ஒற்றைப்புள்ளியில் ஒருமைப்படுவோம்! என்னடா விந்தை உலகமாக இருக்கிறது சொன்ன வார்த்தைகளில் தூய்மையற்று கிடக்கிறது கன்னங்களில் பொய்மையே ஊதி வெடிக்கிறது! அண்ணன் இருக்கும்போது ஒரு கதையும் திண்ணை காலியானதும் இன்னொரு கதையுமாக காலம் கால்முறிந்து நடக்கிறது! அருகில் இருந்து நெருப்பு தெறிக்க பாவெழுதி கூவித்திரிந்தவனெல்லாம் நாவழுக்கி மல்லாக்காய் படுத்து துப்புகிறான்! நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்காத நடிகர்களாக தினம் நடிக்கிறார்! ஊரவனும் உறவுக்காரனும் தேசியம் பேசினால் உச்சி முகர்ந்து புகழ்கிறார்! யாரோ ஒருவன் தேசியம் பேசினால் பாராமுகமாய் திரிகிறார்! உண்மையான தேசியமென்றால் என்னவென்று இப்போதுதெல்லாம் தேடிப்பார்க்க தோன்றுகிறது அந்தளவுக்கு அசுத்த ஆன்மாக்களின் அணிவகுப்பில் சகுனிகளின் சன்னதம் நடக்கிறது! நீ விடுதலைக்காக உழைக்கும் உன்னதமான மனிதனாக இருந்தால் கடுகளவு பணியாக இருந்தாலும் எட்டியுதைக்காது கூட்டிச்செல் அல்லது கூடிச்செல் தேசிய சிந்தனையோடு இருப்பவனை இணைத்துக்கொள் எல்லாவற்றையும் ஒற்றைப்புள்ளியில் நிறுத்திக்கொள் அறுத்தறுத்து பங்கு போடுவதற்கு தேசிய பலமொன்றும் ஆட்டிறச்சி அல்லவே! நான் பேசுவதுதான் தேசியம் மற்றவன் பேசுவதெல்லாம் பாசீசம் என்பதுபோல் பாசாங்கு பிரிவினைகளின் மூலதனமாக முளைவிடுகிறது! தேசிய ஆடையணிந்த கறுப்பாடுகள் இப்போது அதிகம் மேச்சலில் திரிகிறது! இதுகளுக்கு தீனிபோட்டு வளர்க்கவும் இடையர்கள் இருக்கிறார்! என்னசெய்வது காலம்தான் ஆடையை விலக்கி காட்டவேண்டும்! வீட்டிலிருந்து முகப்புத்தகத்தில் தேசியம் பேசுவதாலோ நேரங்களை தியாகம் செய்து ஏதாவது செய்யவேண்டுமென்று நினைப்பவர்களை ஒதுக்குவதாலோ ஒன்றும் நடக்கப்போவதில்லை பத்தாண்டு ஆகியும் சுழியத்தில்தான் சுதந்திர தாகம்! இதற்கு வழிதேடாது இழிவுகளையே தொடர்ந்தும் விதைப்போமானால் விளைவு துன்பம்தான்!

✍

புலர்வுக்காக தூயவன்