தமிழீழ விடுதலைப் போர் 2009 இல் மௌனக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து அல்லது அதை செய்த சிங்கள வல்லாதிக்கத்தை கண்டித்து எந்த அறிக்கைகளையோ அல்லது செயற்பாடுகளையோ முன் நிறுத்தாத தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்மந்தன் இலங்கையில் நடந்த தற்கொலைத் தாக்குதல் பற்றியும் நடந்த வன் கொடுமை பற்றியும் வாய் திறந்திருப்பது பெருமைக்குரியதே. அந்த வகையில் மக்கள் மீது இக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் சினத்தையும் வெளிக் காட்டியதோடு மட்டுமல்லாது உரியவர்களிடம் கோரிக்கைகளையும் வைத்தார். இது தொடர்பாக கொழும்பில் இருந்து கிடைத்த செய்தி யாதெனில்,

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் சம்பந்தன் பேசியபோது;

“உயிர்த்த ஞாயிறன்று எமது நாடு குருதியில் குளிர்த்துள்ளது. கொள்கை இல்லாத மத வெறியர்களின் கொலைவெறித் தாக்குதல்களால் 300இற்கும் மேற்பட்ட எமது அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இப்படியான கொடூர சம்பவங்கள் இடம்பெற நாம் இடமளிக்கக்கூடாது. இன, மத பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரள்வோம். தீவிரவாதிகளின் அராஜகத்துக்கு முடிவுகட்டுவோம்.

மேலும்,கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களைக் குறிவைத்து இடம்பெற்ற மன்னிக்க முடியாத கொடூர சம்பவங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களும் வன்மையாகக் கண்டிக்கின்றார்கள். உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாட்டின் பாதுகாப்புத்துறையில் ஏற்பட்டிருந்த ஓட்டை தீவிரவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. எனவே, பாதுகாப்புத்துறைக்குப் பொறுப்பானவர்களும் அரச தலைவர்களும் அரசும் இதற்குப் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும். இதை நான் அதியுயர் சபையான நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளேன்.

இந்த வெடிகுண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.