முகில் இல்லாது வானம் வெறுமையாக இருந்தது. அம்மாவைக் காணாது சிணுங்கும் குழந்தைகளைப் போல சந்திரன் தோன்றாத வானில் நட்சத்திரங்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தன.
அன்று அமாவாசை.
சுற்றிலும் இருள் அடர்ந்து பரவியிருந்தது.
வெப்பக் காற்று வீசிக்கொண்டிருக்கின்றது. சுதந்திரம் என்னும் குழந்தையை பிரவசிக்கத் தமிழீழத் தாய் படும் வேதனையின் மூச்சு வெப்பக்காற்றாக வெளிப்படுகிறதோ என்னவோ…?
மனப்பாரம் நெஞ்சை அழுத்த நடந்து கொண்டிருக்கின்றேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் கண்ட அடையாளங்களை ஞாபகத்தில் வைத்துக்கொண்டே இரு புறமும் புதர்கள் கொண்ட அந்த வண்டிற் பாதையில், “ரோர்ச்லைட்” இன் உதவியுடன் குடிசையைத் தேடினேன்.
அதோ… ஒரு பெரிய மரம்… அது வேப்பம் மரந்தான். பக்கத்தில் இருளாய் குடிசை.
உள்ளே எரியும் குப்பி விளக்கின் ஒளி செத்தையினூடாக புள்ளிப் புள்ளியாய், வானத்திலிருக்கும் நட்சத்திரங்கள் போலத் தெரிந்தது.
இதே குடிசை தான்
இந்த வேப்ப மர அடியில் நானும் சூரியும் எவ்வளவு தோழமையாய், அன்பாய் இருந்து கதைத்திருப்போம். அவனுடைய ஏழைத்தாயின் கையால் எத்தனை தடவை சாப்பிட்டிருக்கின்றேன்.
மறுபடி இத்தகைய சூழ்நிலையில் அந்தத் தாயின் முகத்தில் விழிக்கும் நிலை, மனதைச் சோகமாக அழுத்தியது.
குடிசை வாசலை நெருங்கி
“அம்மா…! “
என்று கூப்பிட்டேன்.
“யாரது?” என்ற பலவீனமான குரல் ஒன்று கேட்டது. சில விநாடிகளில் குடிசையின் கதவு திறக்கப்பட்டது.
எட்டி நின்று, குப்பி விளக்கை உயர்த்தியபடி என்னை ஊன்றிப் பார்த்தாள் சூரியின் அம்மா.
சட்டென்று அடையாளம் கண்டு பரபரப்புடன்,
“உள்ளே வா மோன…”
முகம் மலர அழைத்தாள். நான் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தேன்.
“தம்பி நீங்கள் தேவன் தானே…?”
“ஓம் அம்மா…!”
கும்பி விளக்கை நன்றாக உயர்த்தியபடி, எனக்குப் பின்னாலும் அந்தத் தாய் யாரையோ கண்ணால் தேடினாள்.
ஒரு விநாடி எதையோ கேட்பதைப் போல் என்னைப் பார்த்தாள்.
சூரியின் ஞாபகம் வந்திருக்க வேண்டும்.
“எப்பிடி இருக்கிறியள் எல்லோரும்?”
இப்போது கூட தனது மகன் சூரியை மட்டும் விசாரிக்காமல் எல்லோரையும் விசாரிக்கும் விதம், என் மனதை ஆழமாய்த் தொட்டது.
“இருக்கிறம் அம்மா… எல்லோரும் சுகமாக இருக்கிறம்”
“முன்பை விட இப்ப சரியா கஸ்டப்படுவீங்கள் என்ன?
சாப்பாட்டுக்கு என்ன செய்வியள்?
எப்படிக் குளிக்கிறியள்?
எங்க படுத்து நித்திரை கொள்ளுறியள்?”
போராளிகள் அனைவரையும் தனது பிள்ளைகளாக கருதிக் கொண்ட ஒரு தாயின் ஆதங்கம், தொடர் கேள்விகளாய் வெளிப்படுகிறது.
“அம்மா! எங்களுக்கு ஒரு கஸ்டமும் இல்லை. நாங்கள் நல்லா சாப்பிடுகிறம். சந்தோசமா இருக்கிறம்.
எனக்குச் சூரியின் ஞாபகம் வருகிறது.
“தம்பி, ஏதும் இந்தப்பக்கம் அலுவலா வந்தீங்களே? மற்ற ஒருத்தரையும் காணேல்ல? “
அக்குடிசையைத் தேடி அந்த இரவில் நான் வந்த நோக்கத்தை அறிய அந்தத் தாய் விரும்பினாள்.
“ அலுவல் ஒன்றும் இல்லையம்மா, சும்மா உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவமெண்டுதான் வந்தனான்”
“இரு தம்பி ஏதும் சாப்பாடு தாறன்”
எனக்குச் சாப்பாடு தந்தால் இந்தக் குடிசையில் இன்றிரவு ஒரு ஜீவன் பட்டினி கிடக்கும்.
“வேண்டாம் அம்மா எனக்குச் சாப்பாடு வேண்டாம்”
நான் சொல்வதைக் கேட்காமல் மூலையில் இருந்த சட்டிக்குள் இருந்த சோற்றை எடுத்துக் கறியும் போட்டு என்னிடம் நீட்டியபடி
“ சாப்பிடு மோன…”
நான் எதற்காக இங்கு வந்திருக்கிறேன்; என்ன சொல்ல வந்திருக்கிறேன் என்பது மனதைக் குடைய, வேதனையில் மூழ்கி விட்டேன்.
அதனால் ஒரு பிடி சோற்றைக் கூட என்னால் சாப்பிட முடியவில்லை.
“எனக்கு பசிக்கேல்ல அம்மா”
நிலத்தை பார்த்தபடி சொன்னேன்.
“சாப்பிடாமல் நீ மெலிஞ்சு போனாய்”
செல்லமாய் அந்தத் தாய் என்னைக் கண்டித்தாள். ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு
“சூரி எப்பிடி மோன இருக்கிறான்?”
கிசுகிசுத்த குரலில் ஆவல் பொங்கக் கேட்டாள். எனது பதிலுக்காகக் காத்திருக்காமல் தானே தொடர்ந்தாள்.
“என்ரை உயிரே அவன் தான் தம்பி! எங்கையாவது அவன் சுகமாக இருப்பான் எண்ட நம்பிக்கையிலை தான், என்ரை மிச்ச மூண்டு குஞ்சுகளோடையும் நான் சந்தோசமா இருக்கிறன் தம்பி”
குரல் உடைந்து போக அழத் தொடங்குகிறாள். சிறிது நேர அழுகைக்குப் பின் தொடர்ந்தாள்.
“கடவுள் என்னைக் கை விடமாட்டான். சூரிக்கு நல்ல ஆயுள் பலன் மோன…”
கண்ணீரைத் துடைத்து விட்டு மீண்டும் உற்சாகமாகத் தொடங்கினாள்.
அண்டைக்கு … ஒரு பத்து நாளைக்கு முன்னாலை அந்தக் கோயில்குளத்துச் சாத்திரியாரட்ட 10 ரூபாய் கொடுத்து சூரியின்ரை குறிப்புப் பாப்பிச்சனான்; அவனுக்கு நீண்ட ஆயுள் இருக்காம்”
காலங்காலமாக இருந்து வரும் மனிதனின் நம்பிக்கைகள் அந்தத் தாய்க்கும் ஒரு தெம்பைக் கொடுத்தது.
“கடவுள் என்னைக் கை விட மாட்டான்”
விக்கலூடாக அந்தத் தாய் இன்னும் ஏதேதோ சொல்ல முயன்றாள்.
“அழாதீங்கோ அம்மா, சூரி சுகமாக இருக்கிறான்.”
என்று நெஞ்சின் கனம் உடைபட்டுக் கண்ணீராக வெளிவருகிறது. அந்தத் தாய்க்கு முன்னால் அழ நான் விரும்பவில்லை. குடிசைக்கு வெளியே எழுந்து வருகிறேன். கண்ணீரைக் கட்டுப்படுத்துவதற்காக அண்ணார்ந்து வானத்தைப் பார்க்கிறேன். (மீள் தட்டச்சு புலர்வு )
இன்னும் நட்சத்திரங்கள் அழுதுவடிந்து கொண்டுதான் இருக்கின்றன.
மனங்கொள்ளாத நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனுமிருக்கும் அந்தத் தாயிடம் போய், உங்கள் மகன் போர்க்களத்தில் உடல் சிதறிச்செத்துவிட்டான் என்று எப்படிச் சொல்லுவது?
அந்தத் துணிவு எனக்கு இருக்கவில்லை. நாளை இன்னொரு தோழன் வந்து அதைச் சொல்லட்டும்.
“அம்மா நான் போட்டு வாறன்”
அந்த வேப்பம் மரத்தையே பார்த்தபடி திரும்பி நடக்கிறேன்.
சூரியின் சின்னஞ்சிறு தங்கைகள் இருவரும் ஆர்வத்துடன் கையை அசைத்து எனக்கு விடை தருகின்றார்கள். அன்பு அண்ணாவின் சாவுச் செய்தியைச் சொல்ல வந்தவனை கையசைத்து வழியனுப்புகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது.
“தம்பி தேவன் கவனமாக போகவேணும். வழியில, தெருவில எங்கையாவது படுத்துக் கிடப்பாங்கள்.”
“கவனம் மோன…”
அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அழுதுகொண்டே அந்த அமாவாசை இருட்டில் நடக்கிறேன். இப்போது நான் கண்ணீரைத் துடைக்க முயற்சிக்கவில்லை.
மீள் தட்டச்சு புலர்வு
