நீண்ட காலமாக தமிழர்களது பூர்வீக உரிமைகளை சிங்களமயமாக்குவதும், தமது அடையாளங்களே இலங்கைத் தீவு முழுவதும் உள்ளதாக வரலாற்றை மாற்றுவதும் சிங்கள தேசத்தால் திட்டமிட்டு நடாத்தப்படும் இனவழிப்பின் தொடர்ச்சி. இந்த தொடரின் ஒரு அங்கம் தான் கன்னியாபகுதி சிங்கள தேசத்தின் தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்துக்கு சொந்தமானது என அறிவித்து அங்கே இருக்கும் தமிழர்களை அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவது. அதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வரும் சிங்கள அரசின் நடவடிக்கைகளை மறுதலித்து இது தமிழர்களின் பூர்வீகம் என்பதை அடையாளப்படுத்துவதற்கான தமிழீழ மக்களினால் ஒருங்கிணைந்த அடையாளப்படுத்தல் ஒன்று இடம்பெற்றது. அவை தொடர்பாக அவ்வடையாளப்படுத்தலின் ஏற்பாட்டாளர்களில் ஒருவராக இருக்கும் தளம் அமைப்பின் அமைப்பாளர் திரு கார்த்திகேயனுடனான சந்திப்பு ஒன்று இது.


வணக்கம் திரு கார்த்திகேயன்
தங்களின் சிறு அறிமுகத்தை தர முடியுமா?


எனது இனத்திற்கான உரிமைகளைத் தடையின்றி அனுபவிக்கத் துடிக்கும் திருகோணமலையைச் சேர்ந்த ஓர் இளைஞன். பல்கலைக்கழக மாணவன். திருகோணமலை இளையோர் சமூகத்துக்கு தொழில் மற்றும் கல்வி வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் “தளம்” எனும் ஓர் அமைப்பை முன்னெடுத்து வருகின்றேன்.


இன்று நடந்த கன்னியா தமிழர்களின் பூர்வீகம் என்ற அடையாளப்படுத்தல் செயற்பாட்டுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்புள்ளது ?


தென்கயிலை ஆதீனத்தின் தலைமையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட அடையாளப்படுத்தலில், எமது மரபுரிமையை அடையாளப்படுத்தும் நோக்கில் செயற்பட்ட ஓர் ஏற்பாட்டாளர்.


கன்னியா சிங்கள தொல்லாய்வுத் திணைக்களத்துக்குச் சொந்தம் என சிங்கள அரசு கூறுவது எம் இனத்தின் மீது கட்டவிழத்து விடப்பட்டுள்ள இனவழிப்பின் ஒரு சாரம் என்று கூற முடியுமா?

நிச்சயமாக. 2009ம் ஆண்டு தமிழினப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் தனித்துவத்தையும், மரபுரிமைகளையும் இல்லாதொழிக்கும் நோக்குடன் பேரினவாத அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. கன்னியா திருகோணமலைத் தமிழர் தொடக்கம் உலகத் தமிழர் வரை அனைவரது வரலாற்றுக்கும் ஓர் அடையாளம். அதனை தமிழரிடமிருந்து பறிப்பதன் மூலம் பேரினவாதம் தமிழரின் தனித்துவத்தை இழக்கச் செய்ய விரும்புகின்றது.


தமக்கு சொந்தம் என உரிமை கொண்டாடுவதன் மூலமாக சிங்கள தேசம் என்ன விடயத்தை கையாள நினைக்கிறது?


சிங்களம் எனும் மொழி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் பிடித்துக் கொண்ட ஊன்று கோல் தான் பௌத்தம். சிங்கள பௌத்தம் வரலாற்றில் மெல்ல மெல்ல தனக்கான இடத்தை உருவாக்கி கொள்கின்றது. அதன் ஒரு படிநிலை தான் கன்னியா மரபுரிமை அழிப்பு. இதன் மூலம் சிங்கள பௌத்தம் தனக்கான ஓர் நிலையான வரலாற்று ஆதாரத்தை உருவாக்கி கொள்ளும். அதே சந்தர்ப்பத்தில் தமிழருக்கு திருகோணமலை மற்றும் ஈழம் மீதுள்ள உரிமையை இழக்க செய்ய முடியும்.


வரலாற்றைத் திரிவு படுத்துவதன் மூலமாக தமிழர்களின் தொன்மையைத் தொலைக்க சிங்கள தேசம் முனைந்து வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதற்கு வேறு ஆதாரங்கள் உள்ளனவா?

அப்பட்டமான உண்மை. திருகோணமலையில் கோணேஸ்வரம் தொடக்கம் கன்னியா வரை தமிழரின் வரலாற்று ஆதாரங்களை மழுங்கடித்து, வரலாற்றுத் திரிபை உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர் சமூதாயமே தங்களுக்கான தனித்துவத்தை இழக்கும் நிலையை உருவாக்க விரும்புகின்றது.
அண்மையில் மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரைப் பகுதியில் தமிழரின் தொன்மை அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவை பற்றி எதாவது தகவல்?அது தொடர்பில் போதிய அறிவு எனக்கில்லை.


பின் காலத்தில் அப்பகுதியும் சிங்கள தேசம் உரிமை கொண்டாடும் தருணம் வரும் என்று நினைக்கிறீர்களா?

இது பொதுவான உண்மை. சிங்கள பௌத்தம் தனக்கான வரலாற்று ஆதாரங்களை உருவாக்க முனைகின்றது. அதே வேளை தமிழரின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கவும் விரும்புகின்றது. எனவே அதிக காலம் ஆகாது.


சிங்கள தொல்லியல் ஆய்வாளர்கள் தமது பகுதிகளை மட்டும் ஆய்வு செய்வதாகவும், பௌத்த மதம் தொடர்பானவற்றை மட்டுமே கண்டு பிடித்ததாக தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறதே? அது பற்றி ?


இலங்கை அரசின் தொல்லியல் துறை பௌத்த பேரினவாதத்துக்காக மாத்திரமே இயங்குகின்ற ஓர் அரச இயந்திரம். இலங்கை தீவில் நான்கு அடி ஆழத்துக்கு கீழ் மண்ணுக்குள் எது எடுத்தாலும் அது சிங்கள பௌத்தத்தின் சுவடாகவே பேரினவாதம் அதனை கையாள்கின்றது.
தமிழ் தொல்லியல் ஆய்வாளர்கள் ஏன் இவற்றில் ஆர்வம் காட்டவில்லை?அது எமது குறைபாடே. நாம் எமது இனத்துக்கான வரலாற்று சுவடுகளின் நீண்ட நாள் இருப்பு தொடர்பில் கவனம் செலுத்துதல் குறைவாகவுள்ளது. பேரினவாதத்தின் அடக்கு முறையின் பின்னரே நாம் போராட தொடங்குகின்றோம். ஆனால் வருமுன் காப்பதே சிறப்பு.


இவ்வாறான செயற்பாடுகளை முறியடிக்கவும் தமிழ் இளையவர்களுக்கும், அடுத்த சந்ததியினருக்கும் எமது வரலாற்றுத் தொன்மைகளை கொண்டு செல்லவும் திட்டங்கள் உண்டா?

நிச்சயமாக உண்டு. தன்னல நோக்கற்ற, தமிழினப்பற்றுள்ள இளையோர் சமூதாயத்தை உருவாக்குவதன் மூலமும், அவர்களை இலங்கை அரசின் அரச இயந்திரத்தில் பங்காளிகள் ஆக்குவதன் மூலமும் தமிழருக்கு எதிரான பேரினவாதத்தின் அடக்குமுறையை முறியடிக்கலாம்.


இன்றைய அடையாளப்படுத்தல் கள நிலவரம் எவ்வாறு இருந்தது?

இளையோர் அதிகளவில் பங்குபற்றி இருந்தார்கள். தமிழரின் கன்னியா மீதான மரபுரிமையை அடையாளப்படுத்துவதே எமது நோக்கமாக இருந்தது. பேரினவாதத்தால் எமது உரிமை மறிக்கப்படும் என நினைத்திருந்தோம். இருப்பினும் கன்னியாவுக்கு அருகில் கூட செல்லமுடியாதவாறு பிரதான வீதியிலேயே மறிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை.அரசியல் கலப்பற்ற ஓர் அடையாளப்படுத்தல் நிகழ்வாக தென்கயிலை ஆதீனத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


வடக்கின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்திருந்ததாகவும் அதற்கு பல இடையூறுகளை சிங்கள தேசம் கொடுத்ததாகவும் தகவல்கள் வந்தனவே அவை பற்றி?

ஆமாம். வடக்கு மட்டுமல்ல திருகோணமலையிலிருந்து கூட கன்னியா செல்வதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன.எத்தனையோ தடைகளை மீறியும் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து மாணவர்கள் உட்பட பலர் பங்கு கொண்டிருந்தனர்.


புல்மோட்டைப் பகுதியில் என்ன நடந்தது என்று தெரியுமா?

இராணுவத்தினரால் பேருந்து சோதனை சாவடியில் மறிக்கப்பட்டு, டயர் காற்று இறக்கப்பட்டது. அத்துடன் மீளவும் காரணமின்றி மறித்து வைக்கப்பட்டு இருந்தனர்.


தமிழர்களின் பூர்வீக நிலமான கன்னியா வென்னீரூற்று கிணற்றடிக்கு தமிழர்களை அனுமதித்தார்களா? அதே நேரம் சிங்கள மக்களை அனுமதித்தார்களா?

தமிழர் எவரையும் கன்னியா வீதிக்குள் செல்லவே அனுமதிக்கவில்லை. அதே நேரம் சிங்களவர்களை எங்கள் கண் முன்னயே செல்ல அனுமதித்தனர்.


இன்றைய அடையாளப்படுத்தல் ஒருங்கிணைப்பு யாரால் செய்யப்பட்டது? இதன் இலக்கு என்ன?

தென்கயிலை ஆதினத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டது. கன்னியாவில் தமிழரின் மரபுரிமையை அடையாளப்படுதலே எமது நோக்கு. இதன் மூலம் தமிழருக்கு கன்னியா மீது உள்ள உரிமையில் பேரினவாதத்தின் கட்டுபாடு எந்த அளவில் உள்ளது என்பதனை உலகுக்கு வெளிப்படுதல் மற்றும் கன்னியாவில் உள்ள எமது உரிமையை இழக்க திருகோணமலை தமிழர் விரும்பவில்லை என்பதையும் பிரகடனப்படுத்தல்.


அதற்கு தமிழ் மக்களின் ஆதரவு எவ்வாறு இருந்தது?

பலமாக இருந்தது. இளையோர் பலர் பங்குபற்றி இருந்தனர். திருகோணமலையின் கிராமப்புறங்களை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.


இன்றைய கள நிலவரத்தை அடிப்படையாக கொண்டு கூறுங்கள். உங்களின் இந்த முயற்சியின் பெறு பேறு எவ்வாறு அமையும்?

இன்றைய தினம் பேரினவாதம் கன்னியா மீதான தமிழரின் உரிமையை முற்றாக நிராகரித்து விட்டது என்பது தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கன்னியா மீதான வெளிப்படையான, நிரந்தர உரிமையை பெறுவதற்கான தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகள் இனி எழும்.


தொடரும் சிங்கள தேசத்தின் இச் செயற்பாடுகள் தடுக்கப்படவில்லை என்றால், நிச்சயமாக தமிழர்களின் பூர்வீகம் முழுமையாக பறி போகும் அபாயம் உண்டு. அதை பாதுகாக்க/ தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

தமிழர் சமூதாயம் கட்சி, பிரதேசவாதங்களை துறந்து ஒன்றிணைய வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளை பேரம் பேசி அரசுடன் செயற்பட செய்யவேண்டும். தமிழரின் உரிமை இழப்புகளை அனுமதிக்கக்கூடாது.


தமிழ் அரசியல் தலைவர்களின் பிரசன்னம் இருந்ததா?

திருகோணமலை மாவட்டத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்குபற்றவில்லை. ஸ்ரீநேசன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் ஏனைய திருகோணமலை நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் பங்குகொண்டிருந்தனர்.


அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது?

மதிக்கத்தக்கது. அடையாளப்படுதலை சுய அரசியலுக்கோ அல்லது கட்சி அரசியலுக்கோ பயன்படுத்தாமல் பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டனர்.


ஊடகவியலாளர்களுக்கு தம் பணிகளை செய்ய சுதந்திரம் இருந்ததா?

இருந்தது குறைவு.


தமிழ் ஊடகங்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

தமிழரின் உரிமை மறுப்பை உலகறிய செய்யுங்கள். ஆங்கில மற்றும் சிங்கள மொழியிலும் பதியுங்கள்.

இறுதியாக தமிழ் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

தனித்துவத்தை இழந்தால் 30 வருட போராட்டமும், எமது இழப்புகளும் பலனற்றதாகிவிடும். ஆகவே எமது வரலாற்றுச் சுவடுகளைப் பாதுகாப்பதன் மூலமும், எமது கலாச்சாரத்தை பாதுகாப்பதன் மூலமும் தனித்துவத்தை பேண வேண்டும்.


நன்றி கார்த்திகேயன்

நன்றி கவிமகன்

இப்புகைப்படங்கள் உரிமம் யார் என்று தெரியவில்லை. இவற்றை நாம் GOOGLE and FACEBOOK இல் இருந்து பெற்றுக் கொண்டோம். உரிமம் உள்ளவர்கள் மன்னித்துக் கொள்ளுங்கள்.

இப்புகைப்படங்கள் வீரகேசரி இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை நன்றி வீரகேசரி