இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் 29ஆம் திகதி பதவியேற்கவுள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் குறித்த உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளதுடன், இதில் முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவியேற்பு பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்கள் நலப்பணிகளை உடனடியாக தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் 17ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 11ஆம் திகதி தொடங்கி கடந்த 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.