“கஞ்சி” ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒன்று. உண்ண உணவின்றி உறங்க குடில் இன்று இரத்த வாசத்தை சுவாசித்துக் கொண்டு திரிந்த எமக்கு உண்பதற்காக இருந்த ஒரே ஒரு உணவு இக் கஞ்சி தான். இதை மறப்பதென்பது இயலாத காரியமாகி விட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழினத்தினால் மறக்கவோ மறுக்கவோ முடியாத இனவழிப்பின் சாட்சியம். அங்குதான் எம்மினத்தின் மீது சிங்கள பௌத்த மதவெறி பிடித்த பேரினவாதிகளால் எம் இனம் அழித்தொழிக்கப்பட்டது. உரிமைகள் வேண்டி போராடிய எமது உரிமைப் போராட்டம் வல்லரசுகளால் முடக்கப்பட்டது. அந்த நிலையில் இனவழிப்பு நடந்து முடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணின் குரலாக இச்சந்திப்பில் என்னோடு தனது மனவுணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழீழ நிர்வாகசேவையைச் சேர்ந்த கரன்.

வணக்கம் திரு கரன்

வணக்கம் தம்பி…

 • சொல்லுங்கள் திரு கரன். நீங்கள் ஒரு மக்கள் நலப்பணியாளனாக மே 17 வரை இயங்கியவர் என்ற நிலையில் அங்கே உங்கள் பணி எவ்வாறு இருந்தது?

“தமிழீழ நிர்வாகசேவை “ என்பது பல்முக செயற்பாடுகளைக் கொண்ட விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவு. அதன் நிர்வாக செயற்பாடுகள் பரந்து விரிந்தது. ஆனாலும் நிறைவான பணிகள் பலவற்றை இறுதியாக நடந்த சிங்களத்தின் இனவழிப்பு நடவடிக்கையின் போது எமது மக்களுக்கு நிர்வாக சேவை செய்திருந்தது. நான் நினைக்கிறேன் கிளிநொச்சியில் இருந்து பின்நகர்ந்து விசுவமடு பின்னர் உடையார்கட்டு அதன்பின்னர் இரணைப்பாலை என நாம் எமது அலுவலகங்களை உருவாக்கி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றினோம். அதே நேரம் இரணைப்பாலைக்கு பின் எமது நிர்வாகச் செயற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டன. தனித்து மக்கள் பணிகளில் நாம் ஈடுபட்டோம்.

 • இறுதி நாட்களுக்கே நாம் நேரடியாக வருவோம். அந் நாட்களில் நீங்கள் எவ்வகையான பணிகளை மேற்கொண்டீர்கள்?

மிக முக்கியமான உணவு வழங்கல் மற்றும் காயப்பட்ட மக்களுக்கான பணிகள் போன்றனவே எமக்கு பிரதான பணிகள்.

 • உணவு வழங்கல் பணி என்பது எவ்வாறு இருந்தது?
  உண்மையில் இறுதி நேரத்தில் சிங்கள அரசு எம் மக்கள் மீது பாரிய பொருளாதாராத் தடையை விதித்திருந்தது. நிவாரணப் பொருட்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டது. ஒருகட்டத்தில் நான் நினைக்கிறேன் உடையார்கட்டு என்று அதற்கு பின்பான காலங்கள் இன்னும் மோசமடைந்தது. இந்த நிலையில் எம் மக்கள் பசியில் செத்துப் போகின்ற நிலையில் இருந்தார்கள். அப்போது தான் மக்களுக்கு பசியாற்றும் கஞ்சித் திட்டத்தை செயற்படுத்தத் தொடங்கினோம்.
 • நிச்சயம் முக்கியமாக ஒரு பணியை செய்திருக்கிறீர்கள். அந்தவகையில் இந்தப் பணியை எவ்வாறு செயற்படுத்தினீர்கள்? அதற்கான பொருட்களை எவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள்?

வேறு தேவைகளுக்காக எமது களஞ்சியங்களில் இருந்த அரிசி மற்றும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினூடாக இவற்றைப் பெற்றுக்கொண்டோம்.

 • எத்தனை நிலையங்களை அமைத்து இப்பசியாற்றும் நடவடிக்கையை மேற் கொண்டீர்கள்?

இரணைப்பாலையில் ஆரம்பித்தோம். அதன் பின் மாத்தளனில் இருந்து உண்டியல் சந்திவரை கிட்டத்தட்ட 15 இற்கும் மேலான நிலையங்களை அமைத்திருந்தோம்.

 • உண்மையில் மிக சிறப்பான பணியை செய்துள்ளீர்கள். அந்தவகையில் இந்த செயற் திட்டத்தை மக்கள் எவ்வாறு ஆதரித்தார்கள்?

ஒரு வேளையாவது எம்மக்கள் உணவருந்தாது வாழ்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் இறுதி சண்டை நடந்த காலங்களில் இரண்டு மூன்று நாட்கள் கூட சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள். அந்த நிலையில் கஞ்சித்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கிய போது மக்கள் அதை மிக சந்தோசமாக ஏற்றுக் கொண்டார்கள். அதனால் ஒரு வேளை என ஆரம்பித்த இப்பணியை நாம் மூன்று வேளையும் செய்யத் தொடங்கினோம். நான் நினைக்கிறேன் நாமும் தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் இத்திட்டத்தை நிறைவேற்றியதாலையே பெரும்பான்மையான பட்டினிகள் தவிர்க்கப்பட்டிருந்தது.

 • நிதர்சனமான உண்மை இது. அதனால் உணவு இல்லாத நிலை குறைவாக இருந்தது. இது இவ்வாறு இருக்க உங்கள் கஞ்சி நிலையங்கள் மீது சிங்களப் படைகள் தாக்குதல் செய்தனவா?

நிச்சயமாக … இது பலமுறை நடந்துள்ளது. அதனூடாக எம்மக்கள் பலர் சாவடைந்துள்ளார்கள். வலைஞர்மடம் என்ற இடத்தில் கிட்டத்தட்ட 25 இற்கும் மேற்பட்டவர்கள் ஒரு எறிகணையில் மரணித்திருந்தார்கள். ஏனெனில் சிங்கள படைகள் திட்டமிட்டு எமது கஞ்சி நிலையத்தை தாக்கி இருந்தார்கள். அதை விட இன்னும் ஒரு சம்பவம் நாங்கள் கஞ்சி திட்டத்தை ஒரு புறம் செய்து கொண்டிருக்க இன்னொரு பணியையும் ஆரம்பித்தோம். ஆனால் அதை தொடர முடியவில்லை. “வாய்ப்பன் “ சுட்டு மக்களுக்கு வழங்கினோம். அப்பிடி ஒரு முறை வாய்ப்பன் வாங்குவதற்கு நிரையில் நின்ற எம்மக்கள் மீதும் சிங்களம் தாக்குதல் நடாத்தி இருந்தது. அதில் குறைந்தது ( எண்ணிக்கை நினைவில்லை) எட்டுக் குழந்தைகளுக்கு மேல் இறந்தார்கள். இவ்வாறு தொடர்ந்து தாக்குதல்களைச் செய்து வந்த சிங்களப்படைகள் இரட்டைவாய்க்கால் என்ற இடத்தில் வைத்து எமது களஞ்சியம் ஒன்றை குறிவைத்து உலங்குவானூர்தி மூலம் தாக்குதல் நடாத்தியது. அத்தாக்குதலின் காரணமாக களஞ்சியத்துக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து போயின. அதன் பின் எமக்கு இத்திட்டங்களை கொண்டு நகர்த்துவதில் பிரச்சனைகள் வந்தன. ஆனாலும் இறுதிவரை கஞ்சித்திட்டத்தை கை விடாது நடாத்தினோம்.

 • உண்மையில் இது ஒரு முக்கியமான பணி எந்த இடர் வந்தாலும் அதை தொடர்ந்து செய்திருக்கிறீர்கள். அந்த வகையில் உங்கள் நிலையங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் எவ்வகையான தாக்குதல்களாக இருந்தது? அதாவது இறுதிப் போரில் இரசாயனக்குண்டுகள், கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் என பல முறையற்ற குண்டுகளை சிங்களம் பயன்படுத்தி வந்தது. ஆகவே உங்கள் நிலையங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் எவ்வகையானது?

அதை இனங்காணத் தெரியவில்லை. ஆனால் அதிகமாக பல்குழல்பீரங்கித் தாக்குதல்கள் நடந்தன. அதேவேளை எரிகாயங்களையே அதிகமாக மக்கள் அடைந்தார்கள்.

 • உண்மையில் எரிகாயங்களைத் தரக்கூடிய தாக்குதல்கள் என்றால் இரசாயனக் குண்டுகளாகத் தான் இருக்க வேண்டும். அந்த வகையில் உங்களின் மனதில் அதி உச்ச வலியைத் தந்த தாக்குதல் எதாவது இருந்ததா?

ஓம், நாங்கள் கஞ்சித் திட்டத்தை நிலையங்களை நிர்வகித்து நடத்தினாலும் பல இடங்களில் வீடுகளுக்குச் சென்று மக்களுக்கு உணவு வழங்குவது வழமை. ஏனெனில் சில இடங்களில் காயப்பட்டிருந்தவர்கள் வயோதிபர்கள் கஞ்சியை வாங்க சிரமப்படுவார்கள். அவ்வாறான நேரத்தில் எமக்கு இப்பணி மூலம் அம்மக்களின் பசியாற்ற முடிந்தது. அவ்வாறு ஒரு வீட்டுக்குச் சென்று உணவு கொடுத்த போது, தாம் இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை எனவும் நாம் கொண்டு வந்ததால் உணவருந்த முடிந்தது என்றும் பசியில் கதைக்க முடியாது கதைத்த ஒரு வயோதிபத் தாய் நாம் கொண்டு போன உணவை உண்பதற்காக பாத்திரத்தில் எடுத்து ஒரு வாய் வைத்திருக்கவில்லை அந்த இடத்தை நோக்கி எறிகணை வீசப்படுகிறது. அந்த வயோதிப அம்மா உட்பட 3 அல்லது 4 பேர் அந்த இடத்திலையே மரணித்தனர். எம் மக்களை சாப்பிடக் கூட விடாது சாகடித்தான் இந்த சிங்களவன். (இது கவிமகன் செய்த நேர்காணல்)

 • கொடுமையான தருணம்… எம் மக்கள் விலங்குகளுக்கு உணவு கொடுக்கும் போதுகூட அவற்றைத் தண்டிக்க மாட்டார்கள். அவ்வாறான மக்களை சிங்களப்படை எவ்வளவு மோசமாக கொன்று தீர்த்துள்ளது. இது ஒரு புறம் இருக்க சிங்களப் படைகள் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்திய பல சம்மவங்கள் உண்டு அந்தவகையில் நீங்கள் அது தொடர்பான சம்பவங்களை கண்டதுண்டா?

ஓம், நாம் கஞ்சி வழங்கும் நேரங்களில் தாக்குதல்களால் காயப்பட்ட பலரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். அவ்வாறு கொண்டு சென்ற பல சந்தர்ப்பங்களில் மருத்துவமனை வளாகத்திக்குள் செல் விழுந்திருக்கிறது. ஒருமுறை ( திகதி நினைவில்லை) மாத்தளன் மருத்துவமனை மீது ஆர்.பீ.ஜீ உந்துகணை மூலம் நேரடித் தாக்குதலை செய்தது சிங்களப்படை. அந்த தாக்குதலால் மாத்தளன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பலர் மீண்டும் காயப்பட்டு இறந்த சம்பவம் நடந்தது. அதை விட ஏப்ரல் மாதம் 29 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது நான் அருகில் நின்றிருந்தேன். அத்தாக்குதலிலும் பலர் மீண்டும் காயப்பட்டு இறந்திருந்தனர்.

 • நிட்சயமாக சிங்களப்படைகள் மருத்துவமனைகள் மீதும் குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என பாகுபாடின்றி தன் இனவழிப்பு நடவடிக்கையை நிறைவேற்றியது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த நேரத்தில் அரசசார்பற்ற நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பணி எவ்வாறு இருந்தது.

இறுதி நேரத்தில் இங்கே எந்த அமைப்போ நிறுவனங்களோ இல்லை சிங்கள அரசு அதற்கு தடை விதித்து எம்பிரதேசங்களில் இருந்து அவர்களை வெளியேற்றி இருந்தது. ஆனாலும் மாத்தளன் தொடக்கம் இறுதி முள்ளிவாய்க்கால் வரை நான் நினைக்கிறேன் மே 5 ஆம் நாள் என்று அன்றுவரை கப்பல் மூலம் காயப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஒன்றை செய்தார்கள். அதுவும் பல சிரமங்களூடாக. ஏனெனில் என் கண்முன்னால் காயப்பட்டவர்களை ஏற்ற வந்திருந்த கப்பலை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை செய்தது சிங்களப்படை. அதனால் வந்திருந்த கப்பல் திரும்ப மேல்கடலுக்குச் சென்று தரித்துவிட்டு தாக்குதல் குறைய மீண்டும் வந்து மக்களை ஏற்றிச் செல்லமுனைந்தது ஆனாலும் தாக்குதல் நிற்கவில்லை மீண்டும் கப்பலை சார்ந்த பகுதிகளை நோக்கி தாக்கினார்கள். அதனால் பல மணி நேரக் காத்திருப்பின் பின் கப்பல் வந்து ஏற்றிச் சென்றது. இவ்வாறு தான் அவர்களின் பணி இருந்தது.

சரி, இவ்வாறு நீங்கள் ஒரு மனதநேயப்பணியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த போது பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறீர்கள். அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் அனைத்தும் முடிந்து விட்டது என்ற நிலை வந்த போது உங்களின் மனம் எப்படி இருந்தது?

உண்மையில் அந்த பொழுதை வார்த்தைகளால் உரைக்க முடியாது. உயிர் இருந்தும் நடைப்பிணமாக இருந்தோம். இதை விட சொல்ல வேறு வார்த்தை வரவில்லை. காயப்பட்டருந்த மக்கள் போராளிகள் என வீதி வீதியாக படுத்திருந்தார்கள் அண்மை நாடான இந்தியா தலையிட்டு எம்மைக் காக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்போடு இருந்தோம் ஆனால் எதுவும் நடக்கவில்லை.

 • சிங்களப்படைகளின் கட்டுப்பாட்டுக்குள் எப்போது வந்தீர்கள் ?

மே மாதம் 17 ஆம் நாள் இரவு.

 • அப்போது அங்கே என்ன நிலை இருந்தது?

அங்கும் உண்ண உணவு இருக்கவில்லை. குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. எனக்கருகில் இருந்த பெண் ஒருவர் நான் நினைக்கிறேன் 30 தொடக்கம் 35 வயதுக்குள் இருக்கும். மயங்கி விழுந்திருந்தார். அப்போது அந்த பெண்ணின் தாயார் கத்தி அழுதது இன்றும் செவிகளில் ஒலிக்கிறது. பசியில. மயங்கி விழுந்த அந்த பிள்ளை பின்பு உயிர் தப்பியதா இல்லையா தெரியவில்லை. கம்பிகளால் சுற்றி அடிக்கப்பட்ட அந்த பிரதேசத்துக்குள் எம்மால் எதையும் செய்ய முடியாது தவித்தோம். அப்போது இராணுவத்திடம் அவாவை தூக்கிச் சென்றார்கள் பின்பு எனப நடந்தது என்று தெரியாது. அதே நேரம் இரண்டு நாட்கள் கழித்துத் தான் என்னால் தண்ணீர் குடிக்க முடிந்தது. உணவுக்காக காத்திருந்த இடத்தில் ஒரு வயதான தாயை முன்னே சென்று வாங்க விட்ட போது சிங்களப் படை ஒருவன் எனக்கு கருக்கு மட்டையால் அடித்தான். நீ இயக்கம் தானே என்றான் நான் இல்லை என்ற கத்தி அழுத போது அப்ப எதுக்குடா அந்த கிழவிய முன்னுக்கு விட்டாய் என்றான். தொடர்ந்து நாலைந்து அடி கருக்கு மட்டையால் விழுந்தது. எம்மை சிங்கள படை மனிதர்களாகவே பார்க்கவில்லை. மிருகங்களாகவே நடாத்தினர்கள்.

 • உண்மை தான். இந்த இடத்தில் வைத்துத் தான் பல போராளிகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக எதாவது தெரியுமா?

நான் இரவு வந்ததால் யார் வந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அதற்குள் வைத்துத் தான் எம் நிர்வாகசேவையைச் சேர்ந்த போராளிகள் பலர் காணாமல் போயிருந்தார்கள். நான் நேரடியாக காணவில்லை. ஆனாலும் பின்நாட்களில் அறிந்தேன் அந்த இடத்தில் வைத்துத் தான் மலரவன், பிரியன், தங்கையா, நாகேஸ் என பலர் காணாமல் போயிருந்தார்கள்.

நிச்சயமாக இந்த இடம் ஒரு கொலை வலையமாகவே இருந்தது. அங்கே பல ஆயிரம் போராளிகள் சரணடைந்த போது காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். கொலை செய்யப்படிருக்கிறார்கள். வெள்ளைக் கொடியுடன் சரண்டைந்தவர்களைக் கூட சிங்களம் கொன்று குவித்துள்ளது. ஆனாலும் இன்று இனக்கொலை செய்யவில்லை எனவும் தாம் நல்லாட்சி நடத்துகிறோம் எனவும் பரப்புரை செய்கிறது. இந்தவகையில் இதுவரை நேரமும் எமக்காக எம்முடன் பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டதக்கு எம் புலர்வு ஊடகத்தின் சார்பில்

நன்றி திரு கரன்.

நன்றி கவி

தொலைபேசி வழியாக நேர்கண்டது இ.இ.கவிமகன்.