இம்மாதம் ஆரம்ப நாட்களில் சிக்காகோ பெரு நகரில் நடந்து முடிந்த 10 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, உலகெங்கும் பரந்து வாழும், நொடிக்குநொடி பெருமை பேசிப் பீற்றிக் கொள்ளும் ஈழத் தமிழர்களினுடைய கல்வி, மொழி, அறிவு, வரலாறு மற்றும் இனப்பற்று போன்றவற்றின் பற்றாக்குறையையும், ஈழத் தமிழர்களின் எதிர்காலம் மீதான சந்தேகத்தையும் பெரு விசுவரூபமாக வெளிக்காட்டியிருக்கிறது. இதனை ஏனைய நாட்டு அறிஞர் பெருமக்கள் வெளிப்படையாகவே மாநாட்டில் பேசியிருக்கிறார்கள் என்பது ஈழத்தமிழர்கள் நாங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம். எங்கள் சுயத்தை தேட வேண்டிய தருணமும் கூட. இப்படியே போனால் எங்கள் மரபணுவையும் சந்தேகப்பட்டு சோதனைக்குள்ளாக்க வேண்டி ஏற்படலாம். 

இலவசமாகப் பெற்ற கல்வியின் மூலம் பெயருக்கு முன்னாள் கௌரவ பட்டங்களையும், பெயருக்குப் பின்னால் படித்துப் பெற்ற பட்டங்களையும் தவறாமல், மறக்காமல் சமூக வலைத்தள பக்கங்கள் தொடங்கி பூப்புனித நீராட்டு மற்றும் திருமண அழைப்பிதழ்கள் வரை தடித்த எழுத்தில் பொறிக்க மறக்காத நீங்கள், இன்று எந்த நோக்கமுமின்றி உங்களுக்கும்,  உங்கள் துணைவர் பிள்ளைகளுக்கும் மட்டுமே அந்த கல்வி, பட்டங்கள் என்றால், அது போல இந்தத் தமிழ் மொழிக்கும், இனத்துக்கும் செய்கின்ற மிகப்பெரும் கயமைத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதனைச் சுயநலம் என்றே சொல்ல முடியும். இது மிகவும் கேவலமானது. அருவருக்கத் தக்கது. 

சந்திப்பு அட்டை (visiting card), வாசல் பலகை மற்றும் சமூக வலைத்தளங்களைத் திறந்து உங்கள் பெயருக்கு அடுத்ததாக, படித்த பல்கலைக் கழகங்களின் பெயரும் கல்லூரிகளின் பெயரும் போட்டுக் கொள்வதில் அல்ல பெருமை. அந்த கல்வியின் வழி உனது மொழிக்கும், நீ பிறந்த மண்ணுக்கும், உன்னைத் சுற்றிய சமூகத்துக்கும் அதனால் என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதில்தான் பெருமையே தவிர, வெறும் பட்டங்களைப்பெயரோடு சேர்த்துப் போடுவதில் என்ன பெருமை இருக்க முடியும்? உன்னோடு அதுவும் சேர்ந்து செத்துப் போகும். 

உலகத் தேசங்கள் எங்கும் ஈழத் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். அவர்களில், சில பத்து வருடங்களுக்கு முன்னர் கல்விக்காகவும், தொழிலுக்காகவும், வசதி வாய்ப்புகளுக்காகவும் ஏன் பெயருக்காகவும் கூட சிலர் பலநாடுகளில் குடியேறி, இன்று இரண்டாம், மூன்றாம் தலைமுறையென கிளை பரப்பி அங்கேயே அவர்களின் சந்ததிகளும் சிறப்பாகவே வாழ்கிறார்கள்.

பிற்பட்ட காலங்களில் எழுந்த போர்ச்சூழல் காரணமாக பெரும்பாலான ஈழத்தமிழர்கள் அகதியாக பல தேசங்களில் குடியேறி, இன்று குறிப்பிடும் படியான மிகப்பெரும் மனிதர்களாக அனைத்து துறைகளிலும் வல்லுனர்களாக, வாய்க்குள் புகமுடியாத தொழில்களிலெல்லாம் மேன்மக்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். குறைகள் சொல்வதற்கில்லை. சராசரியாக தாயகத்தில் ஒரு வீட்டிற்கு ஒருவராவது வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். இது போக, போரால் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த தாயகத்தில் பெரும்பாலான குடும்பங்கள், ஆகக் குறைந்தது கற்ற நடுத்தர வசதியுள்ள மக்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். 

இத்தனை இலட்சம் ஈழத்தமிழ் மக்களில், தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க, கட்டுரை வழங்கி ஆய்வு செய்ய ஓரிருவர்தானா படித்த மேன்மக்கள் இருக்கிறார்கள்? அவர்களை விட, இங்கே எத்துறையும் சார்ந்த  வேறு தமிழ் அறிஞர்கள் இல்லையா? நீங்கள் பெற்ற பட்டங்கள் எல்லாம் வெறும் எழுத்துக்கள்தானா? வாய்ச்சொல்லில் சொல்லி பீற்றித் திரியவா அந்த விருதுகளும் பட்டங்களும்? 

கேட்டிருக்கிறேன்! நிறைய உலகத் தமிழர்கள் தம் பெயரோடு புலவர், கலைஞர், கவிஞர், ஆய்வாளர், மூத்த எழுத்தாளர், பேராசிரியர், கலாநிதி என்று போட்டுக் கொள்கிறீர்கள்.  நல்லது! BA, MA, BSc, MBBS என்று சந்தோசம்! அடுத்து “கலாபூசணம்” என்று ஒன்று. நாங்களே கேட்டு நாங்களே பெறும் விருது அதுதானே? சரி அப்படியே இருக்கட்டும். படித்ததற்காக, செய்ததற்காக கிடைத்த விருதும் பட்டங்களும் இனி இன்னும் மேலே மேலே செய்ய வேண்டும் என்பதை ஒரு போதும் அது உங்களுக்கு நினைவு படுத்தவில்லை என்றால் அந்த விருதும், பட்டமும் கால் தூசிக்கு சமனாகும். 

இலவசக் கல்வி, இலவச் சீருடை, இலவசப் பல்கலைக் கல்வி, இலவசப் பட்ட மேற்படிப்பு  என்றெல்லாம் அனைத்தையும் பெற்றுக்கொண்டோம் என்பதில் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த இலவசங்களால் உருவாக்கப்பட்ட எமது இன்றைய வாழ்க்கை எதனை குறிகாட்டி நிற்கிறது? “பணம்” அது ஒன்றுதான் உங்கள் குறிகாட்டி அல்லது இலட்சியம் என்றால் நீ நிணம் நாறிய ஒரு பிணமே.

அல்லது எம்மிடம், எமக்குள் ஆய்வு செய்து தொகுக்கப் பட வேண்டியது என்று எதுவுமே இல்லையா? சிங்களவன் சொல்வது போல நாங்கள் ஈழத்தில் வந்தேறிகளா? எமக்கென்று பாரம்பரிய நிலம் இல்லையா? எமக்கென்று வரலாறு, கலைகள் கலாசார விழுமியங்கள், பண்பாட்டுத் தலங்கள் எதுவுமே இல்லையா? ஈழத் தமிழ் இலக்கியங்கள், இலக்கிய கர்த்தாக்கள் இல்லையா? போர்க்கால பெரு வரலாறுகள் மற்றும் இலக்கியங்கள், அனுபவங்கள் என்று எதுவுமே இல்லையா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக இன்று நாங்கள் அழிக்கப்படுவதை கூட ஆய்வு செய்ய அறிவு இல்லையா? சரி இவை எதுவுமே இல்லை என்பதைக்கூட ஆய்வு செய்ய எம்மிடம் ஆளுமை இல்லையா? வெட்கப்பட வேண்டியது நாங்களா? அல்லது தமிழா? கற்றதெல்லாம் வீண், பெற்றதெல்லாம் பாழ் என்கின்ற ஒன்றுதான் முடிவா? 

உலகத் தமிழர் பரப்பில் ஈழத் தமிழர்களது செயற்பாடுகளுக்கு நல்ல வரவேற்பும், ஊக்குவிப்பும் இல்லாமலில்லை. உணர்வு பூர்வமானவர்கள், வீரம் செறிந்தவர்கள், எதனையும் உழைப்பாலும் முயற்சியாலும் மாற்றி அமைக்கக் கூடியவர்கள், மனச்சாட்சிக்கு அமைய நடப்பவர்கள், உலகப் பரப்பில் தமிழுக்கு முகவரி தந்தவர்கள் என்று பல நாடுகளிலும் பெயர் வாங்கியிருக்கும் இந்த ஈழத்தமிழர்கள், இன்று சுயநலத்தோடு ஒடுங்கிப் போயிருப்பது சந்தேகத்தையும், எங்கள் இருப்பையும் கேள்விக்குறியாகியுள்ளது. நாம் எதற்காக  அழிக்கப் பட்டோமோ அதனை மறந்து, அதனைப் புறந்தள்ளி நாமும் எமது சந்ததியும் வாழ்வதற்கு “அடிமை” என்ற பெயரைவிட பொருத்தமான பெயர் வேறேதும் உண்டா? 

இன்றைய சமகால நிகழ்வுப் பரப்பில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள், அவர்களின் பாரம்பரிய தொழில் நிலங்கள், பண்பாட்டு அடையாளங்கள் யாவும் பறிக்கப்பட்டு கண்முன்னாலேயே சிங்கள மயப்படுத்தும் வேலைகள் நடைபெறுவதை இயல்பாக கடந்து கொண்டு இருக்கிறோம். குறிப்பாகக் ்கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்களமயப் படுத்தப் பட்டதுடன், அருகிலிருந்த பழமையான பிள்ளையார் கோயில் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டிருக்கிறது. அதனைவிடத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாவட்டங்களில் புதிதாகத் தோன்றும் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் பற்றி எந்த சஞ்சலமும் இல்லாமல் பார்த்தும் பாராமல் கடந்து கொண்டிருக்கிறோம். இது போன்ற விடயங்கள் எல்லாவற்றையும் ஆய்வுகளுக்கூடாக  உலகப் பரப்பில் முன்வைக்க கூடிய “உலகத் தமிழாராய்ச்சி மாநாடு” என்ற நல்ல சந்தர்ப்பத்தை இழந்து இருக்கிறோம். 

உங்களுக்குத் தெரியுமா? இலங்கையில் இருந்து மாநாட்டுக்கு வந்திருந்த ஒரேயொரு தொல்லியல் ஆய்வாளர் ப. புஸ்பரட்ணம் அவர்களது ஆய்வரங்கில், வழமையான அரங்கில் இருந்தவர்களைவிட அதிகமானோர் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது. காரணம் உலகம் எம்மைப் பற்றி அறியக் காத்திருக்கின்றதோ என்னவோ? ஆனால் நாங்கள் ஏதேதோ சிந்தனைகளுடன் அடிமை வாழ்விலும் கீழான வாழ்வை வாழப்பழகிக் கொண்டிருக்கிறோம். நாம் எல்லோரும் பசிக்கு சோறுதானே சாப்பிடுறம். வேறேதும் இல்லைதானே? 

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் கூட அறிவுக்கும், அறிவியலுக்கும் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது போலவே தோன்றுகிறது. தன் நிலம், மக்கள், இனம், மொழி சார்ந்த பற்றுள்ளவர்கள் உயர்கல்விக்குள் உள்வாங்கப்படுவது குறைந்து வி ட்டது போல தோன்றுகிறது.  ஏனென்றால் பெரும்பாலான உயர்கல்வி மாணவர்களின் கனவாக இருப்பது டிகிரியோடு வெளிநாட்டில் குடியமர்வது அல்லது வெளிநாட்டு மாப்பிளைக்கு வாழ்க்கைப் படுவது. இங்கே இலவசமாகப் படித்து விட்டு வெளிநாட்டில் sandwich தான் போடப்போகிறோம், பிள்ளை பெற்று வீடு வேலைக்காரியாகத்தான் கிடக்கப் போகிறோம் என்றால் பிறகேன் இன்னொருவனது வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறீர்கள்? இங்கே படித்து விட்டு வெளிநாட்டிற்கு ஓடிவிடுவீர்கள். படித்து இங்கே நீங்கள் அமர்ந்து பணியாற்ற வேண்டிய அரச அல்லது தனியார் பெரு நிறுவனங்களில் உங்களுக்கு அடுத்த படியாக இசுலாமியர்கள், சிங்களவர்களே வந்தமரப்போகிறார்கள். பிறகு அவன் வந்திட்டான், இவன் வந்திட்டான் என்று இனவாதம் பேசுவது எந்த வகையில் நியாயமானது? நீ ஓடினால் அவன் வந்தமர்வான். ஏனென்றால் அவன் எம்மைப் போல முட்டாளில்லை. ஒரு சமூகம் தந்த கல்வியால், எவனொருவன் கற்று அதனை அந்த மண்ணுக்கும், சமூகத்துக்கும், இனத்துக்கும் மீண்டும்திருப்பி தன்னை அர்ப்பணிக்கின்றானோ அவனே அந்த சமூகத்தின் இருப்புக்கும், வெற்றிக்கும் உகந்தவன். இந்த நிலை இன்று தாயக தமிழ்ச் சூழலில் பிறழ்வடைந்தமையானது நல்லதொரு சகுனம் அல்ல. 

இவை எல்லாவற்றையும் தட்டிக் கேட்க, அல்லது விழிப்புணர்வு உண்டாக்க வல்ல, எமது அடையாளங்களை வெளிக்கொணர வேண்டிய  தாயக புலம்பெயர் தமிழ் ஊடகங்களும் நடிகர் , நடிகைகளின் பிட்டங்களுக்குப் பின்னால் தம் ஒளியொலி அமைப்புகளை கட்டமைத்திருப்பதும், தமிழக ஊடகங்களுக்கு நிகராக தம்மை முன்னிறுத்த முனைவதும், சினிமா என்ற ஒற்றைப் பொருளில் தமது நிகழ்ச்சிகளைத் தொகுப்பதும் ஆரோக்கியமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ஒன்று சொல்லவா, சிங்கள ஊடகங்கள் எந்த பிடிமானமும் இல்லாமல் தனித்து இயங்க வல்லவை. ஆனால் ஈழத்தமிழர்களது ஊடகப்பரப்பு தமிழகத்தின் சினிமா இல்லையேல் சுருண்டு விழுந்துவிடும். தமக்கென்ற எந்த பிடிமானமும் இல்லாத, சொல்லப்போனால் முதுகெலும்பே இல்லாத ஊடகங்களாகத்தான் ஈழத்தமிழர்களது ஊடகங்களும் உலகெங்கும் காணப்படுகின்றன. 

தமிழரின் முதன்மை ஊடகம், முதல் ஊடகம், உலகத்தமிழருக்கோர் மண்ணாங்கட்டிப் பாலம் என்று பறை சாற்றுபவர்கள் கூட தமிழர்களைச் சுற்றி நடப்பதை கவனிக்கிறார்கள் இல்லையா? அதனால் இலாபம் இல்லையா? அல்லது பணமூட்டைகளை வாங்கிவிட்டு பொத்திக் கொண்டு இருக்கிறார்களா? 

 நாங்கள் தான் தாயகவாதிகள், தேசிய ஊடகங்களுக்கு சொந்தக்காறர் என்று ஊர் முழுக்க மார் தட்டித் திரியும் பணம் ஒன்றை குறியாக கொண்ட சில ஊடகங்களும் இந்திய அரசியல்வாதிகளினது பாலியல் செய்திகளை வெளியிடவும், இலங்கையின் அரசியல்வாதிகளினது கைப்பாவைகளாக இயங்குவதற்கும் மட்டுமா தேசியம் பேசுகின்றன? திட்டமிட்டு சிங்களவன் எங்கள் வரலாறுகளை மாற்றி எழுதி வரும் இந்த நேரத்தில் இவ்வாறான ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து கிடப்பது எதற்காக?

எப்போது எம்மை இனங்காணப் போகிறோம்? எல்லாம் மண்மூடிப் போன பின்பா? அனைத்தும் சிங்கள மயமாகிப் போனதன் பின்பா? என் சந்ததி இனி எந்த சூழலில் வாழப்போகிறது? இன நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் இன்னொரு இனத்தை அழிக்க வல்ல, நசுக்கக் கூடிய எந்த செயற்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது உலகில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு இருக்கும் ஒரு இயல்புப் பண்பாகும். அந்த பண்பிலிருந்து தோன்றியவற்றைத்தான், இன்று நாகரீகமாக “மனித உரிமை” என்றும் “பாரம்பரிய உலகச் சொத்துக்கள்” என்றும் பாதுகாக்கப் படுகின்றன. 

“உலகத் தமிழாராய்ச்சி மாநாடு” என்ற மிகப்பெரும் சந்தர்ப்பத்தை தாயக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தமது சுயநலத்தால் கைநழுவி விட்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் சார்ந்த ஊடகங்களும் அதனை முதன்மைப் படுத்தாதது மிகவும் கவலைக்குரியவை. ஆனால் விழா ஏற்பாட்டாளர்களால் முன்னாள் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், மற்றும் Jim McDonald  (Sri Lanka Country Specialist for Amnesty International USA.) ஆகியோர்கள் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டிருந்தார்கள். அவர்களது கருத்துக்கள் அரங்கிலே ஒலிக்கச் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அங்கே இருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் சில பத்து நபர்களே ஈழத் தமிழர்களாக இருந்தமை மிகவும் வேதனையானது. நாடு விட்டு நாடு விடுமுறைக்காகப் பறக்கும் புலம்பெயர்ந்த அறிஞர்கள் கூட வருகை தரவில்லை. ஆய்வுகள் செய்யவில்லை. ஆய்வுகளில் பங்கேற்கவும் இல்லை. இருந்தாலும் நாடுகடந்த தமிழீழ அரசின் தற்போதைய பிரதமர் திரு. உருத்ரகுமாரன் அவர்கள் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று சிற்றுரையை ஆற்றியிருந்தமை அரங்கிலிருந்த அனைத்து மக்களாலும் மிகவும் வரவேற்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டிருந்தமை சற்றே ஆறுதலாக இருந்தது. 

எங்கு போய் எதனைப் படித்தாலும், கற்றாலும் இன்று கைவிடப்பட்ட இனத்துக்கு என்று  இருக்கும் இன்றைய தார்மீகப் பொறுப்பை தட்டிக் கழித்திருக்கிறது இந்த நாதியற்ற அகதியாகிய ஈழத் தமிழினம். அதனால் உங்கள் கண்முன்னாலேயே மாறிப் போகும் எல்லாத்தையும் நீங்கள் பொறுத்துத் தான் போக வேண்டும். அதற்குத் தாயாராகுங்கள். சேர்ந்தே சொல்வோம் “புத்தம் சரணம் கச்சாமி”.