2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசமே எங்களைக் கைவிட்டுவிட சிங்கள இனவெறிப் படைகளின் இனவழிப்பின் உச்சம் நடந்து கொண்டிருந்த நாள். நாம் எமது இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று.வழமை போலவே அந்த இரவும் எமக்கு விடிந்து போனது. எறிகணையும் ரவையும் விமானமும் எங்கள் தலைகளை குறிவைத்து பாய்ந்து வந்து கொண்டிருந்தன. அவ்வாறான தாக்குதல்களின் மூர்க்கத்திலும், எம்மைப் பாதுகாத்துக்கொள்ள பதுங்ககழிகளை அமைக்க வேண்டிய தேவை இருந்தது.

அதனால் அதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த நந்திக் கழிப் பகுதியில் பதுங்ககழி அமைப்பது என்பது நினைக்க முடியாத காரியமாக இருந்தது அந்த பிரதேசம் வறட்டிக்கழிமண்ணால் ஆனது. அதனால் மண்வெட்டியை எம்மால் பயன்படுத்த முடியவில்லை. மண்ணை வெட்டும் ஒவ்வொரு தடவையும் மண்வெட்டி கணீர் என்ற ஒலியோடு சறுக்கிக் கொள்ளும். மீண்டும் முயலுவோம். மீண்டும் சறுக்கும். இவ்வாறு அந்தப் பற்றைக் காட்டுக்குள் தீவிரமான முயற்சியின் பின் ஒரு சிறிய” I ” வடிவ பதுங்குகுழியை அமைத்து முடித்தோம்.

அப்போது அம்மாவின் குரல் ஒலிக்கிறது. “எல்லோரும் சாப்பிடுவம் வாங்கோ”… கிடந்த சிறிய அளவு அரிசியில் கிடைத்த உப்பை இட்டு காச்சப்பட்ட கஞ்சிதான் உணவு. அதற்குள் அரிசியை விட தண்ணீர் தான் அதிகம் இருக்கும். ஆனாலும் கிடைக்கும் அந்தக் கஞ்சி இரண்டு நாளுக்கு கொஞ்சம் பலத்தைக் கொடுக்கும். விரும்பியோ விரும்பாமலோ அனைவருமே பிரியத்துடன் குடிக்க வேண்டிய சூழல். ஏனெனில் எப்ப கிடைக்கும் என்று தெரியாத நிலையில் கிடைக்கும் அருமையான உணவு. அதிலும் ஒரு குவளை கஞ்சிதான் அப்போதெல்லம் எமக்கு கிடைக்கும் உணவு.

இது ஒருபுறம் இருக்க, அதை குடிக்க என்று தலை நிமிர்த்தி நடக்க முடியவில்லை. தூக்கினால், வற்றாப்பளைப் பக்கமாக இருக்கும் சிங்களத்தின் பதுங்கி சுடும் குறியாளர்களின் தாக்குதல் நிட்சயமாக எம்முயிரைப் பறிக்கும். அதனால் குனிந்து கொண்டும் தவழ்ந்தபடியும் பற்றை மறைவுகளுக்கால் அம்மா இருந்த பற்றை பக்கமாக செல்கிறோம்.

அப்போது என் சித்தப்பாவின் மகள் என்னை அழைத்து “தூதுவளை சம்பல் “ தாறதா என வினவுகிறாள். எப்பிடி அதை தயார் செய்தாய் ? அவள் பற்றைக்கு மேலே படர்ந்திருந்த தூதுவளை கொடியை நிமிர்ந்து பார்க்கிறாள். அந்தப் பார்வை எனக்கு பதிலைத் தந்தது. அதனால் அந்த ஆராட்சியை அதோடு நிறுத்தி விட்டு வெறும் உப்புக் கஞ்சிக்கு அந்த சம்பல் சுவையாக இருக்கும் என்று நம்பி கஞ்சியை உறிஞ்சத் தொடங்கினேன். அவளோ அங்கே பற்றைக்குள் படர்ந்திருந்த தூதுவளை இலைகளை பறித்து உப்பு மட்டும் போட்டு சம்பலை செய்திருந்தாள். எனது தங்கை செய்த தூதுவளை சம்பலை சுவைத்துக் கொண்டு கஞ்சியை குடித்த போது உண்மையில் அந்த நேர மரண அச்சம் கூட காணாமல் போயிருந்தது.

எமக்கு சாவுக்கான மணித்துளி எண்ணப்பட்டுகொண்டிருந்த போதும் கஞ்சிக்கு சுவையாக அதை தயார் செய்ய அவளுக்கு எப்படி எண்ணம் வந்தது? யாரும் அறியா நியம். பல வேளைகள் உண்ணாதிருந்த எமக்கு அது உண்மையில் அமிர்தமாகவே இருந்தது.

தொடர்ந்து கொண்டிருந்த தாக்குதல்கள் எம்மை நிலத்தில் இருந்து நிமிர முடியாது வைத்திருந்தது. அன்றைய பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்த அந்த மணிப்பொழுதில் வெற்று அமைதியாக கழிந்தது நடுச்சாமம். கேட்டுக் கொண்டிருந்த அல்லது பாய்ந்து வந்து கொண்டிருந்த உயிர்குடிக்கும் இரும்புத் துண்டுகளின் வரவில் அப்போது சிறு ஓய்வு வந்தது. பத்து பதினைந்து நிமிடங்கள் அது நீடித்திருக்கும். அதுவே எங்கள் மேல் விழப்போகும் சாவுக்கான குறியீடு என்று எமக்கும் புரியவில்லை. அதனால் சிறிது நேரம் விழி அயர்ந்து போனோம்.

அந்த அமைதிக்குப் பின் பெரும் பிரளயமே உருவாகப் போகிறது என்பது எமக்குத் தெரியவில்லை. நாங்கள் கண்மூடிக் கிடந்தோம். நானும் என் மைத்துனனும் ஒரு வீர மரத்தின் வேர்களுக்கு இடையில் தலையை வைத்தபடி உறங்கிப் போனோம். அந்தத் தூக்கம் வெறும் 10-15 நிமிடமாக இருக்கலாம். திடீர் என்று எங்கள் தலைக்கு மேலாக “வண்டு” என்று எம்மால் குறியிடப்படும் வேவுவிமானம் (Beech Craft ) ஒன்றுசுற்றிச் சுழல்கிறது. வேகமாக அந்த ஒலி இரைகிறது. அதன் இரைச்சல் என் மனதுக்கு நடக்க இருக்கும் அசம்பாவிதத்தை உணர்த்தியது. தூங்கிய அனைவரையும் எழுந்து பாதுகாப்பு தேட சொல்லி உத்தரவிடுகிறேன். அனைவரும் தம்மால் முடிந்த பாதுகாப்பு நிலையை எடுப்பதற்காக குப்பற படுத்து கொள்கிறனர்.

நான் நினைத்ததைப் போலவே குறித்த ஓரிரண்டு நிமிடத்தில் முல்லைத்தீவில் அமைந்திருந்த பிரதான ஆட்லறித்தளத்தில் இருந்து எறிகணை ஏவப்படுகிறது. பராஜ்ச் என்று கூறப்படும் பல்முனைத் தொடர் தாக்குதலுக்கு நந்திக்களிப் பகுதி இலக்காகிறது. அப்போது தான் ஒரு எறிகணை நாம் தங்கி இருந்த பற்றைகளைத் தாண்டி ஐந்து மீற்றர் தூரத்தில் மரம் ஒன்றின் அடியில் விழுந்து வெடிக்கிறது. மரங்கள் முறிந்து சரிகின்றன. திடீர் என்று மரண ஓலம் எங்களை தவிக்க வைக்கிறது.

யாருக்கு என்ன நடந்தது என்று புரியாத அளவிற்கு கதறல் ஒலியும் தொடர்ந்த தாக்குதல்களும் செவியை அடைத்தது. எறிகணை வெடித்த மரத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த பனங்குற்றிகளால் மூடிய பதுங்ககழிக்குள் இருந்தவர்களின் சத்தத்தை காணவே இல்லை. எறிகணைத் தாக்குதலால் முழுமையாக அது சிதைந்து கிடந்தது. அதற்குள் சிறுநேரத்துக்கு முன்னால் எதோ ஒரு தேவைக்காக தாயிடம் அடம்பிடித்து அழுது கொண்டிருந்த குழந்தையின் சத்தமும் அடங்கிப் போயிருந்தது. கிட்டத்தட்ட பத்துக்கும் அதிகமான ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதற்குள் இருந்தார்கள். இப்போது அவர்கள் எவரின் சத்தமும் கேட்கவில்லை. அத்தனை பேரும் இறந்திருப்பர் என்றே நான் நம்பினேன். அதனால் என்ன நடந்தது என்று பார்க்கலாம் என எழுந்தோடிய போது, என் உறவுகளின் கதறல் என்னைத் தடுத்து நிறுத்தியது.

எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலர் அந்ததாக்குதலில் படுகாயமடைந்திருந்தார்கள். 25 பேருக்கு மேலாக நாம் ஒரே இடத்தில் தங்கி இருந்தோம். அதனால் அந்த ஒற்றை எறிகணை எம் குடும்பத்தில் பலரை தாக்கிச் சென்றது. அங்கே படுத்திருந்த என்னையும் மைத்துனனையும் தவிர மற்ற எல்லோர் உடல்களையும் எறிகணைச் சிதறல்கள் கீறி சென்றன. என் தந்தை தலையிலும் சிறிய தந்தை முதுகிலும்என காயமடைகிறார்கள். சிறிய தந்தையின் இரு மகள்களும் இன்னும் ஒரு சித்தியின் மகளும் பலத்த காயங்களுக்குள்ளாகிறார்கள்.

அது மட்டுமல்லாது ஏற்கனவே காலில் 8 இஞ்சி அளவுக்கு எலும்பை இழந்து காயப்பட்டிருந்த மூத்த போராளியும் எனது மைத்துனனுமான தயா என்ற போராளியும் அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரி சகோதரன் என அனைவரும் பாரிய காயங்களுக்குள்ளானார்கள். திரும்பும் இடமெங்கும் இரத்த வெள்ளம். நான் நிதானித்து எழுந்திருக்க முதல் ஒவ்வொருவரும் என்னை அழைக்கிறார்கள். கவி என்றும் அண்ணா என்றும் தம்பி என்றும் அழைத்த குரல்களுக்குள் நான் தடுமாறத் தொடங்கி விட்டேன். ஆனாலும் நிதானமாக செயற்பட்டேன்.

மைத்துனனும் நானும் அருகருகே வெடித்துக் கொண்டிருந்த எறிகணைகளை பொருட்படுத்தவில்லை. எப்படியாவது எல்லோரையும் காத்துவிட வேண்டும் என்ற எண்ணம். கொலைவலையமாக இருந்த அப்பிரதேசத்தில் என் உறவுகளைக் காப்பாற்றப் போராடினோம். அனைவரின் காயங்களுக்கும் கட்டுபோட முடியவில்லை யாருமே யாரையும் பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு அந்த இடம் முழுவதும் புகை சூழ்ந்திருந்தது. அழுகுரல்கள் வானளவு எழுந்தது. முதலில் பலமான காயமடைந்தவர்களின் காயங்களுக்கு முதலுதவி செய்கிறோம். சிறுகாயமடைந்த மற்றவர்கள் தாமே தமக்கு கட்டுப் போடுகிறார்கள்.

அப்போது சித்தப்பா என்னை அழைத்தார். தங்கைச்சிய பாருடா தம்பி என்று கூறியபடி அவளை தூக்கினார். அவளின் வாயில் இருந்து இரத்தம் வெளிவந்து கொண்டிருந்தது. முதுகுப்பக்கத்தால் உட்புகுந்த எறிகணைத்துண்டு இதயத்தின் அருகே கீறலை உருவாக்கி தங்கிக் கொண்டது. வெளி வராது உள்ளே நின்று கொண்ட அந்தத் துண்டு அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது. அவள்இறந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த போது என்னால் என்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. அண்ணா

“ தூதுவளைச் சம்பல் வேணுமா “

என்று கேட்டு எனக்கு இறுதியாக உணவு தந்த அவளது கரங்கள் சோர்ந்து கொண்டிருந்ததை என்னால் தாங்க முடியவில்லை. வழமையாக தனது தாயோடு படுத்து தூங்கும் அவள் அன்று சாவதற்காகவோ என்னவோ

“பெரியம்மா உங்களோட வந்து படுக்கவா ? “

எனக் கேட்டு என் அம்மாவின் இருகில் படுத்த காட்சி எனக்கு நெஞ்சை உருக்கியது. என் தாய் அவளின் நிலையை பார்த்து

“ஏனடி என்னோட வந்து படுத்தாய் கொம்மாவோட படுத்திருந்தா தப்பி இருப்பியேடி”

என்று அழத் தொடங்கிய அந்த நிமிடம் என்னால் எப்போதும் கடந்து செல்ல முடியாதது.

உடனடியாக அவளைத் தூக்கிக் கொண்டு போங்கோ என்று சித்தப்பாவை பணித்து விட்டு மற்றவர்களில் யாருக்கு பாரிய காயம் என பார்த்து நடக்க கூடியவர்களை நடத்தியும் தூக்க வேண்டியவர்களை ஏலுமானவர்கள் தூக்கிக் கொண்டும் சிறு காயமடைந்தவர்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தி விட்டு இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்குச் செல்கிறேன்.

அங்கே நிறைந்து கிடந்த காயக்காறருள் யாரைத் தரம் பிரித்து சிகிச்சை செய்வது என்று தெரியாத அளவுக்கு பாரிய காயங்கள் நிறைந்து கிடந்தது. மருத்துவப் போராளிகள் முடிந்தவரை காயங்களுக்கு சிகிச்சை செய்கிறார்கள். என்னையும் மைத்துனனையும் முடிந்தவரை குருதியை கட்டுப்படுத்த சொல்லி பணிக்கிறார்கள். நாங்கள் அங்கே வந்த பெரும்பாலானவர்களுக்கு பெட்சீட்டுகளாலும் கிடைத்த துணிகளாலும் குருதியை கட்டுப்படுத்த முயல்கிறோம்.

அதே நேரம் அங்கே இருந்த மருத்துவ போராளியான இறையொளி என் தங்கையை அவசரமாக பரிசோதிக்கிறார். அவள் இறந்து விடுவதற்கான சாத்தியமே அதிகம் எனத் தெரிந்தும், “முயற்சி செய்வம்.” என்று கூறியபடி சிகிச்சை கொடுக்கிறார். இதயைத்தை வெட்டியபடி உள்ளே நின்ற எறிகணைத்துண்டில் இருந்து தங்கைச்சியை காப்பாற்றுவது சாத்தியமில்லை என்று தெரிந்தும் முழு முயற்சியையும் செய்தார் மருத்துவர் இறையொளி. சிகிச்சை முடித்து வெளியில் கொண்டு வந்து பாயில் கிடத்திய படி கொஞ்ச நேரத்தில தான் தெரியும் என்ன நிலமை என்று அதுவரை இதில கிடக்கட்டும் என்று கூறி அவர் அடுத்த காயத்துக்கான சிகிச்சைக்குச் சென்ற போது அவள் தலைசரிந்து கிடந்த கோலத்தைப் பார்த்து, அவளது நாடியைப் பிடித்துப் பார்க்கிறேன். அவள் துடிப்பு அடங்கி விட்டது. என் கண்முன்னே ஆசையாக அண்ணாவுக்கு தூதுவளைச் சம்பல் செய்து தந்த எனது தங்கை சுலக்‌ஷனா சிங்களத்தின் கொடூரமான இனவழிப்புத் தாக்குதலில் சாவடைந்த கணம் எப்படி மறக்கக் கூடியது…?

அங்கே நின்ற இன்னும் ஒரு மருத்துவப் போராளி அவள் சாவடைந்து விட்டதை உறுதிப்ப்டுத்துகிறார். விழிகள் கலங்க நானும் சித்தப்பாவும் அவளை தூக்கிச் சென்று வெளிப்பக்கமாக இறந்த உடலங்கள் குவிக்கப்பட்டுக் கிடந்த இடத்தில் வெற்றுத் தரையில் படுக்க வைத்துவிட்டு மற்றவர்களை பார்க்க என்று நகர்ந்து சென்றோம்.

நினைவுப் பகிர்வு : இ.இ. கவிமகன்
நாள் : 13.05.2020