கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களிலும் அரேபிய மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் பதாதைகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதகதியில் முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் அரபி மொழியில் உள்ள அனைத்து பெயர் பலகைகளையும் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாணம் உட்பட பல பிரதேசங்களில் அரேபிய மொழியில் பெயர்கள் மற்றும் பதாதைகள் காணப்படுகின்றன. அவை அனைத்தையும் முற்றாக அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

சில அரச நிறுவனங்களில் அரேபிய மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிங்களம், தமிழ், ஆங்கில மொழியை தவிர வேறு எந்த மொழியையும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்படாது எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.