தமிழீழ விடுதலை புலிகள் என்ற உன்னத அமைப்பின் தமிழீழ நடைமுறையரசு தனது அரச கட்டமைப்பை உருவாக்கித் தமிழீழத்தை அரசாட்சி செய்த காலத்தில் அரசுக்குத் தேவையான பல பிரிவுகளை உருவாக்கி இருந்தது. அந்த வகையில் தமிழீழத்தின் நீதி நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கென்றும் பிரிவுகள் உருவாக்கம் கண்டன. அதன் அடிப்படையிலையே தமிழீழ காவல்துறை உருவாக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ அரசு மௌனிக்கும் வரை இயங்குநிலையில் இருந்தது தமிழீழ காவல்துறை. இறுதியாக அரசியல்துறையின் பொறுப்பாளராக இருந்து இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட திரு நடேசன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட அக் கட்டமைப்பு பலத்த சவால்களையும் தடைகளையும் தாண்டி நிமிர்ந்து நின்றது. பின் நாட்களில் திரு இளங்கோ அவர்களின் பொறுப்பின் கீழ் செயற்பட்ட காவல்துறை மக்களுக்காக மக்களின் பணிகளைச் செய்த அதே நேரம் களமுனைகளில் படையணிகளாக நின்ற சண்டையிட்ட வரலாற்றையும் மறக்கலாகாது. இத்தகைய வீரம்மிக்க காவல்துறையின் ஒரு பணிமனை அதிகாரியாக பணியாற்றிய திரு ரஞ்சித்குமார் அவர்களை புலர்வுக்காக நான் சந்திக்கிறேன்.

தமிழீழ காவல்துறையின் உருவாக்கமும் அதன் நோக்கமும் என்ன?

Tamil Eelam Police.

தமிழீழ காவல்துறையானது தமிழர் தாயகத்தில், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் நோக்குடைய ஓர் தொழில் சார் அமைப்பாக 19,11,1991 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காவல்துறை கட்டமைப்பு பற்றி கூறுங்கள்

தமிழீழ காவல்துறையானது, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் நேரடியாக நியமிக்கப்பட்டு, ஒரு பொறுப்பாளரின் நெறிப்படுத்தலில் இயங்கியது. தமிழீழ சட்டக் கோவைகள், காவல்துறை ஒழுக்கவிதிகள், மற்றும் நடைமுறைக் கோவைகளுக்கு அமைய பணிகளை ஆற்றியது.

நிர்வாக இலகுபடுத்தலுக்காக, பிரதேச பணிமனைகளாகவும், குற்றத்தடுப்பு பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, நகர போக்குவரத்து பிரிவு, மகளிர்-சிறுவர் விவகாரப் பிரிவு, உள்ளக பாதுகாப்புப் பிரிவு உட்பட இன்னும் பல சிறப்பு பிரிவுகளையும்,

ஆளணிப் பிரிவு, நிதிப்பிரிவு, படைக்கலன் பிரிவு, தொலைத்தொடர்பு பிரிவு போன்ற இன்னும் பல நிர்வாகப் பிரிவுகளையும் கொண்டு இயங்கியது.

நீதி நிர்வாக செயற்பாடுகள் தமிழீழத்தில் எவ்வாறு இருந்தன?

தமிழீழத்தில் நீதி நிர்வாகத் துறை மிகவும் சுதந்திரமாக செயற்பட்டது. சட்ட விதிகளுக்கும், விவாதங்களுக்கும் அமையவே வழக்குகள் கையாளப்பட்டன.

உங்களின் தனிப்பட்ட பணி மற்றும் செயற்பாடுகள் பற்றி?

நான் 1991 மே மாதம் முதல் 2009 மே மாதம் வரை தமிழீழ காவல்துறையில் பணியாற்றியிருந்தேன். பெரும்பாலான காலப்பகுதியில் பணிமனைப் பொறுப்பாளராக (O.I.C) பணியாற்றியிருந்தேன்.

நடந்து கொண்டிருக்கும் சிங்கள இனவாத அரசின் இனவழிப்பின் உச்சமாக நடந்து முடிந்த மே 18 2009 ஐ கடந்து 11 வருடங்களாக நிமிர முடியாது கிடக்கின்றோம் இந்த நிலையில் தொடரும் இந்த இனவழிப்புப் பற்றி?

எனது வாழ்நாளில் மிக மோசமான இனவழிப்பு சம்பவங்களை நேரில் பார்த்துள்ளேன். 1990,08,05ம் திகதி, யாழ் மாவட்டம் பாசையூர் பாடசாலையில் தங்கியிருந்த இடம் பெயர்ந்த மக்கள் மீது நடத்தப்பட்ட விமான குண்டுவீச்சு தாக்குதலில் காயமடைந்த பலருக்கு நான் எனது கைகளால் முதலுதவி செய்தேன். அதுதான் எனது முதல் அனுபவம். அதனை இன்னும் மறக்கமுடியவில்லை. இதை விட ஏராளமான அனுபவங்கள் இறுதிக் காலங்களில் இருந்தது.

இறுதி சண்டை நெருங்கி வந்து விசுவமடுவை இராணுவம் கைப்பற்றிய காலத்துக்குப் பின் படு மோசமான ஒருங்கிணைப்புத் தாக்குதல்களை இராணுவம் செய்தது அதில், எனக்குத் திகதி சரியாக நினைவில்லை ஆனால் சம்பவம் உடையார்கட்டுப் பகுதியில் நடந்தது. ஒரு வயது மதிக்கக் கூடய குழந்தை ஒன்று எதிரியின் ஆட்லறி தாக்குதலில் தலை சிதறிப் போய் இறந்ததிருந்தது. நான் அப்பிள்ளையைத் தூக்கிய போது தான் தலை சிதறி இருப்பதைக் கண்டேன்.

முப்பெரும் தேவிகள் கோவில் என்ற இடத்தில் எனது தாய் இருந்த போது, எறிகணை வீச்சு ஒன்று நடந்திருந்தது. அந்த எறிகணையில் இருந்து தன்னைப் பாதுகாக்க நிலத்தில் விழுந்த போது எனது தாய்க்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதனால் நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

என்னால் அருகில் இருந்த உடையார்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் உடையார்கட்டு மருத்துவமனை முழுமையாக செயலிழந்து போயிருந்தது. அதனால் நான் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு உந்துருளியில் கொண்டு சென்றேன். அப்போது பரந்தன் முல்லைத்தீவு வீதியில் இருக்கும் அம்மன் கோவில் இறக்கம் என்ற பகுதியில் இராணுவம் நேரடியாக துப்பாக்கிச் சூட்டை செய்தது. மக்கள் தான் பயணிக்கிறார்கள் என்று தெரிந்தும் குறிச்சூட்டாளர்கள் எம்மை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். நாங்கள் தப்பி விட்ட போதிலும், அங்கே கனபேர் இறந்து கிடந்ததை வீதியில் நான் கண்டேன்.

அம்மாவை சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் விட்டுவிட்டு நான் பணிக்குத் திரும்பிய அன்று புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சரமாரியான எறிகணை வீச்சை இலங்கை அரசபடை செய்தது. அதனால் அங்கே காயமடைந்து வந்த பல மக்கள் மீண்டும் காயமடைந்து அல்லது இறந்து போனார்கள். அந்த தாக்குதலில் எனது தாய் மீண்டும் காயமடைந்திருந்தார்.

தேவிபுரம் பகுதியில் கடமையில் இருந்த போது காயமடைந்தவர்களுக்கு இரத்தம் தருமாறு மக்களிடம் மருத்துவர்களால் கோரப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மருத்துவர்களிடம் குருதிக்கொடை செய்ய வந்திருந்த மக்களை இலக்கு வைத்து இராணுவம் எறிகணை ஏவியதில் பலர் சாவடைந்தார்கள்.

18.02.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் மக்கள் இருப்பிடங்களை நோக்கி செய்யப்பட்டது. அதில் குறைந்தது 50 இற்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டார்கள். அது மட்டுமல்லாது தமிழீழ காவல்துறையின் சீர்திருத்தப்பள்ளி மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அந்த தாக்குதலில் போர்க்கைதிகளாக இருந்த சமன்குமார என்ற சிங்களப்படையை சேர்ந்தவர் சாவடைந்தும் இன்னும் 6 சிங்களப்படைகள் காயமடைந்தும் இருந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவப்பிரிவிடம் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

இறுதி நேரத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், உழவியந்திரத்தின் மீது ஒரு எறிகணை வீழ்ந்து வெடித்து அந்த உழவியந்திர சாரதி தலை சிதறி சாவடைந்திருந்தார். உடனடியாக நாங்கள் உழவியந்திரத்தை அப்பகுதியில் இருந்து அகற்றி மக்கள் பயணிக்கும் பாதையை சீர்ப்படுத்திய போது திடீர் என்று ஒரு பெண் தீ பற்றி எரிந்து சாவடைந்தார். அவரை காப்பாற்ற முனைந்தும் முடியாது போனது. அவர் கையில் மண்ணெண்ணை பரலை வைத்திருந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அந்த பெண் எரிந்ததற்கு காரணம் தெரியவில்லை. அதே நேரம் எரிகுண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அல்லது தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதலாக கூட இருக்கலாம்.

ஏனெனில் அதன்பின் நான் பல இடங்களில் இவ்வாறான சந்தர்ப்பத்தை உணர்ந்திருந்தேன். குண்டு வெடித்த சிறு நேரத்தில் அந்த இடமே பற்றி ந்தததை நான் அனுபவித்திருந்தேன். சில காயமடைந்தவர்களின் காயங்களில் இருந்து புகை வெளிவந்திருந்ததை நான் கண்டுள்ளேன். அதனால் அந்த இடத்தில் எதோ ஒரு எரிநிலை குண்டினால் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என்றே நான் நம்புகிறேன்.

இவ்வாறு இன்னும் பல நிகழ்வுகள் மறக்க முடியாதவையாக மனங்களில் புதைந்து கிடக்கின்றது.

மனிதநேய பணிகளை தமிழீழ காவல்துறை முன்னெடுத்திருந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழீழ மக்களில் இருந்தே காவல்துறை உறுப்பினர்கள் அந்த மக்களுக்காகவே உருவானதால், அவர்கள் மக்களின் வலிகளை பரிவுடன் நோக்கினர். இதனால் அவர்கள் தமது சேவைக் காலத்தில், குறிப்பாக போரின் இறுதி நாட்களில், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி, இறந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்தல், உணவு விநியோகத்தை சீர்செய்தல், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டனர்.

விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட சிங்களப் படைகள் போர்கைதிகளாக தமிழீழ காவல்துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டனர் எனும் செய்தி உண்மையா?

ஆம், நான் அறிந்தவரையில் ஏழு சிங்கள போர்க் கைதிகள் தமிழீழ காவல்துறையின் சீர்திருத்த பிரிவில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். புனலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் வேறு இரானுவம் இருந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை.

அவர்களை பராமரித்தது தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்?

இவர்கள் மனிதாபிமானமாக நடத்தப்பட்டனர். அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) பதிவுகளுக்கும் உட்படுத்தப் பட்டிருந்தனர். உண்மையில் அவர்களை நாம் கண்ணியத்தோடு பராமரித்தோம் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டிருந்தன. இதை அவர்களில் பலர் உயிரோடு உறவினர்களிடம் நாம் ஒப்படைத்ததன் பின் ஊடகங்களிலையே தெரியப்படுத்தி இருந்தார்கள்.

அவ்வாறு கைதான சிங்கள படைகளை தனித்த இடங்களில் பராமரித்த போது உங்களின் மனநிலை எப்படி இருந்தது?

இவர்களை பராமரிக்கும் பணியில் நான் நேரடியாக ஈடுபடவில்லை. இருந்தபோதிலும், இவர்களை எவரும் பகைமையுடன் நோக்கியதாக நான் அறியவில்லை.

இறுதி நேரத்தில் அவர்கள் என்ன ஆனார்கள்?

அவர்கள் அவர்களின் அதிகாரிகளிடம் 2009,05,17 அன்று கையளிக்கப்பட்டனர்.

ஏன் அவர்களை சிங்கள அரசிடம் கையளித்தீர்கள்?

இது நிச்சயமாக தமிழீழ தேசியத் தலைவரது ஆணையாக இருக்க வேண்டும். அதனால் எமக்கு ஒரு கட்டளை வந்தது “அவர்களின் உயிருக்கு ஆபத்தின்றி, அவர்களின் அதிகாரிகளிடம் அனுப்பி வைக்குமாறு, காவல் துறை பொறுப்பாளர் இளங்கோ (ரமேஸ்) அவர்கள் 2009,05,16 அன்று பணிப்புரை விடுத்திருந்தார். மிகக் கடுமையான போர் சூழ்நிலையிலும், காவல்துறை அதிகாரியான தீபன் மற்றும் அவரது அணியினர் சர்வதேச சென்சிலுவைச் சங்கத்தினூடாக இந்த நடவடிக்கையை மிகச் சிறப்பாக நிறைவேற்றியிருந்தனர்.

உங்களின் பராமரிப்பில் இருந்த காலத்தில் சிங்களப் படையினர் யாராவது சாவடைந்திருக்கிறார்களா?

ஆம் நான் ஏற்கனவே இதை கூறி உள்ளேன், 2009/02/18 அன்று ஆனந்தபுரம் சீர்திருத்த பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அஜித் சமன்குமார (AJITH SAMAN KUMARA) என்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த போர்க்கைதி கொல்லப்பட்டிருந்தார்.

கைதாகிய எங்களின் போராளிகளை அல்லது மக்களை சிங்களப்படைகள் சித்திரவதை செய்து கொன்றொழித்தும் காணாமல் போகச் செய்தும் என அவலங்களை நிறைத்த போது நீங்கள் பராமரித்த இராணுவத்தைப் பற்றி என்ன மனநிலை உருவானது?

உண்மையைச் சொல்லப் போனால், அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களில் யாருக்குமே இருக்கவில்லை. அது பற்றி இப்போதும் பெருமைப்படுகிறேன்.

இறுதி நேரத்தில் கூட மனிதமான்பை மதித்த விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் / தீவிரவாதிகள் என்று கூறிக் கொண்டிருக்கும் இனவழிப்பு சிங்கள அரசுக்ககுத் துணை போகும் சர்வதேசம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பது மனச்சாட்சியுள்ள எல்லோருக்கும் புரியும். அவரவரின் தேவைகள் உண்மையை மறைக்கத் தூண்டுகின்றன.

வட்டுவாகலில் சிங்களப்படைகளிடம் தமிழர்கள் அனைவரும் சரண்டைந்த தருணத்தை எவ்வாறு பாக்கிறீர்கள்?

போரின் இறுதியில் 2009/05/17ம் நாள் நான் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக பெருந்தொகையான மக்களுடன் சென்று கொண்டிருந்தபோது வழியெங்கும் இறந்த உடல்களை கண்டேன். வட்டுவாகல் ஆற்றில் பல உயிரற்ற உடல்கள் மிதப்பதனை கண்டேன். இலங்கைத்தீவில் தமிழினப் படுகொலையின் உச்சக் கோர காட்சி அதுவாகத்தான் இருக்குமென நான் நம்புகிறேன்.

நாங்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவுப் பகுதியில் வைத்திருந்த போது என் அருகில் பல போராளிகள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். பலர் இருந்தாலும் இன்றும் நினைவில் இருந்து மறையாமல் இருப்பது, அரசியல்துறை போராளிகளான வண்ணக்கிளி மாஸ்டர் மற்றும் திலீப் ஆகியோர். திலீப்புக்கு ஒரு கால் தொடையோடு இல்லை. அந்த நிலையிலும் அவரையும் எம்மையும் கைது செய்து வைத்திருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் 20 ஆம் திகதி காலை அனைவரையும் ஒரு பேருந்தில் ஏற்றிய போது நான் அவர்களை விட்டு வேறு பேருந்தில் ஏற்றப்பட்டேன். இன்றுவரை அந்த பேருந்தில் ஏற்றப்பட்ட பலரை காணவில்லை. குறிப்பாக வண்ணக்கிளி மாஸ்டர் மற்றும் திலீப் ஆகியோரின் இருப்பு இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

அதன் பின்பு என்ன நடந்தது ?

இவ்வாறான நிலையில் நாம் ஓமந்தைப் பகுதிக்கு நாம் கொண்டு செல்லப்பட்ட போது, கடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டோம். எந்த அடிப்படை வசதிகளும் அற்று ஓமந்தைப்பகுதியில் தங்கவைக்கப்பட்டோம்.

அங்கே பெரும் அவலம் நிறைந்த நிலமை உருவாகியது. ஆண் பெண் போராளிகள் அனைவரும் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அங்கே மலசலகூட வசதிகள் இல்லை. இருந்த இரண்டு மலகூடங்களுக்கு கதவுகள் இல்லை. அதனால் பெண் போராளிகள் பலத்த சிரமத்தை அடைந்தார்கள். பின் எம்மிடம் இருந்த சாறங்களை மறைப்பாக பயன்படுத்தி மலகூடங்களை பயன்படுத்தினோம். இருப்பினும், சிங்களப்படைகள் கொடுமையான நிலைகளை உருவாக்கினார்கள்.

பல நாட்கள் குளிக்காமல் இரத்த சிதறல்களை தாங்கி வந்திருந்த எமக்கு ஒரு தடவை என்றாலும் குளித்து எங்களின் உடலை கழுவ வேண்டிய நிலை எழுந்தது. அப்போது அங்கே இருந்த ஒரு கிணற்றை அதற்காக பாவித்தோம். ஆனால் அந்த இடத்திலும் பெண் போராளிகள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கினர். எந்த மறைப்புக்களும் இல்லாத அந்த கிணற்றில் குளிக்கும் பெண் போராளிகள் பட்ட துன்பங்களை வார்த்தைகளால் கூற முடியாது.

கிட்டத்தட்ட அந்த இடத்தில் 2000 பேருக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நாம் ஒரு கட்டத்தில் 1440 பேராக குறைந்திருந்தோம். மற்றவர்களுக்கு அங்கே என்ன நடந்தது என்பது இதுவரை எனக்குத் தெரியாது.

இரவில் பெண் போராளிகளை நடுவில் படுக்க வைத்து ஆண் போராளிகள் சுற்றிப் பாதுகாப்பாக படுத்திருப்போம் ஆனாலும் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை காட்டிக் கொடுத்தவர்களால் இனங்கண்டு சிங்களப்படை பெயரைக் கூப்பிட்டு அழைத்துச் செல்வார்கள். இரவிலும் பகலிலும் பல போராளிகளை அழைத்துச் சென்றது சிங்கள இராணுவம். அழைத்துச் செல்லப்படும் ஆண் பெண் போராளிகளின் அவலக்குரல்கள் எழும். ஆனால் என்ன நடக்கின்றது என்பது தெரியாத நிலையில் நாம் தங்கி இருந்தோம். அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்களா? அல்லது சாகடிக்கப்பட்டார்களா தெரியாது.

ஓரிரண்டு நாட்களின் பின் பெண் போராளிகள் தனியாக அழைக்கப்பட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட நாம் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டோம்.

இலங்கை அரசின் புனர்வாழ்வு என்ற பெயரில் இயங்கிய வதை முகாம்கள் பற்றி?

புனர்வாழ்வு முகாம் என்பது நீதிக்குப் புறம்பான சிறைச்சாலை. ஓமந்தை மகா வித்தியாலய தடுப்பு முகாம் முழுமையாக இராணுவப்புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் கொடுமையாக சித்திரவதைகள் இருந்தன.

பொலநறுவை கந்தகாடு தடுப்பு முகாமில் நாம் அடைக்கப்பட்டிருந்த போது எம் எல்லோருக்கும் ஒரு ஊசி ஏற்றப்பட்டது. என்ன ஊசி என்று கேட்ட போது, இது காட்டுப் பிரதேசம் என்பதால் மலேரியா அபாயம் உள்ளது என்றும் அதற்கான தடுப்பூசி என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அது என்ன ஊசி என்பது எனக்குத் தெரியவில்லை. அவ்வூசி போட்டு அடுத்த நாள் ஒரு போராளி இறந்திருந்தார். அவரின் சாவுக்கு இந்த ஊசி காரணமாக இருக்கலாம் என்றே நம்புகிறேன். அதே நேரம், சாவடைந்த போராளியின் உறவினர்களுக்கு அவர் சாவடைந்ததைப் பற்றி சொல்லி இருப்பார்களோ தெரியாது. அல்லது அவரின் உடலத்தையோ கொடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குறி. ஆனால் எமக்கு ஒரு விடயம் சொல்லப்பட்டது இறந்த போராளி பொய்யான முகவரி தந்ததால் அவரின் உறவினர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் தமக்கு உண்மையான விபரங்கள் தரப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த அடிப்படையில் வைத்துப் பார்த்தால் அந்தப் போராளியின் உடலம் உறவினரிடம் கொடுக்கப்படவில்லை என்பது புரிகிறது.

தடுப்பு முகாம்களில் போராளிகள் எவ்வாறு அடைக்கப்பட்டிருந்தார்கள்?

கைது செய்யப்பட்ட ஆரம்ப நாட்களில் மிக மோசமான உணவு, இட, சுகாதார நெருக்கடிகள் இருந்தன. உதாரணமாக கூறுவதானால் ஒரு பாடசாலை வகுப்பறையில் 80 தொடக்கம் 100 வரையான போராளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அதை விட அடிப்படை வசதிகள் எதுவும் இருக்கவில்லை. விசாரணை சித்திரவதை அடி உதை இது தான் அதிகமாக இருந்தது.

புனர்வாழ்வு என்ற பெயரில் தடுப்பு முகாம்களில் போராளிகள் அடைக்கப் பட்ட பின்பும் காணாமல் போக செய்யப்பட்டுள்ளார்களா?

நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓமந்தை மத்திய கல்லூரி முகாமுக்கு 2009 ஜுன் மாதம் அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் (ICRC) வருகை தந்து பதிவுகளை மேற்கொண்டது. ICRC இன் வருகைக்கு முன்னரான காலப்பகுதியில், முகாமுக்கு வெளியே பல போராளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பலரை இதுவரை நான் காணவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.

அங்கே நடக்கும் விசாரணைகள் எப்படி இருந்தன?

புனர்வாழ்வு முகாம்களில் நடந்த விசாரணைகள் பொதுவாக, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், தங்கம், பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றும் நோக்குடனேயே நடத்தப்பட்டன. இவற்றை மறைவிடங்களில் இருந்து எடுத்துத் தரும்படி போராளிகள் தூண்டப்பட்டனர் அல்லது வற்புறுத்தப் பட்டனர். மிக முக்கிய கேள்வியாக, எமது அமைப்பு மறைத்து வைத்திருக்கும் இராணுவ ஆயுத தளபாடங்களைப் பற்றியதாகவே இருந்தது. அதோடு போராளிகள் பற்றியதாகவும் இருந்தது.

உணவு வளங்கல் முழுமையாக குறைக்கப்பட்டிருந்தது ஒரு குழந்தைக்கு கொடுக்கும் உணவை விட குறைந்தளவு உணவு வழங்கப்பட்டு போராளிகள் பசியில் வாட வைக்கப்பட்டார்கள். அதே நேரம் அங்கே இராணுவப்புலனாய்வாளர்களால் ஒரு அறிவிப்பு தரப்பட்டது எமக்கு ஒத்துளைத்து நாம் கேட்பவற்றை காட்டித் தந்தால் அதிகமான உணவும் பிஸ்கட் பையும் தரப்படும் என்று. அவ்வளவு கேவலமான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணையாளர்கள் எம்மிடம் இருந்த தகவல்களை பெற முயன்றார்கள்.

அதே நேரம் பொது வெளியில் போராளிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு அனைவருக்கும் முன்னால் சித்திரவதைகளும் நடந்தன. படு கேவலமான முறையில் இராணுவபுலனாய்வாளர்கள் தமக்கு ஒத்துளைக்காத எங்களை போராளிகளை சித்திரவதை செய்தார்கள்.

எத்தனை கட்ட விசாரணைகள் ? யார்யாரெல்லாம் விசாரணையாளர்கள்?

தடுத்து வைக்கப்பட்ட ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட சிறிலங்கா புலனாய்வு அமைப்புகளினால் பல தடவை விசாரிக்கப்பட்டனர்.

விசாரணை என்ற பெயரில் நடந்த சித்திரவதைகள் ?

இது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் உண்டு. பொதுவாக இரும்புக் கம்பிகளாலும், பொல்லுகளாலும் தாக்குவதனை நேரில் கண்டுள்ளேன். அத்தோடு மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல பல சித்திரவதைகள் நடந்தன. எமது நினைவேந்தல் நாட்கள் வந்தால் உதாரணமாக மாவீரர் நாள் கரும்புலிகள் நாள் போன்றவை வந்தால் அன்று முழுவதும் அனைவரையும் மழை வெய்யில் என்று பாராது வெட்டைவெளியில் இருக்க வைப்பார்கள். வெய்யிலில் குடிப்பதற்கு தண்ணீர் கூட தராது தடுத்திருப்பார்கள். உணவு வழங்கப்படமாட்டாது. இவ்வாறு சொல்ல முடியாத துயரங்கள் நடக்கும். நாங்கள் படுத்திருந்தால் போகும் போதும் வரும் போதும் இராணுவம் எம்மை காலால் உதைத்து விட்டே செல்வார்கள். அவ்வாறு அடியும் உதையும் என்று வெளியவே சொல்ல முடியாத கொடூரங்களை எல்லாம் செய்தார்கள்.

அந்த தருணத்தில் நாங்கள் மௌனிக்க முன்பான காலத்தில் இராணுவத்தை நல்லபடி பராமரித்த தருணத்தை எண்ணி எவ்வாறான மனநிலையில் இருந்தீர்கள்?

நாங்கள் எம்மிடம் இருந்த போர்க்கைதிகளை, ஒரு நாட்டின் படைவீரர்கள் என்ற மரியாதையுடன் நடத்தினோம். ஆனால் சிறிலங்கா அதிகாரிகள் பலர், எம்மை சாதாரண மனிதர்களாக கூட பார்க்கவில்லை.

இப்போதும் தொடரும் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றி?

2009 மே மாதத்தின் பின்னர் நமது தாயகத்தின் முக்கியமான நிலைகள் இலக்கு வைக்கப்பட்டு, வேண்டுமென்றே பௌத்த மதக் குறியீடுகள் நிறுவப்பட்டு வருகின்றன. இதனை நான் மஞ்சள் அபாயம் (Yellow Danger) எனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். கத்தியின்றி, இரத்தமின்றி இப்போதும் இனவழிப்பு தொடர்கின்றது.

எம் மக்களுக்கும் மனிதநேயப் பணியாளர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.


நன்றி திரு ரஞ்சித்குமார்
நன்றி கவி

நேர்கண்டது : இ. இ. கவிமகன்
நாள் : 16.05.2020
ஒப்புநோக்கியது: மஞ்சு மோகன்