இலங்கைத் தலைநகரில் நடந்த துன்பவியல் சம்பவமான முஸ்லீம் தீவிரவாத அமைப்பின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின் பல்வேறான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. முப்படைகளும் சேர்ந்து இலங்கை முழுவதும் பெரும் சுற்றிவளைப்புக்கள், சோதனையிடுதல் போன்ற இந்நடவடிக்கைகளின் மூலம் பெரும்பாலானவர்கள் சந்தேகத்தின் பெயரில் கைதாகி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களை சந்தேகந்தின் பெயரில் விசாரணை செய்துள்ளது இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு.

இது தொடர்பாக இந்திய ஊடகமான தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் இரகசியமான முறையில் கையாளப்பட்ட இந்த விசாரணையானது உள்ளக காவல்த்துறைக்கு கூட தெரிவிக்கப்படாமல் செய்யப்பட்டதாகவும், இரண்டு சந்தேக நபர்கள் கைதாகியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே வேளை இந்தியாவில் இருந்து கிடைத்த வேறு தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் நடந்த தற்கொலைத் தாக்குதலுக்கு மூலமாக இருந்த ஸஹ்ரானுடன் இவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்திலையே இக் கைது நடைபெற்றதாக தெரிகிறது. அதே நேரம் முஸ்லீம் தீவிரவாத செயற்பாடுகளுடன் சம்மந்தப்படக்கூடிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது இவ்வாறு இருக்க, இக் கைதுகள் திட்டமிட்டு பொய்யாக செய்யப்படுவதாகவும் பொய்யாக வழக்கு சோடிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.