இன்று காணாமல் போனவர்களின் சர்வதேச தினம்…

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு சிங்கள பேரினவாதிகளால் எம் தமிழ் உறவுகள் எத்தனை எத்தனை ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதை சர்வதேச ஊடகங்கள் சிலவற்றாலும் தாயகம் சார்ந்த ஊடகங்கள் சிலவற்றாலும் யாவரும் அறிந்த ஒன்று. அதிலும் கடந்த பத்து வருடத்துக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் வைத்து வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல… எண்ணிக்கையற்றுத் தொடரும் கணக்கது. 

எவ்வளவோ கனவுகளைச் சுமந்து, எத்தனையோ துன்பங்களைச் சுமந்து தமிழீழ மண் விடிய வேண்டும் என்ற அதி உன்னதமான நோக்கோடு, தாயை விட்டு, தந்தையை விட்டு, சொந்த பந்தங்களை விட்டு, கட்டிய மனையாளையும் / துணைவனையும், பெற்ற குழந்தைகளையும்  தனிக்க விட்டு அதி உன்னத இலட்சியத்துக்காக இறுதிவரை உறுதியோடு நின்று போராடிய அல்லது போராடியவர்களோடு இறுதி வரை வாழ்ந்த அன்பு உறவுகளை நாம் பிரிந்து வாழும் ஒரு கொடுமையான காலவோட்டத்தில் தான் இன்றைய நாள் கடந்து கொண்டிருக்கிறது. 

1000 நாட்கள் கடந்த நிலையில், தமது உறவுகளின் இருப்புக்காக வீதிகளில் போராடிக் கொண்டிருக்கும் எம் தாய்மாரையும்    குழந்தைகளையும் கண்டு கொள்ளாத சர்வதேசமும், இந்திய இலங்கை அரசுகளும், இன்றைய நாளின் அவர்களுக்கு என்ன சொல்லப் போகிறது…? அல்லது இன்று மட்டும் கண்டு கொள்ளவா போகின்றன. இன்றைய நாளும் வழமை போலவே அவர்களுக்கு கடந்து செல்லும்.

அவை கூட எமக்கு எந்த சாதகமும் இல்லாதவை என்று எமக்குத் தெரிந்தாலும், நீதி கேட்டு வீதியில் கிடக்கும் அவர்களோடு துணை நிற்க வேண்டிய, “நாங்கள் தான் தமிழினத்தின் தேசியவாதிகள் ” என்று கூவித் திரியும் சில அரசியலாளர்கள் இன்று என்ன செய்ய போகிறார்கள்? (இது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அல்ல சிலருக்கே )

“நாம் உங்களோடு இருக்கின்றோம் “ என்று கண்வித்தை காட்டி விட்டு வரப் போகும் தேர்தலுக்காக தாம் கொண்ட நோக்கங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் ஒரு களமாக மட்டுமே இதைப் பயன்படுத்தப் போகிறார்கள். 

இப்போது தாயகம் தழுவிப் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கும் சிறிய அணி போராட்டத்தில் செய்தி சேகரிக்க என்று சென்ற  என் ஊடக நண்பன் ஒருவனின் கருத்துப்படி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வீதிப் போராட்டம் ஆரம்பிக்கும் போது வந்து நின்ற பல அரசியல்வாதிகளை இப்போது காணவில்லை என்று கூறினார். அவர் கூறியதைப் போல அங்கே வந்து மக்களுக்கு கண்வித்தை காட்டிவிட்டு ஒலிவாங்கியில் நாலு வார்த்தை தம்மையும் தாம் சார்ந்த கட்சியையும் பற்றி பேசி விட்டு மறுகணம் காணாமல் போனதையும் நாம் எந்த அட்டவணைக்குள் நாம் இணைப்பது? 

இவ்வாறே கடந்த 10 வருட காலத்தில் தாங்களும் தாயகம் சார்ந்த ஊடகமாக தம்மை காட்டிக் கொள்ளும் எந்த ஊடகமாவது வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்களைப் பற்றி முழுமையான ஒரு ஆவணத்தை உருவாக்கியதா? என்பது வினாக்குறி. நடக்கும் போராட்டங்களை செய்தியாக்குவதோடு அவர்கள் தமது பொழுதுபோக்கு நிகழ்வு நிரலுக்காக இதைக் கடந்து சென்று விடுவது தான் வழமை. தேசிய ஊடகங்கள் எனத் தம்மைக் கூறிக் கொண்டிருக்கும் சில ஊடகங்களும் அவர்களிடம் சென்று நாலு ஒலிவாங்கியை வைத்து நேர்காணல் செய்து பிரசுரித்ததோடு தம் கடமை முடிந்ததாக சென்று விடுவதை தானே செய்வார்கள். 

இது ஒரு புறம் இருக்க, 

எங்களுடைய வாழ்வுக்காகவும் தானே இந்த இளையவர்கள் காணாமல் செய்யப்பட்டார்கள்,… எமக்காகத் தானே வீதியில் இறங்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்த உறவுகள் தமது உயிரான துணையை, பிள்ளையை, பெற்றவரைத்  தொலைத்தார்கள். என ஒரு சிந்தனையும் அற்று, தமிழீழம் என்பது அவர்களுக்கானதா அல்லது எமக்கானதா? அல்லது ஒட்டு மொத்த தமிழினத்துக்கானதா என்ற ஒரு சதவீத நினைவுகளும் இன்றி நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழாவையும் தொண்டைமானாறு செல்வச் சந்நதி ஆலயத்தின் கொடியேற்றத்தையும் சிறப்பித்துக் கொண்டிருக்கும் என் அருமைத் தமிழ் மக்களை நாம் எந்த வகைக்குள் கொண்டு வருவது? அவர்களுக்கும் எந்த நினைவுகளும் இன்றி இன்றைய நாள் கடந்து தான் போகப்போகிறது

இவையெல்லாவற்றையும் தாண்டி ஒரு இடம் இருக்கின்றது. அது தான் இன்றைய காலத்தில் மிக வலுவுள்ளதாக கருதக்கூடியது. ஏனெனில் தாயகத்தில் சிங்கள தேசத்தின் மறைமுகக் கெடுபிடிகளுக்குள் வாழும் மக்களால் எதையும் நினைத்தளவு துணிந்து செய்ய முடியாத சூழலை அங்கிருக்கக் கூடிய புலனாய்வுக் கட்டமைப்பு மறைமுகமாக உருவாக்கி இருக்கின்றது. ஆனால் இப்போது நான் கூற வரும் இடம் என்பது அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக நாம் எவ்வளவு விடயங்களையும் செய்யலாம்.

2009 ஆம் ஆண்டு நாங்கள் முள்ளிவாய்க்காலில் மௌனித்துக் கொண்டிருந்த போது, வல்லரசுகள் பலவற்றின் திட்டமிட்ட இனவழிப்பால் நாங்கள் செத்துக் கொண்டிருந்த போது, வீதிகளில் இறங்கி சட்டத்துக்குப் புறம்பான வீதித் தடைகளை ஏற்படுத்தி, போக்குவரத்துக்களை குழப்பி, பிரதான தொடருந்து நிலையங்களுக்குள் புகுந்து தொடருந்துகளை நிறுத்தி, அரச பணியகங்களை இயங்கவிடாமல் முடக்கி, உண்ணாமல் உறங்காமல் வீதிகளிலே படுத்திருந்து என

எத்தனையோ வகைப் போராட்டங்களைச் செய்து சர்வதேச ஊடகங்களையும் சர்வதேச இராசதந்திரிகளையும் எம்மை கொஞ்சமாவது பார்க்க வைத்த முழுப்பங்கும் நான் சொல்ல வரும் அந்த இடத்துக்குத் தான் சொந்தமானது. முள்ளிவாய்க்காலில் நாம் அணுவணுவாக சாகடிக்கப்பட்ட போதும் பெரும் நம்பிக்கை ஒளியாக எம்முள் இருந்த “புலம்பெயர் சமூகம் ” இன்று என்ன செய்யப் போகிறது? 

குறித்த சில இடங்களில் ஏற்பாடாகி இருக்கும் அடையாளப் போராட்ட நிகழ்வுகளில் நாம் எத்தனை பேர் கலந்து கொள்ளப் போகிறோம்? எத்தனை சர்வதேச ஊடகங்களுக்கும் சரவதேச சமூகத்துக்கும் இன்றைய “காணாமல் போனோர்களுக்கான சர்வதேச நாளில் “ எமது நாட்டில் பல ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளார்கள் என்ற செய்தியை சொல்லப் போகிறோம்? 

“உனக்கென்ன பைத்தியமா? “ என்ற வினாவோடு தொடரும் பணியிட பிரச்சனைகளை கூறிவிட்டு குறித்த அந்தப் போராட்டக் களத்தில் 4-5 அல்லது 10 இற்கும் குறைந்தவர்கள் ஒரு பதாகையை கட்டி வைத்து விட்டு அந்தந்த நாட்டு மொழிகளில் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு இன்றைய நாளினை நாமும் கடந்து தான் போகப் போகிறோம்.

இது தான் இன்றைய நாளின் கடப்பு என்றால் அதில் எந்தப் பொய்யும் இல்லை… 

( இங்கே நடந்த ஊர்வலத்தை பேரணி என்று கூற என்னால் முடியவில்லை) 

புலர்வுக்காக

இ.இ.கவிமகன் 30.08.2019