தமிழினம் மீது தன் கொடூர இனவழிப்பு ஏவி விட்டு எம் இனத்தையே அழித்தொழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டு வருகிறது இனவாத சிங்கள அரசு. இத்தகைய சிங்கள அரசினுடைய இனவழிப்பின் உச்சமான மே மாதத்தின் இந்த நாட்களில், முள்ளிவாய்க்காலில் மௌனித்துப் போகும் வரை தமிழர் புனர்வாழ்வு கழக தொண்டுகளோடு தன்னை முழுமையாக இணைத்திருந்து, 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மத்தியில் மக்களுக்கான தொண்டுப் பணிகளை செய்து, தற்போது புலம்பெயர்ந்து வாழும் இரா. ராஜன் அவர்களை, நேர்காணல் செய்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பம் மூலமாக, எமது மக்கள் சமூகம் இதுவரை அறிந்ததும், அறியாததுமான பல்வேறு “விடயங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் இடர்கால பணிகளும்” என அதன் செயற்பரப்பின் செறிவை திரும்பிப் பார்க்கின்றோம்.

கவி: வணக்கம் திரு ராஜன்.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தோற்றமும், நோக்கமும் பற்றி குறிப்பிடுங்கள்.

ராஜன்: வணக்கம். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனை ஊற்றிலே இருந்து, தமிழ் மக்களின், குறிப்பாக போரினால், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்களின் ஒரு தாங்கு சக்தியாகவே 1985ம் ஆண்டு காலப்பகுதியில், தமிழ்நாட்டில், துறைசார் நிபுணர்களின் கூட்டு நல்லெண்ணங்களின், வரைபிலே உதயமாகியது. எமது தலைவரின் தீர்க்கதரிசனமான இப்பிரசவம் பின்னாளில், தமிழீழ எல்லைகள் கடந்தும், இன மத பேதங்கள் கடந்தும், ஒரு சர்வதேச தொண்டு நிறுவனமாக வியாபித்தமை வரலாறு.

கவி: தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் செயற்பணிகளின் தன்மைகள் பற்றி?

ராஜன்: தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் செயற்பணிக் கட்டமைப்பு வரைபு என்பது, நிவாரணம், புனர்வாழ்வு, அபிவிருத்தி எனும் நோக்கு மற்றும் இலக்குகளைக் கொண்டது. இதன் மூலத்தில் இருந்தே போரினால்,இயற்கை அனர்த்தங்களினால், திடீர் ஆபத்துக்களால் பாதிப்புற்ற மக்களை தாங்கி நின்றது.

கவி : தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் செயற்பாடுகள், செயற்பாட்டு எல்லைகள் எவ்வாறு வகுக்கப்பட்டிருந்தன?

ராஜன் : தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் செயற்பணிகளை மிக குறுகிய ஒரு நேர்காணல் மூலமாக முழுமைப்படுத்திவிடுதல் என்பது பொய்யான கூற்று. ஏனெனில் அது ஒரு வற்றாத பொய்கை, உள்ளகமும் வெளியகமுமாக தாங்கு திறன் கொண்ட ஒரு வரலாற்றுச் சக்தி. இதன் மகுடம் தேசியத்தலைவரின் பார்வையில், இரண்டு பிரதான கட்டமைப்புகளான, தமிழர் புனர்வாழ்வு கழகமும், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமும், விடிந்து வரும் தமிழர் தேசத்தின் விடிவெள்ளிகளாகவே பதிவாகியது. இதைவிட எழிமையாக குறிப்பிட எதுவுமே இல்லை. சிறந்த திட்டமிடல், காலநேரங்களை, கடினங்களை, வலிகளை தங்கள் தோழ்களிலே, சுகமான சுமைகளாக தாங்கி வழிநடந்து, உயிர்களையும் அர்ப்பணமாக்கி, தமிழீழ தேசப் பரப்புகள் கடந்து, தென்னிலங்கை வெள்ளப் பாதிப்பாகலாம், அமெரிக்க நாட்டின் கற்றானா சூறாவளி பாதிப்புவரை அகல விரிந்த, தாயுள்ளம் கொண்ட அந்த செயற்பணியின் எல்லைகளை எப்படி வரையறுக்கலாம்.

தமிழர் தாயகத்தில் எட்டு மாவட்டங்களிலும் பிரதான மாவட்டச் செயலணிகள், ஒவ்வொரு மாவட்டங்களிலும்,தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மறு முகமாகவும், அடிமட்ட கட்டமைப்புகளாகவும் முன்னிறுத்தப்பட்ட உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இவை இன்னும் வலுச்சேர்த்து வளமாக்கியதை வரலாறு பதிவு செய்துள்ளது.

சிறுவர் இல்லங்கள் தொடக்கம், முதியோர் இல்லங்கள் வரை இடைப்பட்ட மனித வாழ்வின், மனிதாபிமான தொண்டை, மக்களின் நல் வாழ்வை, உலக வல்லுநர்களின் வியப்பையும், பாராட்டையும், தலைவரின் நல் மதிப்பையும் தன் விளைசெயலின் அறுவடையாக பெற்று, முள்ளிவாய்க்கால் அவலங்களின் மையத்தில் உயிர் காத்த கஞ்சிப் பாத்திரம் வரை, தமிழீழ வரலாற்று எல்லையோடு இரண்டறக் கலந்து நிற்கிறது.

கவி : தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கான நிதிப் பங்களிப்பு எத்தகையது?

ராஜன் : தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஆரம்ப காலத்தின் நிதியீட்டம் என்பது, மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தாலும், தனது கொள்ளளவுப் பருமனுக்கு ஏற்பவே செயற்பணிகளையும் முன்னெடுத்தது. அக்காலப்பகுதியில் உள்ளூர் மூலப் பொருட்களை, உற்பத்திகளை, வளங்களை, சிறு சிறு வருமானமீட்டும் வியாபார நிலையங்களை, நல்லுள்ளம் கொண்டோரின் அன்பளிப்புக்களை, தனவந்தர்களின் அறக்கொடைகளை ஆதாரமாகக் கொண்டே பயணித்தது. மெல்ல மெல்ல ஆனால் மிக உறுதியாக வளர்ந்து நிமிர்ந்த மக்கள் தொண்டின் அடையாளங்கள், பின்னாளில் படிமுறை தாண்டிய பாய்ச்சல் வேகத்தோடு நிமிர்ந்தெழுந்தது, பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் தாராள நிதியீட்டங்களை வழங்கினர். அத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாங்கு சக்திகளான எமது புலம்பெயர் தேசத்தின் உறவுகளின் ஊற்றுக்கண் அகலத் திறந்து, தாயக மக்களின் தேவைகளுக்கான பாதீடுகள் மிகை நிரப்பப் பட்டது.

உலகின் எங்கள் உறவுகள் வாழுகின்ற பெரும்பாலான நாடுகளில், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் கிளைகள் உயிர்பெற்றெழுந்தன.

கவி: போர்க்கால சூழலில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் செயற்பணிள் எவ்வாறு அமையும்?

ராஜன்: இந்த வினாவில் பாரிய வேறுபாட்டினை நான் உணரவில்லை, காரணம் தமிழ் மக்களின் வாழ்வு இன்றுவரை, போரும் போர்சூழ்ந்த வாழ்வுமாகவே இருக்கின்றது. இதுவே ஜதார்த்தமும் ஆகிறது. மொழிவழி போர், ஜனனாயக போர், ஆயுத முறைமைப்போர், இன்று மெளனப்போர், ஆனால் இன்றைய மெளனப்போர் மிக மிக ஆபத்தானதே என்பது உணரப்பட்டாலும், ஆற்றுப்படுத்த இயலாதவர்களாக போனோமா என்ற, வெட்கமும், வேதனையும் நிறைந்த காலமாக கடந்து போய்க்கொண்டு இருக்கிறோம்.

கலாச்சாரங்கள் சீரழிக்கின்றன, போதைப்பொருளின் இறக்குமதி தளமாக எங்கள் கடல்மடி மாற்றப்படுகிறது, சிறைகளில் உள்ள உறவுகளின் விடுதலை கிட்டவில்லை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டுபிடிப்புக்கான போர் வீதியோரமாக நீள்கிறது, நாளாந்த ஜீவனோபாயத்திற்காக ஏங்குவோர் துயர் களையப்படவில்லை. இப்படியான சூழ்நிலையில் எம்மால் முடிந்தவரை எதுவும் செய்ய முடியவில்லை என்ற கனத்த வலி மட்டும் நெஞ்சை முட்டுகிறது.

கவி: 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் மெளனிப்பதற்கு முன்பான செயற்பணிகள் பற்றி?

ராஜன் : எமது போராட்டம் மெளனிப்பதற்கு முன்னான காலம், என்னைப் பொறுத்தவரை அது ஒரு பொற்காலம். எதிர்வினையாற்றும் பலருக்கு இது கடினச் சொல்லாடலாகவும் போகலாம். ஆனால் அது உள்ளுணர்வால் ஏற்கும் ஒரு பொற்காலமே. அது எமது விடுதலைக்காக கட்டிக் காத்த தாராள திட்டமிடல்க்காலம்.

தேங்காய்ச் சிரட்டையிலே தேனீர் பருகும் சூழலிலும் பணிசெய்தோம், சுகமாகவும், சுவையாகவுமே இருந்தது, எங்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் போருக்கு களமாடவேண்டிய சமகாலத்தையும், ஸ்ரீலங்கா இனவாத அரசு எங்கள் மீது திணித்த பொருளாதார தடைக்கு எதிராக எழுந்து நடக்கும் காலத்தையும் நீந்திக் கடக்க கற்றேகினோம். அதன்பால் மக்களை எழிமையாக பயணிக்கச் செய்தோம்.

போரால், இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புறும் மக்களை, பேராபத்துக்களில் இருந்து மீட்டு, நலன்புரி நிலையங்களில் பராமரிப்பது தொடக்கம், அவர்களை மீளக் குடியேற்றும்வரை சிறந்த திட்டமிடலைக் கொண்டு பணிசெய்தோம்.

என்னதான் கொடிய போர் எம்மைச் சூழ்ந்து நின்றபோதும் பட்டிணிச் சாவுகள் எம்மை நெருங்கவில்லை, ஆதரவற்ற சிறார்களாக யாரும் அனாதரவாக விடப்படவில்லை, மனநலம் குன்றியோராக வீதியோரத்தில் யாரும் கண்டதில்லை, தீய பழக்கங்கள் உள்ள இளையோராய் யாரும் அறியப்படுவதில்லை, இவைதான் சுருக்கமான 2009 இற்கு முன்னான செயல்களின் ஆதாரங்கள்.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஒவ்வொரு பகுதி கிளைகளில் தொண்டர்களாக தம்மை முழுமையாக அர்ப்பணித்த உறவுகள் ஆங்காங்கே வாழ்கிறார்கள் அவர்கள் நான் சுட்டிய இந்தக் காலத்தின் கண்ணாடிகள். அவர்களில் பலர் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் உள்ளனர், எனவே எதிரியாலும் முடியாத பணி.

கவி: தமிழின அழிப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா இனவாத அரசு செய்துகொண்டிருந்த தருணத்தில், எமது மக்களின் நிலை எவ்வாறு இருந்தது?

ராஜன் : எமது மக்களைப் பொறுத்தவரையில், தொடர்ச்சியாக போருக்கு முகம் கொடுத்துப் பழகியவர்கள். ஆனாலும் சமாதான காலப்பகுதியில், சில சில மாற்றங்களோடு, சில சில வசதிகளோடு ஒன்றித்து பயணிக்க ஆரம்பித்தார்கள், உலக வல்லரசுகளின் கவனம், புலம்பெயர் உறவுகளின் வருகைகள், முடக்கப்பட்ட எல்லைக் கதவுகளின் இடைக்கால திறப்புக்கள், பொருளாதார நிலையில் சிறு நிமிர்வுகள், சர்வதேச நாடுகளின் அனுசரனையுடனான, எங்கள் இறையாண்மைக்கான நீதிபரிபாலன பேச்சுக்கள் எல்லாவற்றையும் கண்டு சிறிது ஆறுதல் கொண்டார்கள். ஆனால் அவைதான் பின்னாளில் எம்மை துடைத்தழிக்கப் போகும் விசக்கிருமிகளின் திட்டங்கள் என்பதை உணர்ந்தபோது, வழமையை விடவும் நிறையவே வலியோடும், வேதனையோடும், சொல்லொணாத் துயர் சுமந்து, முள்ளிவாய்க்கால் நெருப்பாற்றை நீந்திக் கடந்தார்கள்.

இதைவிட மக்களை எப்படி ஒப்பீடு செய்ய, உலக நாடுகளின் பூகோள அரசியல் இலாபம் ஈட்டிய தேசமாக எங்கள் தாய்மடி சிதைக்கப்பட்டது.

கவி: நீங்கள், ஸ்ரீலங்கா இனவாத அரசின் இனவழிப்பு நடவடிக்கையின் ஒரு சாட்சியம், அந்த வகையில் இறுதி நேரத்தில் என்ன நடந்தது?

ராஜன் : மன்னாரில் மிக மூர்க்கத்தனமாக ஆரம்பிக்கப்பட்ட போர்வலு, முள்ளிவாய்க்கால் இறுதி நிலையை எட்டும்வரை, அங்கே அவலப்படும் மக்களுக்கு நடுவே தொண்டர்களாக தொடர்ந்து பணியாற்றினோம், எனவே இறுதிக்காலம் அல்லது இறுதி நேரத்தில் என்பதை விட தொடர்ச்சியாகவே, ஸ்ரீலங்கா இனவாத அரசு மக்கள் மீது, மிகவும் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

மடுமாதா தேவாலையத்தைச்சூழ தற்காலிகமாக தங்கியிருந்த சுமார் மூவாயிரம் மக்களை, அறியாமல் ஸ்ரீலங்கா அரசும், அரச படைகளும் இருக்கவில்லை, ஆனாலும் அங்கு நன்கு திட்டமிட்டு, மக்கள் மீது கடும் எறிகணைகளை வீசி, சுமார் ஐம்பது மக்களுக்கு மேல் நரபலி எடுத்தார்கள்.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வைத்திருந்த மடுமாதா தேவாலையத்திற்கே இந்த நிலையெனில், எமது மக்களின் வாழ்விடங்கள் எத்தகையதாகும் என்பதே இங்கு விடயம். எனவே ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை ஸ்ரீலங்கா இனவாத அரசு ஈழத்தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது, உலக வல்லரசுகளின் பேராதரவில் திட்டமிட்ட இனவழிப்பையே செய்து முடித்தது.

கவி: ஸ்ரீலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்கள் பற்றி?

ராஜன் : ஆரம்பத்தில் மடு தேவாலயப்பகுதி புனிதப்பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டது என்பதை நம்பியே மக்கள் கூடி வாழ்ந்தாலும், அது சிதைக்கப்பட்டு பொய்யாக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுரம், சுதந்திரபுரம் இப்படி ஒவ்வொரு இடங்களையும் குறிப்பிட்டாலும், அவை ஒவ்வொன்றையும் எனது அல்லது எமது பார்வையில் கொலைக்களமாகவே கொள்ள வேண்டும். அதுதான் நிர்ப்பந்தமும் கூட. ஏனெனில் பாதுகாப்பு வலயங்கள் என ஒரு சில வாய்கள் முணுமுணுக்கவே மக்கள் உயிர்காப்புத்தேடி அங்கு குவிவார்கள், ஆனால் மக்கள் குவிவை இலகுவாக ஏற்படுத்தும் கொலை வலையமாகவும், அதற்குள்ளே குவிந்த மக்களை இலக்குவைத்து, பாரிய எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு, மரண ஓலங்களை ஏற்படுத்திய கொடுமையின் பிரதான ஓலமாக சுதந்திரபுரம் இப்போதும் என் காதோரம் ஒலிக்கிறது. எனவே கண்ணீருக்குப் பதிலாக இரத்தத்தை வரவைத்த அந்த பாதுகாப்பு வலயங்களை தமிழர் வரலாறு “தமிழர் கொலை வலையம்” என பதிவு செய்ய வேண்டும்.

கவி: மருத்துவ பொருளாதார தடைகள் பற்றி நீங்கள் உணர்ந்தவை ?

ராஜன் : நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, எமது மக்கள் பாரிய பொருளாதார தடைகள் மத்தியிலே, இருப்பதை வைத்து எழிமையாக வாழும் தகமையை, பட்டறிவாகவும் நிரந்தர அனுபவமுமாக கொண்டவர்கள். ஆனாலும் இறுதிக்கால யுத்தத்தில் ஸ்ரீலங்கா இனவாத அரசு வன்னிப்பகுதிக்கான பயணப் பாதைகளை தடைசெய்ததோடு, வழமைக்கு மாறாக உலக வல்லரசுகளின் மறைமுக, நேரடித் திட்டமிடல்களோடு, எமது மக்களுக்காக பயன்படுத்தப்பட்ட கடல்வழி வினியோக முறைகள் எல்லாவற்றையும் துண்டாடி, தனது மூர்க்கத்தனமான தாக்குதல்களைத் தொடர்ந்தது.

வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் வாழ்ந்த மக்கள், குறித்த ஒரு கால இடைவெளியில் கையிருப்பில் இருந்த உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் இருப்பு நிலை தீர்ந்து போக, மிகப்பெரும் அவலத்தை அனுபவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அத்துடன்,மருந்துப் பொருட்களுக்கான தடைகளும், தட்டுப்பாடுகளும் எமது மக்களை திட்டமிட்டே கொல்ல வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பது வெளிப்படையானது.

இக்காலத்தில் மக்களுக்கான மருத்துவம், சுகாதார நடைமுறை ஒழுங்குகளோடு, எச்சங்களாகவும் மிச்சங்களாகவும் இருந்த வைத்தியசாலைகளின் வளங்களை ஒருங்கிணைத்து, விடுதலைப் புலிகளின் மருத்துவ அணிகள் மிகப்பெரும் இறை பணியாக, மக்களின் உயிர்காப்பில் ஈடுபட்டமை வரலாற்றில் மறந்து விட முடியாது. இப்பணியில் ஓய்வுறக்கமற்று உழைத்த அந்த உன்னதர்களில் பலர் ஸ்ரீலங்கா படைகளின் எறிகணைகளில் வழிமூடியபோது அவர்களின் இடைவெளிகளை மிகை நிரப்ப முடியாதும் போனது வேதனையே. ஆனாலும் அவர்கள் தம்மை மக்களுக்காக சதாகாலமும் தம்மை அர்ப்பணிக்க சித்தமாக இருந்தார்கள்.

கவி: வன்னிப்பகுதியில் தங்கியிருந்து பணியாற்றிய, பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறியதை எவ்வாறு பார்த்தீர்கள்?

ராஜன் : இது உண்மையில் மக்கள் மத்தியில் அச்சத்தையும், மனப்பாரத்தையும் அதிகரித்த தருணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இங்கே வெளியேறினார்கள் என்பதைவிட ஸ்ரீலங்கா அரசால் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்பதே உண்மை.

ஐ.நா சபை பிரதிநிதிகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள், தமது தொண்டுப் பணிகளை உள்ளூர்ப் பணியாளர்களிடம் தற்காலிகமாக என்ற போர்வையில் கொடுத்துவிட்டு, முடிவுகளை எடுக்க வல்ல, பொறுப்புக்கூறலுக்கு தகமையுள்ள அனைவரையும் அங்கிருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். அத்தருணத்தில், எங்களை இடைவெளியில் விட்டு எங்கே செல்கிறீர்கள், எமக்கு ஆதரவாக இருங்கள் என மக்கள் சாத்வீக முறையில், வீதியோரத்தின் இருமருங்கிலும் கூடிநின்று கதறி அழுதார்கள், ஆனால் அவை தமது ஆளுமைக்கு அப்பாற்பட்டது என வெளியேறிச் சென்றார்கள்.

எமது மக்கள் மீதான இனப் படுகொலைக்கு தயாராகிய ஸ்ரீலங்கா இனவாத அரசு,அதன் உண்மைத் தன்மைகளை, உலகப் பரப்பில் அறியப்பட விடாமல் தடுத்து வைப்பதற்கும் இவர்களது வெளியேற்றம் தேவைப்பட்டது.

தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து, முள்ளிவாய்க்கால் வரை தமிழர் புனர்வாழ்வுக் கழகமே தனித்து நின்று மக்களுக்கான அனைத்து நிவாரண, இடர் மீட்பு பணிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

கவி: தாக்குதல்களின் தீவிரம் எவ்வாறு இருந்தது?

ராஜன் : மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட கடும் தாக்குதல்கள், முள்ளிவாய்க்கால் வரை தீவிரமாகவே இருந்தது, மடுப்பகுதி, பெரியமடுப்பகுதி, வெள்ளாங்குளம், வன்னேரி போன்ற பகுதிகளில் மக்கள் ஆங்காங்கே இடைத்தங்கலாக இருந்த தற்காலிக கூடாரங்களை இலக்குவைத்து தாக்கினார்கள், பின்னர் மக்கள் கிளிநொச்சியில் செறிவாக கூடுவதையும், மக்களின் வாழ்விடங்களை இலக்குவைத்தும் தாக்கினார்கள்.

கிளிநொச்சி நகர்ப்பகுதி தாண்டி, வட்டக்கச்சி,தருமபுரம், விசுவமடு பகுதிகளுக்குள் மக்கள் ஒதுக்கப்படுவது உணரப்பட்ட வேளைகளில், ஸ்ரீலங்கா அரச படைகளின் தாக்குதல்கள் பன்மடங்காக அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

விசுவமடுவில் ஆரம்பித்து சாதாரணமாக மரண ஓலங்களை நாளாந்தம் செவிமடுக்கும் நிலையாக மாறியது. புன்னைநீராவி, கண்ணகி நகர், கொழுந்துப்புலவு இவை தாண்டி மூங்கிலாறு, உடையார்கட்டு பகுதிகள் எங்கும் ஒரே மரண ஓலங்களால் நிரம்பியது.

உடையார்கட்டு மகா வித்தியாலையத்தில் இயங்கிய, தற்காலிக வைத்தியசாலை காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அதனை இலக்குவைத்து பல முனைகளில் இருந்தும் ஸ்ரீலங்கா படைகள் தீவிரமான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தியவண்ணம் இருந்தார்கள்.

ஏறத்தாழ உடையார்கட்டு பகுதிகள் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை மரணம்,மரண ஓலம், படுகாயம் அடைவோர், அங்கவீனமாவோர் ஒவ்வொரு நாட்களும் அதிகரித்தவண்ணமே இருந்தது.

கவி: சிங்கள அரசு எவ்வகையான ஆயுதங்களை எம்மக்கள் மீது பயன்படுத்தியது?

ராஜன்: மன்னாரில் ஆரம்பித்து, மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, முன்னேறிய ஸ்ரீலங்கா படையினரை தடுத்து நிறுத்தவேண்டும் எனும் ஓர்மத்தில் புலிகள், செந்தணல் வீச்செறிந்து களமாடிக்கொண்டிருந்தனர். அவர்களின் நேருக்கு நேரான சமருக்கு முகம் கொடுக்க முடியாத நிலையுணர்ந்தும், படைவலு நேர்த்தியில், போரியல் நெறியில் ஒழுக்கமற்ற தன்மைகளை ஸ்ரீலங்கா இனவாத அரசு கைக்கொள்ளத் துணிந்தது. இந்த துரோகத்தை உலக வல்லரசுகளின் கனரக ஆயுதங்கள் ஆதாரமாக வழிநடத்தியது.

அப்பாவிப் பொதுமக்களின் போக்குவரத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட, ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதல்கள், ஆட்லறி பீரங்கிகளின் தொடர் குண்டு மழை, மக்களின் வாழ்விடங்களை இலக்குவைத்து நிகழ்த்திய கிபிர்த் தாக்குதல்கள், மக்கள் செறிவான இடங்களை இனம் கண்டு நிகழ்த்திய பல்குழல், சுழல் குழல் பீரங்கிகளின் தாக்குதல்கள், கிளஸ்ரர் குண்டுத் தாக்குதல்கள், எரிகுண்டுத் (பொஸ்பரஸ்) தாக்குதல்கள், அப்பாவி மக்கள் மீதான சினைப்பர்த் தாக்குதல்கள், என்பன நீடித்தது.

மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டு, மும் முனைகளாலும் இடைவெளியற்ற தாக்குதல்களை தொடுத்திருந்தனர். உலகில் தடைசெய்யப்பட்டதாக குறிப்பிடப்படும் எரிகுண்டுகளும், கிளஸ்ரர் குண்டுகளும், போரியல் நெறி கடந்த காட்டுமிராண்டித் தனத்தை வெளிப்படுத்தியது.

கடல் மார்க்கமாக நெருங்கிவந்த கடற்படையினர், ஆகாய மார்க்கமாக கிபிர், உலங்கு வானூர்தி, தரைவழியாக சுற்றிவளைத்த படையினர் இடைவிடாத மனிதநேயம் தொலைக்கப்பட்ட நச்சு ஆயுதங்களால் மக்களை சல்லடை போட்டனர்.

முதல் வெடிப்பின் பின் பிரிந்து பல குண்டுகளாக நிலம் நோக்கி இறங்கி வரும் பல குண்டுகள் – மே 7 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளால் தாக்கப்பட்ட கொத்துக்குண்டு

கவி: இறந்தவர்களும், காயமடைந்தவர்களும் தெருக்களில் சிதைந்து கிடந்த வேளைகளில் அதை கடந்து வரும் போது உங்கள் மனோநிலை எப்படி இருந்தது?

ராஜன்: நீங்கள் கேட்கின்ற இந்தக் கேள்வியானது முள்ளிவாய்க்காலின் இறுதிக் காலப்பகுதியை மட்டும் சுட்டி நிற்பதாக தெரிகிறது, ஆனால் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டர்களும், காயமடைந்த, இறந்துபோன, சிதைந்துபோன உடலங்களுக்கு நடுவேதான் எங்கள் பணிகளை இயன்றவரை செம்மையாக செய்துகொண்டிருந்தோம்.

ஆரம்பத்தில் அச்சமும், அபாயகரமுமான பணியென மனம் எம்மை நெருடினாலும், மனதை ஒருநிலைப்படுத்தி பணிகளில் ஈடுபட்டோம். எங்கள் தொண்டர்கள் பலர் மக்களுக்கான பணிகளை செய்து கொண்டிருந்த வேளைகளில் சோர்ந்து போன கணங்களும், ஒரு தொண்டுப் பணியாளரின் வெற்றுடலை மற்றய தொண்டுப் பணியாளரே பார்க்கவோ, இறுதி வணக்கம் செய்யவோ சந்தர்ப்பமற்று போகும் வேளைகளில் எமக்குள் நாமே மெளனமாக அழுதபடி, மறுகணமே அந்த பணிகளோடு தொடர்ந்தோம். அது மக்கள், தேசம் எனும் உயர்வான நலன் சார்ந்த நிர்ப்பந்தமும் கூட.

சுதந்திரபுரத்தில் நிகழ்ந்தேறிய பல்குழல் எறிகணைத் தாக்குதல்களால் எழுந்த அவலக் குரலின் எதிரொலி முள்ளிவாய்க்கால் வரை இரத்த கறைகளாகவே நீண்டு விரிந்தது.

சுதந்திரபுரம்,தேவிபுரம், இரணைப்பாலை, மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் என காயங்களிலும், மரணங்களிலுமே கண்விழிப்போம், ஆரம்பத்தில் இருந்த அச்சத்தையும், அபாயத்தையும் ஒரு புறத்திலும், சொந்தக் குடும்பம், பிள்ளைகள் என்ற சுமையினை ஒரு புறமுமாக சுமந்தபடி, மனதை எதற்கும், எவ்வேளைக்குமாக தயார்நிலையில் வைத்திருந்தோம்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அவர்கள், பணியின் நிமிர்த்தமாக பிறிதொரு நாட்டில் இருந்தாலும், உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஊடாக பணிகளை பகிர்ந்தளித்தோம், அதன்படி மக்கள் மத்தியில் நிகழும் ஒரு எறிகணைத் தாக்குதல் அல்லது விமானத் தாக்குதல் எதுவானாலும் அது நிகழ்ந்து ஆகக்குறைந்ததாக பத்து நிமிடங்களுக்குள், அனர்த்த முகாமைத்துவ தொண்டர்கள் சென்று, உடனடி மீட்புப் பணிகளை முன்னெடுப்பதெனவும் தீர்மானித்தோம்.

எமது உடலின் உச்ச இயங்கு விசைக்கு ஈடுகொடுத்தே நாம் பணிசெய்தோம். அத்துடன் காயமடைந்தோரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதை, மரணமானோரை உடனுக்குடன் புதைப்பதை நாமே முள்ளிவாய்க்கால் வரை செய்ய வேண்டியதாகவும் இருந்தது. உயிர்காக்க நாம் கொடுத்த கஞ்சியை வாங்குவதற்கு வரிசையில் நின்ற மக்களை, ஸ்ரீலங்காப் படைகள் உயிரை எடுக்க, கஞ்சி கொடுத்த கையால் இறுதிக் கடமைகளையும் செய்து வெளியேறினோம்.

ஊதிப் பெருத்த வெற்றுடல்கள், உறவுகள் யாருமின்றி ஆங்காங்கே சிதறிக் கிடந்த சதைப்பிண்டங்கள், ஏன் இறக்கிறோம், ஏன் சிதைக்கப்படுகிறோம் என்பதை உணரப் பருவமற்றிருந்தும் குதறப்பட்ட மழலைகளின் உடல்கள், முதிர்ந்தும் நின்மதியை அனுபவிக்காத ஆத்துமாக்களென நாம் அள்ளிப் புதைத்தவை ஏராளம்.

காயங்களின் தன்மைகள், மரணங்களின் வடிவங்கள், இறுதிக் கணங்களில் உதிர்ந்த வார்த்தைகள், இறக்காமலே பதுங்கு குழிகளில் கைவிட்டு வெளியேறிய மூதாளரென எங்கள் வலிகளை ஒரு தனியான நேர்காணல் மூலமாகவோ ஒரு புத்தகமாகவோ முன்னிறுத்தலாமென நினைக்கிறேன்.

கவி: மக்களும் போராளிகளும் கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது?

ராஜன் : எமது மக்களை யாரிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று இத்தனை வலிகளை, வேதனைகளை சுமந்தோமோ, நாங்கள் யாரிடம் மண்டியிடக் கூடாது என்று மான மறப்போர் புரிந்தோமோ, யாருக்கு முன்னே தலைகுனிய கூடாது என்று நினைத்தோமோ, யாரின் அடக்கு முறைக்குள் அமிழ்ந்து விடாமல் வீறாப்புக் கொண்டோமோ அவையெல்லாம் வீணாகிப்போன கணமாகவே இதயத்தில் இரத்தம் தோய்ந்த தருணம் அது.

மக்களுக்கான காப்பரண்களாக வாழ்ந்தவர்கள், இறுதி வேளையில் மக்களோடு மக்களாக வரிசைகட்டிய கொடுமை, அதிலும் இடைவழியே நிறுத்தி தரம் பிரித்து, கேட்க நாதியற்ற நடைப்பிணங்களாக ஸ்ரீலங்கா படைகளல்ல ஸ்ரீலங்கா காடையர்களாக அழைத்துச் சென்ற அந்த நிமிடங்கள் கொடுமையிலும் கொடுமை.

உணவின்றி, நீரின்றி வாடி வதங்கி வந்த மக்களை தனிமைப்படுத்தி, நிர்வாணமாக்கி சோதனை என்ற பெயரில் துயிலுரியப்பட்ட அந்த நிமிடத்தில், இயற்கையே நீயேன் எம்மை அழிக்காது தப்பவிட்டாய் என்ற சீற்றத்துடன் தலைகுனிந்து பிணமானோம்.

கவி: வலிந்து காணாமல் ஆக்கச் செய்யப்பட்டோர் பற்றி நீங்கள் குறிப்பிட விரும்புவது?

ராஜன் : இதிலே விரும்பிக் குறிப்பிட ஏதும் இல்லை. வேதனையோடு பகிர்ந்து கொண்டும் பயனேதும் இருப்பதாக தெரியவில்லை.

வருடங்களைக் கடந்து வருவார்கள் என்ற நம்பிக்கையிலும், வருவார்களா என்ற ஏக்கத்திலும் முதிர்ந்தும் நிமிர்ந்து, வீதியோரத்தில் இரவு பகலாக போராடிவரும் எங்கள் உறவுகளைப் பார்த்து வேதனை கொள்ளலாமே தவிர, எமது அரசியல் வீணர்களால் ஏதும் ஆகாது என்பது உண்மை.

வீதியோரத்தில் போராடிப் போராடியே ஏக்கங்கள் புடைசூழ விழிமுடிப்போன புனிதமான ஆத்துமாக்களே உங்கள் திருப்பாதங்களை பணிவதோடு, இந்த இனத்தின் பிரதிநிதிகளாக வாழும் ஒவ்வொருவரையும் நீங்கள் மன்னிக்கவும், எதிரியை மனதால் வஞ்சிக்கவும் வேண்டுகின்றோம்.

காணாமல் போனவர்கள் குறித்து, ஸ்ரீலங்கா அரசின் அண்டையில் வாழும் அரசியல்வாதிகள் ஏனோ ஒரு நிரந்தரமான கண்டுபிடிப்புத் தீர்மானத்தை எட்ட முடியாமலும், மாறாக தன்னெழுச்சியாக போராடும் மக்களை தமது நரித்தனம் மிக்க, சுயநலம் சுமந்த அரசியல் விளைச்சலுக்கு அடியுரமாக இடும் பொருட்டு, அம்மக்களையும் உதிரிகளாக்கும் கேடு கெட்ட செயல்களால் வெட்கப்படுகின்றோம்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மனிதநேய தொண்டர்கள் தென்தமிழீழத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்த போது பொலநறுவை மாவட்டம், வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து ஸ்ரீலங்கா ஒட்டுக் குழுவால் கடத்தப்பட்ட பின்னர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலை வேண்டி முதன் முதலில் கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நடுவப்பணியகத்தின் முன்பாக சக பணியாளர்களும், உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்ந்தோரும் ஒரு உண்ணா நிலைப் போராட்டத்தையும் நடத்தினோம், அவ்விடத்திற்கு அண்மையில் மீண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டுபிடிப்புக்கான போர் நடைபெற்றுக் கொண்டு இருப்பதை நினைக்கையில், நாங்கள் ஒரு சபிக்கப்பட்ட இனமா எனவும் இதயம் கனக்கிறது.

மனிதநேயம் பற்றி பறைசாற்றும் உலக வல்லரசுகளின் பார்வையோ, நிராயுதபாணிகளாக வலிகளை மட்டும் சுமக்கும் மக்களை உலக சட்ட வல்லுநர்களும் இதுவரை பாராமுகமாக இருப்பது வேதனையே.

கவி: இன்றைய சமகாலத்தில் கொறோனாதொற்று நோயினால் இலங்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் இடர்கால செயற்பணிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் ஈடுபட்டிருந்தால் நிலமை எப்படி இருந்திருக்கும்?

ராஜன் : படிமுறை தாண்டி வளர்ந்து நிமிர்ந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் உதவிக்கரமென்பது அகல விரிந்த ஆலமரத்தின் நிழல் போன்றது. அதை வளர்த்தெடுக்க குருதி சிந்தி உயிர் கொடுத்தோரின் திருமுகங்களும் இன்று முன்தெரிகின்றது.

எமது தேசத்தின் குக்கிராமங்களில் தொடங்கி, சர்வதேச எல்லைகள் வரை நிறைந்த பட்டறிவையும், தியாக சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

உலகே வியந்து போன, 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்தேறிய சுனாமி ஆழிப் பேரலை பேரிடரில், அடிப்படை வசதிகள் ஏதும் சீராக இல்லாமல், இருந்த வளங்களை உச்சப் பயன்பாட்டில் இயக்கி, ஒரு சில நாட்களில் மக்களை ஆற்றித் தேற்றிய பணியாலும், தொடர்ந்து சுனாமி மீள் கட்டுமான பணிகளை துரிதமாக முன்னெடுத்தபோது, உலக வளர்ச்சி பெற்ற நாடுகளும் வியந்து பாராட்டி, ஸ்ரீலங்காவின் அன்றைய ஜனாதிபதியும் வாழ்த்தி சான்று வழங்கியமை எமது வளர்ச்சியை கோடிட்டு நின்றது.

திடீர் அனர்த்தங்களினால் மக்கள் அவதியுறும் பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் தமிழீழ தேசியத்தலைவரின் பணிப்பில், துறைசார் போராளிகள் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இரவு பகலாக பணியாற்றுதல் வழக்கமானது. மீட்பு அணிகள், மருத்துவ அணிகள், காவல்த்துறை அணிகள், பராமரிப்பு அணிகள், ஆற்றுப்படுத்தல் அணிகளென தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பேராளர்களாக தோழ்கொடுத்த தருணங்களை தேசம் மறவாது.

எனவே சமகால கொறோனா பேரிடர்கால திட்டமிடலும், செயற்கூறுகளும், வியத்தகு விதத்தில் கையாளப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

கவி: இன்னும் தொடரும் இனவழிப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ராஜன்: உண்மையில்இது ஒரு சிறந்த தொடுகையென நினைக்கிறேன். 2009ல் நாங்கள் அழிந்தபோது, உலகம் கைகட்டி வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை மாறாக ஸ்ரீலங்கா அரசை ஊக்குவிப்பு செய்தது. அதில் ஸ்ரீலங்கா வெற்றியும் கண்டுள்ளது.

இன்றைய காலத்திலும் எமது இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் நிலை தொடர்கிறது. இளைஞர்களை குழுக்களாக்கி அவர்களை போதைகளுக்கு அடிமையாக்குதல், கலாச்சாரம் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை சீர்குலைப்பது, கடல் வழியாக போதைப் பொருட்களை தமிழர் தாயகப் பகுதிகளில் குவித்தல், போன்றவை மூலம் தாய்நில மற்றும் நற் சிந்தனைகளில் இருந்து திசைமாற்றி, தீய சிந்தனைகளில் இளைய தலைமுறையின் பெரும்பான்மைக் காலத்தை சிக்க வைத்தல் போன்றவை திட்டமிட்ட இனவழிப்பையே காட்டுகின்றது.

ஏதாவதொரு காரணத்தை முன்னிறுத்தி,தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு, தேடுதல் என்ற காரணங்களை முன்னிறுத்தி ஸ்ரீலங்கா அரச படைகளை தொடர்ந்து தமிழர் பகுதிகளில் நிலைகொள்ள வைத்து, மக்களை தொடர் அச்சுறுத்தலில் வைத்திருத்தல். இவற்றின் தொடர்ச்சியாகவே சமகால கொறோனா இடர்கால தனிமைப்படுத்தல் முகாம்களின் அமைவிடங்களையும் கொள்ளலாம்.

ஸ்ரீலங்கா வெறுமனே சிங்கள பெளத்த தேசிய நாடு என்பதை நிறுவும் நோக்கில் எங்கள் தாய்மடியில் நிலைநாட்டப்படும் புத்த விகாரைகள், தமிழ் மக்களை வென்றதாக, அடிமை கொண்டதாக எங்கள் முற்றங்களில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இனவாத அரச நினைவுச் சின்னங்கள் என்பவற்றுடன், தொடர் வளங்களை சுரண்டுதல் என்பனவும் எம்மை அழிப்பதன் தொடர்ச்சியே.

கவி: எமக்கான விடுதலை அமைப்பு மெளனிக்கப்பட்டதன் பின்பு, தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் இயங்கு நிலை பற்றி?

ராஜன்: முள்ளிவாய்க்காலின் பின்னர், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் இயங்கு நிலையும் மெளனித்து விட்டதாகவே உணர முடிகிறது. ஆனால் ஒரு சில மேற்குலக நாடுகளில் பகுதியாக இயங்குவது என்பது நன்றே. அது உறங்கு நிலையில் இருக்க முடியாது என்பதை விடவும், உறங்க கூடாது என்பதே அதைத் தாங்கிய, வளர்த்த நெஞ்சங்களில் பெரு விருப்பாக இருக்கிறது என்பது மறுப்பதற்கு இல்லை.

ஒரு பன்னாட்டு தொண்டு அமைப்பின் பார்வையில் வளர்ந்து நிமிர்ந்த மக்கள் தொண்டின் அடையாளங்கள் உலகெங்கிலும் ஊன்றப்பட்டுள்ளது, அதன் வலிமையை கையறுந்துவிட விடுதல் நல்லதல்ல. இன மத பேதங்கள் கடந்தும் தனது சிறந்த சேவையை வழங்கிய தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் கரங்கள் மீண்டும் புத்துயிராக, மனிதநேய தொண்டோடு மறுமலர்ச்சி காணும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீலங்கா அரசினால் முடக்கப்பட்டுள்ள, தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பெருந்தொகை நிதியானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்கு பயன்படுத்தும் வகையில் மீளவும் வழங்குவதற்கான நல்லெண்ணங்களை ஸ்ரீலங்கா வெளிப்படுத்த வேண்டும்.

கவி: முடிவுறாத இனவழிப்பை தடுக்கும் சக்தி எம் மக்களிடம் இருக்கிறதா?

ராஜன்: இது எமது மக்களின் உணர்வுகளை அல்லது உறுதியை பரீட்சார்த்தமாக நோக்கும் கேள்வி என நினைக்கிறேன். ஆனால் மக்களிடம் இருந்த மாபெரும் சக்திதானே, இமாலயமாக எம்மை முன்னிறுத்தியது. எதிரியும் உலக நாடுகளும் வெருண்டு, கூட்டுச் சேர்ந்து 2009ல் எம்மை நசுக்கியதும் எமது மிகையான சக்தியை வளர விடக்கூடாது என்பதற்காவே.

எனவே, மக்களே தான் மாபெரும் சக்தி அவர்களை நெறிப்படுத்தி, வழிப்படுத்தும் நல்ல தலைமைத்துவ இடைவெளி மிகை நிரப்ப வேண்டிய நிலைதான் சக்தி அற்று இருக்கிறது.

போலியான, பொம்மையான குருட்டு அரசியல் தலைமைகளின் பின்னால் மக்கள் சக்தியை எப்படி எதிர்பார்க்க முடியும், தமிழ்த்தேசிய இனத்தின் கொள்கைமாறாத, இன நல்லெண்ண மையம் கரையாத ஒரு தலைமைத்துவ நிறுவுதல் நிகழும் வரை, பெருத்த அரசியல் வெளியில் நாம் குந்தியிருக்க வேண்டிய இழி நிலை. எனவே மக்கள் சக்தியை விடவும் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டுச் சக்தியே நிலைமாறு கால திறவுகோலாக வேண்டும்.

கவி: உங்கள் பார்வையில் புலம்பெயர் தமிழர் கட்டமைப்புகளுக்காக ஏதாவது குறிப்பிட முடியும் என்றால்?

ராஜன்: புலம்பெயர் தமிழர் கட்டமைப்புகளுக்காகவும், தமிழ் உறவுகளுக்காகவும், ஒரு மனிதநேய செயற்பணி தொண்டன் என்ற வகையில் நன்றியா வாழ்த்தா இரண்டையும் கலந்தால் வரும் ஒரு சிறந்த வாக்கியம் எதுவோ அதை கூற விரும்புகிறேன், ஏனெனில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் அனைத்துவகை உப கட்டமைப்புகளும் தாயகத்தில் இயங்காத இத்தருணத்திலும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இன்றுவரையும், இப்போதய இடர்கால நிலையுணர்ந்தும் நீங்கள் புரிகின்ற நிவாரணப் பணிகள் போற்றுதற்குரியவை. ஆனாலும் அந்த மக்களை எப்போதும் கழிவிரக்கத்திற்கு உரியவர்களாக வழிநடத்தவோ, பார்க்கவோ கூடாது, மாறாக அவர்களை நெறிப்படுத்தி சுய முயற்சியால் நிமிர்ந்தெழ வைக்க, சிறந்த திட்டமிடலை உருவாக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர் கட்டமைப்புகள், எமக்கான நீதியை பெறுதலுக்கான புதிய வழிமுறைகளில், உலகம் ஏற்கும் பொறிமுறைகளில் பயணிக்க வேண்டும். இதன் மூலமாக தமிழர் அரசியல் தலைமைகளின் சக்தியை நீங்களும் மாற்றி அமைத்து, ஒரு புள்ளியில் மையம் கொள்ள வைக்கலாம்.

கவி:தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று வாழும் அரசியல் தலைவர்களுக்கு ஏதாவது கூறுவீர்களா?

ராஜன்: அரசியல் தலைவர்கள் நாம் கூறுவதை எதையாவது கேட்பதை விடவும், தங்கள் அரசியல்க் காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அதையே சாதனையாக காட்டுபவர்கள். எனவே புதிதாக எதையும் கூறாமல் மீண்டும் நினைவுபடுத்துதல் நல்லதென நினைக்கிறேன், நாங்கள் அளவற்ற தியாகத்தின் சொந்தக்காரர்கள். விதைகுழிகளில் நீங்களும் அள்ளிப் போட்ட மண் உயிரானது, அந்த புனிதமான ஆத்துமாக்களின் ஆன்ம பலிபீடங்களில் நின்றபடி நீங்கள் செய்யும் அரசியலில், ஆறாத வடுக்களில் இனத்தின் இழிநிலையை மாற்றியமைக்க இதயசுத்தியோடு பயணிக்க உறுதி கொள்ளுங்கள்.

ஸ்ரீலங்கா அரசினால் முடக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பெருந்தொகை நிதியை மக்கள் பயன்பாட்டிற்காக மீளப் பெற உங்கள் அரசவை அமர்வில் தெளிவுறப் பேசுங்கள்.

இல்லையேல் ஸ்ரீலங்கா அரசே, இது தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதி என்பதைச் சொல்லியபடி, ஏதாவது ஒரு மக்கள் நலன் பணியை முன்மொழியுங்கள். ஏனெனில் அப்பணம் மக்களால் மக்களுக்கு மறுவாழ்வுக்கு வழங்கப்பட்ட பணம் என்பதை வலியுறுத்துங்கள்.

கவி: இறுதியாக எம் மக்களுக்காக என்ன கூற விரும்புகிறீர்கள்?

ராஜன்: காலத்தின் கோலத்தால் நாங்கள், தேசம் விட்டேகி எங்கு வாழ்ந்தாலும் எங்கள் ஆணிவேர் ஊன்றிய தாய்மடியின் வாசம் எங்கள் சுவாசமே.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் செயற்பணிக் கூட்டில் சிறந்த ஆளுமைத் திறன்கள் நிறைந்திருந்த தருணம் தந்த அனுபவங்களே இன்னும் எமை இயங்கு நிலையில் வைத்திருக்கிறது.

புதுப்பொலிவோடு புலரும் ஒரு காலையில் மனிதநேயத்தை பேணியபடி விழிமூடிய புனிதர்களின் திருமுகங்கள் துலங்கும். இது பொய்யல்ல வற்றாத பொய்கையாக உயிர் பெறட்டும்.


புலர்வுக்காக சந்தித்தது : இ.இ. கவிமகன்
சந்திக்கப்பட்டவர்: இரா. ராஜன்
ஒப்புநோக்கியது : மஞ்சு மோகன்

புகைப்படங்கள்: தமிழ்கார்டியன் இணையம்