“இப்ப என்னுடைய பிள்ளையள் இரண்டும் இருந்திருந்தால் என்னோட வறுமை எப்பவோ போயிருக்குமப்பு அதுகள் பெரிய உத்தியோகத்தில இருந்திருக்குங்கள்.

அழுதழுது குரல் அடைத்த நிலையிலும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார் அந்தத் தந்தை. தேவிபுரம் என்ற சிறிய கிராமத்தில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஒரு மூத்தவரோடு கதைக்க வேண்டும் என்ற பெரும் கடமை ஒன்று என்னை உந்தித் தள்ளியது. அதற்கு என் நண்பன் ஒருவனும் உதவிவிட அவருடன் தொலைபேசியூடாக தொடர்ந்து பேசுகிறேன்.

என்னுடைய பிள்ளையள் இரண்டும் நல்ல கெட்டிக்காறியள் தம்பி. ஒருத்தி 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாள். மற்றவளும் ஒரு புள்ளி வித்தியாசத்தில தான் தவற விட்டாள். அப்பிடி நல்லா படிப்பாளவ எங்கட குடும்ப சூழல் காரணமாக ஒரு பிள்ளைய என் அக்காதான் வளர்த்தவா. மற்றவா தான் என்னோட இருந்தவா. என்னை கடைசியாக பார்த்த அன்றைக்கு என்னிடம்,

“ அப்பா எங்களுக்கு பள்ளிக்கூடத்தால முதலுதவி பயிற்சி தரப் போகினம் நாங்களும் போறம் “ என்று சொல்லீட்டு போனதுகள் திரும்பி வரவே இல்லை தம்பி.

அவர் மீண்டும் விம்முகிறார். அவரை ஆறுதல்படுத்த முனைகிறோம் ஆனால் முடியவில்லை.

“அப்பா அழாதீங்கோ… நாங்கள் உங்களை குழப்பீட்டம் அப்பா பிள்ளையள நினைவு படுத்தி அழ வைக்கிறம் மன்னிச்சு கொள்ளுங்கோ அப்பா…”

என்ற போது விம்மலுடன் தெளிவாக கூறுகிறார்.

“தம்பி அதுகள் போய் பத்து பன்னிரண்டு வருசமாயிட்டுது. ஆனால் அங்க பாருங்கோ சுவரில நின்று சிரிச்சுக் கொண்டு நிக்குதுகள் இரண்டும். இதுகள எப்பிடியப்பு மறப்பன்? ஒவ்வொரு நாளும் அவையளின்ட படத்தில தான் முழிப்பன். அவைய பார்த்திட்டு போனால் தான் மனம் நிம்மதியா இருக்கும். “

அவர் கொஞ்சம் மௌனித்துப் போகிறார். அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை மூச்சு வாங்கும் அவரிடம் எதைக் கேட்பது என்ற குழப்பம் என்னுள் எழுகிறது.

நிருபா மற்றும் நிருஷா என்ற இரட்டைப் பிள்ளைகளின் தந்தையான கனகலிங்கம் என்ற இந்த தந்தை இப்போது ஒற்றைக் கண் பார்வை பறிபோன நிலையிலும், பாம்பு கடித்து ஒன்றைக் கால் இயங்குவதில் சிரமமாக உள்ள நிலையிலும் தனது ஏழ்மையான வாழ்வை நடத்துவதற்காக கூலி வேலைகளுக்கு செல்வதாக கூறுகிறார்.

பல ஏக்கங்கள், ஆசைகள் என தனது பிள்ளைகளை கல்வியில் முன்னேற்றி விடத் துடித்த சாதாரண தந்தையான அவருக்கு 2006 ஆம் ஆண்டின் ஆவணித் திங்கள் 14 ஆம் நாள் அதிகாலை பெரும் இடி ஒன்று தலையில் வந்து விழுந்தது.

தமிழீழம் மீது சிங்கள பேரினவாதத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவழிப்பு நடவடிக்கையை தன்நிறைவோடு எதிர்கொள்வதற்காக வன்னி எங்கும் மக்கள் தம்மை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த சூழலில் தான், அந்தக் கொடுமையும் செஞ்சோலை வளாகத்தில் நடந்து முடிந்தது. சமாதானம் என ஒற்றைச் சொல்லில் நாங்கள் மகிழ்ந்திருந்த அந்த நேரத்தில் சமாதான முறிவைச் சிங்கள தேசம் ஏற்படுத்தி எம் தாயகம் நோக்கிய பாரிய சண்டையை ஆரம்பித்தது. தென் தமிழீழத்தில் ஏற்கனவே வெஇடத்துக் கொண்டிருந்த சறு சண்டைகள் வட தமிழீழத்தின் வடபோர் அரங்கில் பெரும் சண்டையாக வெடித்தது.

அப்போது தான் இனவழிப்பின் உச்சம் ஒன்றை சிங்கள அரசு செஞ்சோலை வளாகத்தில் செய்து முடித்த உயர்தர வகுப்பு படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவிகளை சாகடித்தது . ஒரே வயதுப் பிரிவை சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட ஒரே ஆற்றல் மிக்கவர்கள். பல ஆயிரம் வண்ணக் கனவுகளோடு வாழ்ந்தவர்கள். எல்லோரும் ஒன்றாக கூடி நின்றார்கள்.

அதற்குள் தான் இந்த இரட்டைப் பிள்ளைகளும் கனவுகளைச் சுமந்து கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகள் 500 பேருடன் இவர்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர்.

கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்த இருவரும் குடும்ப சூழ்நிலை காரணமாக பிரிந்திருந்து கல்வி கற்றாலும், செஞ்சோலை வளாகத்திற்குள் சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் தற்காப்பு போன்ற தலமைத்துவப் பண்புகளைக் கட்டியெழுப்பும் பயிற்சிக்காக கூடி வந்த போது இணைந்து கொண்டார்கள். அங்கே சகோதரிகள் இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள்.

செஞ்சோலை வளாகம் மீது மிக் மற்றும் கிபிர் விமானங்கள் தாக்குதல் செய்த போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

அன்று அதிகாலை 7 மணி இருக்கும் நான் வீட்டில தான் நின்றனான். திடீர் என்று எங்களுக்கு மேலால கிபிர் வந்து அடிச்சான். பள்ளிக்கூடப் பிள்ளையளுக்கு இப்பிடி அடிப்பான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதனால நான் என்ட பிள்ளையள பற்றி நினைக்கவில்லை. எங்கையோ முகாமுக்குத் தான் அடிச்சவன் என்று நினைச்சன். ஆனால் படிக்கிற சின்னப் பிள்ளையளுக்கு அடிச்சு சாகடிச்சிட்டுது சிங்கள அரசு. என்னைப் பொறுத்தவரை பள்ளிக்கூடப் பிள்ளைகள் என்று தெரிந்தும் திட்டமிட்டு சிங்கள அரசு செய்த தாக்குதல் இது. என்று தான் நான் நம்பினன்.

கொஞ்ச நேரத்தில் வீதியால போன ஒருத்தர் செஞ்சோலைக்கு அடிச்சதாகவும், நிறைய பிள்ளையள் செத்திட்டுதுகள் என கூறினார். அதன் பிறகு தான் நான் பிள்ளைகளை பற்றி யோசிச்சன். அங்க ஓடிப் போனம். அங்க என்னுடைய பிள்ளைகள் இல்லை. அதனால புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு போனம். பொன்னம்பலத்துக்கு போனம் எங்கையும் பிள்ளையள் இரண்டையும் காணவில்லை. எனக்கு மனம் தடுமாறத் தொடங்கி விட்டது. பிள்ளையளுக்கு எதோ நடந்து விட்டது என்று தோன்றிச்சு. கன பிள்ளையள் செத்து போனதால இதுகளும் உடல் சிதறி போச்சுதுகளோ என்று ஒரு கணம் யோசிச்சன். ஆனால் அடி மனசில பிள்ளையள் தப்பி இருக்குங்கள் என்று தோன்றிச்சுது. ஆனால் அதுகள் இரண்டும் படமாக போச்சுதுகள்.

என்ட பிள்ளையள் பிறந்ததும் ஒன்றாக இறந்ததும் ஒன்றாக வாழ வேண்டிய வயசில அநியாயமாக கொன்று குவிச்சாங்கள் சிங்களப்படைகள். என மீண்டும் அழத் தொடங்கிய அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அழுது முடியும் வரை காத்திருந்த நான் பிள்ளைகள் சம்பவ இடத்திலையே சாவடைந்தார்களா? என வினவினேன்

இல்லையப்பு உயிரோட இருந்ததுகள். பிள்ளையோட கூட படிச்ச பிள்ளை ஒன்றும் காயப்பட்டது. அவளுக்கு சின்ன காயங்கள் தான் அந்த பிள்ளை தான் தன் மடியில கிடத்திக் கொண்டு கிளிநொச்சி மருத்துவமனைக்கு போனதாம். போகும் போது

“ நான் சாக போறன் போல கிடக்கு, என்னோட உயிர் கொஞ்சம் கொஞ்சமா போறது தெரியுது “

என்று நிருஷா சொல்லி இருக்கு.

“அவளுக்கு நெஞ்சில பெரிய காயம் ஆனாலும் தப்பிவிடுவாள் “

என்று தான் நினைத்ததாக அந்தப் பிள்ளை சொன்னது. ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. சிங்கள அரசு திட்டமிட்டு என் இரண்டு பிள்ளைகளையும் பறித்தெடுத்து விட்டது.

அவர் மீண்டும் கண் கலங்குகிறார்.

இந்த இடத்தில் எனக்கு மருத்துவப் பிரிவில் இருந்த போராளி நளன் அவர்கள் முன்பொருநாள் கூறியது நினைவு வந்தது.

இன்று தான் கவி நான் அதிகமான கோவத்தையும், எதிரி மீதான அதிகமான வெறுப்பையும் உணர்ந்து கொண்டேன். நீண்ட நாட்கள் மருத்துவப் பணியில் நான் இல்லை என்றாலும் சம்பவம் நடந்த உடனேயே நாம் ஒன்றிணைக்கப்பட்டு இவர்களுக்கான மருத்துவப் பணியில் ஈடுபடுத்தப்பட்டோம். எம்மால் எம்மை உணர முடியவில்லை. ஒரே வயது பிள்ளைகள் மொத்தமாக எதிரியால் காயப்பட்டும் சாகடிக்கப்பட்டும் கொண்டுவரப்பட்ட போது எங்கள் கோவ உணர்வுகளை அடக்கிக் கொண்டு இவர்களைக் காப்பாற்றினோம். ஆனாலும் பல பிள்ளைகளை எம்மால் காப்பாற்ற முடியவில்லை.

உண்மையாக இந்த மருத்துவப் போராளியாக இருந்து பின் வேறு பணிகளில் இருந்த இப்போராளியின் மன நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை யாரும் உணர முடியாது.

தம்பி சுவரில இருக்கிற இரண்டு பேரையும் பாருங்கோ இதுகள செத்தது என்று யாரும் சொல்லுவினமே? “

அவர் கேட்ட போது நளனின் நினைவுகளில் இருந்து மீள்கிறேன்.

அவரின் குரல் எமக்கு பெரும் தாக்கத்தை மனதில் உருவாக்கியது. நண்பனால் தொடர்ந்து அந்த அழுகுரலை கேட்க முடியவில்லை. அவருடனான நினைவு பகிர்வை முடித்துக் கொள்ள வேண்டினான். செஞ்சோலை வளாகத்தில் தமது உயிர்களை அநியாயமாக பறி கொடுத்த அத்தனை பிள்ளைகளையும் நினைவில் சுமந்தபடி நாங்கள் அந்த தந்தையிடமிருந்து விடைபெற்றுக் கொண்டோம்.

நிருபா, நிருஷா, இந்திரா, …. எனத் தொடர்ந்த அத்தனை (54) தங்கைகளின் நினைவுகளும் நெஞ்சில் கனதியாக இருந்தாலும் நடத்தி முடிக்கப் பட்ட என்பதை விட இன்றும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் இனவழிப்புக்களை இவர்கள் நினைவு சுமந்து வெளிக் கொண்டுவரும் பணிக்காக அவர்களின் நினைவுகளின் மீது உறுதி எடுத்துக் கொண்டு நகர்கிறேன்…

இ.இ. கவிமகன்
14.08.2019

புகைப்படம் : தேசக்காற்று இணையம்.