விடுதலைப்புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும் போல மருத்துவப்பிரிவும் இறுதி நாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஒரு அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்து கொண்ட பிரிவு இது. அவ்வாறான பெரும் பணியைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டுமல்லாது, தமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க் கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூட தன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப் போராளிகள். அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் இறுதியான மருத்துவமனையை, அதாவது போராளிகளால் நிர்வகிக்கப்பட்ட மருத்துவமனையை பொறுப்பாக இருந்து களப்பணியாற்றிய மருத்துவப் போராளி அலன் அவர்களை இன்று சந்திக்கப் போகிறோம்.

தமிழீழ மருத்துவத் துறையில் உங்களின் போராளிகள் மற்றும் மக்களுக்கான மருத்துவப் பணிகள் எப்படி இருந்தன?

பெரும்பாலான பணி எனக்கு பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் தான் இருந்தது. பெரும் காலங்கள் அங்கே சத்திரசிகிச்சை கூடங்களிலையே மக்களுக்கான சிகிச்சைகளை வழங்கி வந்தேன். அத்தோடு கடற்புலிகளின் படையணி மருத்துவராகவும் கடமையாற்றினேன். அவ்வாறான காலங்களில் படையணி மருத்துவமனைகளான நெய்தல் மற்றும் முல்லை ஆகிய படையக மருத்துவமனைகள் இயங்கிய போது அம் மருத்துவமனைகளிலும் என் பணி விரிந்திருந்தது.

Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை பற்றி கூறுங்கள்.

உண்மையில் எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெரும்பாலும் மருத்துவ வளங்கள் குறைவு. அதாவது மருத்துவர்களோ அல்லது மருத்துவப் பொருட்களோ எமக்கு தாராளமாக கிடைப்பதில்லை அதனால் மக்களுக்கான மருத்துவப் பணிகளை சீர்படுத்துவதற்காக எமது தலமையின் ஆலோசனையின் பெயரில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மருத்துவமனைகளை 1996 ஆம் ஆண்டு தொடங்கினோம். அங்கே வாழ்ந்து வந்த அரச மருத்துவர்களின் ஆலோசனைகளும், உதவிகளும் பெறப்பட்டு போராளி மருத்துவர்களை வைத்து நிர்வகிக்கத் தொடங்கினோம்.

இம் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகி ஆற்றுகைப்படுத்தல் முறைமை என்பது உச்சமாக இருக்கும். மருந்தை விட ஒருவரின் மனதில் நீ வருத்தக்காறன் இல்லை என்ற நினைப்பை ஊட்டினாலே பெரும்பாலான நோய்கள் இல்லாது போய்விடும். இது பண்டையகாலங்களில் இருந்து வந்த மரபு. அதைப் போல அங்கே பணியாற்றிய அரச மருத்துவர்களாக இருந்தாலும் சரி போராளிகளாக இருந்தலும் சரி மக்களை நெருங்கி நின்றார்கள்.

Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை அரச மருத்துவமனைகளை விட சிறப்பாக இயங்கியது. அது எவ்வாறு சாத்தியமானது?

இது தேசியத் தலைவரின் உன்னத நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் இல்லாத நவீன வசதிகள் அங்கே இருந்தன. சத்திரசிகிச்சைக் கூடம் நவீனமாக உருவாக்கப்பட்டது. இலவசமாக மக்களுக்கான மருத்துவத்தை இதனூடாக கொடுக்க முடியவில்லை என்றாலும் தெற்கோடு ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த செலவுடனான மருத்துவசிகிச்சைகளை மக்கள் பெறக் கூடியதாக இருந்தது.

அரச மருத்துவர்கள் போராளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?

இல்லை என்றே நான் கூறுவேன். அவர்களும், நாங்களும் இணைந்து தான் அதிகமான காலங்களில் பணியாற்றி இருக்கின்றோம். அங்கே பணியாற்றிய பல மருத்துவர்களின் மிகப் பெரும் பங்கு எமது போராளி மருத்துவர்களை உருவாக்குவதில் இருந்தது. அதே நேரம் அவர்கள் மக்களுக்கான மருத்துவப் பணியிலோ, போராளிகளின் மருத்துவப்பணியிலோ தயக்கமின்றி ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களின் நிர்வாகத்துக்குள் நாமோ, எமது நிர்வாகத்துக்குள் அவர்களோ கட்டமைப்பு ரீதியாக பங்கெடுத்தது இல்லை. மக்கள் பணிக்காக நாம் இணைந்திருந்தோம்

மருத்துவத் தடை, பொருளாதாரத் தடை என்பன இறுக்கமாக இருந்த காலங்களில் மருத்துவமனையை எவ்வாறு இயக்கினீர்கள்?

இது மக்களுக்காக எம் மருத்துவப் பிரிவால் இயக்கப்பட்ட மருத்துவமனை. அதனால் எமது படையக மருத்துவமனைகளுக்கு மருத்துவப் பொருட்கள் கடல் மார்க்கமாக கொண்டு வருவதைப் போலவே அப் பிரச்சனைகளை நாம் கையாண்டோம். அதற்காக எமது பிரிவுக்குள் மருத்துவக் களஞ்சியம் மற்றும் கொள்வனவுப் பகுதி என்பன பிரத்தியேகமாக இயங்கின.

Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை தனியார் மருத்துவமனையாக இயங்கிதால் (இலவசமாக இயங்காத நிலையில் )அனைத்து வகையான மக்களும் சிகிச்சையை பெறுவதற்கு சந்தர்ப்பம் இல்லை அதை எவ்வாறு கையாண்டீர்கள்?

எமது விடுதலைப் போராட்டம் மக்களுக்கான சுதந்திரத்துக்கானது. இதில் சிகிச்சைக்காக வரும் மக்களிடம் நாம் பணத்தை மிக முக்கியமாக எதிர்பார்க்கவில்லை. மிக அவசரமான அல்லது முக்கியமாக செய்ய வேண்டிய சிகிச்சைகளை நாம் இலவசமாகவே செய்தோம். அதே நேரம் அனைத்து மக்களும் சிகிச்சை பெறக் கூடியதாக தியாக தீபம் திலீபன் இலவச மருத்துவமனையை உருவாக்கி அதனூடாக அனைத்துவகை மக்களும் சிகிச்சை பெறக் கூடிய சூழலை உருவாக்கினோம்.

இறுதிச் சண்டை நடந்து கொண்டிருந்த போது Dr. பொன்னம்பலம் மருத்துவமனை மீது இலங்கை அரசின் வான்படை தாக்குதலை மேற் கொண்டது. அப்போது அங்கே என்ன நடந்தது?

புதுக்குடியிருப்பு Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையை பொறுத்தவரை சத்திரசிகிச்சை கூடம், விடுதிகள், வெளிநோயாளர் சிகிச்சை பகுதி , நிர்வாகப் பகுதி என பல பகுதிகளை கொண்டிருந்தது. அதில் இறுதி நேரம் எமது மருத்துவமனைக்கு தாக்குதல் நடக்கலாம் என்று எமது “வான் தாக்குதல் கண்காணிப்பு பிரிவினால் “ அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக சத்திரசிகிச்சை கூடத்தை உடனடியாக நாம் இரணைப்பாலைப் பகுதியில், சத்திரசிகிச்சைக் கூடத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து அங்கிருந்த இரு வீடுகளுக்கு மாற்றினோம்.

அதே நேரம், மல்லாவி, அக்கராயன்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் நெட்டாங்கண்டல் போன்ற மருத்துவமனைகளை ஒன்றிணைத்து மாத்தளன் பாடசாலையில் ஒரு மருத்துவமனையையும் இயக்கினோம். அங்கே தங்கி இருந்த நோயாளர்களை இடம் மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அந்த நிலையில் தான் எமது மருத்துவமனை மீது சிங்கள வான்படை தாக்குதலை செய்தது. அதில் 60 க்கு மேல் மக்கள் சாவடைந்தார்கள். பலர் காயமடைந்தார்கள்.

இத்தாக்குதல் திட்டமிட்டு Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனைக்கு மட்டுமா அல்லது அரச மருத்துவமனைகளுக்கும் நடாத்தப்பட்டதா?

மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடாத்துவது சிங்களப்படைகளுக்கு ஒன்றும் புதிய விடயம் அல்ல. வழமையாகவே சிங்கள தேசம் செய்கின்ற விடயம் தான். அதுவும் மருத்துவமனைகள் என்று அடையாளமிடப்பட்டிருந்த போதும் ( சிகப்பு நிற + குறியீடு) எந்த மனச்சாட்சியும் இன்றி நோயாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது சிங்களப்படைகள்.

அத் தாக்குதல்களில் மருத்துவர்கள், நோயாளர்கள் அல்லது பணியாளர்கள் சாவடைந்திருக்கிறார்களா?

ஓம், பல தடவைகள் நடந்திருக்கின்றது. இறுதிச் சண்டையில், கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை நாம் எடுத்துக் கொண்டால், கிளிநொச்சி மாவட்டமருத்துவமனை தொடக்கம் தர்மபுரம், புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, வள்ளிபுனம் எனத் தொடர்ந்து இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை தாக்குதலை நடாத்தியது இனவாதப்படை. இவ்வாறான தாக்குதல்களில் பல மருத்துவர்கள் சாவடைந்திருக்கிறார்கள். அதிலும் பல மருத்துவ போராளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்த போது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.

குறிப்பாக மேஜர் அல்லி, செவ்வானம், இறையொளி என்று எமது போராளி மருத்துவர்கள் இறுதிச் சண்டை நேரம் மக்களுக்கான மருத்துவப் பணியில் அதுவும் சத்திரசிகிச்சைக் கூடத்தில் சத்திரசிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது வீரச்சாவடைந்தார்கள்.

இவ்வாறான மக்கள் பணியில் நின்ற போராளி மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை சிங்கள தேசம் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடாத்தியதாக அறிவித்திருந்தது. இது உண்மையா?

ஓம், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் முல்லைத்தீவு மாவட்ட , கிளிநொச்சி மாவட்ட, மல்லாவி ஆதார வைத்தியசாலை ஆகியவை இயங்கிக் கொண்டிருந்த போது இராணுவம் புதுக்குடியிருப்புப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது மருத்துவமனை வளாகத்துக்குள் திட்டமிட்டு சிங்களப் படைகள் தாக்குதலை நடாத்தின. அந்த நிலையில் பல நோயாளர்கள் இறந்து போனார்கள்.

நான் அப்போது இரணைப்பாலை மருத்துவமனையில் பணியில் நின்றேன். எனக்கு தகவல் ஒன்று வந்தது. உடனடியாக மருத்துவமனையை பின் நகர்த்துமாறு பணிக்கப்பட்டதனால் அங்கே பொறுப்பாக நின்றமருத்துவ அதிகாரிகள் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து பின் நகர்ந்திருந்தனர். அங்கிருந்து வெளியேறும் போது பல மருந்துகளைத் தவற விட்டுள்ளனர் என்று அத்தகவல் தெரிவித்தது. அதனால் அவற்றை எடுத்து வருவதற்காக நான் இன்னும் ஒரு தம்பியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றிருந்தேன்.

அப்போது அங்கே சிறுவர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் இன்றி 20 க்கும் மேலான மக்கள் இறந்து போயிருந்தார்கள். அவர்களைக் கடந்தே நான் மருந்துக் களஞ்சியம், மருத்துவர் விடுதி என அனைத்து இடங்களையும் அலசி அம் மருந்துகளை எடுத்து வந்தேன். ஆனால் சிங்கள வல்லாதிக்கத்தின் ஊடகவியலாளரான சமன்குமார ராமவிக்ரம, அடுத்த நாள் அரச செய்தி ஊடகமான ரூபவாகினியில் விடுதலைப்புலிகள் தங்கி நின்ற மருத்துவமனை வளாகம் மீது நடந்த தாக்குதலில் 12 விடுதலைப்புலிகள் பலியாகினர் என்று அறிவித்தார்.

இந்த இடத்தில் ஒன்றை நான் உறுதியாக கூற முடியும். எம் போராளிகள் இறுதி நேரத்தில் கூட வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை கைவிட்டு வருவதை விரும்புவதில்லை. அதே நேரம் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிங்களப்படை தாக்குதல் நடாத்திய போது எமது படையணிகள் தங்களது நிலையை புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு வீதிக்கு அருகில் அமைத்திருந்தார்கள். இந்த நிலையில் எம் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தால் அவர்களது வித்துடலை கைவிட்டு வர யாரும் நினைக்க மாட்டார்கள். 12 வித்துடல்களையும் கைவிட்டு வருமளவுக்கு போராளிகள் என்றும் இல்லை. அதை விட ரூபவாகினி காட்டியதைப் போல அங்கே எந்த துப்பாக்கிகளும் இருக்கவில்லை. தளபாடங்கள் மட்டுமே உடைந்த நிலையில் சிதைந்து கிடந்தது.

அதை விட இத் தாக்குதலில் மக்கள் தான் சாவடைந்தார்கள் என்பதற்கு நான் ஒரு சாட்சி.

புதிதாக மருத்துவமனைகள் அமைக்கப்படும் போது புவியியல் நிலை தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்துவதில்லையா?

எங்கெல்லாம் மக்களுக்கான மருத்துவமனைகளை நிறுவுகிறோமோ அந்த இடத்தின் புவியியல் நிலையை (GPS – Global Positioning System ) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC ) ஊடாக

கொடுப்போம். அதை விட கூரைகளில் சிகப்பு நிற குறியீட்டை வரைந்திருப்போம். இவற்றை வைத்துக் கொண்டே திட்டமிட்டுத் தாக்குதல்களை மேற் கொண்டார்கள் சிங்களப்படைகள். என்னைப் பொறுத்தவரை நாம் அமைவிடத்தை அடையாளப் படுத்தியதன் பின்னரே அதிகமாக தாக்குதலை நடாத்தினார்கள்.

நான் இரணைப்பாலையில் என் மருத்துவமனையை நிறுவி ஒரு வாரமாக மக்களுக்கான சிகிச்சையை வழங்கி வந்த போது அங்கே இருந்த தற்காலிக கொட்டகைகளில் நோயாளர்களை படுக்க வைத்திருந்தேன். அந்த ஒரு வாரமும் எந்தத் தாக்குதல்களும் நடைபெறவில்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து மருத்துவமனையின் நிலையை அறிவித்து 3 ஆவது நாள் என்பொறுப்பில் இருந்த அம் மருத்துவமனைக்கும் தாக்குதல் நடாத்தப்பட்டது. உண்மையில் அதன் அமைவிடத்தைக் கொடுத்தது மட்டும் தான் இத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கும்.

அது மட்டுமல்ல மாத்தளனில் இருந்த மருத்துவமனைக்கு நேரடியாக உந்துகணையால் (RPG ) தாக்குதலை நடாத்தியது. இவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்ட பின்பே மருத்துவமனைகள் அதிகமாக தாக்கப்பட்டன. அதுவும் சிங்கள அரசினால் உயர் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் அதிகமாக நடந்தது. இது இறுதி முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. 

உயர் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட போது மக்களின் நிலை?

இலங்கை அரசு உயர் பாதுகாப்பு வலயம் 1,2,3,4 என படிப்படியாக குறிப்பிட்ட பிரதேசங்களை அறிவிக்கிறது. அதனால் அப் பிரதேசங்களை நோக்கி மக்கள் நகர்ந்து சென்றார்கள். அதற்குள் தாக்குதல் நடக்காது என்று நம்பிச் சென்ற மக்கள் மீது சரமாரியான தாக்குதலை செய்து மக்களை கொன்று குவித்தார்கள் சிங்களப்படைகள். ஒவ்வொரு பாதுகாப்பு வலயங்களும் முழுமையாக தாக்கி அழிக்கப்பட்டது.

குடும்பம் குடும்பமாக மக்கள் செத்துக் கொண்டிருந்த கொடுமையை அரங்கேற்றி இருந்தது சிங்கள அரசு.

உயர்பாதுகாப்பு வலயம் 1 என்று அறிவிக்கப்பட்ட உடையார்கட்டு பிரதேசத்தை இலக்கு வைத்து பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த மறுநாளே தாக்குதலை செய்தார்கள். அப்போது உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் மல்லாவி மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. அம் மருத்துவமனையை குறி வைத்து பெரும் தாக்குதல் ஒன்றை ஒருங்கிணைத்தது சிங்களப்படைகள். உடையார்கட்டுச் சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி செல்லும் வீதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் 104 ( சரியான தொகை நினைவில்லை) மக்களை கொன்று குவித்தது. பாதுகாப்பு வலயத்துக்குள் பாதுகாப்புத் தேடி போன மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முயன்றார்கள். அப்படியாக வெளியேறிச் சென்று கொண்டிருந்த மக்களை சாகடிக்கும் திட்டமிட்ட தாக்குதலை தேவிபுரம் பகுதியில் வைத்து செய்கிறது சிங்களப்படை. அப்போது 20 பேருக்கு மேலான மக்கள் அந்த இடத்திலேயே சாவடைந்தார்கள். காயமடைந்தவர்களை நான் முதலுதவி செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தேன். இறந்த உடல்களில் பொறுப்பெடுக்கப்படாத வெற்றுடல்களை தென்னை மரங்களுக்கு கீழே பசளை போடுவதற்காக வெட்டப்பட்ட கிடங்குகளில் போட்டு அடக்கம் செய்தேன். அதைப் போல பல சம்பவங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களில் நடந்தது. 

இந்த இடத்தில் நான் ஒன்றை கூற வேண்டும். இவ்வாறு மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை சிங்களம் செய்து கொண்டிருந்த போது நாம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதை இவ்வுலகம் உணர வேண்டும்.

இறுதி நாட்களில் தென்தமிழீழத்தில் இருந்த போராளிகள் ஒரு விடயத்துக்காக தலைவரிடம் அனுமதி கேட்டிருந்தார்கள். அதாவது தென் இலங்கை பகுதிகளில் வாழும் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடாத்தினால், எம்மக்கள் மீதான தாக்குதலை எதிரி கொஞ்சமாவது குறைக்க முனைவான் என்றும் அதனூடன திருப்பு முனையுடன் கூடிய கால அவகாசம் ஒன்று எமக்கு வேறு தயார்படுத்தல்களுக்குக் கிடைக்கும் என்றும், அதே நேரம் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் போரை நிறுத்தச் சொல்லி அரசுக்கு அழுத்தத்தையும் கொடுப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்து சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி கேட்டார்கள்.

தலைவரோ எம் விடுதலை அமைப்பின் போரியல் நெறிக்கு அமைவாக எதிரிகளுடன் மட்டும் சண்டை இடுங்கள். சிங்கள வல்லாதிக்க அரசுடன் அல்லது சிங்கள படைகளுடன் மட்டும் சண்டையிடுங்கள். நிராயுதபாணிகளாக இருக்கும் அப்பாவி சிங்கள மக்கள் மீது ஒரு சிறு காயத்தையும் ஏற்படுத்தும் தாக்குதல்களைக் கூட நடாத்த வேண்டாம் என்று பணித்தார். இவ்வாறு தான் எம் தலைவர் மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். சிங்கள அரசைப் போல கொடூர முகம் கொண்டு அப்பாவி மக்களை கொன்றொழிக்கவில்லை. அதே வேளை எம் பராமரிப்பில் எத்தனை சிங்களப் படை வீரர்கள் இருந்தார்கள்? அவர்களை எவ்வாறு நாம் பராமரித்தோம் என்பதை இச்சிங்கள அரசு அறியாது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவு காயப்பட்ட சிங்கள இராணுவத்தை பாதுகாத்தது பற்றி கூறுங்கள்?

நிச்சயமாக விடுதலைப்புலிகளின் மருத்துவர்களுக்கு தேசியத் தலைவர் வலியுறுத்துவது இதைத் தான். எதிரி என்றாலும் அவன் நோயாளியாக உங்களிடம் வந்தால் எங்கள் போராளிகளைப் போலவே பாதுகாக்க வேண்டும் என்று. அதைப் போலவே எங்களை கொல்வதற்காக துப்பாக்கியோடு களத்தில் நின்றவர்கள் காயப்பட்டு வந்த போது அவர்களையும் எம் போராளிகள் போலவே பாதுகாத்தோம். இறுதிக் காலங்களில் என்னிடம் 6 சிங்கள இராணுவம் சிகிச்சை பெற்றார்கள். அதில் இருவர் மேயர் தர அதிகாரிகளாகவும், ஒருவர் லெப்டினன் தர அதிகாரியாகவும், மிகுதியானவர்கள் கோப்ரல் தர படையாகவும் இருந்தார்கள். அதை விட இவர்கள் என்னிடம் சிகிச்சைக்காக வந்த போது வயிற்றுக் காயம் மற்றும் தலைக் காயம் போன்ற பாரிய காயங்களுடனே வந்தார்கள். இவர்கள் பூநகரி பிரதேசத்தில் நடந்த சண்டையில் காயமடைந்து காப்பாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.

இவர்களின் சிகிச்சைகளின் பின் அவர்களை பாதுகாக்கும்  பிரிவினரால் பொறுப்பெடுக்கப்பட்டிருந்தார்கள். அதில் மூவர் ICRC ஊடாக சிங்கள அரசிடம் கையளிக்கப்பட்டிருந்தார்கள். ஏனைய மூவரும் விடுதலை செய்வதற்கான நிர்வாக வேலைகள் நடந்து கொண்டிருந்த காரணத்தால் தனிப்பட்ட முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். 

இவர்கள் மட்டும் தானா இருந்தார்கள்?

இந்த ஆறு பேரும் என்னிடம் சிகிச்சை பெற்றவர்கள். அதை விட எம் மருத்துவர்கள் பலரிடம் சிகிச்சை பெற்ற பல இராணுவ வீரர்களை நாம் விடுவித்துள்ளோம். அதே நேரம் விடுவிப்பதற்கு தயாராக சிலரையும் சிறைக் கைதிகளாக பலரையும் விட்டுச் சென்ற மக்களின் வாழ்விடங்களில் தங்க வைத்திருந்தோம். எனக்குத் தெரிய பலர் அங்கே இருந்தார்கள். 

உங்களிடம் மருத்துவ பொருட்கள் அல்லது உபகரணங்கள் போதுமான அளவில் இருந்ததா?

இல்லை. உணவுப் பொருட்களுக்கு இருந்த தடையைப் போலவே மருந்துப் பொருட்களுக்கும் தடை விதித்திருந்தது சிங்கள அரசு. அதனால் எம்மிடம் மருத்துவப் பொருட்கள் கையிருப்பில் இல்லை. அதே நேரம் கைவிடப்பட்ட புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து நான் மீட்டு வந்த மருந்துப் பொருட்களை சிக்கனமாக பாவித்து வந்ததால் இறுதி வரை கொஞ்சமேனும் இருப்பில் இருந்தது. அதை விட மருத்துவ இருப்பு என்பது அறவே இல்லை.

வலிநிவாரணி, தொற்றுநீக்கிகள் என்று எதுவுமே இல்லை. அதுவும் சிறுவர்களுக்கான தொற்றுநோய்த் தடுப்புக் குளுசைகள் எம்மிடம் கொஞ்சம் கூட இல்லாமல் போயிருந்தது. ஆனால் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்த மருந்துகள் எமக்கு பெரிதும் உதவின. அதை விட எலும்புகள் பொருத்துவதற்கா பாவிக்கும்  External Fixation கள் கையிருப்பு இல்லாத நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்டதால் இறுதி நாட்கள் வரை மிகப் பயனுள்ளதாக இருந்தது. 

சிங்கள அரசின் பொருளாதாரத் தடையால் மக்கள் உணவுக்கு பெரிதும் சிரமப் பட்டிருப்பார்களே.?

நிச்சயமாக,

நான் சிறுவயதில் படித்த ஒரு விடயத்தை இந்த சண்டை எனக்கு நினைவூட்டியது என்பதை விட நேரடியாக காட்டியது என்றே கூறலாம். அதாவது பண்டமாற்றுப் பொருளாதாரம் என்று ஒரு விடயத்தை ஆதிகால மக்கள் செய்திருந்தார்கள். அதாவது பணம் என்ற பரிமாற்றுச் சாதனத்தைக் கண்டுபிடிக்க முதல் பொருட்களைக் கொடுத்து பொருட்களை வாங்கும் முறைமை இருந்தது. அவ்வாறான முறைமையையே எம் மக்கள் இறுதியாக கையாண்டார்கள். “ஒரு கிலோ அரிசி தாங்கோ நாங்கள் உங்களுக்கு பங்கர் வெட்டித் தாறம் “ என்று கேட்ட மக்கள் தான் அதிகமாக இருந்தார்கள். உழைப்புக்கு பணம் வாங்க மறுத்தார்கள். பணம் அங்கே பெறுமதியற்ற வெற்றுத் தாளாகவே இருந்தது. ஒரு சோற்றுப் பருக்கை தான் அங்கு பெறுமதியாக காணப்பட்டது. இவ்வாறு தான் மக்கள் வாழ்ந்தார்கள். உண்ண உணவில்லை.

தமிழீழ நிர்வாக சேவை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகியவை மக்களுக்காக கஞ்சித் திட்டம் ஒன்றை நடமுறைப் படுத்தியதால் தான் பசியில் சாவடைந்த மக்களின் தொகை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இல்லா என்றால் பசியில் அங்கிருந்த அனைவருமே இறந்திருப்பார்கள்.

இறுதி நாட்களில் காயப்பட்டவர்களை எவ்வாறு கையாண்டீர்கள்?

உண்மையில் மிக இடர் சுமந்த காலம் அது. சண்டை தொடர்ந்து நடந்து நாங்கள் முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்து வந்துவிட்டோம். நான் வட்டுவாகல்பகுதியில் இருந்த இரண்டு வீடுகளை சத்திரசிகிச்சைக் கூடமாக மாற்றி இருந்தேன். அதனை சுற்றி சிறு கிடங்குகளை பதுங்ககழி போல உருவாக்கி, மேலே தறப்பாளை கட்டிவிட்டு காயப்பட்டவர்களை படுக்க வைத்திருந்தோம். இது தான் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை.

எவ்வகையான காயங்களை நீங்கள் கையாண்டீர்கள்?

எல்லாவகையான காயங்களும் வந்தன. நான் இறுதியாக வட்டுவாகலுக்கு மருத்துவமனையை மாற்றுவதற்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் இருந்த போது அங்கே பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்தன. அதை விட இரணைப்பாலையில் இருந்த போதே கொத்துக்குண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்திருந்தன. இறுதிக் காலத்தில் கூடுதலாக எல்லாவகையான ஆயுதங்களையும் இராணுவம் பயன்படுத்தி இருந்தான்.

இறுதிக் காலங்களிலும் மருத்துவமனையில் தங்கி நின்றார்களா ?

காயப்பட்டவர்களை கொண்டு வந்து மருத்துவமனையை சுற்றி கிடத்திவிட்டு உறவினர்கள் போய்விடுவார்கள். அதனால் அங்கிருக்கும் காயங்களின் தன்மையை ஆய்வு செய்து நாம் சிகிச்சை வழங்குவோம். உதாரணமாக ஒருவருக்கு கால்களை கழட்டினால் உயிர் தப்ப முடியும் என்றால் உடனடியாக அதை செய்தோம். சிகிச்சை செய்தும் பலனில்லை உயிர் பிரிவது நிச்சயம் எனக் கருதும் காயக்காறர்களை இரத்தத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கான முதலுதவிச் சிகிச்சைகளைச் செய்து விட்டு ஏனைய காயக்காறரை கவனிப்போம். வேறு ஒன்றையும் செய்ய முடியாத நிலை.

மிக கொடுமையான சம்பவம் ஒன்றை இப்போது பகிர வேண்டும். ஒரு இளைஞன் காயப்பட்டு வந்த போது அவனுக்கு கால் மற்றும் கைகளில் காயம் இருந்தது. அதனால் சத்திரசிகிச்சை செய்து அவரை சத்திரசிகிச்சைக்குப் பின்னான சிகிச்சைகளுக்காக அருகில் இருந்த மாமரம் ஒன்றுக்கு கீழ் சிறிய மருத்துவ பதுங்ககழிக்குள் படுக்க வைத்திருந்தேன். அப்போது, திட்டமிட்ட தாக்குதலை மருத்துவமனை மீது சிங்களப் படைகள் செய்தன. அத் தாக்குதலில் 50 இற்கும் மேலான மக்கள் இறந்தனர். அதேநேரம் 6 போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். பல மக்கள் மீண்டும் காயமடைந்திருந்தனர். அதில் அவனும் ஒருத்தன்.

அவன் வயிற்றில் காயப்பட்டிருந்தான்.

“ டொக்டர் என்னைக் காப்பாத்துங்கோ பிளீஸ்…”

என்று கத்தியபடி காயப்பட்டிருந்த காலை இழுத்தபடி ஓடி வருகிறான். இரு கைகளும் வயிற்றில் இருந்து வெளியே விழுந்த குடலை விழுந்துவிடாமல் பிடித்தபடி இருக்கின்றன. எனக்கு அக் காட்சியை நினைத்தால் இப்போதும் மனம் ஒரு நிலையில் இருக்காது. அப்போது எங்களின் போராளி மருத்துவரான தணிகை அவர்களும் பணியில் இருந்தார். அதனால் அந்த இளைஞனை உடனடியாக சத்திரசிகிச்சை Laparotomy செய்வதற்காக தயார் படுத்தினேன். மருத்துவர் தணிகையுடன் இணைந்து நானும் அந்த இளைஞனுக்கான சத்திரசிகிச்சையை செய்து முடித்தோம். அதே நேரம் அந்த நேரம் அந்த சத்திரசிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டது. அதை தருவதற்கு அங்கே யாராலும் தயாராக இல்லாத நிலையில் மருத்துவப் போராளி உயர்ச்சியிடம் இருந்து குருதி பெறப்படுகிறது. அக்குருதியை வைத்தே அவ்விளைஞனை காப்பாற்றினோம்.

இதைப் போலவே இன்னும் ஒன்று, சிறு வயது பிள்ளை ஒன்று தலையில் காயப்பட்டபடி என் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறாள். அவளைக் கொண்டுவந்தது அவளது பேரன். அவர் வந்து கத்தி அழுதபடி என் பேத்தியை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார். பரிசோதித்த நான் அவளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. அவள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு அவளைத் தூக்கி வந்த அந்த ஐயாவிடம் தெரியப்படுத்தலாம் என்று வந்த போது, அவர் அந்த வீட்டு வாசலைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிங்கள இராணுவம் எறிகணைத் தாக்குதல் செய்கிறது. அத் தாக்குதல் நின்ற போது வாசலை உற்று நோக்குகிறேன். அங்கே அந்த வயதானவர் தலை சிதறி பலியாகி இருந்தார்.

இவ்வாறு பல கொடுமைகளை எம் மண் சுமந்து நின்றது.

அதை விட கொடுமை என்ன என்றால் என்னிடம் என் குடும்பத் தேவைக்காக இருந்த 2 கிலோ அரிசியை கொடுத்து, மக்களைக் கொண்டு வெட்டிய ஒரு பதுங்குகுழிக்குள் எம் மருத்துவமனையை சுற்றி இறந்த மக்களை புதைத்தேன். கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டதால் மருத்துவமனையைச் சுற்றி பல மக்கள் இறந்திருந்தார்கள். எம்மால் எதையும் செய்ய முடியவில்லை. உடனடியாக அவர்களை அடக்கம் செய்ய வேண்டிய சூழல் அதனால் அவ்வாறான 47 பேரை நாங்கள் அந்த பதுங்ககழியில் புதைத்தோம். பண்டமாற்று பொருளாதாரத்தை எனக்கு காட்டிய இறுதிப் போர் அன்று கொடுமையான இச்செயலையும் தந்திருந்தது.

இறுதி வரை போராளிகளின் மனநிலை எவ்வாறு இருந்தது?

காயப்பட்ட போராளிகள் கூட காயத்தை மாற்றிக் கொண்டு சண்டைக்கு போக வேண்டும் என்ற மனநிலையில் இருந்தார்கள். ஓரிரண்டு பேர் சண்டையைத் தவிர்த்தாலும் அநேகமான போராளிகள் களமுனைக்கு போக வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்.

இறுதி நாள் என்ன நடந்தது ?

16 ஆம் திகதி வரை என் பராமரிப்பில் பல போராளிகளும் அதிகமான மக்களும் இருந்தார்கள். பெரும்பாலும் கால் உடைவுக் காயங்கள் தான் அதிகம். அவ்வாறான நிலையில் அவர்களுக்கு முடிந்தளவு அறிவுறுத்துகிறேன் “ அப்பா. அம்மா உறவுகள் யாராவது வந்தால் அவர்களுடன் போகக் கூடியவர்கள் போங்கோ என்று. அப்படி போனவர்கள் ஓரிரண்டு பேர் தான். மிகுதிப் பேர் அங்கேயே இருந்தார்கள்.

இறுதியாக நான் வைத்திருந்த மருத்துவமனையைச் சுற்றி இராணுவம் வந்துவிட்டது. அதன் பின் அங்கே எதையும் செய்ய முடியாத சூழல். முடிவெடுக்க முடியவில்லை. என் மனைவியும் மகனும் என்னுடனேயே நிற்கிறார்கள். அவர்களையாவது காப்பாற்ற வேண்டிய சூழல். நான் அவர்களை கூட்டிக் கொண்டு போய் என் நண்பனின் குடும்பத்தோடு சேர்த்து விடலாம் என்று வெளிக்கிட்ட போது,

“ டொக்டர் நீங்களும் எங்கள விட்டிட்டு போக போறீங்களா” என்று ஒரு தம்பி கேட்டான. என்னால் அவனுக்கு எதை செய்ய முடியும்? அவர்களை எப்படி காப்பாற்ற முடியும்? என்னால் ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. அவர்களிடம் மனைவி மகனை விட்டுவிட்டு வருவதாக உறுதி வழங்கி விட்டு வட்டுவாகலை நோக்கி செல்கிறேன். அங்கே நண்பனின் குடும்பத்திடம் என் குடும்பத்தை விட்டுவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறேன்.

என்னால் அந்த இடத்துக்கு கிட்ட போக முடியவில்லை. அவ்வளவு எறிகணைத் தாக்குதல்கள். எப்படியோ நான் அங்கே போய் சேர்கிறேன்150-200 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 200 தடவைக்கு மேல் நிலத்தில் விழுந்து படுத்திருப்பேன் அவ்வளவு தாக்குதல்கள். இவ்வாறு மருத்துவமனைக்கு போய் சேர்ந்த போது அப் போராளிகள் மனதில் புது தெம்பு பிறந்திருக்கும் எமக்காக நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை எழுந்திருக்கும் அதனால் அந்த கொடுமைக்குள்ளும் புன்னகைத்தார்கள்.

நான் என்னோடு பணியாற்றியவர்களை வெளியேறிச் செல்லுமாறு பணித்தேன். அதன் பின் அப் போராளிகளோடு பேசிக் கொண்டிருந்த தருணம் பின்பகுதியில் இருக்கும் கொட்டிலுக்கு போய் வர வேண்டிய சூழல் வந்தது. அவர்களும் என்னை எதிர்பார்த்திருந்தார்கள். அதனால் அவர்களிடம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற போது ஒரு தம்பி, டொக்டர் எப்பிடியும் ஆமி எங்கள உயிரோட பிடிச்சிடுவான் உங்கட குப்பிய தாங்கோ நான் சாக போறன் என்றான். அவனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை. அவனிடம் அப்பிடி ஒன்றும் நடக்காது என்று ஆறுதல் சொல்லிவிட்டு நகர்கிறேன். அதேவேளை அங்கே இருந்த மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்ததை நான் உணர்ந்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் தம்மை காப்பாற்றுமாறு கத்தி அழுதது இன்னும் செவிகளில் கேட்கிறது.

நான் என்ன செய்ய முடியும்? எதையும் முடிவெடுக்க முடியாதவனாய் நின்ற போது என்னுடன் பணியாற்றிய ஒரு சகோதரன் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அவரை கூட்டிக் கொண்டு போய் என் மனைவி மகனோடு விடலாம் என்று யோசித்து அவர்களை அழைத்துக் கொண்டு சென்ற போது பெரும் தொகையான 60 MM எறிகணைகள் எம் மருத்துவமனையை நோக்கி செலுத்தப்பட்டதை பார்த்தேன். அக் குறுகிய இடத்தில் 100-200 க்கும் மேலான எறிகணைகள் வெடித்துச் சிதறின. அத்தனையும் மருத்துவமனை என்று தெரிந்து அடிக்கப்பட்ட எறிகணை என்பது எனக்கு புரிந்து போனது.

தாக்குதல் குறைந்த போது அங்கே செல்ல முனைந்த என்னைத் தடுத்து நிறுத்தினார் மற்றவர். ஆனாலும் நான் காப்பாற்றிய எம் போராளிகள் கண்ணுக்கு முன்னே தவித்துக் கிடக்க என்னால் எதையும் செய்ய முடியாமல் தவித்தேன். அப்போது என் போராளி நண்பன் ஒருவன் அங்கிருந்து தப்பி வந்திருந்தான். மச்சான் உன்னோட இடத்துக்கு 60MM ஆல பராச் பண்ணி விட்டான். எதுவும் மிஞ்சவில்லை. எல்லாமே சிதறிப் போய்விட்டது. ஒருத்தன் கூட உயிரோட இல்ல. அவன் தெரிஞ்சு தான் அடிச்சிக்கான்.

எனக்கு எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஏமாற்றம் கண்ணுக்கு முன்னால் கொஞ்ச நேரத்துக்கு முதல் கதைத்துவிட்டு வந்த அப் போராளிகளையும் மக்களையும் காப்பாற்ற நாம் போராடிய ஒவ்வொரு வினாடிகளும் இப்படி சிதைந்து போய்விட்டது என்று மனம் உடைந்து போனது. என்னால் அந்த இடத்தை விட்டு வரவும் முடியவில்லை.

மனைவி மகனை தவிக்க விட்டு இருக்கவும் முடியவில்லை. மன நெகிழ்வோடு நான் இருந்த போது நண்பனும் மற்ற சகோதரனும் என்னை தம்மோடு வருமாறு பணிக்கின்றனர். அதன் மேல் அங்கே ஒன்றும் இல்லை என்றாகிவிட்ட போது நான் எதை செய்யப்போகிறேன் என்ற நினைப்பில் மீண்டும் ஒருமுறை அவ்விடத்தை திரும்பிப் பார்த்தபடி உயிரோடு வந்தும் வலியோடு வாழ்கிறேன்.