அன்று 1996 சித்திரைத் திங்கள் 17-18 ஆம் நாள் என்று நினைக்கிறேன். எங்கள் ஊர் வழமை போல இல்லாது அன்று கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. சூரியக்கதிர் என்ற பெயரில் இனவாத சிங்கள அரசு ஆடிக்கொண்டிருந்த இனவழிப்பு நடவடிக்கையினால் யாழ்மாவட்டமே அதிர்ந்து கொண்டிருந்த காலம். வலிகாமம் முழுவதும் ஒற்றைப் பாலத்தால் ஓரிரவுக்குள் இடம்பெயர்ந்து தென்மராச்சி, வடமராச்சி மற்றும் வன்னிப் பகுதிகளுக்கு நகர்ந்திருந்த காலம். அதனால் என் ஊரும் சன நெரிசலால் கொஞ்சம் அமைதியிழந்தே இருந்தது. அதை விட சிங்கள இராணுவத்தின் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களும் அடிக்கடி நடந்து ஊர் அமைதியின்றியே இருந்தது.

என் வீட்டுக்கு முன்னால் என் பெரியதாயின் வீடு இரண்டுக்கும் இடையில் எம் வீட்டையும் வீதியையும் இணைக்கும் ஒழுங்கை. எப்போதும் என் வீட்டு ஒழுங்கை இருபக்கமும் ஓங்கி வளர்ந்திருக்கும் பூவரசம் மரங்களின் நிழலில் குளிர்ந்தபடி இருக்கும். சிலிக்கன் கனிமம் நிறைந்த நாகர்கோவில் மற்றும் வல்லிபுரக்கோவில் கடற்கரையில் இருந்து எடுத்துவரப்பட்ட அழகான மணல் போடப்பட்டு எப்போதும் என் வீட்டு ஒழுங்கையும் முற்றமும் தூய்மையாக இருக்கும். என் முற்றத்தில் மல்லிகை பூத்து அந்த இடமே நறுமணத்தில் சுகந்தம் தரும். ஒருபுறம் பொன்னலரி, மறுபுறம் செம்பருத்தி நந்தியாவட்டை என்று என் வீட்டில் பூக்கள் பூத்தாலும் பூக்களுக்குப் பஞ்சமாகவே இருக்கும்.

என் தாத்தா தெய்வ பக்தி நிறைந்தவர். அதனால் பூக்களை கொய்து விடுவார். மல்லிகைப் பூக்களை அதிகமாக கடவுளுக்காக அவர் கொய்வதில்லை என்பதால் காலை மாலை நேரங்களில் என் வீட்டு முற்றத்தில் பூக்களில் இருந்து உதிர்ந்த இதழ்களை கூட்டிப் பெருக்குவதே பெரும்பாடாக இருக்கும்.

இரண்டு அறைகளையும் ஒரு உணவறையும் சமையலறை மற்றும் விராந்தையும் கொண்ட ஓட்டு வீடு. என் வீட்டின் வாசல் படிக்கட்டில் ஒரு சங்கு தாக்கப்பட்டிருக்கும். அச் சங்கு இறைவனின் குறியீடு என்ற நம்பிக்கையுடன் தினமும் அதற்கும் பூசை செய்வார் என் அம்மப்பா. பூ வைத்து, சாம்பிராணி கொழுத்தி, விளக்கேற்றி என அந்த சங்கு தினமும் வணங்கப்படும். அந்த இடத்தில் காலணிகளை வைக்கவோ அந்தப்பகுதிக்கு பெண்கள் செல்லவோ தடை விதிக்கப்பட்டிருக்கும். அவ்விடம் கோவில் ஒன்றின் வாசல் போலவே தினமும் கவனிக்கப்படும்.

என் வீட்டில் நான், அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மப்பா என்று என் வீட்டு உறவுகள் இவ்வளவும் தான். ஆனால் என் வீட்டில் எப்போதும் கலகலப்பாக சொந்தங்கள் நிறைந்திருக்கும். எப்போதும் ஒரு கிராமத்துக்கே உரிய சந்தோசமான வாழ்க்கையை என் வீட்டில் உணரலாம். சின்னச் சின்ன சண்டைகள் / பிரச்சனைகள் வரும். அதை எல்லாம் என் அம்மப்பாவின் அன்பு பெரும்பாலும் இல்லாமல் செய்துவிடும். கூடி இருந்து உண்பதும், வாரத்தில் ஒருமுறை என்றாலும் மீன் கூழ் சமைத்து சொந்தங்கள் கூடிக் குடித்து மகிழ்வதும் என் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள்.

நான் சகோதரங்களோடு பிறந்தவன் அல்ல. ஆனால் தனிமையில் வளர்ந்தவன் அல்ல. அக்கா, அண்ணா, தம்பி, என்று பல உறவுகள் என் வீட்டில் என்னுடன் எப்போதும் இருக்கும். அண்ணா என்றழைத்து உறவாட ஒரு தங்கை இல்லை என்பது ஏக்கமாக இருந்தாலும், அக்காக்களின் அரவணைப்பு அதை எல்லாம் மறக்க செய்யும். இப்படியான சந்தோசங்களை நான் இழக்க வேண்டி வந்த அந்த நாளை என்றும் இலகுவில் மறந்துவிட முடியாது.

அன்றைய நாள் எம் தாயகமே, தனக்காக இறுதி மணித்துளி வரை உணவருந்தாது தன்னுயிரைத் தியாகித்த அன்னை பூபதி அம்மாவின் நினைவுகளில் இருந்த நாட்கள். என் ஒழுங்கையும் கடந்த ஒரு மாதமாக மஞ்சள் சிகப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தல் கொட்டகையோடு அழகாக இருந்தது. தினமும் பூக்கள் கொய்து அன்னை பூபதியம்மாவின் திருவுருவப்படத்துக்கு விளக்கேற்றி நினைவுகளைச் சுமந்து கொண்டிருந்த 28 ஆவது நாள் என்று நினைக்கின்றேன்.

தமிழீழ காவல்துறை உறுப்பினராக இருந்த எங்களின் உறவு முறை அண்ணா ஒருத்தர் வீரச்சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்ததால் என் வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் வீரச்சாவு வீட்டுக்குச் சென்றிருந்தனர். நான் மட்டுமே வீட்டில் இருந்தேன். நான் எனது ஆரம்ப பள்ளிக் கல்வியை முடித்து இடைநிலைக் கல்வியைத் தொடர்வதற்காக நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் இணைந்து சில மாதங்களே ஆகி இருந்தன. ஆனாலும் எங்கள் பள்ளிகள் இராணுவத் தாக்குதல்களால் மூடப்பட்டிருந்தது. அதனால் விடுமுறையில் வீட்டில் இருந்த நான் ஒழுங்கைக்குள் விழுந்து கிடந்த பூவரசம் இலைகளை கூட்டியபடி இருந்தேன்.

அதிகாலை 7-8 மணி இருக்கும் என்று நம்புகிறேன். திடீர் என்று வானத்தில் பெரும் ஓசை. என்ன என்று அறிய முன்பே என் வீட்டைத் தாண்டியும் என் வீட்டுக்கு சற்றுத் தள்ளியும் மூன்று எறிகணைகள் சென்று வெடித்துச் சிதறின. 4 பேர் சாவடைந்தார்கள். சிலர் காயமடைந்திருந்தார்கள். அவை என்ன வகை எறிகணைகள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஆட்லறியாக இருக்கலாம் என்று நம்புகிறேன். நான் பிறந்ததில் இருந்து இதுவரை இவ்வாறு நெருக்கமான தாக்குதல்களை அனுபவித்ததில்லை. முதன் முதல் அந்த தாக்குதல் மிக நெருக்கமாக நடந்ததாலும், தனிமையில் இருந்த போது நடந்ததாலும் என்னுள் ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தியது. எப்படியாவது இத் தாக்குதல் வலையத்துக்குள் இருந்து எங்காவது ஓடிப் போய்விட வேண்டும் என்று மனம் ஏங்கத் தொடங்கியது.

அன்றைய இரவு முழுவதும் தூக்கமற்றே கழிந்தது. அப்பா போராளி என்பதால் தனது முகாமில் தங்கி விடுவார். வாரத்தில் ஒரு நாள் அல்லது இருவாரத்தில் ஒருநாள் தான் வீட்டுக்கு வருவார். ஆனால் இந்த காலங்களில் அரசியல் போராளிகளுக்கு அதிகமான மக்கள் பணி இருந்ததால், அப்பா வீட்டுக்கு வருவது குறைவு. எதாவது தேவை என்றால் மட்டுமே வீட்டுக்கு வருவார். அதுவும் வீட்டில் தங்குவது குறைவு வந்தவுடனே முகாமுக்குச் செல்வார். அதனால் அப்பாவை காண்பது அரிது..

எனக்கு எப்போதும் என் தந்தை ஒரு வார்த்தை கூறுவார். பயம் மனித வாழ்க்கையை சீரழித்து விடும் எப்போதும் கண்முன்னே நடப்பவற்றை கண்டு பயம் கொள்ளக் கூடாது எதிர்த்து நிற்கப் பழக வேண்டும் என்பார். ஆனால் என்னால் அந்த எறிகணைத் தாக்குதலும் அதனால் சாவடைந்த எங்கள் உறவுகளின் வெற்றுடலமும் அச்சிறு வயதில் பயத்தை உண்டு பண்ணியதை மறுக்க முடியாது நான் மட்டுமல்லாது என் உறவுகள் அனைவருமே எதிரியின் இத்தாக்குதலால் நிலைகுலைந்து போய்விட்டனர். நான் எப்போதும் அம்மாவுடன் நித்திரை கொள்வதில்லை. அம்மப்பாவை கட்டிப் பிடித்தபடி தான் படுப்பேன். அன்றும் அவ்வாறுதான் தூங்க முயல்கிறேன் என்னால் முடியவில்லை.

அன்று இரவு மோசமான தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. அதன் சத்தம் என் செவிகளில் வீழும் போதெல்லாம் காலையில் வெடித்த எறிகணைதான் நினைவில் வந்தது. எங்கே எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது நித்திரை தொலைந்து பயம் நிலைத்துக் கிடந்தது. எப்போதும் திறந்தபடி கிடக்கும் என் வாசல் கதவை எட்டிப் பார்க்கிறேன். நிலவின் மங்கல் ஒளியில் என் வீட்டு முற்றம் மினுமினுத்துக் கொண்டிருந்தது. அருகில் படர்ந்து கிடந்த வேப்பம் மரத்துக்கு கீழ் உருவாக்கப்பட்டிருந்த மூடுபங்கர் கூட ஏதோ பேய் பங்களா போல எனக்கு பயத்தை தந்தது. அதுநாள் வரைக்கும் தூரத்தே நடந்த தாக்குதல்கள் என் வீட்டுக்கு அருகில் நடந்ததால் பதுங்கு குழி கூட பயத்தை தந்தது. நான் முற்றத்தையே பார்த்தபடி கிடக்கிறேன். வெய்யில் காலம் என்பதால் கால் சட்டிடை மட்டுமே போட்டிருந்தேன். பயத்திலா அல்லது வெப்பத்திலா என்று தெரியவில்லை என் உடம்பு வியர்த்தபடியே இருந்தது. சந்தேகத்தில் அம்மப்பாவை தொட்டுப்பார்க்கிறேன் அவருக்கு அப்படி வியர்வை இருக்கவில்லை. அதனால் நான் பயத்தில் தான் வியர்வை வருகிறது என்பதை புரிந்து கொள்ள நாழிகை ஆகவில்லை. பயத்தில் நடுங்கிய படி முற்றத்தையே பார்த்துக் கொண்டு கிடந்த எனக்கு திடீர் என்று அந்த ஓசை கேட்டது

என் வீட்டு இரும்புப் படலையடியில் ஒரு துவிச்சக்கர வண்டி வந்து நிற்பதைப் போல சத்தம். தொடர்ந்து

“அக்கா …. அக்கா….”

என்று அழைக்கும் குரல். பழகிய குரல் என்றாலும் இனங்காண முடியவில்லை. அக்குரல் யாரோ ஒருவர் என் வீட்டுக்கு வந்திருப்பதை உணர்த்தியது. நான் அம்மப்பாவை தட்டி எழுப்புகிறேன். அவர் அருகில் இருந்த மின்சூழை எடுத்தபடி ஓம் வாறன் யாரது… என்று கேட்டுக்கொண்டு செல்கிறார். அங்கே என் தந்தையுடன் பணிபுரியும் போராளி ஒருவர் நிற்பதை பார்த்து,

உள்ள வா சங்கர் என்ன இந்த நேரத்தில வந்திருக்கிறாய்?

இல்ல அப்பா…. செல்லையா அண்ண உடனே அக்காவையும் தம்பியையும் கூட்டி வரச்சொன்னார். உங்களை உடனே கிளாளிப் பக்கம் போக சொன்னார். மாஸ்டரும் அக்காவும் தம்பியும் அங்க வந்து சந்திப்பினம் என்று சொல்லி விடச் சொன்னவர் அது தான் கூட்டீட்டு போறதுக்காக வந்தனான்.

வந்த காரணத்தை அந்தப் போராளி கூறிய போது, நாங்கள் வன்னிக்கு போக போகிறோம் என்ற சந்தோசம் எனக்குள் எழுந்தது. இந்த எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் இருந்து விடுபட்டு தூரப் போகிறோம் என்ற உணர்வு. பருந்தைக் கண்டு தாயின் சிறகுகளுக்குள் மறையும் குஞ்சுகளைப் போல வன்னி மண்ணுக்குள் சென்றுவிட்டால் நாங்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று உணர்வு.

பெரியம்மாவின் குடும்பமும் தொண்டைமானாற்றில் இருந்து இடம்பெயர்ந்து என் வீட்டில் வசித்து வந்த ரதனின் குடும்பமும் என் வீட்டில் கூடின. என்ன செய்வது என்று தெரியாது அம்மா கலங்கத் தொடங்கினா. உறவுகளை விட்டுவிட்டு நாம் மட்டும் வன்னிக்குச் செல்ல முடியாது. அவர்கள் எங்களின் உயிரோடு இணைந்திருப்பவர்கள். அவர்களை எப்படி விட்டுச் செல்வது என்ற அதிர்ச்சி அம்மாவுக்கு. அதுவும் வெறி பிடித்து வரும் இனவழிப்பு சிங்களப் படைகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் எப்படி விட்டுச் செல்வது? எனக்கு மனதில் உடனே வன்னிக்குச் சென்று விட வேண்டும் என்று ஆசை எழுந்தாலும் அக்காக்களை, தம்பிகளை குட்டி மருமகனை எல்லாம் விட்டுச் செல்ல மனம் வரவில்லை. ஆனாலும் அப்பாவின் பொறுப்பாளராக இருந்த செல்லையா அண்ண சொன்னதை மீற முடியாது விம்மிக் கொண்டிருந்தோம்.

குட்டி மருமகனை தூக்கி முத்தமிட்டுவிட்டு முடிந்தளவு உடுப்புகள் மற்றும் சில ஆவணங்களை மட்டும் தூக்கிக் கொண்டு வெளியில் வருகிறோம். என் வீட்டைத் திரும்பிப் பார்க்கிறேன். லாம்பின் ஒளியில் வாசல் நன்றாகத் தெரிகிறது. எல்லோரும் ஏக்கம் நிறைந்து கையசைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய கரங்களும் அசைந்தனவே தவிர மனம் நாம் இருவரும் தனிக்கப் போகின்றோம் என்ற எண்ணத்தில் விழிகள் கரைந்து கொண்டிருந்தன. என் அம்மப்பா ஓடி வருகிறார், என்னைத் தூக்கி முத்தமிடுகிறார்.

கவனமா படி செல்லம், அம்மா சொல்லுறத கேட்டு நடக்கவேணும் செல்லம் ….

என்று பல அறிவுரைகள் கூறுகிறார். என் குட்டி அக்காவும் என்னை விட்டுப் பிரிய மாட்டாது அழுது தீர்க்கிறாள். எல்லோரையும் இறுக்கமாக கட்டியணைத்து முத்தமிட்ட நான் என் வீட்டு வாசல்த் தூணை, முற்றத்து மல்லிகையை, அருகில் கிடந்த வேப்பம் மரத்தை, அதற்கு கீழ் இருந்த பங்கரை, வீட்டுக் கதவை, என் துவிச்சக்கர வண்டியை என்று அத்தனையையும் முத்தமிட்டபடி அங்கிருந்த உறவுகளிடமும் என் வீட்டிடமும் இருந்து விடைபெறுகிறோம்.

என் கைகளைப் பற்றியிருந்த அக்காவின் கை கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது. என் விரல்கள் அவளின் விரல்களின் தொடுகையை இழக்கிறது. திரும்பிப் பார்த்தபடி நடக்க முயன்ற எனக்கு அவர்களின் உருவங்கள் மறையத் தொடங்கின. என் பிறந்த வீட்டு மண் என் விழிகளில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்க வன்னிமண் என்ற பிரகாசத்தைக் காண அந்த நடுச்சாம இருட்டுக்குள் கரைந்து போகிறோம்.

——————————————————————————————————————–

இன்றைய நாள் நான் என் பிறந்த மண்ணை, பிறந்த வீடடை விட்டுப் பிரிந்து வன்னி மண்ணுக்கு இடம்பெயர்ந்த கொடுமையான நாளின் 24 நாலாவது ஆண்டு. இந்த வலி எப்போதும் தீராது. ஒரு தடவை என்றாலும் என் வீடடைப் பார்த்து அங்கே தூங்கி பிறந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆசை கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவனாக இருந்தே இந்த கதையை எழுதி இருக்கிறேன். இது என் உண்மைக்கு கதை. இதைப்போலவே எம் மக்களுக்குள் புதைந்து போய்க் கிடைக்கும் ஆயிரம் ஆயிரம் கதைகள் பதிவுகளாக்கப் பட வேண்டும்.

இதை பார்த்து பலர் கேட்கலாம் ஏன் எல்லாம் முடிந்து விட்டது தானே இப்ப உன் ஊருக்கு வந்து உன் வீட்டில் வாழ்ந்திருக்கலாம் என்று. என் வீட்டில் சுதந்திரமாக வாழ ஆசைப்பட்டேனே தவிர அடிமையாக அல்ல. அதனால் தான் என்னால் இன்னும் அங்கே போக முடியவில்லை.
நன்றி
புலர்வுக்காக எழுதியது : இ. இ. கவிமகன்.
நாள் : 19.04.2020
ஒப்பு நோக்கியது : மஞ்சு மோகன்