போர்விமான உற்பத்தி இதுவரை ஐந்து தலைமுறைகளைக் கண்டுள்ளது. ஆறாவது தலைமுறை இப்போது திட்ட நிலையில் இருக்கின்றது. அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய நாடுகள் மட்டும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை தாம் வைத்திருப்பதாகச் சொல்கின்றன. அமெரிக்கா, இரசியா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

முதலாம் தலைமுறைப் போர்விமானங்கள்

முதலாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பார்க்க குறைந்த வேகத்தில் மட்டும் பறக்க வல்லன. 1945இல் இருந்து 1955 வரை அவை போர்முனைகளில் முக்கியத்துவமானவையாக இருந்தன. அவற்றில் ரடார்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. இயந்திரத் துப்பாக்கிகளும் சிறிய பிராங்கிகளும் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போரில் பாவிக்கப்பட்ட அமெரிக்காவின் F-86 Sabre, 1952இல் இரசியா உற்பத்தி செய்த மிக்-15, மிக்-17 போன்றவை முதலாம் தலைமுறைப் போர்விமானங்களாகும்.

இரண்டாம் தலைமுறைப் போர்விமானங்கள்

இரண்டாம் தலைமுறைப் போர்விமானங்கள் 1950களிலும் 1960களிலும் உற்பத்தி செய்யப்பட்டன. இவை ஒலியிலும் வேகமாகப் பறக்கும் சுப்பர்சோனிக் விமானங்களாகும். ரடார்களால் வழிகாட்டப்படும் ஏவுகணைகள் அவற்றில் பாவிக்கப்பட்டன. அமெரிக்காவின் F-104, F-5, இரசியாவின் MiG-19, MiG-21 ஆகியவை இரண்டாம் தலைமுறைப் போர்விமானங்களாகும்.

மூன்றாம் தலைமுறைப் போர்விமானங்கள்

மூன்றாம் தலைமுறைப் போர்விமானங்கள் பற்பணிப் போர்விமானங்களாகும். அவை வானில் இருந்து தரைக்கு குண்டு வீசுதல், வானில் இருந்து வானில் பறக்கும் எதிரி விமானங்களுடன் சண்டையிடுதல், வேவுபார்த்தல் போன்ற பல பணிகளை அவை செய்யக் கூடியவையாக இருந்தன. 1960களில் இருந்து 1970கள் வரை உற்பத்தி செய்யப்பட்டன. இரசியாவின் MiG-23, அமெரிக்காவின் F-4, பிரான்ஸின் Mirage III போன்றவை மூன்றாம் தலைமுறைப் போர்விமானங்களாகும்.

நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள்

நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் 1970களிலும் 1980களிலும் உற்பத்தி செய்யப்பட்டன. இவற்றில் பறப்புத் திறனில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டன. தேவைக்கு ஏற்ப தமது பணிகளை மாற்றக் கூடிய பற்பணி விமானங்களாக இவை இருக்கின்றன. வானில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டக் கூடியன. இரசியாவின் MiG-29, Su-27, அமெரிக்காவின் F/A-18, F-15, F-16, பிரான்ஸின்

Mirage-2000 ஆகியவை இத்தலைமுறையைச் சார்ந்தவை.

நான்கரையாம் தலைமுறைப் போர்விமானங்கள்.

நான்கரையாம் தலைமுறைப் போர்விமானங்கள்.

போட்டியில் மற்ற நாடுகளை விட அமெரிக்கா பெரிய இடைவெளியில் முன்னேறியது. பொருளாதாரப் பின்னடைவுகளால் சில நாடுகள் தமது பாதுகாப்புச் செலவீனங்களை அதனால் பின் தங்கிய நாடுகளின் போர் விமானங்கள் நான்கரையாம் தலைமுறைப் போர்விமானங்கள் என அழைக்கப்பட்டன. ரடார் கதிர்களை உறிஞ்சக் கூடிய பூச்சுகள் இவற்றில் பூசியிருப்பதால் அவற்றை ராடர்களால் இனம் காணமுடியாது. விமானம் பறக்கும் திசைகளை இலகுவாகவும் துரிதமாகவும் திருப்பக் கூடிய thrust vector தொழில்நுட்பம் இந்தத் தலைமுறை விமானங்களில் உள்ளது.

அமெரிக்க விமானம்தாங்கிக் கப்பல்களில் பாவிக்கப்படும் F/A-18E/F Super Hornet முன்னணி நான்கரையாம் தலைமுறைப் போர்விமானமாகும். மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பான Eurofighter Typhoon, சுவீடனின் Saab JAS 39 Gripen பிரான்சின் Dassault Rafale இரசியாவின் மிக்-35 நான்கரையாம் தலைமுறைப் போர்விமானங்களில் சிறந்தவை.

ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள்

ரடாருக்குப் புலப்படாத (stealth) ஐந்தாம் தலைமுறை விமானங்கள் உயர் தரப்பறப்புச் செயற்பாடுகளையும் மிகப் புதிய ரகக் கணனிகளையும் கொண்டதுடன் போர்ச் சூழலில் மற்ற விமானங்களுடனும் படைக் கருவிகளுடனும் கட்டுப்பாட்டகத்துடனும் சிறந்த தொடர்பாடல்களை ஏற்படுத்தக் கூடியவை. இலத்திரனியலில் இவை உச்சத்தைத் தொட்டுள்ளன. இணையவெளிப் போர் கூட இவற்றால் செய்ய முடியும். இதில் உள்ள கணினிகள் எதிரியின் கணினித் தொகுதிகளைச் செயலிழக்கச் செய்யும். அமெரிக்கா 2007-ம் ஆண்டு தனது F-22 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை சேவையில் ஈடுபடுத்தியது. அதை அது வேறு எந்த நாடுகளுக்கும் விற்பனை செய்யவில்லை. அதன் தொழில்நுட்பங்களை சீனா இணையவெளியூடாக திருடியதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. அதன் மூலம் சீனா தனது J-20 போர்விமானங்களை உருவாக்கியது.

விமான எந்திர உற்பத்தியில் பிந்தங்கியுள்ள சீனாவால் அமெரிக்காவின் எந்திரங்களைப் பிரதி பண்ண முடியவில்லை. J-20 விமானங்களின் எந்திரங்களின் இரைச்சல் அவற்றைப் புலப்படா விமானம் இல்லை என விவாதிக்க வைக்கின்றது. இரசியாவின் SU-37 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். அமெரிக்காவின் F-22 மட்டுமே பரவலாக போர்முனையில் வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். அமெரிக்காவின் F-35 இலத்திரனியலில் மிகவும் மேம்பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். வான்படை, கடற்படை, கடல்சார் படை ஆகிய முப்படைகளிலும் பாவிக்கக் கூடிய மூன்று வகையான F-35 போர்விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விமானம்தாங்கிக் கப்பலில் பாவிக்கப்படும் F-35 மிகக்குறுகிய தூரம் ஓடி வானில் எழும்பவும் உலங்குவானூர்தி போல் செங்குத்தாக தரையிறங்கவும் வல்லன.

F-35 ஐ அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கியது.. F-35 போர் விமானத்தின் விமானியின் இருக்கை விமானத்தில் இருந்து சற்று மெல் உயர்த்தப்பட்டு அரைக் கோளவடிவக் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். இதனால் விமானி எல்லாத் திசைகளிலும் பார்க்க முடியும். இதுவரை எந்த ஒரு விமானமும் இந்த வகையில் வடிவமைக்கப்படவில்லை. அத்துடன் எந்த ஒரு ரடாருக்கும் புலப்படாத்தன்மை கொண்டது F-35. மேலும் அதில் உள்ள உணரிகள் உயர்தரமானவை. இதனால் எதிரிகளிற்குத் தெரியாமல் எதிரியின் பிராந்தியத்துள் நுழைந்து வானாதிக்கம் செலுத்துவதில் அது சிறந்து விளங்குகின்றது.

குண்டுகளை வீசிவிட்டு வரும் விமானங்கள் தரையிறங்கி இயந்திரத்தை நிறுத்திய பின்னரே அதில் படைக்கலன்களை ஏற்ற முடியும். ஆனால் F-35 போர் விமானங்கள் குண்டு வீசிவிட்டு வந்து தரையிறங்கி இயந்திரத்தை நிறுத்தாமலே குண்டுகளையும் ஏவுகணைகளையும் மீள் நிரப்பல் செய்ய முடியும். இதனால் குண்டு வீச்சுக்கள் தாமதமின்றி செய்ய முடியும். அத்துடன் F-35 போர்விமானங்களுக்கு எந்த இடத்தில் வைத்தும் எரிபொருள் மீள்நிரப்ப முடியும். பொதுவாக விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப தனியிடம் அமைக்கப்படும்.

ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள்

ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் செயற்கை விவேகமும் இயந்திரக் கற்கையும் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அவை தாமாகவே இயங்கக் கூடியன. நிலைமைக்கு ஏற்ப தாமே இலக்குகளைத் தெரிவு செய்து தாக்கக் கூடியவை. விமானிகளின்றியும் பறப்புக்களை மேற்கொள்ளக் கூடியவை. லேசர் மற்றும் மைக்குறோவேவ் படைக்கலன்களை இவை கொண்டிருக்கும். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அல்லது கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க விமானங்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிக விமானங்களைக் கொண்ட எதிரியைச் சமாளிக்க வேண்டும். அதற்கு எதிரியிலும் பார்க்க மிக மேன்மையான தொழில்நுட்பத்தைக் கொண்ட விமானங்கள் அமெரிக்கப் படையினருக்கு அவசியம் என்பதை அமெரிக்காவின் பாராளமன்றமும் உணர்ந்துள்ளது. தனது விமானப் படையின் மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண அமெரிக்கா The Next-Generation Air Dominance program என்னும் திட்டத்தை வரைந்துள்ளது.

பல உட் பிரிவுகளை இத் திட்டம் கொண்டுள்ளது. 2030-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் இத்திட்டம் வரையப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மொத்த செலவீனத்தில் 25 விழுக்காடு வெட்டு தேவை என அறிவுறுத்தியுள்ளது. இருந்தும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை அமெரிக்க விமானப்படைக்கு புதிய தொலைதூரத் தாக்குதல் விமானங்களை உருவாக்குவதற்கான செலவீனங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

அமெரிக்கப் போர் விமானங்களில் தற்போது Lockheed Martin நிறுவனம் தயாரித்த F-22 Raptor மற்றும் F-35 போர் விமானங்களே தற்போது ஓரளவுக்கு சீனா மற்றும் இரசியப் போர் விமானங்களுடன் நின்று பிடிக்கக் கூடியவை. சில வகையான ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பலமடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும். ஒலியிலும் ஐந்து மடங்கு வேகத்திலும் அதிக அளவு வேகத்தில் பறக்கும் விமானங்கள் ஹைப்பர்சோனிக் விமானங்கள் என அழைக்கப்படும்.

எழுதியது : வேல்தரமா

இப் பதிவை பிரதி எடுப்பவர்கள் தயவு செய்து புலர்வின் இணைப்பை பயன்படுத்துங்கள்.