தேன் ஊறும் மரங்களும் அம் மரங்களின் வளர்ச்சியால் நிலம் தெரியா காடுகளும், பச்சைப்பசேல் என்று வானம் தொடும் தென்னை மரங்களும் அங்கே கீச்சிட்டுக் கொண்டு ஓடித்திரியும் தூக்கணாங்குருவிகளும், வாடி வீட்டை நனைத்துக் கொண்டிருக்கும் நிலவொளியும், அவ்வொளியில் மினுமினுக்கும் சமுத்திரமுமென தமிழீழம் தன் அடையாளங்களை சுமந்து நிமிர்ந்திருந்த காலம் மட்டுமல்லாது, தமிழீழம் என்ற இலக்குக்காக தம்மை ஒறுத்து தம் நாட்டின், தம் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக கரங்களில் சுடுகலன்களை சுமந்து நின்ற விடுதலைப் போராளிகளையும், தமிழ் இனத்தையே கருவறுத்து விட துடித்த சிங்கள வெறியர்களையும் அவர்களோடிணைந்த துரோகிகளையும் சுமந்து நின்ற காலம் அது.

தமிழீழம் என்ற இலட்சியக் கனவோடு வட/ தென் தமிழீழம் எங்கும் புலிகள் வரியுடுத்தி களத்திடை மேவித் திரிந்த அக்காலத்தில், படையக ரீதியாக பல வளர்ச்சியைக் கண்டிருந்த விடுதலைப்புலிகளின் மரபுவழி தமிழீழ இராணுவம் தன் படையக வளங்கல்களை நிலைநிறுத்தவும், மேம்படுத்தவும் என விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி பயணித்தனர். ஒற்றைப் படகு மூலம் இந்தியா சென்று அங்கிருந்து விநியோகப் பணிகளை செய்த விடுதலைப்புலிகளின் கடற்புறா அணி கடற்புலிகளாக பரினாம வளர்ச்சி பெற்று பல நூறு சண்டைப் படகுகள், பல நூறு விநியோகப் படகுகள்,உயர் தொழில்நுட்பம் கொண்ட தொலைத் தொடர்பாடல்கள் என அதி உச்ச வளர்ச்சியை அடைந்திருந்த காலம்.

அக்காலத்தில் தான் வட/ தென் தமிழீழத்தின் ஆயுத வளங்கல்களை பலப்படுத்தவும் தமிழீழ படைக்கட்டுமானத்தை நிலைநிறுத்தவும் வட தமிழீழத்தில் இருந்து தென் தமிழீழத்துக்கும் அங்கிருந்து வடதமிழீழத்துக்கும் படையக / ஆளணிகளை நகர்த்தும் பணியை பல போராளிகள் செய்து வந்தார்கள். அதில் முக்கியமானவன் லெப். கேணல் புரட்சிநிலவன். புரட்சிநிலவனை அறியாத கடற்புலிப் போராளிகள் குறைவு. அத்தகைய வீரமும் விவேகமும் கொண்ட இளைய போராளி. இயக்க வாழ்வு என்பது புரட்சிக்கு வெறும் 5 வருடங்கள் தான். ஆனாலும் அதி உச்சப் பணிகள் மூலமாக உயர்ந்து நின்ற போராளி. அதிகமான காலங்களில் விநியோக நடவடிக்கைகளையே தன் பணியாக கொண்டவன். அதுவும் பல இன்னல்கள் நிறைந்த பயணங்களை மிக சாதாரணமாக செய்து முடிப்பவன். 

நினைவாற்றல் நிறைந்த ஒரு போராளி, புரட்சி என்றால் “ஆள்கூறு “ என்று போராளிகள் கிண்டல் செய்வார்கள். உண்மையும் அதுவே புரட்சிக்கு தமிழீழத்தின் பெரும்பான்மையான ஆள்கூறுகள் அனைத்தும் மனதில் நிறைந்து கிடக்கும். குறித்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடத்தில் ஆள்கூறுகளை பார்த்து உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே பூமிநிலை காண் தொகுதி (Global Positioning System) கருவியில் அந்த ஆள்கூற்றை உட்செலுத்தி தயாராகிவிடுவான் புரட்சி. அவ்வாறு நினைவாற்றல் மிகுந்தவன் இப் போராளி.

கடல் அலைகளின் தாலாட்டில் நிதம் நிதம் மகிழ்ந்திருக்கும் வடமராட்சி கிழக்கின் ஆழியவளை, தாளையடியை சொந்த இடமாகவும். மருதநிலமும், பாலைவனமும் நிமிர்ந்து நிற்கும் விசுவமடுவை வதிவிட இடமாக கொண்டிருந்த வைரமுத்து வசீகரன் உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்தில் விடுதலையின் தேவையை உணர்ந்து பாசறை புகுந்து புரட்சிநிலவனாகினான். அடிப்படைப் பயிற்சியை முடித்து படையணித் தளபதிகளினால் போராளிகள் தம் படையணிகளுக்கு உள்ளிணைக்கப்பட்ட போது கடற்புலிகளின் அணிக்கு தெரிவாகி உள்வாங்கப்படுகிறான். அங்கே சிறப்பு கடற்பயிற்சிகளை முடித்த புரட்சி நிலவன் முழுநிலை கடற்புலியாக உருவாகினான்.

படகு இயந்திரவியலாளனாக தேர்ச்சி பெற்ற புரட்சிநிலவன் நடுக் கடலில் வைத்தே இயந்திரத்தை கழட்டி மாற்றி படகை இயக்கும் வல்லமை கொண்டவன். ஒரு தடவை சர்வதேச கடல் விநியோக போராளிகளிடம் இருந்து பெறப்பட்ட பொருட்களுடன் சாலை முகாம் நோக்கி வந்து கொண்டிருந்த படகின் பிரதான இயந்திரவியலாளர்களான சென்றது புரட்சி நிலவனும் நக்கீரன் என்ற போராளியும். கரை நோக்கி வந்து கொண்டிருந்த அப்படகு இயந்திரம் இயங்காததால் இடையில் நின்றுவிட, பழுதடைந்துவிட்ட அவ்வியந்திரத்தின் பிரதான தொகுதியை நடுக்கடலில் வைத்தே மாற்றி சர்வதேச விநியோக போராளிகளிடம் இருந்து கிடைத்த புதிய இயந்திரத் தொகுதியை நிறுவி அப்படகை இயக்கிக் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். 

அவ்வாறு வலிமை மிக்க டீசல் இயந்திரவியலாளனாகவும் போராளியாகவும் மிளிர்ந்த புரட்சிநிலவன் கடற்புலிகள் அணியில் இருந்து கடற்கரும்புலிகள் அணிக்கு செல்வதற்காக தேசியத்தலமையிடம் அனுமதி கோருகிறான்.

நெஞ்சுக்கும் தோள்மூட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அவன் பெற்றிருந்த விழுப்புண் அவனின் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்குமோ என எண்ணத்தை உருவாக்கினாலும் அவனின் துணிவும், தன்நம்பிக்கையும் விவேகமான செயற்பாடுகளும் புரட்சிநிலவனை கடற்கரும்புலியாக மாற்றுகிறது.

கடற்புலிகளின் பெரும் பணியாக இருந்த ஒன்று கடல் விநியோகம். அவ்விநியோகத்தினூடாக படையகப் பொருட்களை தமிழீழத்துக்கு கொண்டு வருவது முக்கிய பணியாக விரிந்து கிடந்தது. அப்பணியை செய்த போராளிகளுள் புரட்சி நிலவனும் முக்கியம் பெறுகிறார். அப்பணியில் முக்கியம் பெறுவது தென்தமிழீழத்துக்காக படையக பொருட்கள் விநியோகம். அவ்விநியோகத்தை தன் உச்ச வீரத்தால் செய்து கொண்டிருந்த புரட்சிநிலவன் பல முக்கிய ஆயுதங்களை தென் தமிழீழத்துக்குக் கொண்டு போய் சேர்த்தான்.

அவ்விநியோகத்தின் பெறுபேற்றை தென்தமிழீழத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் படைகள் நிச்சயம் உணர்ந்திருக்கும். அதை இரண்டு 152 MM ஆட்லறி எறிகணையின் மூலம் விடுதலைப்புலிகளின் படையணிகள் உணர்த்திக் காட்டின. திருகோணமலை துறைமுகம் தொடக்கம் அங்கே இருந்த எதிரிகளின் பாசறைகள் பல அத் தாக்குதல்களால் திணறிக் கிடந்தன. ஆட்லறி எறிகணையால் எம் மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்து கொடுங்கோலாட்சி நடாத்திய சிங்கள தேசம் விடுதலைப்புலிகளின் ஆட்லறி எறிகணையின் துல்லிய தாக்குதல்களால் திணறிப் போய்க் கிடந்தது.

அதற்கு மூல காரணமாகியது புரட்சியிலவன் என்றால் அதில் எந்த பொய்மையும் இல்லை. தனது விவேகத்தாலும், புத்திசாதுரியத்தாலும், ஒரு போராளியும் இரண்டு பொதுமகன்களையும் தனது ஆளணியாக கொண்டு தென் தமிழீழத்தின் கிட்டுபீரங்கிப் படையணியை வானம் தொட்டுவிடச் செய்வதற்காக அவ்விரண்டு ஆட்லறி எறிகணை செலுத்திகளையும் படகினூடாக கொண்டு வந்து சேர்த்தது புரட்சி நிலவனின் போரியல் குணத்தின் முக்கிய உச்சமாகிறது. அதுவே தென்தமிழீழத்தில் பல வெற்றிகளுக்கு காரணமாகிறது.

அவற்றை அங்கே கையளித்து சற்று ஓய்வும் இன்றி தென் தமிழீழத்தில் இருந்து வட தமிழீழம் நோக்கி வந்து கொண்டிருந்த புரட்சிநிலவனும் அவனின் அணியும் தமது படகில் இன்னும் ஒரு ஆட்லறியை சுமந்து கொண்டு மன்னார் பகுதி நோக்கி பயணிக்கின்றனர். அப்போது அந்த பயங்கரம் நடக்கின்றது. ஆனால் அதை பயங்கரம் என்று நினைக்காத புரட்சிநிலவன் தனது விவேகத்தால் அன்றைய நாளில் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய படையகச் சொத்தொன்றை காப்பாற்றியது மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகள் எந்த நிலையிலும் தளர்வற்றவர்கள் என்பதை சொல்லிச் சென்றான்.

அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது திடீர் என்று மன்னார் கடற்படை முகாமில் இருந்து வந்த சிங்களக் கடற்படையின் ரோந்துப் படகு ஒன்றை இவர்களை இடைமறிக்கிறது. மீனவர்கள் போல் பயணித்துக் கொண்டிருந்த அவர்களின் படகிற்குள் ஆட்லறி எறிகணை செலுத்தி இருப்பதனால், பொதுமகன்கள் இருவரும் சற்றுக் கலவரமானார்கள். சோதனை என்ற பெயரில் இவர்களின் படகிற்குள் வந்த கடற்படை ஒருத்தன் இவர்களை மிரட்டும் தொணியில் கேள்விகளை கேட்ட போது, பொதுமகன்கள் இருவராலும் கலவரப்படாமல் இருக்க முடியவில்லை. ஆனால் எந்த அதிர்ச்சியும் அடையாத புரட்சிநிலவன் சிங்கள மொழியில் உரையாடத் தொடங்கினான்.

சிங்களப் படையின் காலுக்கு கீழ் இருக்கும் சிறிய கதவு ஒன்றை திறந்தால் உள்ளே இருக்கும் பொருட்களை அவன் நிச்சயம் கண்டுவிடுவான். அதனால் அவனின் நினைவுகளை திசை திருப்புவதற்காக முயல்கிறான் புரட்சி நிலவன். உடனடியாக அவனின் கையை பிடித்து படகின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

சிங்களத்தில்

“ உனக்கு என்ன வேணும் சொல்லு தாறன்”

என்று கேட்டது மட்டுமல்லாது அந்தச் சிங்களக் கடற்படைக்கு அவர்களிடம் இருந்த அதிக விலை கொண்ட கருவாட்டை அவனுக்கு அன்பளிப்பாக வழங்குகிறான். அவ் அன்பளிப்பினாலும் உபசரிப்பினாலும் தன் நிலை இழந்த கடற்படை சிரித்தபடி தனது டோரா படகிற்கு திரும்பினான். அவ்வாறு புரட்சிநிலவன் செய்யவில்லை என்றால், நிச்சயமாக அந்த கடற்படை காலடியில் இருந்த கதவை திறந்திருப்பான். அதனை கண்டிருப்பான். அதன் பின் யாருமே எதிர்பார்க்காத சம்வங்கள் நடந்து முடிந்திருக்கும்.

ஆனால் புரட்சிநிலவனின் அந்த விவேகமான செயற்பாடு அவரின் அணியும் உள்ளே அமைதியாக இருந்த ஆட்லறியும் எந்த சேதமும் இல்லாமல் கரையேறியதற்கு காரணமாகியது. இல்லையென்றால் அன்று எமக்காக கொண்டுவரப்பட்டிருந்த விடுதலைப் போராட்டத்தின் பெரும் சொத்து பெற்ரோல் ஊற்றி கொழுத்தப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும். அதோடு நிச்சயம் இரண்டு போராளிகளும் வீரச்சாவடைந்திருப்பர். பொதுமகன்கள் இருவரும் கைதாகி இருப்பர் அல்லது அவர்களும் வீரச்சாவடைந்திருப்பர். ஆனால் புரட்சிநிலவனின் சாதுரியமான செயற்பாடு அன்றைய களச்சூழலை மாற்றிவிட்டது.

இக் களச் சூழலையும் சாதுரியமாக நடவடிக்கையை வெற்றிபெறச் செய்த புரட்சிநிலவனின் நடவடிக்கையினையும் அறிந்த தேசியத்தலைவர் உடனடியாக தன்னிடம் அழைத்தது மட்டுமல்லாது, CBZ உந்துருளி ஒன்றும் நடவடிக்கைக்குத் தேவையான பல பொருட்களையும் பரிசளித்து மதிப்பளித்தார்.

அதன் பின்பான நாட்கள் விநியோக நடவடிக்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போது, உயர் தொழில்நுட்ப தொடர்பாடல் முறைகளை கொண்டு வர வேண்டி களச்சூழல் ஏற்பட்டது. அதனால் உயர் தொழில்நுட்ப தகவல்பரிமாற்ற முறமையினை கற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அணியில் புரட்சி நிலவனும் ஒருவராகிறார். அந்த கற்றல் செயற்பாடு முடிவடைந்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற புரட்சிநிலவன் எதிரியின் கோட்டைக்குள்ளே நின்று சிங்கள எதிரியை திணறடிக்க செய்யும் படையக பொருட்களை தமிழீழத்துக்கு அனுப்ப வேண்டிய முக்கிய பணி ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டார்.

தென்னிலங்கையின் முக்கிய கடல் சார்ந்த நகரம் ஒன்றிற்கு அனுப்பப்பட்ட போது, புலி ஒருத்தன் மீனவனாக மாறி நின்று படையகப் பொருட்களை கப்பலில் இருந்து இறக்குவதும், அதை தமிழீழத்துக்கு எந்த இடரும் இல்லாது அனுப்புவதுமாக தனது விநியோகப் பணியை செய்து கொண்டிருந்தார். பயப்பிடவில்லை, சோர்ந்து போகவில்லை, இலக்கொன்றே அவனின் மூச்சாக தன் பணியில் ஈடுபட்டு பல படையக பொருட்களை தமிழீழத்திற்கு கிடைக்கச் செய்தார். ஒரு படகின் அணித் தலைவனாக பணியாற்றிய அப் போராளிக்கு அவன் கற்றுத் தேர்ந்திருந்த சிங்கள மொழி பெரிதும் உதவியது என்பது உண்மையே.

இவ்வாறான இடர் மிக்க பணிகளினால் தமிழீழ விடுதலைக்காக உழைத்த அப்போராளியும் அவரது அணியும் உறுதியாக இறுதி வரை பயணித்தார்கள். கடல் விநியோகம் என்பது சாதாரணமானதல்ல. சிங்கள கடற்படை இந்திய கடற்படை என கடல் வல்லூறுகளும், தொழில்நுட்ப அரக்கர்களாக இருக்கக்கூடிய சர்வதேச நாடுகளின் செய்மதிகள் மற்றும் இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளும் என தமிழீழ கடற்பரப்பில் சிறு பணியை செய்வதற்கும் பல தடைகள் எழுந்து நின்றன. அதே நேரம் அதையும் தாண்டி, இயற்கையும் பாதகத்தை விளைவிக்கும்.

அவ்வாறான இடர்களை எல்லாம் தம் தோழ்களிலே சுமந்து தமிழீழ கடல் அன்னையின் மடியில் தவழ்ந்து திரிந்தனர் இப் போராளிகள். ஒன்றல்ல இரண்டல்ல மாதங்கள் பல கடந்தும் கரையேறாத பணி. ஒழுங்கான தூக்கம் இல்லை, உணவில்லை. ஆனாலும் சோர்ந்து போக மாட்டார்கள். தன்நம்பிக்கையையும் துணிவையும் தமதாக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஒன்றில் ஒன்றரை மாதங்களாக கடலில் பயணித்துக் கொண்டிருந்த புரட்சிநிலவன் கரையேறி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. கிடைத்த சிறு ஓய்விலும் முகாமை விட்டு நகராது தமிழீழ விடுதலைக்காக பணி செய்தார்.

அப்போது இன்னும் ஒரு அணி கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அவ்வணியின் படகு இயந்திரகோளாறால் பாதிக்கப்பட்டு பயணிக்க முடியாத சூழல் வந்த இடைநடுவில் நின்ற போது, சிறப்புத்தளபதி சூசை அவர்களால் புரட்சிநிலவனிடம் அப் படகை மீட்டுவருவதற்கான வேண்டுகை விடப்பட்டது. அது மட்டும் அல்லாது அப்படகின் கட்டளை அதிகாரியாக வந்த போராளி முக்கிய பணி ஒன்றுக்காக வேறு ஒரு படகிற்கு செல்ல வேண்டிய தேவை எழுந்திருந்தது. இவற்றின் காரணமாக அப் படகை பொறுப்பெடுக்கவும், இயந்திரத்தை திருத்தி கரைக்கு கொண்டு வந்து சேர்க்கவும் சரியான தெரிவாக புரட்சிநிலவனே இருந்தார்.

அதனால் உடனடியாக தனது அணியோடு கடலேறிய புரட்சிநிலவன் படகை கொண்டு வந்து சேர்க்கும் பணியை சரியாக செய்தார். பழுதடைந்த படகினை சென்றடைந்து, அப்படகின் கட்டளை அதிகாரியாக இருந்த போராளியிடம் இருந்து படகை பொறுப்பெடுத்து அவரது பணிக்காக அவரை அனுப்பிய பின் படகை கரையேற்றும் பணியில் ஈடுபட்டார்கள் புரட்சிநிலவனின் அணியினர். பல இடர்களை சுமந்து குறிப்பிட்ட சில வருட போராட்ட வாழ்விலே உச்ச வீரத்தோடு களப்படியாற்றிய, தமிழீழ மக்களின் மனங்களை வென்ற அப் போராளிக்கு அப்பணியே இறுதிப்பணி என்று யாரும் எண்ணவில்லை.

மன்னார் கடல் அன்று அமைதியாக இல்லை. தன் வீரக் குழந்தைகளின் மேனி தொட்டு வரும் காற்றில் கடல் அலை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சிங்களத்தின் கடற்படையின் படகுகளை எதிர்க்க முடியாது அந்த அலைகள் சீறிக் கொண்டிருந்தன. தன் பிள்ளைகளை தன் அலை எனும் சிறகுகளால் பாதுகாக்க முனைந்து கொண்டிருந்தது அந்த கடல். அதனூடாகவே புரட்சி நிலவனும், மோகன் ஐயாவும், மோகனதாஸ் ஐயாவும். அப்படகோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மன்னார் கடல் பகுதியில் அடிக்கடி குறுக்கே வரும் சிங்களப்படைப் படகுகள் திடீர் என்று எதிர் வந்தன. சர்வதேசத்தாலும் இந்திய வல்லாதிக்க சக்திகளாலும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அக் கடல் மீதான எமது நடவடக்கைகள் ஒவ்வொன்றிலும், அவர்களுக்கெல்லாம் போக்குக் காட்டி ஒவ்வொரு வெற்றி நடவடிக்கைகளையும் செய்த புரட்சிநிலவனின் அணி அன்று சிங்களப் படைகளினால் இடைமறிக்கப்படுகிறது. புரட்சி நிலவனும் அவரின் அணியும் எதிர்த்து களமாடுகிறார்கள். தொலைத் தொடர்புக் கருவிகள் நிலமையை கட்டளைப் பீடத்துக்கு கொண்டு செல்கின்றன. ஆனாலும் சண்டையின் தீவிரம் உச்சம் பெற்று படகு சண்டை இட முடியாத அளவுக்கு சேதமடைகிறது. ஆனாலும் இறுதிவரை உறுதியாக புரட்சிநிலவன் சிங்களப்படைகளை எதிர்கொள்கிறார்.

கட்டளைப் பணியகத்தில் இருந்து உதவி அணிகள் சென்றடைய முன்பாகவே சண்டை உக்கிரமமடைந்து அப்படகு கட்டளை அதிகாரியான கடற்கரும்புலி புரட்சிநிலவன் லெப். கேணல் புரட்சிநிலவனாகவும், மோகன், மற்றும் மோகனதாஸ் என்ற பொதுமகன்கள் நாட்டுப்பற்றாளர்களாகவும் வீரச்சாவடைந்திருந்தார்கள். மன்னார் கடல் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்ததைப் போலவே தமிழீழம் என்ற உன்னத இலக்குக்காக ஆர்ப்பரித்துப் பயணித்த புரட்சிநிலவனும் அவரது அணியும் தம் பணியின் போதே விழி மூடி கடல் மடியில் வெடியோடு சங்கமித்து போயினர்.

“கடலிலே காவியம் படைப்போம்” என்ற உயர்ந்த வாசகத்தை தாரகமந்திரமாக கொண்டு பயணித்த கடற்புலிகள் பாரிய துறைமுகங்களை கொண்ட ஒரு அரச கடற்படையாக இல்லாத நிலையிலும், பல சிறு கடற்துறைமுகங்களை கொண்டிருந்ததும் விநியோக நடவடிக்கைகளில் உச்சம் பெற்றிருந்ததும், தமிழீழ கடற்படையின் இவ்வாறான போராளிகளின் தியாகங்கள் உச்சம் பெற்றிருந்ததும் வரலாறாக பதிவாகி கிடக்கின்றது