அப்பா உங்களை நான் எனது மூன்றாவது அகவையில் தான் இறுதியாகக் கண்டேன். அந்தக் கணங்கள் சிறிதளவு ஞாபகத்தில் உள்ளது. உங்களின் கரங்களைப் பிடித்தபடி தான் நான் நடக்கக் கற்றுக் கொண்டேன் என்று அம்மா அடிக்கடி கூறுவா. அது எனக்கு நினைவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் வெள்ளை மணலில் நட்சத்திரங்களால் சூழ்ந்த இரவொன்றில் உங்களின் நெஞ்சிலே நான் படுத்திருந்து விளையாடிய போது நீங்கள் நிறைய கதைத்தீர்கள்.அதில் ஒன்று இன்றும் நல்லாக நினைவு இருக்கிறது.

நான் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அன்றும் கூறினீர்கள். “திகழ் குட்டி நீங்கள் வளர்ந்து பெரியாளாகி நிறைய படிக்க வேண்டும் A.P.J. அப்துல் கலாம் அவர்களைப் போன்ற ஒரு விஞ்ஞானியாக தமிழீழத்தில் உருவாக வேண்டும்” இதைத் தான் அப்பா நான் பிறந்ததில் இருந்து அடிக்கடி கூறுவீர்கள். அன்றும் எனக்கு அதைத் தான் கூறினீர்கள். எனக்கு அப்போதெல்லாம் நீங்கள் சொன்னது புரியவே இல்லை. ஆனால் இப்போது கொஞ்சம் புரிகிறது. நான் எப்படி வாழ வேண்டும் என்பது உங்களின் அந்த ஒன்றை வார்த்தை மூலமாக தெரிகிறது.

நான் அவ்வாறு வளர வேண்டும் என்பதற்காகவே பல நூல்களை சேகரித்தீர்களாம். அவை ஒவ்வொன்றிலும் எந்தெந்த வயதில் கற்க வேண்டும் எனவும் நீங்கள் எழுதி இருந்தீர்களாம். எனது அம்மா இவை பற்றி இப்போது அடிக்கடி சொல்கிறவா. அவ்வாறு என் வளர்ச்சியை திட்டமிட்டு செயற்பட்ட நீங்கள் என்னை தனிக்க விட்டு ஏன் அப்பா போனீர்கள்? அம்மாவும் நானும் தனித்துப் போய் தவிக்கின்றோம்.

உங்களை முள்ளிவாய்க்காலில் 2009 வைகாசி 17 அன்று பிரிந்தது போல நீங்கள் எனக்காக சேகரித்து, பாதுகாத்து வைத்திருந்த புத்தகங்களையும் இழந்தோம். ஆனாலும் நம்பிக்கையையும், உங்கள் கனவையும் நான் இழக்கவில்லை அப்பா. தொடர்ந்தும் உங்கள் கனவுகளை நினைவாக்க கூடியதாக முயன்று கொண்டிருக்கிறேன்.

இப்போது எனக்கு 13 வயது ஆகிறது. உங்களை பிரிந்து 10 வருடங்களும் கடக்கிறது. ஆனாலும் உங்கள் நெஞ்சில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த போது நீங்கள் கூறியது நினைவில் இருக்கிறது. எனக்கு ஒரு கவலை மட்டும் தான் அப்பா. நீங்கள் என்னோடு இல்லை.

உங்களது எழுத்துக்களைப் போலவே நானும் எழுத வேண்டும் என்று ஆசை. உங்களைப் போலவே, நீங்கள் கூறியதைப் போலவே நல்லபடி கற்க வேண்டும் என்று ஆசை. அதனால் தான் என்னால் முடிந்த அளவுக்கு முயல்கிறேன்.

உங்களுக்காக உங்களின் பிறந்த நாளில் இப்படி ஒரு வாழ்த்தை எழுதினேன் அப்பா.

அப்பா இன்று உங்கள் பிறந்தநாள்!
எங்கிருந்தாலும் இறைவன் அருளால் ஆரோக்கியமாக இருக்க அம்மாவும் நானும் மனதார வாழ்த்துகின்றோம் அப்பா. பத்து வருடங்களாகின்றன உங்கள் நிழல் என்னில் பட்டு. இன்று, நாளை என்று வருடங்கள் கடந்து உங்கள் தொடர்பில்லாது ஏங்கித் தவிக்கின்றோம். அப்பா உங்களைப்பற்றி ஒரு சிறு தகவலேனும் எமக்குக் கிட்டாதா எனத் துடிக்கும் என் பிஞ்சு உள்ளம் படும் வேதனையை யார் அறிவர்?

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களோடு விரைவில் எம்மிடம் வந்து சேருங்கள் என மன்றாட்டமாக இம்முறையும் வேண்டி நிற்கின்றோம் அப்பா. அப்பாவின் வாசமறிய துடிப்பதுடன் உங்கள் அறிவுரை, கண்டிப்பு இரண்டும் எமக்குக்கிட்டாதா என ஏக்கத்துடன் காத்திருக்கின்றோம். எல்லோருக்கும் வகுப்பு எடுத்த நீங்கள், எனக்கு வகுப்பு எடுக்க நான் கொடுத்து வைக்கவில்லை அப்பா. எனினும் இந்நன்னாளில் உங்கள் வழியில் நானும் வருவேன் என்று உங்களிடம் உறுதி கூறுகிறேன் என் அன்பு அப்பா.

அன்புடன் உங்கள் மகன் திகழ்குட்டி

என்னை திரும்ப சந்திப்பீங்கள் என்ற நம்பிக்கையில் என்னைச் சித்தியின் கைகளில் ஒப்படைத்த போது என்ன மனநிலையில் இருந்திருப்பீர்கள்…? நான் அறியேன் அப்பா. ஆனாலும் இப்போது உணர்கிறேன். சித்தியிடம் சிறு குறிப்பேட்டை கொடுத்து என்னை எவ்வாறு வளர்க்க வேண்டும் என எழுதிக் கொடுத்ததாக சித்தி சொன்னவா. இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் என்னை திட்டமிட்டு வளர்க்க விரும்பிய உங்களை காண்பேனா இல்லையா நான் அறியேன். ஆனாலும் காண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என் வாழ்வில் உங்கள் நினைவுகளை மட்டும் சுமக்க வேண்டும் என்ற விதி என்றால் என்ன செய்ய முடியும்.? ஆனாலும் வருவீர்களா? இல்லையா? என்று தெரியாத கொடுமையிலும் நீங்கள் நினைத்தது போல கற்றுத் தேறி உங்கள் கனவுகளை நிறைவேற்ற முயல்கிறேன் அப்பா.