அழுதழுது இப்போதெல்லாம் அழுவதற்கு தமிழீழத்தின் முதலணிப் பெண் போராளிகளிடம் கண்ணீர் இல்லை.  அவர்கள் 1987 ஆம் ஆண்டின் புரட்டாதி மாதத்தில் பல நாட்கள் அழுது தீர்த்துவிட்டார்கள். அங்கே நின்ற மக்களும், அவர்களும் அழுது மண்டியிட்டு  நல்லூர்க் கந்தனிடம் வேண்டிய ஒன்றேயொன்று எங்களின் சகோதரனை சாகடிக்காதே அவனை காத்து விடு என்பது மட்டுமே. 

அவர்கள் அழுது கொண்டு மட்டும் இருக்க வெறும் மனிதர்கள் அல்ல, தமிழீழ விடியலுக்காக தம்மை ஆகுதியாக்கத் துணிந்து நின்ற பெண் வேங்கைகள். அடுப்படிக்குள் முடக்கப்பட்டுக் கிடந்த பெண்ணினத்தின் விலங்குடைத்த குறியீடுகளாக நிமிர்ந்து நிற்பவர்கள். அப்பிடியிருந்தும்  நல்லூர் வீதியில் தாம் போராளிகள் என்பதை மறந்து அழுது கொண்டிருந்தார்கள். ஏனெனில் அவர்கள் முன்னே தியாக தீபம் ஒன்று அணைவதற்கு தயாராக தன்னை உருக்கிக் கொண்டிருந்தது. அந்த காட்சியை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அந்த தீபம் அணைந்து விடப் போகிறது என்பதும் இந்திய வல்லாதிக்கம் தம்மை ஏமாற்றப் போகிறது என்றும் ஏக்கம் தொடங்கி இருந்தது. அந்த நிலையில் தான், அகிம்சையின் குறியீடாக தம்மை தாமே கூறிக் கொள்ளும் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக அகிம்சைப் போர் ஆரம்பித்தது.

1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தின் 15 ஆம் நாள் காலை 9.45 மணியளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக பெரும் பசிப்போர் ஒன்றை தொடுத்தார். தான் இந்தியத்தால் சாகடிக்கப்படுவேன் என்று நினைத்தாரோ என்னவோ பசிப்போரை ஆரம்பிக்க முதல் சில சந்திப்புக்களை செய்தார் தியாகதீபம் திலீபன். 

அதில் முக்கியமான ஒன்று அவரின் பசிப்போர் ஆரம்பித்ததுக்கு முதல் நாள் தான் நேசித்து வளர்த்த “சுதந்திரப்பறவைகள் “  கட்டமைப்பில் இருந்த பெண்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் முதலணிப் பெண் போராளிகளையும் சந்திக்கிறார். 

அப்போது, 

“அண்ண ஏன் அண்ண இப்பிடி ஒரு முடிவை எடுத்தனீங்கள்? நாங்கள் அடிபட்டு வெல்லுவம் அண்ண சாப்பிடாமல் கிடந்து இந்திய அரசை வெல்ல முடியாது அண்ண…  இந்த முடிவை மாற்றுங்கோ அண்ண “ 

என வேண்டுகிறாள் முதல் பெண் மாவீரராக வீழ்ந்த 2 ஆம் லெப்டினன் மாலதி. அந்த வேண்டுகைக்கு முற்றுப்புள்ளியிடும் கோணத்தில் ஒரு புன்சிரிப்பை உதிர்ந்து விட்டு, தனது பசிப்போராட்டத்தின் நியாயத் தன்மையையும் அதன் தேவையையும் உணர்த்த கூடியதாக அவர்களோடு அது பற்றி கதைக்கின்றார். 

“எடுக்கப்பட்ட முடிவை மாற்ற முடியாது.  தமிழீழ விடுதலைப்புலிகள் துப்பாக்கிகளின் பிரியர்கள் அல்ல என்பதை சர்வதேசத்துக்கு காட்ட வேண்டும். எமது உரிமைக்கான போராட்டத்தை அகிம்சை வழியாக இருந்தாலும் சரி, ஆயுதவழியாக இருந்தாலும் சரி எம்மால் முன்னெடுக்க முடியும் என எதிரிக்கும் உலக நாடுகளுக்கும் புரிய வைக்க வேண்டும். அதனால் நான் இந்த உண்ணாவிரதப் போராட்ட முடிவைக் கை விட மாட்டேன். நீங்களும் என் வழியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தலைவரின் எண்ணங்களை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். எம் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். நான் உயிருடன் மீண்டு வருவனோ இல்லையோ தெரியாது ஆனால் நீங்கள் சாதிக்க வேண்டும். “

என பல விடயங்களை பெண் போராளிகளுக்கு அறிவுறுத்துகிறார். அவரை இழந்து விடப் போகிறோம் என்று அருகில் நின்ற சோதியா, ரதி, மாலதி என்று தொடர்ந்த போராளிகள் அனைவருக்கும் புரிந்தது. அப் போராளிகள் தலைவனிடம் வளர்ந்தவர்கள். அவர்களுக்கு தலைவனின் தீர்க்கதரிசன பார்வை கொஞ்சமாவது இருக்காமல் போகாது. அவர்கள் உள்ளே அழுதார்கள். ஆனால் தங்களின் நேசத்துக்குரியவனின் உறுதியான குரல் முன்னே அவர்களால் உடைந்து அழ முடியவில்லை. அடுத்த நாள் காலையில் தம்மை வளர்த்த பாசமான அண்ணன் மேடையேறி பட்டினிப் போர் செய்யத் தயாராகிய கணத்தில் கண்களில் இருந்து வழியத் தொடங்கிய கண்ணீரை அவர்கள் எவர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 

தியாக தீபம் திலீபனின்  எண்ணக்கருவில் இருந்து தமிழீழ விடுதலைக்காக  பல கட்டமைப்புக்கள் உருவாகி இருந்தன. அதில் “மாணவரமைப்பு” மற்றும் “சுதந்திரப்பறவைகள்” என்பன முக்கிய இடம் பெறுகின்றன. இதில் சுதந்திரப்பறவைகள் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டிருந்த அனைத்து இளையவர்களையும் சரியான பாதையில் வழிநடாத்தி இருந்தார் தியாகதீபம் திலீபன். 

அந்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த தாயகப் பிரதேசம் எங்கும் சுதந்திரப்பறவைகள் இயங்கத் தொடங்கியிருந்தது.  பல நூறு இளம் பெண்கள் தம்மை ஆர்வத்தோடு சுதந்திரப்பறவைகளாக இணைத்துக் கொண்டு செயற்பட்டனர். அவர்களை வெறும் பெண்களாக நோக்காது நெறிப்படுத்தினார். அவர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து அல்லது அவர்களின் திறன்களை ஆய்வு செய்து அதற்கேற்ப அவர்கள் அனைவருக்கும் பயிற்சிகளை வழங்கி இருந்தார். 

இதே வேளை ஒரு அணிப் பெண் போராளிகள் இந்தியாவில் அடிப்படை இராணுவப் பயிற்சியை பெற்றுக் கொண்டிருந்தார்கள். தாயகத்தில் சுதந்திரப்பறவைகள் அமைப்பு மருத்துவ,  உணவு வழங்கல் மற்றும் பரப்புரை போன்ற செயற்பாடுகளுக்காக தயாரானார்கள். அவ்வாறு தயார்ப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் தனித்துவமான அடையாளத்தோடு விடுதலைக்காகப் பணியாற்றத் தொடங்கினர். 

இந்த நிலையில் இந்தியாவில் இராணுவப் பயிற்சிகளை நிறைவு செய்து தாயகத்தை வந்தடைந்த முதலாவது மகளிர் அணி மன்னார் களமுனையில் தளபதி லெப். கேணல் விக்டரின் வழிநடத்தலில் அணித்தலைவி தீபாவின் தலமையில் பல சாதனைகளை செய்தது. ஆனாலும் குறுகிய சில காலத்துக்குள் அவ்வணி  யாழ்ப்பாணம் நோக்கி நகர்த்தப்பட்டது. 

அப்போது தியாக தீபம் திலீபன், முதல் கரும்புலி கப்டன் மில்லர் ஆகியோர் மட்டுமல்லாது பல மூத்த போராளிகளை பெண் போராளிகள் சந்திக்கிறார்கள். அவர்களுடனான சந்திப்பு பின் நாட்களில் பெறுமதி வாய்ந்ததாக இருந்ததை மறுக்க முடியாது. அப்போதைய இராணுவத் தளபதியாக செயற்பட்ட கேணல் கிட்டு அவர்களினால் பெண் போராளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட திலீபன், அவர்களைப் பார்த்துப் புன்னகை ஒன்றை உதிர்க்கிறார். அதில் வீரப் பெருமிதம் தெரிந்தது. இப் போராளிகளுக்கும் அந்த புன்னகை வரலாற்று உண்மை ஒன்றை உணர்த்தியது. அப்போது புன்னகையால் பேசிச் சென்றவர் பின்பு இவர்களின் வழிகாட்டியாகிப்போனார். 

சில காலங்கள் கழிந்த பின் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 

“திலீபனிட்ட சுதந்திரப்பறவைகள் அமைப்பில நிறைய பிள்ளைகள் இருக்கினம் அதில தரமான 100 பேருக்கு அடிப்படைப் பயிற்சியை குடுத்து போராளிகளாக மாற்றுங்கோ”

என்று கட்டளை முதலணிப் பெண் போராளிகளுக்கு வருகிறது.

அக்கட்டளையை நிறைவேற்ற தொடங்கிய மகளிரணிப் போராளிகள் கிளாலிப் பகுதியில் அந்த 100 பேருக்குமான பயிற்சி முகாமை உருவாக்கிக் கொள்கிறார்கள். முகாமின் அனைத்து நிர்வாகமும் பெண் போராளிகளிடமே வழங்கப்பட்டதனால் அறிக்கை எழுதுவது தொடக்கம் ஆயுதப்பயன்பாடு, உணவு, நிர்வாகம் என அனைத்தையும் அவர்களே செய்ய வேண்டி இருந்தது. அப்போது அம்முகாமுக்கு அடிக்கடி வரும் தியாக தீபம், பொறுப்பான போராளிகளுக்கு துறைசார்ந்த வழிகாட்டல்களை வழங்குவது மூலமாக அவர்களை நிர்வாகத்திறன் வாய்ந்த போராளிகளாக உருவாக்கினார். 

சுதந்திரப்பறவைகள் அமைப்பிலிருந்த பெண்களில் 100 பேருக்கான இராணுவப் பயிற்சி முடிவடையும் தருணத்தில்த் தான் “சுதுமலைப் பிரகடனம் “ என்ற பெரும் வரலாற்றுத் திருப்புமுனையை எமது அமைப்பு செய்தது. அதற்காக அனைத்துப் பெண் போராளிகளையும் அந்த இடத்துக்குக்கொண்டு வர வேண்டுமென தினேஷ் என்று அப்போது அழைக்கப்பட்டு  பின் நாட்களில் தமிழ்ச்செல்வனாகி இப்போது பிரிகேடியர் தமிழ்செல்வனாகிவிட்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பெண் போராளிகளின் பொறுப்பாளருக்குத் தெரியப்படுத்துகிறார்.  ஏனெனில் எமது மகளிர் படையணியின் பலத்தையும் அந்த இடத்தில் நிரூபிக்க வேண்டியது அவசியமாகியது. அதனால் அனைவரும் சுதுமலைக்கு கொண்டு வரப்படுகின்றனர். மக்கள் அனைவரும் பெண் போராளிகளைப் பார்த்து பெருமையும் அதிசயமும் அடைகின்றனர். முழு இராணுவ நிலையில் அவர்களைக் கண்டதும் அதிர்ச்சியும் அதிசயமும் கலந்த சந்தோசத்தில் மக்கள் இருந்தனர். அன்றைய நாளில் பெண் போராளிகள் அங்கே வந்த போது மக்கள் மட்டுமல்ல திலீபன் உள்ளிட்ட ஆண் போராளிகளும் மகிழ்வோடு அவர்களை பார்த்தார்கள்.

2nd Lt. Malathi Regiment of LTTE.

இவ்வாறாக ஒவ்வொரு விடயத்திலும் கவனமெடுத்து தியாக தீபம் திலீபன் பெண் போராளிகளை வளர்த்தெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்ட ஒரு நாளில் திலீபன் இருபாலைச் சந்தியில் இருந்து கோப்பாய் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மாலதியும் அவளுடைய தோழி ஒருத்தியும் வீதியில் இருந்த கல் ஒன்றில் தடம் புரண்டு காயப்பட்டார்கள். இதைக் கண்டு அருகில் சென்றவர் 

“ நிறைய சாதிக்க வேண்டும் என்று உங்களை அண்ணை வளர்த்துள்ளார். இப்பிடி சின்ன சின்ன காயங்களை பட்டு இரத்தத்தை வீணாக்காதையுங்கோ “

என்று நகைச்சுவையாக கடிந்து கொள்ள. 

“அண்ண இருந்து பாருங்கோ நான் சாதிச்சு தான் சாவன் அண்ண… எனக்கு தான் நீங்கள் முதல் மாலை போடுவியள் அண்ண “ 

என்று சிரிக்கிறார் 2 ஆம் லெப் மாலதி. அன்று கூறியதைப் போலவே கோப்பாய் மண்ணில் 14 நாட்கள் கழித்து முதலாவது பெண் மாவீரராக மாலதி வீழ்ந்த போது, மாலதியின் வித்துடலுக்கு மாலையிட தியாகதீபம் உயிரோடு இருக்கவில்லை. அவர் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக 5 அம்சக் கோரிக்கைகளை முன் நிறுத்தி பட்டினிப் போர் புரிந்து விதையாகி விட்டார். 

1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2). சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

என அவர் கோரிக்கை வைத்து பசிப்போர் புரிந்து மண்ணுக்காக விதையாகி விட்டார். 

இந்த சாவு அவரால் வளர்க்கப்பட்ட சுதந்திரப்பறவைகளுக்கும் முதல் மகளிரணிப் போராளிகளுக்கும் தாங்க முடியாத வேதனையைத் தந்தது. அதனால் நல்லூரான் முன்றலில் 26.09.1987 அன்றே அவர்கள் அழுது தீர்த்துவிட்டார்கள். இச் சுதந்திரப் பறவைகள் அமைப்பில் இருந்து பின்னைய நாட்களில் போராளியாகிய கஸ்தூரி என்ற இளையவள் ( ஆகாயக் கடல் வெளிச் சமரில் வீரச்சாவு) திலீபனின் உண்ணாவிரத மேடைக்கு அருகில் இருந்த நிகழ்வு மேடையில் தினமும் திலீபனுக்காக கவிதைகளை எழுதி எழுதித் தன் மனக்கவலையை போக்கிக் கொண்டிருந்தாள். கவிதைகளுக்கூடாக அங்கே கூடி நின்ற அனைவரின் நெஞ்சைத் தொட்டாள். ஆனால் தியாக தீபமோ புன்னகை ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டு  பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் பட்டினிப்போர் புரிய மேடையில் வந்தமர்கிறார். யாராலும் தடுக்க முடியவில்லை. தமிழீழ தேசியப் போராட்டத்துக்காக விதையாகிவிடுவேன் என்று தெரிந்தும் திலீபன் உண்ணாவிரதத்தை தொடர்கிறார். 

நாட்கள் நகர்ந்தன. சுதந்திரப்பறவைகள் நல்லூரிலே முடங்கிப் போய்க் கிடந்தது. யாருக்கும் எதுவும் செய்யப்பிடிக்கவில்லை. குளிக்க வேண்டும், சாப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை. தம்முன்னே உருகிக் கொண்டிருக்கும் தமையனின் உயிரைக் காத்திட யாராவது உதவ மாட்டார்களா என்பது மட்டுமே அவர்களின் ஏக்கம். ஆனால் திலீபனோ இறுதிவரை  தனது போராட்டம் நான் கோரிய விடயங்களில் வெற்றி பெற வேண்டும் அல்லது தான் சாக வேண்டும் என்ற இரு தெரிவுகளை மட்டுமே கொண்டு மேடையில் சோர்ந்து போய் கிடக்கிறார். 

இடைக்கிடை வரும் இந்திய அரச பிரதிநிதிகள் நல்ல முடிவைத் தருவார்கள் என்று சூழ்ந்து நின்ற மக்களும் சுதந்திரப்பறவைகள் மற்றும் போராளிகளைப் போலவே நல்லூர்க் கந்தனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. நாட்கள் மட்டும் நகர்ந்து கொண்டிருக்கிறது. தியாக தீபத்தின் உடல் முழுவதுமாக சோர்ந்து போய் இருக்கிறது. திலீபனின் உறுதியின் முன்னே யாராலும் எதையும் செய்ய முடியவில்லை. 

அப்போது தனது ஆருயிர்த் தம்பியை காண தேசியத் தலைவர் வருகிறார். அவரிடம் இருக்கும் கம்பீரம் இல்லாமல் இருந்தது. கண்கள் சிவந்து நடையில் சிறு தொய்வு ஏற்பட்டிருந்தது. யாருக்கும் கிடைக்காத தலைவனைப் பெற்றது எம் ஈழத் தமிழினம். அன்று அதே தலைவன் திலீபன் கிடக்கும் கோலம் கண்டு நிச்சயமாக உடலளவில் சோர்ந்து போய்விட்டார். ஆனாலும் தன்னை நிதானப்படுத்திக் கொள்கிறார்.  பல விடயங்களைப் பேசுகிறார். ஆனால் கொண்ட கொள்கையில் மாறமுடியாத இலட்சிய வீரர்கள் எமது போராளிகள். அதனால் அவர் உடைந்து போனாலும் உறுதி குறையாமலே இருந்தார். நீண்ட நேரம் கதைத்தால் திலீபன் களைத்து விடுவார் என்பதைப் புரிந்து சிறு நேரம் கதைக்கிறார். 

இந்த இடத்தில் தமிழீழ தேசியத்தலைவர் எத்தகைய மனம் படைத்தவர் என்பதைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதைப் பலர் புரிவதில்லை. அதனால் நியம் ஒன்றை பதிவு செய்ய வேண்டியது அவசியம். அதாவது, ஒரு தலைவனுக்கு அவனது பாதுகாவலர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக உணவைச் சோதனை செய்தே உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் எம் தலைவனோ தான் உணவை சோதனையிட்டு போராளிகளுக்கு வழங்கிய வரலாற்றைக் கொண்டவர். 

இந்தியாவில் நடந்த பெண்களின் முதலாவது இராணுவப் பயிற்சி முகாமில் தினமும் உணவு நேரத்தில் பெண் போராளிகள் சாப்பிட முன் அனைத்து உணவுகளையும் தான் உண்டு சுவை அறிந்து நல்லனவா என பார்த்து விட்டுத் தான் அவர்களுக்கு பரிமாறச் சொல்வார். அவ்வாறு சோதனையிடும் போது உணவு சுவையற்றோ அல்லது பழுதடைந்தோ இருந்தால் அவை அகற்றப்படும்; அதேநேரம் அதை சமைத்த ஆண் போராளிகளுக்கு தண்டனை கொடுக்கப்படும். இவ்வாறு தாயைப் போல இருந்து போராளிகளை நேசித்த அத் தலைவன் இன்று உணவின்றி படுத்திருக்கும் தியாகத்தின் உச்சத்தை கண்டு உடைந்தது உண்மையே. 

அவர் சென்ற பின் தியாகதீபம் திலீபனின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அவர் கொஞ்சம் சோர்வில்லாது இருப்பதை உணரக்கூடியதாக இருந்தது. மாலதி இதை கண்டு கொள்கிறா அருகில் இருந்த முதலாவது மகளிர் படையணி தளபதியான மேயர் சோதியாவிடம் 

“அக்கா திலீபன் அண்ணைய பாருங்கோ. “

அவர்களின் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தாலும்  திலீபன் அண்ணைய இந்தியன் எப்பிடியும் சாகடிச்சிடுவான் என்பதை உணர்ந்தே இருந்தார்கள். 

அசைவற்றுக் கிடக்கும் தியாகதீபத்தின் உடல் திடீரென்று மரணவேதனையில் தானாக அசைவதை அவர்கள் காண்பார்கள். அப்போதெல்லாம் கத்திக் கத்தி அழுது தமது வலியை போக்கினார்கள். அதை விட வேறு வழியில்லை. மேடைகளில் ஏறியவர்கள் உண்ணாவிரதப் போரை நிறுத்துமாறு கெஞ்சினார்கள். ஆனாலும் ஒவ்வொன்றாக அவயங்கள் செத்துக் கொண்டிருந்த போதிலும், இறுதி மூச்சுவரை போராட்டம் தொடர வேண்டும் என்பதில் தியாகதீபம் உறுதியாக இருந்தார். 

பட்டினிப்போரைத் தொடங்குவதற்கு முதலே இது தொடர்பாக அனைவரிடமும் பேசிய போது  

“நான் மரணவேதனையில் தண்ணீர் தாங்கோ என்று கத்தினாலும் யாரும் தண்ணீர் தரக்கூடாது “

என்றும், மருத்துவச் சிகிச்சைகள் எதுவும் வழங்கப்படக்கூடாது என்றும் சத்தியம் வாங்கியிருந்தார். அவ்வாறான தியாகி எப்படி தனது போராட்டத்தை இடைநிறுத்த சம்மதிப்பார்? இது வினாவாக எழுந்து நின்றாலும், அனைவரும் பட்டினிப் போர் நிறுத்தப்பட  வேண்டும் என்பதையே விரும்பினார்கள். அவர்களால் தம் கண்முன்னே தம்மை வளர்த்தவர், தம்மை நேசித்தவர் கொஞ்சம் கொஞ்சமாக உருகுவதை தாங்க முடியவில்லை. 

இறுதி மணித்தியாலங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. தாயகமே கூடி வந்து நல்லூரில் நின்றது. பல இந்திய முகாம்களை மக்கள் சுற்றிவழைத்து இராணுவத்தை முடக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். தாயகம் எங்கும் உணர்வலைகள் கொழுந்தாய் எரிந்தது. தியாகதீபம் தனது போராட்டத்தின் 12 ஆவது நாளை தொட்டுவிட்டார். எவராலும் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. சுதந்திரப்பறவைகளும், போராளிகளும் பல லட்சம் மக்களும் வடித்த கண்ணீரை நல்லூர் கந்தன் கண்டு கொள்ளவே இல்லை.  

இறுதி நாள் இறுதி நிமிடத்தை தொடுகிறது. அனைவரது முகத்திலும் ஏமாற்றம். அண்ணா அண்ணா என்று வானைத் தொடும் சத்தங்கள். அப்போது மருத்துவர் எந்த அசைவுமற்று கிடந்த தியாகதீபம் திலீபனை பரிசோதிக்கிறார்.  அவர் இனங்கண்டிருந்தார். கையெடுத்து கும்புடுகிறார். பாதத்தை தொட்டு வணங்குகிறார். அந்தக் காட்சி கூடி நின்றவர்களுக்கு உண்மையை உரைத்தது. இதைக் காணவா இவர்கள் கூடி இருந்தார்கள். பல லட்சம் மக்களின் அவல ஓலம் இந்திய வல்லாதிக்க அரசின் செவிகளுக்கு கேட்கவே இல்லை. 

அகிம்சையின் தந்தை என்று மகாம்தாகாந்தியை வணங்கும் இந்திய தேசம்  1987 புரட்டாதி 26 ஆம் நாள் காலை 10.58 மணிக்கு  நல்லூர் முருகன் கோவில் வாசலில் வைத்து தியாகதீபம் லெப்டினன் கேணல் திலீபனிடம் தோற்றுப் போனது. 

தியாக தீபம் திலீபனோ, அவர் வளர்த்த போராளிகளோ அவர் நேசித்த மக்களோ இந்திய தேசத்திடம் தோற்றுப் போகவில்லை. அகிம்சையின் இருப்பிடம் என்ற ஆடையை அணிந்து வலம் வந்து கொண்டிருந்த பாரத தேசம் திலீபன் என்ற பெரும் நெரிப்பால் துகிலுரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டதை எந்த ஈழத்தமிழனும் மறந்துவிடமாட்டான். 

அதனால்த் தான், 

நாம் எவ்வாயுதத்தை கையில் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்ற மெய்மைக்கமைய தமிழீழ விடுதலைப்போராட்டம் மீண்டு ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து, இறுதிவரை உறுதி குலையாது பயணித்தது. அப் போராட்டத்தில் திலீபனால் வளர்க்கப்பட்ட சுதந்திரப்பறவைகளும் பெண் போராளிகளும் அவரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியபடி சாதனைகளின் உச்சத்தை அடைந்து நின்றதை மறுக்க முடியாது. திலீபன் என்ற உன்னத வேங்கையை மனதில் வைத்துப் பயணித்த அவர்களால் சாதிக்க முடிந்தது. ஆனால் அவரின் சாவுக்குப் பின் தோழர் தோழிகளின் சாவுக்கு கூட அழ முடியவில்லை. அவர்கள் கொண்ட கொள்கையில் குன்றிடாத வேங்கைகளாக இறுதிவரை பயணித்தார்கள்.


எழுதியது : இ.இ.கவிமகன்.

தகவல்: முதலணிப் போராளி ரதி

படங்கள்: அர்ச்சுனா ஒளிக்கலைப்படப்பிரிவு