ஆயுதப்படைகள் வலை விரித்துத் தேடிய, செ.சத்தியநாதன் இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் பிரிவுத் தலைவன்.

கண் திறக்காத பூனைக்குட்டியாக, நெஞ்சில் கனலும் புரட்சிகர உணர்வோடு சின்ன வயதிலேயே இயக்கத்திற்குத் தன்னை அர்ப்பணித்த வீரமறவன். அரச படைகளின் திடீர் முற்றுகையில் இருந்து தப்பிச் செல்லுகையில், சுற்றி நின்ற கொமாண்டோக்கள் சரமாரியாக வெடிகளைத் தீர்த்த போது காயமுற்று, எங்கள் இயக்கத்தின் முதலாவது களப்பலியாகும் பெருமையை அணைத்துக் கொள்கிறான்.

சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாதவன். ஒரு சின்ன பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புக்களிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரச படைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு மத்தியில் அவன் கிராமங்களின் வீதிகளில் சாதாரணமாக உலா வருவான். அதே நேரத்தில் சுழன்று கொண்டிருக்கும் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறு கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும், இயக்கத்துக்கும் ஆபத்து ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாக இருப்பான்.

எதிரியிடம் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்தி விட்டு, தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் என்பவர்கள் ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிகையில் வாசித்தால் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்த குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களை வைத்துக் கொண்டு அரசபடைகளின் கைகளில் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல், ஒரு விடுதலைப் போராளி சரணடைவது கோழைத்தனமானது என்பது அவனது உறுதியான முடிவாக இருந்தது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் விடுதலைப் போராளியையும், ஆயுதங்களையும் அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான். படுகாயமுற்ற நிலையிலும் கூட மதில் தாண்டிப் பாய்ந்து, தங்கள் கெரில்லாப் பிரிவின் மற்றொரு மறைவிடத்தை நோக்கித் தப்பிச் சென்றவன். பாதுகாப்பான இடம் வந்து சேர்ந்து விட்டோம் என்று தெரிந்த பின்தான் இடுப்பிலிருந்து ரிவோல்வரை கீழே வைக்கிறான். உயிரோடும், ஆயுதத்தோடும் எதிரியின் கைகளில் பிடிபடாத ஒரு வீரனின் சாவு அவனுடையது.

இருபத்தியொரு வயதில் அவன் சாதித்தது தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி, வடக்கில் புலிப்படையை அடக்கி விடமுடியும் என்று அன்றைய சனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்த போது, நெல்லியடியில் அரசபடைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும் வரை தமிழீழப் போராட்டம், ஓயாது ஒழியாது என்பதை அரசிற்கு எடுத்துக் காட்டியது.

ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத் திறந்து சாரதியை ஒரு கையால் வெளியே எடுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்க்கும் லாவகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்த ரிவோல்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரசபடையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகல விரித்து பக்கவாட்டில் நின்று அரசபடையினர் மீது குண்டுமாரி பொழிந்தான்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத் தாக்குதலின் வெற்றியில் சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்ட நிலையில் மாடிக்கட்டிடத்தோடு பிரதான வீதியிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே அமைந்திருந்த பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்கமாகத் தாக்குதல் நடாத்துவதென்பது விசப் பரீட்சை தான். ஆனால் உயிரைக் கடந்த காலத்துக்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் ஆகிய போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிட முடியும்? ஜீ 3 துப்பாக்கி சகிதம் சங்கர் படுத்துக் கிடந்து, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடாத்திய தாக்குதல் அப்பகுதி அரசபடைகளை, ஸ்தம்பிக்கச் செய்தது.

பொன்னாலை குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கியதேசியக் கட்சிஉறுப்பினர், தம்பாப்பிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்கு சங்கரே பொறுப்பு வகிக்கிறான். எந்த விதமான வாகனத்தையும் நேர்த்தியாக செலுத்தும் ஆற்றலும், சங்கரின் பல்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒருகெரில்லாத் தாக்குதலை அடுத்து ஏற்படுகின்ற பரபரப்பு, எதிரிப்படைகள் ஸ்தலத்திற்கு வருமுன்னரே வெளியேற வேண்டிய அவசரம் என்பவற்றுக்கு மத்தியில் மிகுந்த வேகத்துடனும், அதிக நிதானத்துடனும் வாகனத்தை செலுத்துவதில் சங்கர் வல்லவன்.

சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும் போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சக போராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான். தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் இராணுவத் தலைமையிலேயே, வென்றெடுக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தோடு தன்னையே கரைத்துக்கொண்டவன்.

விடுதலைப் போராட்டமே சங்கரின் முழு மூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்துகென்றே ஆயுதம் ஏந்தி குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும், சந்தர்ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதயசுத்தி நிறைந்த போராளிகளே எமதுவிடுதலை இயக்கத்தின் தூய்மைக்கு சாட்சியாக நிற்கிறார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அரசியல் வழிகாட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும்சங்கர் ஊறி வளர்ந்தவன். அவரின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற, தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளினால் தான் தலமையேற்று நடத்தப்படவேண்டுமென்பதை, அவன் எப்போதும் சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும்,துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்தபோதெல்லாம், அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.

சாகும் தறுவாயிற் கூட அவன் தன் உற்றார், பெற்றாரை நினைக்கவில்லை. “தம்பி…… தம்பி….” என்றுதான் அந்தவீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்ந்தன. தம்பியும், மற்ற இயக்கப் போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.

“ஒரு உண்மை மனிதனின் கதை” என்ற ரஷ்ய நாவலை கடைசியாக வாசித்துக் கொண்டிருந்த சங்கர், அந்தநாவலை முழுவதும் வாசித்து முடிக்கவில்லை.
சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையும் கூட ஒரு வீர காவியம்தான்!

வெளியீடு: ஈழநாதம் நாளிதழ்

நாள்: 27.11.2003

மீள் தட்டச்சு : புலர்வு இணையம்