தனிநபர் நிதி, வர்த்தக நிதி, பொது நிதி என்று நிதியியலில் பட்டியல் நீண்டாலும், தமிழ்நாட்டில் “நிதி” குடும்பத்தின் நூதன ஊழல் நிதி நிலுவை பற்றிய ஆச்சரிய வாய்ப்பிழப்புகள் தொடர்ந்தாலும், இவை எல்லாவற்றையும் விட இந்த “துருவ நிதி” சற்று வித்தியாசமானது. அது என்ன “துருவ நிதி”?

பண்டைய வட இந்தியாவின், கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப்பேரரசின் தோற்றுவாய்க்கு காரணமான கௌடில்யர் இயற்றியதாகச் சொல்லப்படுகின்ற அர்த்தசாஸ்திரத்தில் “துருவநிதி” பற்றி இப்படிக் குறிப்பிடப்படுகிறது. அதாவது “ஆட்சிக் குட்பட்ட நாட்டின் எல்லையோரம், பேராபத்துக்களில் இருந்து காத்துக்கொள்ள நிரந்தரமாக ஒரு புதையலை, மரண தண்டனை விதிக்கப் பட்டவர்களால் புதைத்து வைக்கப் படவேண்டும்” என்று அந்த சாணக்கியர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு நாடு, எதிரி நாடுகளின் படையெடுப்பால் நிர்மூலமாகினாலோ, அல்லது ஆட்சியாளர்கள் துரத்தப்பட்டாலோ மீண்டும் தன் தேசத்தைக் கைப்பற்ற தேவையான நிதி மற்றும் இரகசியப் போர்த் தந்திரோபாயங்களை அங்கே புதைத்து வைக்க முடியும். அதனைக் கொண்டு மீண்டும் தன் தேசத்தைக் கைப்பற்றிக் கட்டியெழுப்ப முடியும். அந்த புதையலின் இரகசியம்தான் அதன் பெறுமதியாகும். மன்னர் அல்லது பட்டத்து இளவரசர்களுக்கு மட்டுமே அந்த “துருவ நிதி” பற்றிய இரகசியம் தெரிந்திருக்கும்.

வாக்களிக்கப்பட்ட பெரும் இராச்சியம் ஒன்றைக் கட்டியாண்ட எங்கள் தேவதேவதைகள் உருவாக்கி எழுதிய துருவ நிதிகளை நாம் எங்குமே புதைத்து வைக்கவில்லை. சிலபல இரகசியங்கள் எம்மோடு மரணித்தாலும் கூட, சொல்லவேண்டியவற்றை நாம் எமது போராட்டப் பாதைகளெங்கும் நூல்களாக, ஆவணங்களாக, பாடல்களாக, காணொளிகளாக ஆங்காங்கே துருவநிதிகளை உலகெங்கும் பாதுகாத்து வைத்திருக்கிறோம். இன்றும் ஆயிரமாயிரம் துருவநிதிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். தமிழீழ போராட்டத்தைப் பொறுத்த வரை இந்த துருவ நிதிகள்தான் எமக்கான வருங்கால தனித் தமிழ்த் தேசத்தை மீண்டும் படைக்கும் பொதுவிதியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

இன்று துருவ நிதிகளை உருவாக்கும் இவர்கள் உயிரோடு இருந்தாலும், அவர்கள் உயிரோடு மட்டுமே இன்று இருக்கிறார்கள். ஒருநாள் ஒளிகொண்டு எழும் எங்கள் தமிழீழ தேசத்து மன்னர்களும், பட்டத்து இளவரசர், இளவரசிகளும் இந்த துருவநிதிகளைப் பயன்படுத்தும் காலத்தில், துருவநிதிகளை உருவாக்கியவர்கள் கூட உயிரோடு இருக்கப் போவதில்லை. ஆனால் இன்று பாதுகாத்து, சேர்த்து, உருவாக்கி வைக்கும் துருவ நிதிகள் மட்டும் என்றும் உயிர்ப்புடனேயே இருக்கும்.

தமிழீழ போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட பல்லாயிரம் துருவ நிதிகளோடு, இன்று இ.இ.கவிமகன் எழுதிய “பகிரப்படாத பக்கங்கள்” என்கின்ற நூல் ஆவணமும் ஒரு துருவ நிதியாக சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழீழ விடுதலைத் தீயில் தம்மை உருக்கிய எங்கள் தேவ, தேவதைகளின் தியாகப் பயணத்தின் சில பக்கங்களை இ.இ.கவிமகன் பகிர எடுத்துக்கொண்ட முயற்சிகள் மதிப்பிற்குரியவை.

“பகிரப்படாத பக்கங்கள்” என்ற இந்த நூலில் சுமார் இருபது தேவ தேவதைகளின் வரலாற்றுக் குறிப்புகள் பதியம் செய்யப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். அதிலும் தமிழீழ மருத்துவத்துறை சார்ந்த பலரது குறிப்புகள் அதிகம் வாசிக்க கிடைத்தன. உண்மையில் தமிழீழ மருத்துவர்களுக்கு நிகராக எங்குமே வேறு மருத்துவர்களைப் பார்த்ததில்லை. தமிழீழ மருத்துவர்களுடனான எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தும், இந்த நூலின் பதிவுகளிலிருந்தும் அவர்கள் ஒரு தனி வரம் பெற்றவர்கள் என்றே சொல்ல முடியும். அவர்களுக்கான வரமும் தரமும் அவனொருவனிடம் இருந்தே கிடைத்திருக்கும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.

சொல்லப்போனால் இங்கே ஒவ்வொரு பகுதியாக பகிரப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாவீரர்களின் சரித்திரமும் ஒரு வரலாற்று நூலாக தொகுக்கப்பட முடியும். தொகுக்கப்பட வேண்டும். கடந்து வந்த அவர்களது அனுபவப் பாதைகள் என்பது எந்த வேதங்களோ, இலக்கியங்களோ, இதிகாசங்களோ தொட்டுக் காட்டிடாதவை. தொட்டுக்க காட்ட முடியாதவையும் கூட. நினைத்த மாத்திரத்தில் மந்திரம் சொல்லி வானத்தில் பறக்க இவர்கள் ஒன்றும் சோமபான போதையில் எழுதி முடிக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல.

இரத்தமும் சதையுமாக, உணர்வும் உயிருமாக எம்மோடு கூட வாழ்ந்த சூரிய ஒளிப் பிரவாகங்கள். எங்கள் நினைவுத் திசுக்களிலிருந்து அவர்களது நினைவுத் துகள்கள் மரணிக்க முன்னமே நாம் அவர்களை ஆவணப்படுத்தியாக வேண்டும். அந்த வகையில் பலரது நினைவுத் துகள்களைத் தனது நூலினூடாகப் பகிர்ந்தமை பாராட்டுதலுக்குரியவை.

அதே நேரம், ஒரு மாவீரரின் குறிப்புகளை பதிகின்ற பொழுது, சமகாலத்தில் நடந்த சிலபல சம்பவங்களையும் எழுத்தாளர் தொட்டுக் காட்டிச் செல்வது சிறப்பம்சமாகும். அதுதான் அந்த நேர சம்பவக் கள நிலவரத்தை இன்னுமின்னும் துல்லியமாக காட்டக் கூடியது. இங்கே பதியம் செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாவீரர்களும் தனித்துவமானவர்கள் என்கின்ற உண்மையை வெளிக்கொணர எழுத்தாளர் பெருமுயற்சி எடுத்திருக்கிறார். ஒவ்வொரு மாவீரரும் ஒவ்வொரு ரகமான இரத்தினங்கள்தான். அதனாலோ என்னவோ இரத்தினத்தின் மகன் அவர்களைப் பற்றி எழுதும் பொழுது, எழுதும் வரிகளின் உணர்வை எம் உடலில் உணரக்கூடியதாக இருக்கிறது.

பொதுவாக இந்த நூலைப் படிக்கும் நீங்கள் ஒரு சுய பரிசோதனை செய்யலாம். அதாவது சினிமா திரைப்படங்களில் கதாநாயகர்களின் கற்பனை வீரதீர சாகசங்களை பார்க்கும்பொழுது உங்களுக்குள் மெய்சிலிரிப்பு ஏற்படலாம். அதே திரைப்படத்தில் வரும் ஒரு சோக காட்சியில் உங்கள் கண்கள் கலங்கக் கூடும். ஆனால் இந்த மாவீரர்களின் வரலாற்றுக் குறிப்பைப் படிக்கின்ற பொழுதுமட்டுமே மனது அழுந்தி கண்கள் கண்ணீரைப் பிரவாகிக்கின்ற அதேநேரம், உள்ளூர ஊறும் மெய்சிலிர்ப்பு பிரடியில் தொடங்கி உடலெங்கும் பரவி அடங்க சில நொடிகள் ஆகும். பல உணர்வுகள் ஒருமித்து சங்கமிக்கும் மாவீரர்களின் வரலாறு என்பது உண்மையானது. உயிரானது. அது துருவ நிதியாக காலாகாலத்துக்கும் சேர்த்து பாதுகாத்து வைக்கப்பட வேண்டியது. அது காலம் எமக்குத் தந்த மிகப் பெரும் பொறுப்பென்றே இந்த நூலை வாசிக்கும் பொழுது உணர முடிகின்றது.

மேலும், மாவீரர்களின் வரலாற்றுக் குறிப்பை “பகிரப்படாத பக்கங்கள்” எனப் பதிகின்ற பொழுது, இயலுமானவரை காலப்பகுதியை ஆங்காங்கே இன்னும் அதிகம் தேடி சேர்த்திருக்க வேண்டும் என்கின்ற ஒரு கருத்து என்னுள்ளே எழுந்திருந்தது. எங்கள் தமிழீழ ஆளுமைகள் ஆளுகை செய்தது இந்த காலத்தைதான். அதனால்தான் வரலாறுபடைத்தவர்களை “காலமாகியவர்கள்” என்று குறிப்பிடுகிறோம். காலங்கள் நிச்சயம் அவசியமானது. இன்று எமக்குத் தெரிந்த காலங்களை நாளைய மன்னர்கள் புரிந்துகொள்ள காலங்கள் நிச்சயம் உதவி செய்யும். அவர்கள் துருவநிதிகளைப் பயன்படுத்தும் காலம் நிச்சயம் வரும். ஏனெனில் கடந்த காலங்களில் நாம் என்றுமே விழலுக்கிறைக்கவில்லை.

2009 மே மாதத்திற்குப் பின்னர் தனி மாவீரர்கள் பற்றிய போராட்ட வரலாற்றுக்கு குறிப்புகள், சமீப காலங்களிலேயே அதிகமாக வெளிக் கொண்டு வரப்படுவதை உணர முடிகின்றது. இது ஒரு ஆரோக்கியமான விடயமாக இருந்தாலும் கூட அந்த வரலாற்றுக் குறிப்புகளின் உண்மைத் தன்மைகள் பற்றியும், துல்லியத் தன்மைகள் தொடர்பிலும் நிச்சயம் தொடர்ந்து பகுப்பாய்விற்குள் கொண்டு வரப்பட்டேயாக வேண்டும்.

உண்மையில் இந்த “பகிரப்படாத பக்கங்கள்” என்கின்ற ஆவண நூலை ஒரேதடவையில் என்னால் படித்து முடிக்க முடியவில்லை. இருவேறு வாசிப்புகளுக்கு இடையில் ஓரிரு நாட்கள் கூட எடுத்துக் கொண்டேன். அது நிச்சயம் வெறுப்பினால் அல்ல. வாசித்த குறிப்புகளின் உணர்வில் தங்கி நின்று அகலமறுத்த என் மனநிலையில் அழுந்திப் பதிந்துபோன அந்த மாவீரர்களின் நிழல்கள் அவ்வளவு இலகுவில் விட்டகலவில்லை என்பதே உண்மை. ஆக மொத்தத்தில், என்னுள் மனப்பாரத்தையும், ஒரு குற்ற உணர்வையும் தந்து போனது என்பதே உண்மை. சாகும்வரை இந்த பகிரப்படாத பக்கங்கள் தந்த குற்ற உணர்வு எம்மைவிட்டு அகலப்போவதில்லை.

தொடர்ந்தும் இ.இ.கவிமகன் அவர்கள் “பகிரப்படாத பக்கங்கள்” போன்று பலநூறு துருவநிதிகளை வருங்கால சந்ததிக்காக தொகுக்க வேண்டும் என்று வேண்டுகின்ற அதே நேரம், அதற்கான சக்தியை நாடுகின்ற மாவீரர்களே தந்தருளவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பணிதொடர வாழ்த்துகிறேன். தேடிக் கூட்டித் தொடுக்கும் எழுத்துக்களால் நற்பேறுண்டாகட்டும்.