இன்று தமிழீழ மாணவர் எழுச்சி நாள். தமிழீழ மாணவர்களிடையே புரட்சிகர விடுதலைக் கருத்தூட்டல்களுடனான தமது உரிமைகளுக்காக்குரல் கொடுக்கும் நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கின்றது. இந்த நாளை எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியும் ”எதிரியிடம் உயிரோடு பிடிபடுவதை விட உயிரை மாய்ப்பதே மேல்” என்ற சித்தாந்தத்துக்கு நஞ்சுண்டு தன் உயிரை விதையாக்கி, உயிரூட்டிய பெருமகனுமாகிய பொன்சிவகுமாரின் நினைவுகளைச் சுமந்தபடி மாணவர்கள் எழுச்சி கொள்ளும் நாள். இந்த நாளில் மாணவர்களுக்கென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப் பிரிவு ஒன்று இயங்கியதும் அதன் செயற்பாட்டு நிகழ்நிரல்கள் எவ்வாறு அமைந்தன என்பது பற்றியும் எனக்கு நினைவிருப்பவற்றை இப்பத்தியில் தொகுத்துள்ளேன்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு பக்கங்களும் பல உன்னதமான விடயங்களை கொண்டிருக்கின்றன. அதில் ஒற்றைப் பக்கம் தான் மாணவர் அமைப்பு. தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணச் சிந்தனையிலும் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் உறுதியான நம்பிக்கையிலும் விதையிடப்பட்டது தான் மாணவர் எழுச்சிக்கான களம். எமது விடுதலைப் போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு, மகளிரின் பங்களிப்பு என தேசக்கடமைகள் விரிந்து கிடந்த போது விடுதலைக்கான எழுச்சியின் படிக்கல்லை மாணவர்களிடம் இருந்து உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்தக் களத்தின் திறவுகோள்.


1985 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் மாணவர் இயக்கம் உருவாக்கப்பட்டது. அவ்வமைப்பின் முதலாவது பொறுப்பாளராக பொறுப்பெடுத்தார் முரளி என்ற போராளி. அவரின் தீவிர முயற்சியின் பெறுபேறு தமிழீழ மாணவர்களின் எழுச்சி மிக்க செயற்பாடுகளாக உருமாறியது. பெரும் சாதனைகளைச் செய்த போராளிகளை உருவாக்கவும், தமது உரிமைகளுக்காக புதுப் புதுப் போராட்டக் களங்களை உருவாக்கவும் தமிழீழ மாணவர்களுக்கு புது வழிகளைத் திறந்தது மாணவர் இயக்கம்.


அனைத்து தமிழீழ மாணவர்களையும் எழுச்சி மிக்க தமிழீழ உணர்வாளர்களாக மாற்றுவதற்கும் தமிழீழ மாணவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் உருவாக்கம் கண்ட மாணவர் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் கீழ் இயங்கிய கிட்டத்தட்ட 54 உப பிரிவுகளுக்குள் மிக முக்கியமான பிரிவாக இயங்கத் தொடங்கி 2009 மே 18 வரை தனது பணியை சிறப்பாக செய்து வந்தது.


கல்வி ஒடுக்குமுறையால் மற்றும் வெட்டுப்புள்ளித் திட்டத்தால் உயர்கல்விகளை தொடர முடியாமல் தமிழ் மாணவர்களை ஒடுக்க நினைத்த சிங்களத்துக்கு பெரும் எழுச்சி மூலம் பதில் சொல்லவும், பாதிக்கப்பட்டிருக்கும் எம் தமிழ் மாணவர் சமூகத்தின் அரசியல் பொருளாதார விழுமியங்களில் வளர் தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தவும், பொறுப்பாளர் முரளி தன் துவிச்சக்கர வண்டியோடு வயல்வெளிகளிலும் புற்றரைகளிலும் குச்சொழுங்கைகளிலும் என்று பயணிக்கத் தொடங்கினார். இதனூடாக விடுதலை பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களிடையே பெரும் கருத்துப் பரம்பல்களை விதைத்து அவர்களுக்குள் ஒரு விழிப்புணர்வை உருவாக்கி அவர்களை புரட்சிகர விடுதலைப் பாதையில் பயணிக்க வைத்தார். அதை நிரூபிக்கும் விதமாக,
“எம் மக்களில் எதிர்காலத்தை நோக்கி “ என்ற பெரும் பொருட்காட்சி ஒன்றை மாணவர்கள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், பொருளியலாளர்கள் என்று அனைத்து தமிழீழ வளங்களையும் ஒருங்கிணைத்து வளமற்ற தமிழீழம் என்று கருத்தாடல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு தமிழீழம் வளமுள்ளது என்று அடித்துக் காட்டினார். தமிழீழத்தில் உள்ள அனைத்துத்துறை வல்லுனர்களும் ஒருங்கிணைக்கப்பட்டால் தமிழீழம் சுய பொருளாதார நாடாக அமையும் என்ற செயற்பாட்டு நிலையை உறுதிப்படுத்தினார். இதுவே மாணவர் இயக்கத்தின் முதல் வெற்றியாக பதியப்பட்டது. அதன் பின்பு அறிவியல் கழகங்கள் தமிழீழ பரப்பெங்கும் உருவாக்கப்பட்டன. அதனூடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மெருகூட்டப்பட்டது மட்டுமல்லாது போட்டிகள், கருத்தரங்குகள் என்று வளர்நிலையை நோக்கிப் பயணிக்க வைத்தார் பொறுப்பாளர் முரளி.


23.12.1987 இந்திய இராணுவத்தின் கோப்பாய் பகுதியில் நடந்த சுற்றிவளைப்பு ஒன்றில் இருந்து தப்பிக்க முனைந்த போது நடந்த நேரடிச் சண்டையில் தமிழீழ மாணவர் இயக்கத்தின் பொறுப்பாளர் மேஜர் முரளியாக வீரச்சாவடைந்தில் இருந்து அவரால் நிலைநிறுத்தப்பட்ட தமிழீழ மாணவர் இயக்கம், 2009 மே 18 ஆம் நாள் விடுதலைப் போராட்டம் மௌனிக்கும் வரை பல பத்து பொறுப்பாளர்களால் நிர்வகிக்கப்பட்டு தமிழீழ மாணவர்களுக்கு தன் பணி செய்தது.
தமிழீழ மாணவர் அமைப்பின் இறுதிப் பொறுப்பாளராக இருந்தவர் கண்ணன் அல்லது இளந்திரையன் என்று அழைக்கப்படுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளி. மேஜர் முரளி முதல் கண்ணன் வரை பொறுப்பாளர்களாக பணியாற்றியவர்களும் அவர்களுடன் பணியாற்றிய போராளிகளும் தளராத துணிவோடு இறுதி நாள்வரை மாணவர்களுக்கான கல்விப் பணியில் ஈடுபட்டார்கள்.


யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி தமிழீழ நிர்வாக கட்டமைப்புக்கள் இருந்த 1995 இற்கு முன்பான காலத்தில் யாழ்ப்பாணத்தில் தனது நடுவப்பணியகத்தை நிறுவியும் அதன் பின்பான காலத்தில் வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் நிர்வாக கட்டமைப்புக்கள் நகர்த்தப்பட்ட பின்பு கிளிநொச்சி, மாங்குளம், புதுக்குடியிருப்பு, மல்லாவி என்று தன் நடுவகத் தளங்களை நிறுவி தென்தமிழீழம் வடதமிழீழம் என்று அனைத்து பிரதேசங்களிலும் மாணவரமைப்பு தன் பணியாற்றி வந்தது. 2001 ஆம் வருடத்துக்கு பின் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் நடுவப்பணியகத்தை நிறுவிக் கொண்டது. சுற்றி வர தேக்கு மரங்களால் சூழப்பட்ட நல்ல இயற்கையின் சூழலில் அமர்ந்திருந்த நடுவப்பணியகம் தனது பணிகளை அதற்கான பொறுப்பாளர்களூடாக பணியாற்றியது.


மாணவர் அமைப்பு தனது கட்டமைப்பை பல வழிகளில் நிறுவிக் கொண்டது. பொறுப்பாளர், துணைப்பொறுப்பாளர், நிர்வாகப் பொறுப்பாளர் என்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள், கோட்டப் பொறுப்பாளர்கள் என்றும் போராளிகள் பொறுப்புக்களை வகித்த அதே நேரம் வெறும் கற்றல் செயற்பாடுகள் மட்டுமல்லாது, தேசிய எழுச்சி நீரோட்டத்தில் மாணவர்களை வழிப்படுத்தவும் ஏராளமான திட்டவரைவுகளோடு பணியாற்றியது மாணவரமைப்பு.
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் போன்ற பரீட்சைகளுக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு நடாத்தப்படும் பரீட்சை வழிகாட்டுதல் செயலரங்குகளும் முன்னோடிப் பரீட்சைகளும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் வெற்றித் திறவுகோளாக அமைந்ததை மறுக்க முடியாது. இந்த நிலையில் நான் நினைக்கிறேன், 1997 ஆம் வருடமாக இருக்க வேண்டும் க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையில் அதி விசேட சித்தி பெற்ற மாணவர்கள் சிலரை தேசியத்தலைவர் சந்தித்து அவர்களுக்கான மதிப்பளிப்பு ஒன்றை செய்திருந்தமை மிக முக்கியமாகின்றது. இத்திட்டம் தமிழீழ கல்விக்கழகம் மற்றும் தமிழீழ மாணவர் அமைப்பு என்ற இரு கட்டமைப்புக்கள் இணைந்து செய்த செயற்றிட்டம் என நினைக்கின்றேன். (இதன் உண்மைத்தகவல் எனக்கு நினைவில்லை தேசியத்தலைவர் சந்தித்தாரா அல்லது அவரின் கையெழுத்துடனான சான்றிதழ் வழங்கப்பட்டதா என்று நினைவு வருக்குதில்லை இந்த தகவலை உறுதிப்படுத்த என்னால் முடியவில்லை தயவு செய்து தெரிந்தவர்கள் உறுதிப்படுத்துங்கள். )


வசதிகள் அற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கான உதவிதொகைக் கொடுப்பனவுகள் மாதாந்தம் வழங்குவதில் இருந்து கற்பதற்கு வசதிகள் அற்ற பள்ளிப் பிள்ளைகளுக்கான சிறுவர் இல்லங்கள் வரை மாணவரமைப்பால் உருவாக்கப்பட்டநிர்வகிக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக மல்லாவியில் இயங்கிய ஆண்கள் இல்லமான மாறன் மற்றும் பெண்கள் இல்லமான சாந்தி மற்றும் கற்சிலைமடுவில் இயங்கிய சிறுவர் இல்லம். ( பெயர் நினைவில்லை) ஆகியவை சான்றாகின்றன. இது மட்டுமல்லாது பல இடங்களில் பல சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அதை விட ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களின் அலுவலகங்களிலும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக வசதிகள் செய்யப்பட்டிருந்தன.


கணனி பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு அடிப்படைக் கணனிப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அடிப்படை வசதிகளற்ற பல கிராமங்களில் கல்வி படிக்கல்லை தொட வேண்டும் என்பதற்காக கிராமிய கல்வி அபிவிருத்தி நிலையங்கள் “கல்வி வளர்ச்சிக் கழகம் “ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு மாலைநேரக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டன. இவை தவிர, மாதாந்த சஞ்சிகைகள் வெளியிடப்பட்டு அவை மாணவர்களுக்கு அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியை பற்றிய அறிவூட்டல்களை செய்தன. இதை விட ஒவ்வொரு கிராமங்களிலும் அடிப்படைக் கணனி கற்கைகளை அறிமுகம் செய்வதற்காக சுழற்சி முறையிலான கணனி செயலமர்வுகள் செய்யப்பட்டு மாணவர்கள் முதல் பெற்றறவர்கள் வரை தொழில்நுட்பக் கல்வியின் அவசியங்கள் பற்றித் தெளிவு படுத்தப்பட்டு தொழில்நுட்ப அறிவு ஊட்டப்பட்டது.

முரளி என்ற தொலைத்தொடர்பாடல் நிலைய பெயரைக் கொண்ட மாணவரமைப்பின் நடுவப்பணியக தொலைத்தொடர்புக் கருவியில் ஒலிக்கும் குரல்கள் அனேகமான நேரங்களில் மாணவர்களின் வளர்ச்சி பற்றியே ஒலிக்கும். தேசிய எழுச்சி நீரோட்டத்தில் தமிழீழ மாணவர் அமைப்பும் தமிழீழ கல்விக் கழகமும் இணைந்து எம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் செய்த பணிகளை வரிசைப்படுத்த என்னால் முடியவில்லை. ஆனாலும் என் நினைவில் இருந்தவன்றை கொஞ்சமேனும் தொட்டுச் செல்கின்றேன்.


மேஜர் முரளி தொடக்கம் லெப். கேணல் ராணிமைந்தன், லெப் துளசி, …. வீரவேங்கை சக்கரவர்த்தி, லெப். புயல்வீரன், வீரவேங்கை கோபி என தமிழீழ தேசத்துக்கான விதைகளாக மாணவரமைப்பு பல போராளிகளை விதைத்துள்ளது. அந்த வரிசை மிக நீளமானது. அந்த வரிசையை அறிந்தவர்கள் பட்டியலிடுங்கள்…

குறிப்பு: தயவு செய்து இக்கட்டுரையை பகிருங்கள் பிரதி செய்து பதிவேற்றாதீர்கள் இக்கட்டுரையில் சிறு தகவல் உறுதிப்படுத்தல் செய்ய வேண்டி உள்ளது. அதை நான் செய்தால் நீங்கள் பிரதி எடுத்து பதிவேற்றும் போது தவறி விடும்.

எழுதியது : இ.இ.கவிமகன்
நாள் 06.06.2021