராமத்திலும் ஆற்றிலும் கழிந்து கொண்டிருந்தது.

திருகோணமலை மாவட்டம்.

நூற்றுக் கணக்கான சிங்களப் படை முகாம்கள். சிங்களக் குடியேற்றக் கிராமங்கள். இவற்றுக்கிடையே கடுமையான போராட்ட வாழ்க்கையை மேற் கொண்டிருந்த புலிகளிற்கு, அந்தக் கிராமந்தான் ஆறுதல் தரும் இடம். நீண்ட தூர நடைப்பயணங்களின் பின்பு அங்குதான் அவர்கள் சிறிது ஓய்வெடுப்பார்கள்.

அந்தக் கிராமத்து மக்கள் புலிகளுடன் ஐக்கியமாகி விட்டார்கள்.

“ தம்பியவை உங்களோடு பழகிறதாலையும், உங்களிற்கு உதவி செய்யிறதாலையும் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுறம் தெரியுமே!”

கந்தையாக் கிழவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் தான்.

“இல்லையணை அப்பு. நாங்கள் களைச்சு வருகிற நேரத்தில நீங்கள் தருகிற தண்ணியும், அன்பும், அரவணைப்பும் எங்களை எவ்வளவு சந்தோசப்படுத்துகிறது தெரியுமே! எங்கட சோர்வே பறந்து போயிடுது அப்பு”

போராளி ஒருவனின் பேச்சைக் கேட்டு சீறி விழுந்தார் கிழவர்.

“ நீங்கள் யாருக்காண்டியப்பா கஷ்டப்படுறியள்? எங்களுக்காகத் தானே…! இதுதான் எங்கட போராட்டப் பங்களிப்பு. இதுவும் செய்யாட்டி நாங்களும் ஒரு தமிழரே?”

அமைதி அடைந்த கிழவர் பெருமூச்சு விட்டபடியே முணுமுணுத்தார்.

“ என்ர கண்ணுக்கு முன்னால தான்டா தம்பி இந்த மண் பறி போனது.”

அந்தக் கிராமத்து மக்கள் வசதியற்றவர்கள் தான். அதிகம் படிக்காதவர்கள் தான். ஆனாலும் தமிழன் என்ற உணர்வில், இந்த மண் மீதான பற்றில் உயர்ந்த மனிதர்களாக வாழ்ந்தார்கள். அந்தக் கிராமத்தினர் வாழ்வில் புலிகளும் கலந்து விட்டார்கள். அங்கு ஒரு பாலர் பாடசாலையை அமைத்தார்கள். அதற்கு கௌரிதான் ஆசிரியை.

அவள் அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.
“அண்ணாக்களின் இலட்சியத்தில் நானும் கலந்து கொள்கிறேன்.”

செல்லம்மாகவுக்கோ பெரும் கவலையாக இருந்தது. மகள் செய்வது சரிதான் என்றாலும் அவளுக்கு பயமாக இருந்தது.

“ பிள்ளை உந்தப் படிப்பிக்கிறத விட்டால் என்ன?”

“ ஏனம்மா?”

“இல்ல அவனுகளுக்குத் தெரிஞ்சு போச்சு போல கிடக்கு, அவன் சுட்டாப் பரவாயில்லை, நீ பொம்பிளைப் பிள்ளையெல்லே”

“ஏனணை அம்மா, இந்தப் போராட்டத்தில இருந்து விலகி, தங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று இருப்பவர்களை மட்டும் அவன் சும்மாவே விடுறான்? ஏன் அந்தப் பதினாலு வயசுப் பிள்ளை ரோகினியைக் கெடுத்துக் கொலை செய்யலையே? அதை மாதிரி எத்தனை பேரை இந்தச் சிங்களக் காடையர்கள் கொலை செய்திட்டாங்கள்.

இதுக்கெல்லாம் இதுதான் முடிவெண்டா ஊரோட ஆம்பிள பொம்பிளையெல்லாம் துவக்குத் தூக்குறது தான். அப்பத் தான் நாங்கள் மானம் மரியாதையோடு வாழ முடியும். இல்லாட்டி இவன் செய்யுறதெல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். “

செல்லம்மா மௌனமானாள். மகள் உண்மையைத் தான் சொன்னவள். செல்லம்மாவின் கண்களுக்கு முன்னாலேயே எத்தனை இளம் பெண்களை ஊர்க்காவல் படைக்காறர்கள் கொண்டு போனார்கள். அவர்களில் சிலர் திரும்ப வந்தார்கள்; எத்தனையோ பெண்கள் அதன் பின் காணவே இல்லை.

தை 1987

கிண்ணியா சிங்களப்படை முகாமில் இருந்து வந்த சிங்கள இராணுவத்தாலும் ஊர்காவல் படையினராலும் இறவடிச்சேனை கிராமம் சுற்றிவளைக்கப்பட்டது. ஊரெங்கும் துப்பாக்கி வேட்டுக்கள்.

அது ஒரு துயர் நிறைந்த நிகழ்வு.

பாலர் பாடசாலைக்குள் நுழைந்து கொண்ட படை வெறியன் ஒருவன், கௌரியின் கன்னத்தில் மாறி மாறி அடித்தான்.

“உனக்கு புலிகளின் முகாமைத் தெரியும் “ – அந்தச் சிங்கள வெறியன் உறுமினான். அந்த பாலகர்களின் கண்ணீருக்கும், கதறலுக்கும் இடையே அவள் சித்திரவதை செய்யப்பட்டாள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலே அவள் அருகில் இருந்த அவளது வீட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்டாள். அதன் பின் அவர்கள் தங்களது ஆசிரியையை காணவே இல்லை.

வீட்டில் இருந்த மூர்த்தியின் தாய் அடித்து விரட்டப்பட்டாள். கௌரி வீட்டிற்குள் இழுத்துச் செல்லப்பட்டாள்.

அங்கே சிங்களப் படை வெறியர்கள் இருவர் அவளை மாறி மாறி….

அந்த இளம் பெண் அந்த மனித மிருகங்களால் படு பயங்கரமாக சித்திரவதை செய்யப்பட்டாள்.

ஐயோ அம்மா…
ஐயோ பாவியளே என்னை ஒண்டும் செய்யாதீங்கோ…
உங்கட சகோதரம் மாதிரி நினையுங்கோ

கௌரியின் குரல் அந்தக் கிராமம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தக் கிராமத்தவர்கள் கண்ணீர் சிந்தியபடியே அவளின் கதறலைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த மண்ணில் பல பெண்களுக்கு நடந்த சோக முடிவுதான் அன்று கௌரிக்கும் நடந்தது. இந்த மண்ணையும், மண்ணின் விடுதலையையும் விரும்பிய கௌரி அன்று சாகடிக்கப்பட்டாள். ஆனால் அவளின் உயிரிழப்பு ஒன்று உணர்த்தியது.

நாம் மனிதர்களாக வாழவேண்டும் என்றால்
எமது மண் மீட்கப்பட வேண்டும்.

மூர்த்தியினால் கௌரியின் இழப்பைத் தாங்க முடியவில்லை. அவளில்லாம நாட்களை எண்ணிப் பார்க்கவே அவனால் முடியவில்லை. அவன் அவளை விரும்பி, அந்தக் கிராமத்து வழமை போலவே இளம் வயதிலேயே திருமணமும் செய்து, ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. இவ்வளவு குறுகிய காலத்தில் அவர்களுடைய வாழ்வு …

கௌரியின் வார்த்தைகள் எவ்வளவு உன்னதமானவை. இந்தக் கிராமம் முழுவதும் ஆயுதம் தூக்கினால் தான் நாம் வாழ முடியும்.

கௌரி மரணமடைந்து 19 ஆவது நாள்.

ஊருக்குள் திரும்பவும் சிங்களப்படை வெறியர்கள்.

மூர்த்தி அவர்களால் பிடிக்கப்பட்டான்.

“ஆசிரியை உனது மனைவி தானே? “

“ஓம்”

“ அப்ப நீயும் புலிதானே?”

தொடர்ந்து அவன் முரட்டுத் தனமாகத் தாக்கப்பட்டான். அவர்களுடைய சித்திரவதைகளும், அடிகளும், உதைகளும் தொடர்ந்து கொண்டிருந்தன.

அவன் மௌனமாகச் சொல்லிக் கொண்டருந்தான்.

“இவர்கள் எங்களை அடித்தாலும் உதைத்தாலும் ஏன்… அழித்தாலும் கூட எங்கட மண் பற்றை அழிக்க முடியாது”

அந்தப் படை வெறியர்களின் துப்பாக்கிகள் அவனைக்குறிவைத்து வெடித்தன.

கௌரியின் வீட்டு வாசலில் –
செல்லம்மாவிடம் ஒரு இராணுவ வெறியன் சொல்லிக் கொண்டிருந்தான்.

“உனது மகளைச் சுட்டுக் கொன்றதை நீ ஏன் வந்து சொல்லவில்லை? எனிமேல் இப்படிச் சம்பவம் ஏதும் நடந்தால், பயப்பிடாமல் வந்து சொல்ல வேண்டும். நாங்கள் அவங்களில் நடவடிக்கை எடுப்போம். “

ஆனால் மூர்த்தியின் உயிரற்ற உடலுக்கு மேலால் தமது சப்பாத்துக் கால்களை பதித்தபடியே அந்த சிங்களப்படை வெறியர்கள். நடந்து கொண்டிருந்தார்கள்.

அந்த இளம் உயிர்கள் சாகடிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் இந்த மண்ணின் விடுதலையை விரும்பியவர்கள். என்பதற்காக மட்டுமல்ல, இந்த மண்ணில் கொல்லப்படும் சக தமிழர்களைப் போலவே தமிழர்கள் என்பதற்காகவே அழிக்கப்பட்டார்கள்.

நெருப்பு இதழ்.
1990 புரட்டாதி