கிழக்கில் சூரியன் அன்று
அழுது கொண்டே எழுந்தது
ஈழ மண் எரிந்து கொண்டிருந்த
கணப் பொழுது அந்தச்
சூரியன் கண்ணை
அழ வைத்திருக்கலாம்
தான் தினமும் காணும்
தன் மக்கள் வீடற்று
ஏதிலிகளாக வீதியெங்கும்
அடித்து துரத்தப்படுவதை கண்டு
விழி கலங்கியிருக்கலாம்.
பொங்கலிட்டு தன்னை பசியாற்றும்
தன் நேசத்துக்குரியவர்கள்
கொன்று குதறப்படுவது
நீரை சொரிய வைத்திருக்கலாம்
அதனாலோ என்னவோ
வானம் கறுத்து
அதன் விழிகள் சிவந்து கிடந்தது
சூரியனின் கண்களில்
நீர் அருவியாகி சொரிந்து
கொண்டிருந்தது…
என் மனது மட்டும் அன்றைய
நாளை நினைவில் இருந்து
தூக்கி எறிய முடியாத மகிழ்வை
பெற்று சிரித்தது.
அன்றைய நாளின்
மறக்க முடியாத நிமிடங்கள்
என் நெஞ்சில் வந்து
இடியிடித்து கொள்கிறது.
பசுஞ்சோலையாக
மாங்கனிகள் தொங்கிய
வளாகம் ஒன்றில் தான்
என் அருகில் வந்தமர்ந்தாய்.
என்ன பெயர்? என்றாய்
சொன்னேன்
சிரித்துக் கொண்டாய்
இச்சிரிப்புக்குள் என்
மனதை நிறைத்த நீ
மறைந்திருப்பதை
உணர்ந்து கொள்ள முடியவில்லை
பயம் எனக்குள் நிரம்பிக் கிடந்தது
புத்தம் புதிய ஊர்
நித்தம் காணாத புது முகங்கள்
கத்திக் கொண்டிருக்கும்
அண்டங் காக்கைகளாக
ஊர் சுத்தித் திரியும் இடம்பெயர்ந்தவர்கள் நாம்
எப்படி நீங்கள் ஏற்பீர்கள் என்று
உறைந்து கிடந்த பூச்சியாய்
விழித்துக் கொண்டிருக்கிறேன்
உங்களுக்கென்ன பெயர்?
தட்டுத் தடுமாறி
என் உதடுகள் உச்சரித்த போது
அருந்தவம் பெற்ற பிள்ளை
பிரபாகரன் என்றாய்
சத்தியமாய் தெரியவில்லை
வேலுப்பிள்ளை மகனின்
பெயர் தாங்கிய என் நண்பா – நீ
அண்ணன் வழி சென்று
என்னை பிரிவாய் என்று…
நீ விரும்பியிருந்தால்
பல்கலையில் பயின்று முடித்திருக்கலாம்
ஆசானாய், அலுவலகனாய்
இன்றும் வாழ்ந்திருக்கலாம்
அப்பனும் ஆத்தாவும்
தம்பியும் என சந்தோசத்தை
அனுபவித்திருக்கலாம்
நீ அதை எல்லாம் தூக்கி எறிந்து
இடர் தந்த சிங்களவனின்
தடையுடைக்க சென்று விட்டாய்.
மல்லாவி மண்
உன்னை சுமந்ததை விட
எம்மை நிமிர வைத்த பூமி,
காற்றிலே கீதமிசைக்க
நாங்கள் கற்றுக் கொண்ட
காந்தள் மலர் சோலைகள்
அதிகம் நிறைந்த இடம்,
அங்கு தான் நீயும் நானும்
சேர்ந்திருந்த நிமிடங்கள்
மறக்க முடியாது விக்கித்து கிடக்கின்றன
இறுதியாக நீயும் நானும்
சேர்ந்து போட்ட
மாவீர விதைகுழி மண்ணில்
விதைத்த ஈரம் காயும் முன்னே
நீ விதையாக வீழ்ந்த
செய்தி என் காதில் விழவா
எனை விட்டு யாழ்ப்பாணம்
சென்றாய்?
நண்பா
சொல்லி சென்று நீ பிரிந்த போது
யாழ் உனைக் காக்கும் என்றுதானே
நம்பி வந்தேன்
காட்டிக்குடுத்து உன் உயிரை
தின்று விட்டதே எம் மண்
அகத்தியனே,
நீ தேடிய எங்கள் ஈழம்
இன்று எம் கையில் இல்லையடா
நீ கண்ட கனவை
கொன்று புதைத்துவிட்டுத் தான்
தூர தேசம் வந்து தூங்கி மகிழ்கிறேன் நான்
ஆனாலும்,
உன் நினைவு என்றும்
மறையாத ரணம் நண்பா….
நண்பனின் நினைவோடு….


எழுதியது : இ.இ. கவிமகன்.
நாள்: 20.11.2018