செந்தீயில் மெய் உருக்கி
மண் மடியில் துயில்கின்ற
சகோதரனே…!
வீர வணக்கம்
என்ற ஒற்றைச் சொல்லில்
கடந்து போக என்னால்
முடியவில்லை
பூக்களை கொண்டு உங்கள்
திருவுருவப் படத்தை
அலங்கரித்து விட்டு கூட
சென்று விட இயலவில்லை
உங்கள் புன்னகை மாறாத
வதனத்துக்கு முன்னே ஒற்றை
விளக்கை ஏற்றி வணங்கி விட்டு
தாண்டிச் செல்லவும் முடியவில்லை
எதோ ஒன்று உங்களுக்காக
என்னை இழுத்துப்
பிடித்துக் கொள்கிறது
கொஞ்சமேனும் உங்களைப் பற்றி
தெரிந்து கொள்ளத் தூண்டுகிறது
தேடித் தேடி ஓடி பொறுக்கிய
கொஞ்சத்தை மனம்
எழுத்துக்களாக கோர்த்துக் கொள்கிறது.
நான் உங்களை நேராக
அறிந்திருக்கவில்லை
வெண்மை பொங்கும் உங்களின்
உள்ளக் கிடக்கைகளை
அப்போதெல்லாம் தெரிந்திருக்கவில்லை
ஓர் நாளில் ஓர் வழியில்
ஓரைந்து லட்சம் மக்கள்
சொந்த இடம்விட்டு பிரிந்த
கதை அறிந்து உயிர் துறந்த
உங்களின் வீரக் கதையை
அறியும் வயது அப்போது எனக்கில்லை
என்ன செய்ய?
இருட்டு எங்கள் உள்ளங்கால்களையும்
உச்சந் தலையையும்
சுற்றிக் காவல் காத்துக் கொண்டிருந்த
தருணங்களில்
வெளிச்சம் தர வேணும் என்று
உயிர் கொடுத்தீர் நீங்கள்.
நீங்கள் நினைத்திருந்தால்
அம்மா அப்பாவோடு
அமைதியாய் வாழ்ந்திருக்கலாம்
உங்களின் அக்கா தங்கையரை
நீடூழி வாழ வைத்திருக்க
முடிந்தவரை முயன்றிருக்கலாம்
சுற்றமும் சுகம் தரும்
நல்ல வாழ்வை நீங்கள் விரும்பி
வாழ்ந்திருக்கலாம்.
ஆனால்,
எமக்காக எம் நிலத்தின் நிம்மதிக்காக
உங்கள் உயிர் கொடுத்தீர்கள்.
எம் வாழ்வுக்காக உங்களை
நீங்கள் தியாகித்தீர்கள்
சுகம் துறந்து சுயம் நிலைக்க
தீ தின்று போனது உங்களின் உடலை
நாங்கள் கலங்கி ஓடும்
கங்கை நீர் போல
இன்னும் நிக்காது ஏதிலிகளாக
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
நீங்கள் மட்டும் தியாகித்து விட்டு
உம் உயிரை
நிம்மதியாய் தூங்குகிறீர்கள்…
தூங்குங்கள்
மீளாத துயிலில் இருந்து எழுந்து விடாதீர்கள்
நாங்கள் மௌனித்துப் போன
நாட்களை எண்ணி
தினமும் தினமும் உங்கள்
நாடிகளும் நாளங்களும்
கொப்பளிக்கும் குருதியின் கொதிப்பை
எங்களால் என்றும் தாங்க முடியாது…
அதனால்
அமைதியாக உறங்குங்கள்
உயிர் கொண்டு நீங்கள் ஆற்றிய ஈகம்
என்றும் மறையாது
என்றும் மறையாது…
எழுதியது : இ.இ. கவிமகன்
நாள் : 12.12.2020