அப்போது எனக்கு 10 வயசிருக்கும் என்று நம்புகிறேன். என் வீட்டு வாசல் இந்த நாட்களில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு புது ஆலயம் ஒன்று உருவாகி இருக்கும். அவ்வாலயத்தின் கருவறையில் திலீபன் எனும் ஈழத்தின் கடவுள், எரியும் தீபங்களுக்கு இடையே திருவுருவப்படமாக புன்னகைத்துக் கொண்டிருப்பார். என் வீட்டு வீதியில் இருந்து ஒரு குச்சொழுங்கைக்குள் செல்ல வேண்டியதால் வாசலில் இருந்து வீதிவரை மஞ்சள் சிகப்புக் கொடிகள் சிரித்துக் கொண்டிருக்கும். அந்த இடமே வல்லிபுரக் கோவில் பகுதி கடற்கரையில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த வெள்ளை மணல் பரவப்பட்டு மிக மிக அழகாக இருக்கும்; எங்கும் சாம்பிராணி வாசம் வீசும். கிடுகால் வேயப்பட்ட அல்லது தென்னோலைகளால் முழுமையாக மூடப்பட்டிருக்கும் இவ்வகை கொட்டில்கள் பல இருக்கும். என் வீடு தாண்டி வீதியில் ஏறினால், அங்கே இன்னொரு நினைவுக் கொட்டில் அதைத் தாண்டி இன்னொன்று என்று எம் ஊர் வீதிகள் முழுவதும் நினைவுக் கொட்டில்களைச் சுமந்து நிற்கும்.  

என் வீடு மட்டுமல்லாது, எம்மூர் மட்டுமல்லாது எம் தேசமே அந்த நாட்களில் கந்தகப்புகையின் வாசத்தை தாண்டி திலீபனின் நினைவோடு நிமிர்ந்து நிற்கும். சுகந்தம் வீசும் சாம்பிராணிப் புகையாலும், விளக்கொளியாலும் நிறைந்து எம் தேசமே ஒளிரும். அந்த நாட்களில், பூக்கள் கிடைப்பது அரிது. அதுவும் எம்மூரில் தண்ணீர் உப்புச்சுவை கொண்டதால் பூமரங்கள் வளர்வது குறைவு. குடி நீருக்காக 2-3 மைல்கள் தாண்டிச் சென்று பாத்திரங்களில் எடுத்து வரவேண்டும். அவ்வாறான நிலையில் பூமரங்களை வளர்ப்பது கொஞ்சம் சிக்கலானது தான். என் வீட்டு மல்லிகைப் பந்தல் எப்போதும் சுகந்த வாசத்தை தருவது போல சில வீடுகளில் கடதாசிப் பூவும், செம்பருத்தி மற்றும் பொன்னலரி, அலரி, தேமா போன்றவற்றுடன் எங்கோ ஒரு வீட்டில் நந்தியாவட்டை, நித்தியகல்யாணிப் பூக்கள் பூத்துக் கிடக்கும்.

அவ்வாறான காலங்களில் எங்கள் ஊரின் எல்லா வீட்டுக் கதவுகளும் என் அம்மப்பாவுக்காக (அம்மாவின் தந்தைக்காக ) அதிகாலையிலே திறந்து இருக்கும். அவர் ஒரு பக்திமான். அதிகாலையில் எம்மூரில் உள்ள வீடுகள் எல்லாவற்றிலும் இருக்கும் பூக்களைக் கொய்து எம் குல தெய்வமான வயிரவருக்கு பூவால் அலங்காரம் செய்யாமல் தேநீர் கூட அருந்தாத கடவுள் பக்தி உள்ளவர். அதோடு மட்டுமல்லாது, எம் வீட்டின் சாமியறையில் சுற்றிவர இருக்கும் தெய்வங்களுக்கு பூவாலும், நெய் விளக்காலும் அலங்காரம் செய்து வணங்காமல் அவர் உணவுண்ண மாட்டார்.

அப்படியானவர் அதிகாலை 4 மணிக்கே பூப் பறிப்பதற்காக குளித்து தயாராக சென்றால் எம்மூரின் அனைத்துப் பூக்களும் இல்லாமல் போய்விடும். அதனால் அதிகாலையிலே பூக்களுக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓடத் தொடங்குவர். கடவுளை விட அவர்களுக்கு திலீபன் முக்கியத்துவம் பெற்றதாலோ என்னவோ பூக்கள் அனைத்தும் காணாமல் போயிருக்கும்.  கிடைக்கும் சொற்ப பூக்களிலும் அரைவாசி என் வீட்டில் உருவான புதுக் கோவிலுக்கு வந்து சேர்ந்துவிடும் அதனால் வயிரவருக்கும், என் வீட்டு சாமியறையில் வாசம் செய்யும் கடவுளர்களுக்கும் பூ அலங்காரம் நிச்சயமாக பூரணமாக கிடைக்காது. அப் பன்னிரண்டு நாட்களும் அவர்களிடம் என் அம்மப்பா மனதுக்குள்

“எமக்காக பசிப் போர் புரிந்தவனுக்காக கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் “

என்று  மன்றாட்டமாக வேண்டுவார் என்றே நினைக்கிறேன். அக் கடவுளர்களும் வழமை போலவே புன்னகைத்தபடியே இருப்பர்.

அதிகாலை எழுந்து பாடசாலை செல்ல முன் அவ்விடத்தை கூட்டி துப்பரவு செய்து பூ வைத்து விளக்கேற்றி விட்டே நாம் பள்ளிக்குத் தயாராகுவோம். எம்மூரில் யாருடைய இடம் நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கின்றது என்பதற்காக பெரும் போட்டியே நடக்கும். பள்ளியில் கூட இருக்க முடியாது தவிப்போம்.
“ எப்படா வீட்ட போய் திலீபன் அண்ணாவின் கொட்டிலுக்க இருப்பம்” என்று ஓடுவோம்.

நான் சச்சி, சுதா, கிரி என ஊரில் இருந்த சிறுவர்கள் காலை மாலை என்ற வித்தியாசம் இன்றி திலீபன் அண்ணாவின் படத்துக்கு முன்னால் இருப்போம். எம்மோடு அக்காக்களும் சேர்ந்து கொள்வார்கள். இரவு நேரத்தில் மிருதங்கம், தகரங்களிலால் எம்மால் செய்யப்பட்ட ட்ரம்ஸ், டோல்கி, ஆர்மோனியம் என்று வாத்தியங்களுடன் பாடல்களும் அரங்கேறும். கவிதைகள், பேச்சுக்கள் என்று தினமும் எங்களுக்கு நாங்களே செய்து கொள்வோம். ஒன்றையே திரும்பத் திரும்ப செய்தாலும் அந்த பன்னிரண்டு நாட்களும் கலை நிகழ்வுகள் செய்வோம். கொஞ்சம் வளர்ந்தவர்கள் வில்லுப்பாட்டுக்கூட செய்தது நினைவுண்டு. அப்போதெல்லாம் மிருதங்கத்தை வேறு யாரிடமும் கொடுக்காது நானே வாசித்த நினைவும் எழுகிறது.

அப்போதெல்லாம் திலீபன் அண்ணாவின் தியாகம் புரியாத வயது. ஆனால் தியாகத்தை அறியாவிடினும் திலீபன் அண்ணாவின் சம்பவத்தை நேரே கண்டு அனுபவித்தவர்களான அம்மா, அம்மம்மா, அம்மப்பா போன்ற பெரியவர்கள் கூறும் கதைகளும் தினமும் இருக்கும். தாயகப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டதால் எப்பவோ ஒரு நாள் வீட்டுக்கு வரும் என் அப்பா கூறும் தியாகம் செறிந்த கதைகளும் எமக்குள் இவர்கள் பற்றிய பார்வையை விரிவு படுத்தும். ஆனாலும் அதைக் கூட புரிந்து கொள்ளாத வயசு என்றாலும் தினமும் இவற்றை எல்லாம் செய்வோம்.

அம்மா ஒரு நாள், அப்போது எனக்கு 4 வயசு திலீபன் அண்ணா வீரச்சாவடைந்த பின் வணக்கத்துக்காக தாங்கள் நீண்ட வரிசையில் பூக்களை கையில் தாங்கிய வண்ணம் சென்றோம் என்றும், சரியாக திலீபன் அண்ணாவின் வித்துடல் இருந்த இடத்துக்கு வந்து தான் பூப் போட்ட அதே வேளை திலீபன் அண்ணாவின் வித்துடலைத் தாண்டிய மறுபக்கம்  எனது தந்தை நின்றதைக் கண்டு நான் திலீபன் அண்ணாவுக்கு பூக் கூட போடாமல் “அப்பா அப்பா “ என்று அழைத்ததாகவும் கூறியதை இப்போது நினைத்து வருத்தப்படுகிறேன். அந்தப் புனித உடலை ஒரு தடவை கூட தொட்டுப் பார்க்காதவனாகி விட்டேன் என்று வருத்தம் கொள்கிறேன்.

பின் நாட்களில் எனக்கு தமிழீழத்தை பற்றி சிந்திக்கும் வயது வந்த போது ஊர் முழுக்க இந்த நாட்கள் நினைவு நிகழ்வுகளோடு நிமிர்ந்து நிற்கும் தமிழீழ தேசத்து மக்கள் அனைவரையும் போல நானும் முழுமையான நினைவுகளோடு நிமிர்ந்து நின்றேன். , தினமும் எங்கள் பாடசாலைகளில் காலை நினைவு நிகழ்வு முடிந்த பின்பே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும். அது மட்டும் இல்லாது பாரிய நினைவிடங்கள் அமைக்கப்பட்டு அங்கே நினைவு நிகழ்வுகளும் அடையாள உணவுத் தவிர்ப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கும், அந்த நாட்களில் அநேகமாக உணவுத் தவிர்ப்பு என்பது நிச்சயமான ஒன்றாக இருக்கும். அநேகமாக எனது பாடசாலை கலந்து கொள்ளும் நாளிலும் இறுதி நாளிலும் என் கவிதை அல்லது நினைவுரை அந்த பாரிய மேடையில் இருக்கும். தியாக தீபத்தின் நினைவோடு நாங்கள் கரைந்தொழுகிக் கொண்டிருப்போம்.

அதேநேரம் 2009 ஆம் ஆண்டுவரை நாங்கள் வீட்டில் இருந்தோம் அல்லது இல்லை என்பதைத் தாண்டி இந்த நாட்களில் எம் வீட்டு வாசல்களில் புதுக் கோவில்கள் உருவாகிக் கொண்டே இருந்தன. அதற்குப் பின்பு கூட வீட்டுக்குள் சாமி அறைகள் இந்த நாட்களில் உருவாகின. பன்னிரண்டு நாட்களும் பூப் பறித்து வணங்கியபடியே இருந்தார்கள். எம் வீரத் தியாகங்களின் வீரக்கதைகள் ஊட்டப்பட்டுக் கொண்டேதான் இருந்தது. ஆனால் இன்று வீதிகள் எங்கும் எங்கள் இரத்தம் குடித்த பச்சை உடைகளுக்குள் மினுமினுக்கும் சப்பாத்துக் கால்களின் கீறல்களுக்குள் மிதிபட்டே எம் தாயகம்  கிடக்கிறது.

அதனால், இருட்டறைக்குள் சிறிய ஒளி விளக்குகள் அந்த நேரத்துக்கு மட்டும் முளைக்கின்றன. சில துணிந்த உணர்வாளர்களால் மட்டும் வீதிகளிலும், நினைவுகள் உணர்வோடு நல்லூரிலும், தாயகம் முழுவதிலும் நிமிர்ந்து நிற்கிறது. அதை விட வேறெதுவும் செய்ய முடியாத கொடூரத்தில் தான் இருக்கிறது. அதை விட புலம்பெயர் தேசங்களில் ஒற்றை நாள் நிகழ்வுகளில் தியாக தீபத்தின் நினைவுகள் நிமிர்ந்து நிற்கின்றன. அதைப் போலவே என் வீட்டின் ஒற்றை அறைக்குள் திலீபனின் நினைவு ஒற்றை விளக்கோடும், ஒரு பூங்கொத்தோடும் எழுந்து நிற்கிறது.

இப்படியான தியாகங்களை மதித்த இளைய தலைமுறையாக நாங்கள் இருந்தோம். ஆனால் இப்போது…? எமக்கு பின்னுள்ள அல்லது வரப் போகும் தலைமுறை இவ்வாறு இத் தியாகங்களை நினைத்தாவது பார்க்குமா? எங்கோ ஒன்று இரண்டு இளையவர்களைத் தவிர இவ்வாறு எமக்காக தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைப்பதற்கு இப்பூமியில் இளையவர்கள் இருப்பார்களா? வினாக்குறியைத் தவிர வேறெதுவும் இல்லை…

அனுபவ எழுத்து : இ.இ. கவிமகன்

நாள் : 25.09.2019