“வாசிப்பு மனிதனை பூரணத்துவம் அடைய வைக்கிறது” என்பது எவ்வளவு நியமான வார்த்தை. முன்பொருகாலம் 100 வீத வாசிப்பு வீதத்தைக் கொண்ட சமூகத்தை கொண்டிருந்தன எமது தமிழீழத் தாயகமும் தமிழ் பேசும் சமூகமும். ஆனால் இன்று எமது தாயகம் உட்பட்ட சர்வதேச அளவில் தமிழ் பேசும் மக்களின் வாசிப்பு வீதம் என்பது கணக்கிட்டுக் கூறக்கூடிய எண்ணிக்கையில் உள்ள குறைந்தளவு வீதம் என்பது கவலைக்குரிய விடயமாகின்றது. பத்திரிகைகள் தொடக்கம் புத்தகங்கள் வரை அறிவை வளர்ப்பதற்கும், செய்திகளை அறிவதற்கும் தம்மை தாமே சுய மதிப்பீட்டை செய்து கொள்ளவும் வாசிப்பு மிக அத்தியாவசியமாக இருந்த காலம் கடந்து விட்டது.

இன்று நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், காட்சி ஊடகங்களின் ஆளுகையும் இன்றைய இளையவர்கள் முதல் மூத்தவர்கள் வரை எல்லோரையும் புத்தகங்களில் இருந்து சற்று தள்ளியே வைத்திருக்கிறது. அறிவை பெறுவதற்காக அன்றி வெறும் பொழுதை போக்குவதற்காக அவற்றை பயன்படுத்தும் தன்மையே இன்று அதிகம் உள்ளது. அதனால் தான் தொலைக்காட்சி, இணையம், சமூக வலைத்தளங்கள், என்று தினம் தினம் புதிய வழிமுறைகளை சர்வதேச வியாபார நிறுவனங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், இவற்றையெல்லாம் தாண்டி எம் தாயகப் பரப்பில் புத்தகங்களை படிக்கவும் புத்தகங்களை நேசிக்கவும், அவற்றை உருவாக்கவும் என்று பல முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அதுவும் தாயகம் தழுவிய முயற்சிகளை பார்க்கும் போது புத்தகங்களின் வருகை வீதம் சற்று உயர்ந்தே காணப்படுகிறது. இவை வரவேற்கப்படக்கூடிய விடயமாக இருந்தாலும், அவற்றின் தரம், அவற்றின் மீது வாசகர்கள் கொண்டுள்ள நேசம் என்பவை வினாக்குறியே.

பெரும்பாலான புத்தகங்கள் தாயத் தமிழ் மொழியிலையே கவிதைகளாக, நாவல்களாக, வரலாற்று ஆவணங்களாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி சர்வதேச தரத்துடன் பல வெளியீட்டு முயற்சிகள் நடக்காமலும் இல்லை. ஆவ்வாறான ஒன்று தான் “சுவர்கள் அற்ற நகரம்” என்ற ஆங்கிலக் கவிதை நூல். தாயக வாசம் சுமந்து புது முயற்சியாக சர்வதேச மொழியாக அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழியில் “ A City Without Walls” என்ற கவிதை நூல் கடந்த 27.08.2019 அன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் பொது மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது..

17 வயது பள்ளி மாணவியான செல்வி நந்தகுமார் அகிலினியால் எழுதி வெளியிடப்பட்டுள்ள இந் நூல் நிச்சயமாக உலக அரங்கில் பேசப்படும் என்பது திண்ணம். இந்த நிலையில் புலர்வு இணையத்துக்காக கவிமகன் நூலாசிரியரோடான சிறு சந்திப்பை செய்திருந்தார்.

வணக்கம் அகிலினி உங்களைப் பற்றி கூறுங்கள்.
நான் அகிலினி எனக்கு வயது 17, யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் தரம் 12 இல் கல்வி கற்கின்றேன். பெற்றவர்கள் திரு /திருமதி நந்தகுமார், றஞ்சுதமலர். சிறு வயது முதல் தழிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. நான் யார்? என்பதையும், என்னுடைய கனவுகளையும் இலக்குகளையும் இந்த வாசிப்பினூடாகவே நான் கண்டுகொண்டேன்.

மனதின் பதிவுகளை எழுதுவதிலும் எனக்கு நிறைய ஆர்வம் உள்ளது. கவிதைகள், சிறுகதைகள் போன்றவற்றை அவ்வப்போது எழுதுவேன். துமிழை விட ஆங்கிலத்தில் எழுதுவது எனக்கு சுலபமாக இருக்கிறது. ஆங்கில நாவல்கள், கவிதைகள் படிப்பதனாலோ என்னவோ என்னுடைய சிந்தனை ஆங்கிலத்தில் இயல்பாக இருக்கிறது. ஆங்கில நாவல்கள் இரண்டு தற்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வாசிப்பதற்கான புத்தகங்களை எங்கிருந்து பெறுகிறீர்கள்?
யாழ்ப்பாணப் பொது நூலகம், எனது பாடசாலை நூலகம் தற்போது British Council நூலகத்தினைப் பயன்படுத்தி வருகிறேன். அதைவிட நூலகங்களில் கிடைக்காத பல நூல்களை சொந்தமாகவே வாங்கி வைத்திருக்கிறேன். பொதுவாகவே பத்திரிகைகள், சங்சிகைகள் வாசிக்கும் பழக்கம் சிறு வயது முதலே இருக்கின்றது. நூல்களைச் சொந்தமாக வைத்திருப்பதில் ஓர் அலாதி பிரியம் எனக்கு இருக்கிறது. இதுவரை இருந்ததை விட 2019 ஆம் ஆண்டு எனக்கு பெரிய வரப்பிரசாதம்.

ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?
ஏனெனில் சென்னையில் தை மாதம் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிலும் ஆவணி மாதம் யாழ்ப்பாணப் புத்தகத் திருவிழாவிலும் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஆனாலும் திருப்தி இல்லை எல்லா நூல்களையும் வாங்குமளவு வளம் இல்லை. இருந்தாலும் அம்மா, அப்பாவின் பணத்திலும் நானும் புத்தகத்திற்காகச் சேகரித்து வைத்திருந்த பணத்திலும் பல புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறேன். கோயில் திருவிழாக்களில் கூட எனக்கு புத்தகங்கள் வாங்குவதுதான் முக்கிய நோக்கமாக இருக்கும். புத்தகங்களுடன் வாழ்தல் என்பதே எனக்கு மிகவும் பிடித்தமான விடயம்.

அதை விட நான் எழுதிய ஆங்கில கவிதைகளில் 25 கவிதைகளை கொண்டதான “ A City Without Walls ” என்ற முதலாவது ஆங்கிலக் கவிதை நூலும் இந்த வருடம் ஆவணி 27ம் திகதி யாழ்ப்பாண பொது நூலக மண்டபத்தில் வெளியிடப்பட்டது. என்னுடைய உள்ளக்கிடக்கைகளை உலகுக்கு வெளிப்படுத்த எனக்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பமும் 2019 ல் தான் கிடைத்தது. ஆதனால் தான் இந்த வருடத்தை அவ்வாறு கூறினேன்.

ஊங்களுடைய கல்விச் செயற்பாடு
கடந்த மார்கழி மாதம் நான் க.பொ.த. சாதாரண பரீட்சையை நிறைவு செய்து, தற்போது உயர்தரக் கலைப்பிரிவில் ஆங்கிலம், தொடர்பாடலும் ஊடகக்கற்கையும், பொருளியல் ஆகிய 3 பாடங்களைத் தெரிவு செய்து கற்கத் தொடங்கியிருக்கிறேன்.

எழுத்தார்வம் எவ்வாறு எழுந்தது
என்னுடைய வாசிப்பு பயணத்தில் உலகை அறியவும் சிந்திக்கவும் எனக்கு போதிய வாய்ப்புகள் கிடைத்தன. பல விடயங்களை நான் எனக்குள்ளேயே போட்டு பல கோணங்களில் சிந்திப்பேன். அது தனிப்பட்ட உணர்வுகளாக இருக்கட்டும், உலகப் பொதுப் பிரச்சனைகளாக இருக்கட்டும். என்னுடைய உள்ளக்கிடக்கைகளை புரிந்து கொள்ளக்கூடியவர்கள் மிக சொற்பமே. இதனாலோ என்னவோ எனக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம். என்னிடமும் ஒரு தனித்துவமான கதை இருக்கிறது. அதை வெளி உலகத்துக்கு சொல்ல விரும்புகிறேன் அத்தோடு என் தாயாரின் மூலம், தாயாரிடமிருந்து எழுத்தார்வம் எனக்குள் அதிகமாக வளர்ந்திருக்கிறது என நான் உணர்கிறேன்.

தமிழில் ஆக்கங்கள் ?

அவ்வப் பொழுதுகளில் எழுதுவேன். ஆனாலும் பெரும்பாலும் சிறுகதைகள்தான். இருப்பினும் பல கவிதைகள் நண்பர்களின் காதலுக்காக அவர்களின் கோரிக்கைக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். எனக்கு ஆங்கிலத்தில் வரும் தொடரி (flow) தமிழில் குறைவுபோல்தான் இருக்கிறது.

ஆங்கில மொழி மூலமான வாசிப்பிற்கு ஏதுவான காரணி
வாசிக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடிய பல நூல்களை ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறேன் அவை எனக்கு ஆங்கில நூல்களை மேலும் வாசிக்கும் அவாவை ஏற்படுத்தியிருக்கலாம். சிறு வயதிலேயே ர்யசசல Pழவவநசஇ வுin வுinஇ Pநசஉல துயஉமளழn போன்ற ஆங்கிலப் புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அத்துடன் ஆங்கில மொழியிலிருந்த ஈடுபாடு காரணமாகவும் பரந்த உலகத்தில் விரிந்திருக்கும் வெவ்வேறு நடைமுறைகளையும் அறிவையும் புதிய சிந்தனைகளையும் பெற வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கிருக்கிறது. பொதுவாகவே உலக சரித்திரங்கள், Travel catalogues போன்றவற்றையும் வாசிக்கும் பழக்கம் இருக்கிறது.

எவ்வகையான புத்தகங்களை வாசிக்கத் தேர்ந்தெடுப்பீர்கள்?
தொடக்கத்தில் நோபல் பரிசு, Booker பரிசு போன்ற நூல்களை வாசிப்பதற்காக தெரிவு செய்வேன். அவ்வாறான நூல்களினூடாக அந்த எழுத்தாளர்களின் பிற நூல்களையு அறிந்து அவற்றையும் வாசிப்பேன். எனக்கு மிகவும் பிடித்த Genre – crime, mystery, magical realism, young-adult fiction, science fiction, fantasy, tall tale, legend, realistic fiction, classics, and mythopoeia ஆகும். அதைவிடவும் மொழிபெயர்ப்பு நாவல்கள் குறிப்பாக ரஸ்ய, பிரெஞ் நாவல்கள் மற்றும் சுயசரிதைகள் என்பவற்றை விரும்பி வாசிப்பேன்.

பிடித்த எழுத்தாளர்கள்?
Agatha Christie, Arundhati Roy, Anne Frank, Jules Verne, Leo Tolstoy, Fyodor Dostoyevsky, Victor Hugo, John Green, Vettichelvi, Kalki, Nicola Yoon, Maya Angelou, Walt Whitman, Orhan Pamuk, Henri Charriere, Sylvia Plath, Dante Alighieri, Arthur Rimbaud, Pablo Neruda, Isabel Allende, Gabriel Garcia Marquez, Katrina Vandenberg and so on.
முக்கியமாக அகத்தா கிரிஸ்டி தன்னுடைய எழுத்துக்களினால் சுவையான கதையோட்டத்தோடு துப்பறியும் மர்மங்களோடும் சுவாரஸ்யமான எழுத்து நடையேர்டு தன் நூல்களில் தன்னைப் பதிவு செய்திருக்கின்றார்.


தாயக நூல்கள் பற்றிய பார்வை
தாயக நூல்களில் பெண்கள் பிரச்சனைகள், சமூகப்பிரச்சனைகள் தாயக வரலாற்று அம்சங்களைக் கூறும் நாவல்கள், கவிதைகளை வாசித்திருக்கிறேன். முக்கியமாக செங்கை ஆழியன், கோகிலா, மகேந்திரன் போன்றவர்களில் ஆக்கங்களை வாசித்திருக்கிறேன். இருப்பினும் குறிப்பாக வெற்றிச் செல்வி, தமிழ்நதி, தீபச்செல்வனின் நூல்கள் எனக்கு பல விடயங்களை கற்றுத்தந்திருக்கின்றன. அவை ஓடுக்கப்பட்ட இனத்தின் உரிமைக்கான போராட்ட வரலாற்றையும் அதற்குள் மனித மனங்களின் ஓலத்தினையும் என்னைப் போன்ற அடுத்த தலைமுறைக்கு தெரியப்படுத்துகின்றன. அவை என்னைப் போன்ற பலருக்கு நாம் என்றுமே அறியாத பல சேதிகளைச் சொல்கின்றன. அந்த வகையில் அவ்வாறான புத்தகங்களையும் ஆர்வத்தோடு வாசிப்பதோடு அவை எனது நாடு, எனது இனம் என்ற சிந்தனைகளை என்னுள்ளே படரவிடுகின்றன.


ஊங்களின் கவிதை நூல் பற்றி?
“ A City Without Walls ” என்ற நூல் 25 கவிதைகளைக் கொண்டிருக்கின்றது. Beautiful, Souvenir, Mysteriousness என்ற மூன்றின் அடிப்படையில் வாழ்வின் நதி பாய்ந்தோடும் மலைச் சரிவுகளின் மண் கலந்த மணத்தினையும் வாசம் வீசும் நட்சத்திரங்களின் நிலை வாதத்தையும் படர்ந்திருக்கும் பற்றைகளான வாழ்வின் சூட்சுமங்களையும் வார்த்தைகளுக்கிடையில் வண்ணங்களாய் வரைந்திருக்கிறேன்.


ஏன் இக்கவிதைகளைத் தெரிவு செய்தீர்கள்
“ A City Without Walls ” என்ற தலைப்பிற்கு இக்கவிதைகள் பொருத்தமாக இருப்பதனாலும் அவை என்னுடைய நிலைவாதத்தை வெளி உலகிற்கு வெளியிடுவதற்கு ஓர் ஊடகமாகவும் இருந்தது.

17 வயதில் இக்கவிதைத் தொகுப்பை வெளியிட வேண்டும் என்ற எண்ணப்பாடு எவ்வாறு எழுந்தது
முட்டி விட்டது கொட்டிவிட்டேன். இதற்கு வயதென்பது ஒரு தடையில்லை என நான் நினைக்கின்றேன்.

ஊங்களின் நாவல்கள் பற்றி
ஆங்கிலத்தில் இரண்டு நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறேன் ஆனால் இன்னும் அவை முழுமை பெறவில்லை. Young adult fiction and Mystery என்ற இருவகைப்பாடுகளில் அவை உள்ளடங்கும்.


அந்நாவல்களின் கருத்துருவாக்கங்கள் பற்றி
அறியாமலிருப்பதிலும் ஒரு சுவாராஸ்யம் இருக்கிறது. ஆகையால் இப்போதைக்கு அது வேண்டாமே…


எழுதுவதற்கும் புத்தக வடிவில் கொண்டுவருவதற்குமான தடைகள்
நிறையவே சவால்கள் உள்ளன. முக்கியமாக நான் பாடசாலைக் கல்வி, பரீட்சைக்குத் தயாராகுதல் போன்ற விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.
பொதுவாகவே தற்காலத்தில் வாசிப்பு எழுத்துக்கு அப்பால் காட்சி ஊடகங்கள் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. தமிழ் புத்தகங்களையே வாசிக்கும் ஆர்வம் குறைவாக உள்ள நிலையில் ஆங்கிலத்தில் வாசிக்கும் வாசகர்களை கைவிட்டு எண்ணலாம். ஏன்னுடைய கவிதைகளுக்கான ஆய்வுரைகள் செய்பவர்களுக்காக நான் நிறையக் காலம் காத்திருந்தேன். எனது நூலை ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட நாடுகளில் வெளியிடலாம் எனவும் பல தடைவ எண்ணியதுண்டு. எனக்கு அவ்வாறான தொடர்புகள் கிட்டவில்லை. பலருக்கு என்னுடைய கவிதைகளுக்கு நானே விளக்கம் சொல்லியிருக்கிறேன். மொழிக்கப்பால் இலக்கிய நயம், ஆர்வம், இலக்கியப்பார்வை என்பது எங்களுடைய சமூகத்தில் அருகி வருகிறதோ என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது.

கொஞ்சம் ஆழமாக பார்க்கும் பக்குவமும் காணாத நிலமையையும் நான் பார்க்கிறேன். நான் என்னை சூழ்ந்துள்ள நிலமையை அதாவது என்னுடைய சகபாடிகள் போன்றவர்களைத்தான் குறிப்பிடுகிறேனே தவிர நான் கண்டுகொள்ளாத ஆர்வம் மிக்கவர்கள் பலர் இருப்பார்கள், அவர்களை நான் மிக விரைவில் சந்திப்பேன் என நம்புகின்றேன். நான் எழுதும் போது எனக்கு பல விடை தெரியாத கேள்விகள் தோன்றும், அவைபற்றி ஆழமாக உரையாட முடியாமலேயே நிறைய விடயங்கள் புதைந்து போயும் தொக்கியும் நிற்கின்றன.

முழுமையான தெளிவும் பூரண திருப்தியும் இருக்கும் பட்சத்தில் இலகுவாக எனது படைப்புக்களுக்கு நூல் வடிவம் கொடுக்கலாம். என்னுடைய வயதுக்கும் அறிவுக்கும் இவையெல்லாம் சவாலாகவே இப்போதைக்கு இருக்கின்றன. என்னுடைய வாசிப்பு அனுபவம,; நான் சிந்திக்கும் நிலையை விட உலகத்தின் எதிர்பார்ப்புக்கள் வித்தியாசமாகவும் இருக்கலாம்.

எழுத்துலக பிரவேசத்திற்கு ஆதரவாக இருந்தோர்
என்னுடைய எழுத்தார்வத்திற்கும் வாசிப்பு ஆர்வத்திற்கும் முதல் தூண்டுதலாக அமைந்தது தடைகளற்ற எனது வீட்டுச் சூழலே ஆகும். முக்கியமாக என்னுடைய இந்த பயணத்திற்கு துணையாக இருப்பது எனது அம்மாவே. எழுத்தாளர் வெற்றிச்செல்வி ஒரு தோழியாக வழிநடத்தியிருக்கிறார். இதைவிட குறிப்பிடத்தக்க சில ஆசிரியர்கள் மற்றும் பல நபர்கள் அவ்வப்போது ஆதரவையும் ஊக்கத்தையும் பாராட்டுக்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்துலகில் பயணிக்க முனையும் இளையோருக்கு நீங்கள் கூற விரும்புவது
“அமைதி தொடங்குவது புன்னகையோடு வாழ்வு தொடங்குவது கனவுகளோடு”. “Expert in everything was once a beginner” அதனால் முதலடியை எடுத்துவைக்க எப்பொழுதும் தயங்காதீர்கள். உங்ளுடைய கனவுகளே நாளைய பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன.

எதிர்கால இலக்கு
Travel Writer – உலகத்தை பல்வேறு திசைகளில் பல்வேறு வடிவங்களில் பிம்பங்களாக, எதிரொலிகளாக வடிவமைக்கப்பட்ட வாழ்வின் நிலையியலையும் தார்ப்பரியங்களையும், நிழல்களின் ஓசைகொண்டு நிறங்களோடு பார்த்திசைக்க, பனிமூடிய சாலைகளின் வழியே செல்லும் பட்டாம் பூச்சிகள் போல் பயணிக்க விரும்புகின்றேன் என் எழுத்துக்களோடு.

தமிழ் மொழி மூலமான படைப்புக்களை எதிர்பார்க்கலாமா?
தமிழில் எழுத முயற்சி செய்கிறேன். இறைவன் அருளால் அந்த வரம் கைகூடினால் என்னுடைய தமிழ் படைப்புக்கள் வெளிவரலாம். சிறுகதைத் தொகுதியொன்றை முதலில் எதிர்பார்க்கலாம்.

எழுத்துலகில் எவ்வகையான சவால்களை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறீர்கள்
பொதுவாகவே வாசிப்புப் பழக்கம் அருகி வருகின்ற நிலமை காணப்படுகின்றது. அதிலும் ஆங்கில நூல்களை வாசிக்கும் நிலமை மிகக் குறைவு போல் உணருகிறேன். ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களோடு பயணிக்க வேண்டிய தேவையுள்ளது. பிரபல்யமான ஆங்கிலப் பதிப்பகங்களுக்குள் நுழைவது அவற்றோடு இணைந்து பணியாற்றுவது சவாலாக அமையலாம். உலக ஓட்டத்துக்கு ஈடுகொடுத்தல் என்பது சவாலே. நிறையவே கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளது. என்னுடைய பயணம் ஒவ்வொரு கணமும் சவாலாகவே இருக்கும். ஆனாலும் அந்த சவால்களை நான் மகிழ்ச்சியோடு எதிர்கொள்வேன் ஏனெனில் அவைதான் என்னை எனது இருப்பைப் பலப்படுத்தும்.

தொடர்ந்து வளருங்கள் அகிலினி. ஊங்களின் வளர்ச்சியில் எங்களின் ஊடகமும் எப்போதும் துணை நிற்கும். வாழ்த்துக்களும் ஆசிகளும்.


நன்றி

நேர்கண்டது : இ.இ.கவிமகன்
நாள் : 13.10.2019