ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டுமென வலியுறுத்தி வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்று காலை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

முப்பது வருடங்கள் வரை திருவிழா இடம்பெறாது இருந்த இந்த ஆலத்தில், கடந்த வருடம் இடம்பெற்ற தேர்த் திருவிழாவானது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது, பக்தர்கள் எவருக்கும் வடம் தொட அனுமதிக்கப்படாது, இயந்திரம் (JCP) கொண்டு தேர் இழுக்கப்பட்டமையானது, அனைத்துத் தரப்பினராலும் கடும் விமர்சனத்தக்கு உள்ளாகியிருந்தது.

இதனையடுத்து, இந்த வருட திருவிழாவை ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ள நிலையிலேயே இந்த சத்தியாகிரகப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஆலய உபயகாரர்களும், அடியவர்களும் இணைந்து கடந்தவாரம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இதில் மக்களுக்கான தீர்வு வழங்கப்படாத நிலையில், அவர்கள் தமது போராட்டத்தைத் தொடர் சத்தியாக்கிரகமாக ஆலயச் சூழலில் இன்று ஆரம்பித்துள்ளனர்