பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இலங்கை வல்லாதிக்கம் எமக்கு என்ன சொல்ல வருகிறது? எம் மீதான அடக்குமுறை அதிகாரம் இன்னும் நிறைவாகவில்லை என்பதை தானே? நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் முஸ்லீம் தீவிரவாதத்தை அடக்குவதற்கு முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சிங்கள அரசும் அதன் கூலிப்படைகளும் வரப் போகும் மே 18 ஆம் நாள் தாம் செய்து முடித்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 10 ஆவது வருட நிறைவை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் நடக்கப் போகும் நிகழ்வை குழப்ப வேண்டிய தேவையை உணர்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இலங்கை மீது சர்வதேச ஊடகங்களின் பார்வை விழுந்துள்ளது என்பது நியம். 

அதோடு பல நாடுகளின் புலனாய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என இலங்கையில் இப்போது விசாரணை என்ற பெயரில் பரவிக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் வரப் போகும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளானாது மிக முக்கிய இடத்தைப் பெற்று அனைத்துலக கவனத்தைப் பெற்றுவிடும் என்ற பயம் இலங்கை அரசுக்கு இருப்பது உண்மை. அந்த வகையில் நடக்க இருக்கும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை குழப்புவதன் மூலம் சர்வதேசத்துக்கு இங்கு அவ்வாறான ஒன்று நடக்கவில்லை என்பதை காட்டுவதற்கு முனைகிறது இந்த நல்லாட்சி அரசு. 

அதன் ஒரு அடிக்கல்லே நேற்றைய மாணவர் தலைவர்களின் கைது. அது மட்டும் இல்லாது இவ்வருடம் வரும் 10 ஆவது ஆண்டின் நிறைவில் இனவழிப்பு என்ற சிங்களத்தின் உச்ச கொலைவெறித் தாண்டவம் நடந்தது என்பதை மறைக்க முஸ்லீம் தீவிரவாதிகளை இனவழிப்பாளர்கள் பயன்படுத்தினார்களா என்ற சந்தேகமும் இப்போது எழுகிறது. ஏனெனில் ஊர் முழுக்க வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் எவ்வாறு இந்த முஸ்லீம் தீவிரவாத அமைப்பு வைத்திருக்கின்றது? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. 

அமைதியாக வாழும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை இன்றும் நிம்மதியாக வாழ விடாது துரத்தி துரத்தி விசாரணை வளையத்துக்குள் வைத்திருக்கும் இலங்கை புலனாய்வு அமைப்புக்களுக்கு இந்த தீவிரவாத செயற்பாடுகளின் வாசம் கொஞ்சம் என்றாலும் நுகராமல் இருந்தது எப்படி? 

310  உயிர்களை அத் தீவிரவாத கும்பல் இல்லாது செய்ததன் பின் தான் தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று நுகர்ந்த புலனாய்வு அமைப்புக்கு இத் தாக்குதல் நடக்க முன் எவ்வாறு தெரியாமல் போனது. இது விடை தெரியாத வினா அல்ல. இது என்னைப் பொறுத்தவரை வர இருக்கும் மே 18 இனவழிப்பு நாளில் சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்பவும், வரும் மார்கழி மாதம் நடக்க போகும் அரச தலைவர் தேர்தலுக்காகவும் இனவழிப்பாளர்கள் சிலரின் பின்னணியில் நடந்தேறிய இனவழிப்பின் தொடர்ச்சி என்று மட்டுமே கூற முடியும். 

ஏனெனில் 2009 இல் தினமும் 300 உயிர்களை இந்த சிங்கள இரத்த வெறியர்கள் சிதைத்த போது கண்டு கொள்ளாத சர்வதேசம் இப்போது ஒரு நாள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மக்களுக்காக கண்ணீர் வடிக்கிறது. அதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று கூறவில்லை. அவர்களும் எம்மின மக்களே. ஆனால் 2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் இலங்கை அரசால் இனவழிப்பு நடக்கின்றது என்பதை புலம்பெயர் தமிழர்கள் எத்தனையோ வழிகளில் ஆதாரபூர்வமாக சுட்டிக் காட்டியும் கண்டு கொள்ளாத சர்வதேச ஊடகங்களும் அரசுகளும் இன்று இலங்கையில் தவம் கிடக்கின்றன. 

இது எதற்காக? என்பது மட்டுமே என் கேள்வி. சரி அது ஒருபுறம் இருக்க, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் இல்லை அவர்கள் மக்கள் மீது இவ்வாறான கொடிய தாக்குதலை நடாத்தவில்லை அது இது என்று விடுதலைப்புலிகளுக்கு புகழாரம் சூட்டியது இன்றைய ஆட்சி வர்க்கம். ஆனால் அத்தகைய விடுதலைப்புலிகளின் தலைவரின் படம் இருந்ததாக கூறப்பட்டு மாணவர்களை கைது செய்கிறது. இது எவ்வகையில் நியாயம்? இக் கைதின் பின்னணி என்ன? இலங்கையை முற்றுகையிட்டிருக்கும் சர்வதேச ஊடகங்களுக்கும் சர்வதேச அமைப்புக்களுக்கும் தமிழீழ மக்கள் தமக்கு நடந்த அநீதிகளை, தம்மீது இச்சிங்கள பேரினவாத அரசு நடாத்திய இனவழிப்பை பத்தாவது ஆண்டு கடந்து வந்த நிலையிலும் தெரியப்படுத்தக் கூடியதான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கடைப்பிடிக்கக் கூடாது என்ற நோக்கம் ஒன்று தானே…?