ஆண்டுகள் பத்து முடிந்து விட்டாலும் என் அப்பா உயிருடன் இருந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வு இன்னும் இருக்கின்றது. ஏனெனில் இரண்டரைவயதில் எனது அப்பா எனக்கு செய்தவை, செய்ய நினைத்தவை, செய்ய வைத்து கைதட்டி மகிழ்ந்தவை எல்லாமே எதுவுமே உணர முடியாத வயதில் நடந்ததாலோ என்னவோ இன்று எனக்கு கொஞ்சமே ஞாபகமாய் இருக்கிறது.

இப்ப பார்த்து மகிழும் வயது எனக்கு. ஆனால் எதையும் பெறமுடியாதவளாய், எதையும் உணர்ந்து மகிழ முடியாதவளாக உங்களை நான் இழந்து விட்டேன் அப்பா. உங்கள் கை பிடித்து நடக்க வேண்டும், இப்போது நாம் வாழும் புலம்பெயர் தேசத்து மலைகளையும் வெண் பனிகள் சூழ்ந்த நிலத்தின் கொள்ளை அழகையும் உங்களோடு சேர்ந்து ரசித்து மகிழ வேண்டும் என்றெல்லாம் தோன்றுகிறது. உங்களுக்குத் தெரியுமா அப்பா? இங்கே உள்ள அருவிகளையும், கோடை நேரத்தில் வீதிகள் முழுக்க பூத்துக் கிடக்கும் அழகு மலர்களையும் பின்னணியாக வைத்து நிழல்படத்தை அம்மா எடுக்கும் போதெல்லாம் அருகில் நீங்கள் தெரிகிறீர்களா என்று ஒரு தடவை உற்றுப் பார்ப்பேன். ஆனால் உங்களின் நிழல் கூடத் தெரியாது எனக்கு.

கடைகளுக்கு கூட்டி போனால் உங்களுக்கு பிடிக்காட்டிலும் எனக்கு பிடிக்கும் என்பதற்காக எல்லாம் வாங்கி தருவீர்களாம். அது எப்படி அப்பா எனக்காக உங்களையே மாற்றிக் கொண்டீர்கள். நான் உங்களின் செல்ல மகள் என்பதால் தானே? அப்படி என்றால் இச் செல்ல மகளை எப்படி தவிக்க விட்டுச் சென்றீர்கள்? இப்போதெல்லாம் மற்றப் பிள்ளைகள் தங்கள் அப்பாவுடன் அன்பைப் பகிரும் போதும், பெறுபேற்று அட்டைகளை அப்பாவிடம் காட்டி மகிழும் போதும் என் மனம் உள்ளே அழும். அவர்கள் விரும்பியதை அவர்களின் அப்பாக்கள் வாங்கிக்கொடுக்கும் போது உங்கள் கரத்தினால் ஒரு இனிப்புக் கிடைக்காதா என்று எனது மனம் வலிக்குதப்பா.

ஒரு நாள் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த போது விசுவமடுவில் ஒரு கடைக்கு அம்மாவுடன் போனேன். அப்போது அக்கடையில் ஒரு காலணியை கண்டு வாங்கித் தரச் சொல்லி கேட்டிருக்கிறேன். அம்மா வாங்கி தரவில்லையாம். நான் அடம்பிடிக்காது நல்ல பிள்ளை போல் வீட்டுக்கு வந்திருக்கிறேன். நீங்கள் வேலை முடிந்து வந்ததும் “அப்பா நான் ஒரு சப்பாத்தை கண்டேன் ரம்ப பிடிச்சிருந்தது. ஆனால் அம்மாவிடம் வாங்கித் தரச் சொல்லி கேட்ட போது முடியாது என்று சொல்லீட்டா “ என உங்களிடம் சொல்லி இருக்கிறேன். அந்த மழலை சொல்லை கேட்டு புன்னகைத்தபடி என்னை தூக்கி இருக்கிறீர்கள். அப்போது நான் உங்கள் முழங்காலிற்கு கிட்டவாக இருந்திருக்கிறேன். உங்களிடம் உங்கள் மகள் முதல் முதலாக நிமிர்ந்து நின்று ஒரு விடயத்தை கேட்டு விட்டாள் என்று மகிழ்ந்திருக்கிறீர்கள். அதனால் உடனேயே கூட்டி போய் வாங்கி தந்தீர்கள் என்று அம்மா பல தடவை சொல்லி இருக்கிறா. இப்போது அம்மா மட்டுமே எனக்கு எல்லாமாவாகி என்னை கலங்க விடாது பார்த்துக் கொள்கிறா. எப்போதுமே நினைவில் இருக்கும் உங்களை அம்மாவின் மூலமாகவே இன்று நான் உணர்கிறேன்.

அப்பா என்னை தமிழீழத்தின் ராஜதந்திரி ஆக்கி வெளிநாடுகளுக்கு நான் போகும்போது நீங்கள் என்னுடைய பையை தூக்கி கொண்டு என்னோடு வரவேண்டும் என்று பல கனவுகள் கண்டீர்களாம். உங்கள் கனவுகளை இப்போது அம்மா என்னிடம் கூறுகின்றா. அப்போது எனக்கு மெல்ல மெல்ல நடக்கும் வயது. நீங்கள் இருந்தால் நான் அம்மாவை விட உங்களோடு தான் ஒட்டிக் கொள்வேன். அவ்வாறான காலத்தில் தான் நீங்கள் மேடையில் பேசும் போது நான் கீழே இருந்து உங்களை பார்த்து விட்டு உங்களுக்கு பக்கத்தில் இருப்பதற்காக தட்டுத் தடுமாறி மேடைப் படியேறி வந்திருக்கிறேன். உங்கள் மடியில் அமர வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது. ஆனாலும் நீங்கள் பேசும் போது அதைக் கேட்டுக் கொண்டு, குழப்படி செய்யாமல். அப்படியே இருந்திருக்கிறேன். இவற்றையெல்லாம் அம்மா கூறும் போது ஒரு புறம் மகிழ்வும் மறுபுறம் நீங்கள் இல்லாத ஏக்கமும் இருக்கிறது.

இப்போது நானும் மேடைகளில் ஏறுகிறேன். உங்களின் மடியில் அமர்வதற்காக அல்ல, உங்களைப் போல பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு. இப்போதெல்லாம் எந்த விதத்திலும் பயமோ தடுமாற்றமோ இல்லாமல் பேசுகிறேன். பலபேர் கைதட்டி பாராட்டுகிறார்கள்… ஆனாலும் நீங்கள் பக்கத்தில் இருந்து ரசிக்கவில்லை என்று கவலை. நீங்கள் அருகில் இருப்பதைப் போல் வருமா அப்பா?

உங்களுக்கு ஒன்று தெரியுமா அப்பா? இன்றும் ஜெனிவாவில் இனவழிப்பு சார்ந்த நிழல் படங்களை வைத்து நீதி கோரும் போராட்டங்களை எம்மவர்கள் முன்னெடுக்கிறார்கள். அதில் உங்கள் உயிரற்ற உடலை நான் கொஞ்சி வழியனுப்பிய படமும் இத்தனை வருடங்களாக நீதி வேண்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதை பார்த்து அப் படத்துக்கும் முத்தமிட வைத்து விட்டது இந்த கொடிய வல்லரசுக் கூட்டம். என் பிஞ்சுஉள்ளம் அத் தருணத்தை எவ்வாறு கடந்திருக்கும் என்று இவ்வுலகம் அறியாது அப்பா. ஆனாலும் நிழலாக எம்மோடு வாழும் நீங்கள் கட்டாயம் அறிவீர்கள்.

உங்களின் மகளாக உங்களின் ஆசைகளை நிறைவேற்றுவேன் அப்பா. அம்மாவின் அரவணைப்பிலும் வழிகாட்டுதலிலும் உங்களை எவ்வாறு உணர்ந்து கொள்கிறேனோ? அதைப் போலவே அம்மாவினதும் உங்களினதும் பிள்ளையாக நிச்சயம் உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன். அதுவரை நாம் இருவரும் உள்ளுணர்வோடு பேசிக் கொள்வோம்.!