ஈழத்தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஈகியர்களின் முதலாம் ஆண்டு, த.நா.மா.லெ.க. முன்னணி செயல் வீரர் தோழர் பொ.வே. இராமானுசம் முதலாம் ஆண்டு ஆகிய மூன்று நிகழ்வுகளை ஒருங்கிணைத்து #புரட்சிகரஇளைஞர்முன்னணி சார்பாக ஈரோடு பெரியார் மன்றத்தில் நினைவேந்தல் அரங்கக் கூட்டம் 27.5.2019, திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

பெண் தோழர்களின் ஈகியருக்கு வீரவணக்கப் பாடலுடன் கூட்டம் தொடங்கியது. கூட்ட நிகழ்விற்கு புஇமு தோழர் செயப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

முதல் நிகழ்வாக வீரவணக்கம் முழங்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட புஇமு தோழர் தமிழரசனின் படத்தினை தோழர் மலரவனும், தோழர் பெ.வே.இராமானுசம் படத்தினை தோழர் பொ.வே. ஆனந்தகிருட்டிணனும் திறந்து வைத்தனர்.

தோழர் பொ.வே.ஆனந்தகிருட்டிணன் பொ.வே. இரா அவர்களின் புரட்சிகரமான வாழ்க்கை வரலாற்றை விவரித்து சொற்பொழிவாற்றினார்.

தோழர் மலரவன் ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டியது முதல் பதினைந்து போராளிகளின் உயர்தியாகம் வரை நடந்த போராட்ட வரலாற்றை எடுத்துரைத்து போராளிகளின் ஈகம் வீண்போகக் கூடாது என்று விளக்கி பேசினார்.

அடுத்ததாக, விழவிழ எழுவோம் பாடல் ஒலிக்க மெழுகுவர்த்தி ஏந்தி பௌத்த – சிங்கள பேரினவாத அரசால் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து தோழர் கவி ஈழ விடுதலைப் போராட்டத்தையும் ஈழதமிழர்கள் சார்ந்து இலங்கை அரசியலில் இந்திய ஆட்சியாளர்களின் தலையீடுகளையும், ஈழ விடுதலைக்கு – புலிகளுக்கு எதிரான இந்திய ஏகாதிபத்திய அரசு மற்றும் உலக ஏகாதிபத்தியங்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான போக்குகளை அம்பலப்படுத்தியும் பேசினார்.
இறுதியாக, தோழர் கலியபெருமாள் நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்வின் இடையே பறை பற்றிய பாடலுக்கும், உழைக்கும் மக்கள் பற்றிய பாடலுக்கும் புஇமு சிறுவர் சிறுமியர்கள் நடனம், இளைஞர்களை போராட களத்திற்கு அழைக்கும் பாடல் ஆகியவை இடம்பெற்றன.