இன்று எமது இயக்கம் எவ்வளவு அமைப்பாக வளர்ந்து…, எவ்வளவு பெரிய சாதனைகளைப் புரிந்து …, எண்ணிப்பார்க்கிறேன். அன்று இந்த இயக்கம் எப்படியெல்லாம்
வளர வேண்டும் என்று கனவு கண்டவர்கள் இந்த இயக்கத்தை சுமக்கின்ற தூண்களாக நின்றவர்கள்…. இன்றுஎங்கள் நினைவுகளில் சீவப்பட்டவர்களாகி.. எத்தனை காலம்…?

இவர்களில் ஒருவன் தான் லெப்டினன் சங்கர். எந்தக் கடுமையான காரியத்தையும் சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டு செயலாற்றுவான். இவனுடைய தாக்குதலணிப் பிரிவில் பங்குபற்றுகின்ற வீரர்கள் எந்தக்கிலேசமுமின்றி தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் கருமமாற்றுவார்.

எமது விடுதலை இயக்கத்தின் அத்திவாரத்தை, ஆட்டங்காணச் செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்ற இனத்துரோகிகளையும், உளவுப் படைகளையும் ஆட்டங்காணச் செய்வதே எமது போராட்டமாகிப் போன எத்தனைபெரிய சாதனைகளை இவன் செய்தான்.

தலைவர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தி கேள்விப் பட்டதும் நாமெல்லாம் மிகவும்ஆத்திரமும், வேதனையும் துடிப்பும் அடைந்தோம். சங்கரும் அப்படியே தலைவர் மீது ஆழ்ந்த அன்பும், பாசமும்நம்பிக்கையும் வைத்திருந்தான்.

தலைவரை விடுவிக்க என்ன செய்யலாம்…? எல்லோருடைய கேள்வியும் இதுவே. இறுதியில் நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து ஆலோசித்து தலைவரை விடுவிப்பதற்காக பல முயற்சியல் இறங்கினோம். இந்த வகையில் சங்கரின்பங்கு மிகப் பெரியது. ஈற்றில் நாம் வெற்றி கண்டோம்.

நெல்லியடி பொலிஸ் ஜீப் தாக்குதல் இவனின் வீரத்திற்கு எடுத்துக்காட்டு. சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தாக்குதலில் இவனின் சாதனை பெரியது. தாக்குதலின் முடிவில் கூட காயப்பட்டவர்களையும் கொண்டு வந்துசேர்ப்பதில் இவனின் வேகம் …, விரைவு… ,பலம்…

எதிரியின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு விடுதலைக்காய் வியர்வை சிந்திக் கொண்டிருந்த சங்கர் ஒருநாள்இரத்தத்தை சிந்திக் கொண்டிருந்தான்.

ஆம். அவன் யாழ் குடாநாட்டில் ஒரு வீட்டில் வைத்து எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு சுடப்பட்டுவிட்டான். வயிற்றில் குண்டை வாங்கிக் கொண்ட போதும் சிங்களச் சிப்பாய்களை ஏமாற்றிவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறான். கையில் ஒரு கைத்துப்பாக்கி ( பழையது 45) அவனுடைய இலட்சியப்பற்றும், உறுதியும், அர்ப்பண உணர்வும் அவனின் இறுதி முயற்சிக்கு கைகொடுத்தன. வயிற்றிலிருந்து குருதி வழிந்தவாறே இருக்க, அவன் அனுபவித்துக் கொண்டிருந்த ரணவேதனையையும் மீறிக் கால் தசைகள் பலமாகவும், வேகமாகவும்இயங்கி அவனை தோழர்களிடம் கொண்டு வந்து சேர்த்தது.

எவ்வளவோ சிரமத்தின் மத்தியிலும் அவனைப் படகு மூலம் தமிழ்நாட்டுக்கு கொண்டு போய் சேர்த்தோம். தன்உடலில் உள்ள குருதி முழுவதையும் சிந்திய நிலையில் சங்கர் வலுவிழந்து கிடந்தான். முதன் முதலாக எமதுகுடும்பத்தில் ஒருவன் மண்ணுக்காக குருதியை சிந்திவிட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறான்.

அப்பொழுது நாம் 20-25 பேர்கள் தான் இருப்போம். சங்கர் மீதுள்ள அன்பாலும், பாசத்தாலும் ஒரு தந்தையைப்போன்று தலைவர் மிகவும் சோகமே உருவாக்க் காணப்பட்டார். தன் உடலில் உள்ள குருதியை சங்கரின்உடலுக்கு கொடுத்தார். அவன் உயிரோடு பிழைத்துத் தன்னோடு விடுதலைப் பணியினைத் தொடருவான் என்று. நம்பிக்கையை மெதுமெதுவாகக் கொண்டு சங்கர் தலைவரின் மடியிலேயே நிரந்தரமாக படுத்துக் கொண்டான்.

அவன் நம் எல்லோரையும் விட்டுப் பிரிந்து விட்டான். நம் உடன்பிறப்பு நம்மெல்லோரையும் விட்டுப் பிரிந்துவிட்டது. இத்தகைய துயரம் நிறைந்த நாளே இன்று நம் தோழர்கள் அனைவரினதும் நினைவு நாளாக நம்நெஞ்சங்களை நெருடுகின்ற நாளாக, எங்கள் உயிரானவர்களை உணர்கின்ற நாளாக மாவீரர் நாளாகப்பிறப்பெடுத்திருக்கிறது.

எழுதியது: லெப். கேணல் அப்பையா அண்ணா
நாள்: 27.11.1991
வெளியீடு: ஈழநாதம் நாளிதழ்
தட்டச்சு: புலர்வு இணையம்
புகைப்படம்: கூகிள் இணையம்