இலங்கையில் இடம்பெற்ற குண்வெடு வெடிப்புச் சம்பவங்களை வன்மையாகக் கண்டித்துள்ள அரசதலைவர் மைத்திரி துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு துறையினருக்கு பணித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகச் செய்தி கூறுகிறது.

[2019/04/21]இன்று அதிகாலை நாட்டின் சில பகுதிகளில் இன்று முற்பகல் இடம்பெற்ற எதிர்பாராத வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், அச்சம்பவங்கள் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட பிரகடனம் ஒன்று வெளி வந்மதுள்ளது அதில், பௌத்த குருமார்களே, ஏனைய மதத் தலைவர்களே,அன்பிற்குரிய பெற்றோர்களே, பிள்ளைகளே, நண்பர்களே,நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய துன்பியல் சம்பவத்தையிட்டு நான் மிகவும் வருத்தமடையும் அதேவேளை, இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்பாராத இச்சம்பவத்தினால் என்னைப் போன்றே ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாகி இருக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன். இச்சம்பவத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பதை ஆராய்வதற்காக பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, விசேட அதிரடிப் படையினர், இராணுவம், வான்படை, கடற்படை, உள்ளிட்ட பாதுகாப்பு துறைக்கு பணிப்புரை வழங்கப்பட்டு அவர்கள் அது சம்பந்தமாக துரித விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள். ஆகையால் அவ்விசாரணைகளுக்கு மக்கள் அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கின்றது.இச்சம்பவத்தையிட்டு ஆழ்ந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் ஆளாகியிருக்கும் பின்னணியில் நம் அனைவரினதும் ஒத்துழைப்பே தற்போது மிக முக்கியமாக தேவைப்படுகின்றது. அத்தோடு நாட்டு மக்கள் என்ற வகையில் அனைவரும் அமைதி காக்கும் அதேவேளை, வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட்டு செயற்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் நிலைமையை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் நடந்த சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என்பதையும் நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.