வானம் மெல்லிய நீலநிற கம்பளியை போர்த்து கிடந்தது. ஒருவேளை தொடங்க போகும் பனி மழைக்கு பயந்து கிடந்ததோ என்னவோ அழகாக இருந்தது. சுமன் அந்த அழகை ரசித்தவனாய் எண்ணச் சிறகை பறக்க விட்டிருந்தான். நீலநிறம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகிறது. வானம் வெண்ணிற போர்வையால் இழுத்து போர்க்கப்படுகிறது . தேநீரை உறிஞ்சியபடி வானத்தை ரசித்துக் கொண்டிருந்த சுமன் பார்வையை திருப்பி அன்றைய வானிலை அறிவிப்பை பார்க்கிறான்.

“இன்று பனி என்று வெதர் ரிப்போட்டில (Weather Report ) போட்டிருக்காங்கள் கொட்டித் தள்ளப் போகுது போல கிடக்கு. இன்று வேலையும் இல்லை. வீட்டை விட்டு வெளிக்கிடாமல் பேசாமல் எதாவது படிப்பம்”

என்று நினைத்தவனாய் பல்கனி கதவருகில் நிற்காது தன் அறைக்குள் வருகிறான்.

ஜன்னல் கரையில் இருந்த படிக்கும் மேசையில் கப்டன் மலரவன் எழுதிய ” போருலா ” நாவலை விரித்து கொண்டு அமர்கிறான் சுமன்.

“என்ன புத்தகம்டா இது. மனதுக்கு எவ்வளவு எழிமையையும், கவலையையும், உற்சாகத்தையும் தருகிற புத்தகம். எங்கட அண்ணையாக்கள் எப்பிடி எல்லாம் போராட்டத்த வளர்த்தார்கள்? இன்று இப்பிடி அனைத்தையும் இழந்து வெறும் ஜடங்களாக இந்த குளிர் நாட்டில் வாழ்கிறோம்”.

சுமன் தனக்குள் பேசி கொள்கிறான்.

அந்த நாவலை அவன் பல தடவைகள் தொடர்ந்து வாசித்திருந்தாலும் ஏனோ இன்று வாசிக்கும் போது பல நினைவுகள் மனதை நிறைத்து நின்றது. ஓரிடத்தில் வசந்தன் என்ற போராளி உழவியந்திர பெட்டியில் இருந்து விழுந்துவிட அவனை காக்க துடிக்கும் மலரவனின் மனவுணர்வு இவனின் அடி மனதில் கிடந்த இவனின் நண்பர்களை நினைவுபடுத்தியது. நாவலை மூடி வைக்கிறான். தலையில் கையை வைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடுகிறான். அவனுக்கு பழைய நினைவுகள் சில மங்கலாகவும் பல நிகழ்வுகள் தெளிவாகவும் தெரிந்து மறைகின்றன. அவனின் மனதோ என்றும் இல்லாதவாறு பதட்டமாக இருந்தது.

“என்னாச்சு இன்றைக்கு? இப்பிடி இருந்தால் எனக்கு எதாவது வருத்தம் வரப் போகுது. பழசுகள நினைக்க கூடாது என்றாலும் அவற்றை மறக்க முடியவில்லையே.”

என்று எண்ணியவன் கதிரையை விட்டு எழுகிறான்.

குடித்து முடித்த தேநீர் குவளையை தூக்கி கொண்டு அந்த அறையை விட்டு சமையலறைக்குள் நுழைந்த போது கைபேசி அழைப்பு ஒன்று அவனை மீண்டும் அறைக்குள் கூட்டி வருகிறது. அவனின் நெருங்கிய நண்பனின் இலக்கத்தையும் பெயரையும் தாங்கி வந்திருந்தது அந்த அழைப்பு.

“வணக்கம் சொல்லுங்க அண்ண… தம்பி எனக்கு அம்மாவ பார்க்க போக ட்ரவல் டொக்கியூமென்ட் ( Travel Document ). வந்திட்டுது. இப்ப சந்தோசமா இருக்கு தம்பி. “

அவரின் சந்தோச வார்த்தைகள் சுமனுக்கும் மகிழ்வைத் தந்தது. உண்மையில் பெற்ற தாய் வருத்தத்தில் கிடக்கும் போது அருகில் இல்லை என்ற பெருங் கவலை அவரை பெரிதும் பாதித்திருந்ததை சுமன் அறிவான்.

2 வாரங்களாக கதைக்கும் போதெல்லாம் அம்மாவுக்காக பிரார்த்திக்க சொல்லி கேட்கும் அந்த மனிதனின் நெஞ்சுக்குள் எத்தனை கொடிய வலிகள். சிறு வயதில் போராளி ஆகி நீண்ட காலங்களாக தமிழீழ தேசத்துக்காக வாழ்ந்த அந்த போராளி தன் பெற்றதாயை பிரிந்திருந்த காலங்களை நினைத்து பார்த்ததில்லை. அப்படி நினைத்து பார்த்தால் தமிழீழத்துக்காக தான் செய்த பணிகள் எல்லாம் சுயநலமானதாகி விடும் என்பது அவரது எண்ணம்.

அவர் தனித்து தன் தாயை நேசிப்பவரல்ல அவர் தமிழீழ தாய்மார் அனைவரையும் நேசித்தவர். அதனால் தான் தந்தையின் இறப்புக்கு பின் தனித்து விட்ட தாயை கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் வந்த போதும் வீட்டுக்கு செல்ல முடியாது என்று மறுத்து விட்டார். தான் கொண்ட கொள்கையில் கொஞ்சம் கூட தளராத அந்த போராளி இயக்கத்தை விட்டு விலகி தாயிடம் சென்று அவரை பாதுகாக்க வேண்டியிருந்தும் அதை பற்றிய எண்ணங்களை தவிர்த்துவிட்டு தன் தேசப் பணியை தொடர்ந்தார். ” தமிழீழம்” என்ற உன்னத கோட்பாட்டை எட்டும் வரை அவரால் தன் பணியை விட்டு வீட்டுக்கு செல்ல முடியவில்லை. ஏனெனில் இந்த போராட்ட வாழ்வுக்கே முதல் புள்ளியிட்டது அவரது தாய் தான்.

அவரது தாயின் தந்தையார் ஒரு அகிம்சை போராளி. தந்தை செல்வா வழியில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அகிம்சை வழி சத்தியாகிரக போராட்டத்தை செய்த ஒரு அகிம்சையாளன். அவர்களது போராட்டங்கள் ஆயுத முனையில் சிங்களத்தால் முடக்கப்பட்ட போது அகிம்சையால் எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தவர்கள். இந்த விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்துக்கான தேவையை உணர்ந்த செயற்பாடானது இந்த போராளியின் தாயினது மனதையும் ஆட்கொண்டிருந்தது. தமிழருக்கான விடுதலைப்போராட்டம் ஆயுதங்களின்றிய வெறும் அகிம்சையால் எதுவும் ஆகப்போவதில்லை என்பதை அவர் தன் பிள்ளைகளுக்கு சிறு வயது முதல் உணர்த்தியே வந்தார். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தான்

” அம்மா அகிம்சை வழி போராடிய என் தாதாவுக்கு கிடைத்த வெகுமதி போல எனக்கும் உங்களுக்கும் என் அடுத்த சந்ததிக்கும் வெறுமையும் ஏமாற்றமும் வெகுமதியாக கிடைப்பதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது அதனால் தலைவன் வழியில் ஆயுதம் ஏந்தி எமக்கான விடுதலையை பெறுவதே எமக்கான தெரிவு அதை நான் மனதாற ஏற்க போகிறேன் தளராதீர்கள்… “

என்று ஒரு மடல் வரைந்து வைத்து விட்டு போராட்ட வாழ்வை மனதாற ஏற்றுக் கொண்டவர் அவர்.

இவ்வாறான போராளி எவ்வாறு தாய்க்காக விடுதலைப் போராட்டத்தை விட்டு வர முடியும்? அதை அந்த தாயும் ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்வியாகவே இருந்தது. ஒவ்வொரு நாளின் பிறப்பிலும் மகனுக்கு எதாவது ஆகி விடுமோ என்ற சாதாரண தாய்மாரின் ஏக்கங்கள் அவரின் தாய்க்கும் இருந்ததை மறுக்க முடியாது என்றாலும் அந்த போராளியின் பணி இன்று போராளிகள் என்ற ஒரு வட்டத்துக்குள் இல்லாது சாதாரண மக்களுக்குள்ளும் அவசியம் தேவை என்பதால் மறு நிமிடமே மகனுக்கு ஒன்றும் ஆகாது என்ற பெரும் முடிவை தானாகவே எடுத்துக் கொண்டு சமாதானமடைந்து விடுவார்.

இந்நிலையில் இயக்க விதிகளுக்குட்பட்டு திருமண வயதை அடைந்திருந்த அவருக்கு, திருமணம் செய்ய நண்பர்கள் வலியுறுத்தினார்கள். அவரது பிரிவில் இருந்த போராளியை மனைவியாக ஏற்றுக் கொள்கிறார். திருமண ஏற்பாட்டுக்குழு அதற்கான அனுமதியை வழங்கியது. திருமணம் செய்து கொண்டார். இப்போது தாயும் தனித்து இருக்கும் நிலையில் இருக்கவில்லை அவருக்கும் ஒரு துணை கிடைத்திருந்தது. அவரது தாயினை தனது தாயாக பாதுகாக்கும் அல்லது பராமரிக்கும் முழுப் பொறுப்பையும் அவரது மனைவி பெற்ற மகளாக கவனித்த போது மனம் முழுவதும் நிறைந்த மகிழ்வோடு பயணித்தவர் அந்த போராளி.

“சுமன்…. என்னப்பு சத்தத்த காணவில்லை? அவரது அழைப்பு நினைவுகளில் இருந்து அவனை வெளிக் கொண்டு வந்தது. இல்ல அண்ண சொறி அண்ண கொஞ்சம் கேட்கவில்லை… சமாளித்து கொண்டு தொடர்ந்தான் அவன். அண்ண வெளிக்கிட்டீங்களா அம்மாவ பார்க்க போக? ஓம் தம்பி கொஞ்ச நேரத்துக்கு முதல் தான் வெளிக்கிட்டனான். குறைஞ்சது 4 மணித்தியாலமாவது வேணும் அங்க போக. அம்மாவ உயிரோட பார்ப்பன் என்று நினைக்க சந்தோசமா இருக்கு. சில வேளை என்னை கண்டால் அம்மா எழுந்திடுவா என்று நம்புறன்.

சுமனின் கண்கள் பனித்தன. இதே நிலையில் தான் 3 வருடங்களுக்கு முன் அவனும் இருந்தான். தந்தை இந்தியாவின் மருத்துவமனை ஒன்றில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர மருத்துவ கண்காணிப்பில் அவர் இருந்த போது தன்னந்தனியே பிரமை பிடித்தவனைப் போல ஜேர்மனி நாட்டின் ஒரு அகதிகள் முகாமில் தலையணையை கட்டியணைத்தபடி கிடந்தான். தந்தையை காத்திட வழியில்லை. என்று அறிந்த போது அவரை இறுதியாக பார்க்க வேண்டும் என்று தவியாய்த் தவித்தான். ஆனால் அவனது அகதி தஞ்சக்கோரிக்கை பரிசீலனையில் இருந்ததால் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. அழுவதும் தொலைபேசியில் நிலவரத்தை அறிவதுமாக இருந்த அவனின் கரிய நாட்களை இன்று இந்த போராளிக்கு நடந்த சம்பவங்கள் மீண்டும் நினைவுக்குள் கொண்டு வந்தன.

அரசாங்கத்துக்கு தனது நிலையை தெரியப்படுத்தி ஒரு கடிதம் எழுதினான். அவசர பயண அனுமதி தருமாறு கோரிய கடிதத்துக்கு உடனடியாகவே பதில் வந்திருந்தது. இந்நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக தங்களது அகதி கோரிக்கை பரிசீலினையில் இருப்பதால் தங்களுக்கு அனுமதியைத் தரமுடியாமல் இருப்பதற்கு வருந்துவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சுமனின் மனமோ வெறுத்து போய் உணவு தூக்கமின்றி இருந்த போது இந்த போராளியின் பயணத்தை போலவே அவனும் ஜேர்மனிக்குள் ஒரு நீண்ட தூர பயணத்தை செய்ய வேண்டி வந்தது. அவன் தனிமையில் வாடுவதை பொறுக்க முடியாத ஒன்றுவிட்ட சகோதரி அவனை உடனடியாக தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். அவனுக்கும் சகோதரியிடம் போனால் ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை. பெற்றவருக்கு ஒரு பிள்ளையாக பிறந்த அவனுக்கு சிறு வயதில் இருந்து அவளே கூடப்பிறந்த சகோதரி அதனால் தம்பியின் துயரத்தை தாங்க முடியாது தன்னோடு அணைத்துக் கொண்டாள் அவள். அதுவோ 900 கிலோமீட்டர்கள் தாண்டிய தொடருந்து பயணம். அவ்வாறான பயணத்தூரத்தின் இடைநடுவே தான் அந்த துயரத்தின் உச்சத்தை அவன் அறிந்து கொண்டான்.

திடீர் என்று தொலைபேசியில் வந்த தந்தை இறந்துவிட்ட செய்தியின் அதிர்ச்சியை தாங்க முடியாதவனாய் தொடருந்துக்குள் கத்தி அழுத அவனை ஆற்றுகைப்படுத்த அருகில் சொந்தங்கள் யாரும் இருக்கவில்லை. ஜேர்மனிய நாட்டை சேர்ந்த இரு வயதானவர்களும் இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்க யுவதி ஒருவரும் இவனின் அழுகையால் திடுக்கிட்டு போனார்கள். அருகில் வந்து விசாரித்த போது தன் நிலமையை கூறுகிறான் சுமன். அவர்கள் அவனுக்கு துணையாக, ஆற்றுகைப்படுத்தும் உறவுகளாக அவனின் பயணம் முழுக்க வந்தார்கள். ஆனால் ஆற்றுகை கிடைக்கவே இல்லை.

அவனது நினைவுகள் முழுக்க தந்தையின் மரணநாள் நிறைந்து போக தொலைபேசியில் போராளி நண்பன் கதைத்துக் கொண்டிருந்ததை அவன் மறந்தே விட்டான். சுமன்… மீண்டும் ஒருமுறை “என்னாச்சு தம்பி “என்று கேட்ட போது தான் நினைவுகளில் இருந்து மீண்டு வந்தான் சுமன். ஒன்றுமில்ல அண்ண திடீர் என்று அப்பாவின் நினைவு வந்திட்டுது. சரி அது இருக்கட்டும் அண்ண நீங்கள் கவனமாக போய் சேருங்கோ என்றான்.

சுமன் தனது தந்தையின் இறுதி நாட்களில் தந்தையிடம் போவதற்கு தடையாக இருந்த வீசா நடமுறை இந்தியாவுக்கு போவதற்கு சிக்கல்களை தந்த போது நிலமையை புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது. ஏனெனில் ஐரோப்பிய நாட்டில் இருக்கும் ஒருவர் இந்தியா செல்வது என்பது பல சிக்கலான குடிவரவு குடியகல்வு திணைக்கள நடைமுறைகளை சந்திக்க வேண்டியது நியம்.

ஆனால் போராளி நண்பனின் நிலையோ அதை விட மோசமானது. ஐரோப்பிய நாடுகளுக்குள் இருக்கும் வீசா நடமுறையில் ஐரோப்பிய நாடொன்றின் அகதி தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பிரித்தானிய நாட்டை தவிர ஐரோப்பிய நாடுகளுக்கு சாதாரணமாக பயணிக்கலாம் ஏனெனில் பிரித்தானியாவில் குடியகல்வு குடிவரவு நடமுறைகள் அல்லது சட்டங்கள் முற்றிலும் மாறுபட்டது. அதனால் அருகில் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் தாய் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்க தாயைப் பார்க்க போக முடியாது தவித்த கொடுமை எவ்வளவு வலியது. அகதி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலும், அங்கே பயணிப்பதற்கான பயண அனுமதி (Travel Document ) கிடைக்காததால் தவித்து கிடந்த பொழுதுகள் பல என்பதை சுமன் அறிவான்.

இன்று அதற்கு ஒரு புள்ளி இடப்பட்டு பயண அனுமதி கிடைத்த மகிழ்வில் அவர் பிரான்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். சுமனின் மனம் தந்தை நினைவுகளை விட்டு வெளி வந்து போராளி நண்பனை ஆற்றுகைப்படுத்தி உற்சாகப்படுத்தினான்.

“அண்ண எல்லாம் ஓகே அண்ண, இனி அம்மாக்கு ஒன்றும் இல்லை அண்ண. உங்கள பார்த்ததும் அம்மா எழும்பீடுவா. உங்களை கண்ட உடனே அவசரசிகிச்சை பிரிவில இருந்து வெளீல வந்திடுவா. “

இவ்வாறான நல் வார்த்தைகளை நண்பனோடு பகிர்ந்து கொண்ட சுமனுக்கு 4 நாட்கள் அவசரசிகிச்சை பிரிவில் இருந்து உடல்நிலை நலமாகி சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட தந்தை நினைவு வந்தது.

இந்நிலையில் தொலைபேசியில் சாதாரணமாக கதைத்த தந்தை மீண்டும் 5 ஆவது நாள் அவசரசிகிச்சைப்பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதும் அங்கே அவர் இறந்து விட்டதும் நினைவில் வராமல் போகவில்லை. ஆனாலும் அவன் நம்பினான். போராளி நண்பனின் தாய் அவரை கண்டதும் உயிர் தப்பி விடுவார் என்று முழுமையாக நம்பினான். ஆனாலும் அவரின் மனநிலையை அறிந்திருந்த சுமனுக்கு நினைவுகள் பின் சென்றன.

எங்கள் போராளிகளின் வாழ்வியலில் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னான காலங்கள் சிங்கள எதிரியின் அடிமைத்தன வாழ்வுக்கும் சிறை, தடுப்புமுகாம், புனர்வாழ்வு என்று சுழன்ற ஒவ்வொரு வினாடிகளும் பயங்கரமானவை. பயங்கரமான சித்திரவதைகள், அடி உதை என்று நீண்ட நாட்கள். கம்பிகளோடும் கற்சுவர்களோடும் கதை பேசிக் கொண்டு அடிக் காயங்களில் இருந்து வழியும் சீள்களை கூட துடைத்து புண்ணை ஆற்ற முடியாத கொடுமையான நாட்கள். புழுக்கள் பிடித்து வலியின் உச்சத்தில் கத்தி அழுது புலம்பினாலும் மருத்துவம் என்று கிடைக்காது தடுப்பு முகாம்களிலே அடிமையாக செத்த நாட்கள். இப்படி கெரில்லா போராளிகளாக இருக்கும் போது கூட எம் போராளிகள் வலியை அனுபவித்ததில்லை. ஆனால் இறுதி யுத்தம் நடந்து முடித்த போது தாங்க முடியாத வேதனைகளை சுமந்தார்கள்.

இவ்வாறு சிங்கள தேசம் இன்றும் அவர்களை அடிமைகளாக நடத்தும் அதே நேரம், இவர்கள் யாருக்காக போராடினார்களோ? அந்த தமிழினமும் இப்போதெல்லாம் அவர்களை புறம் தள்ளி வைத்து பூரிக்கிறது. இந்த போராளி நண்பனுக்கு ஒருமுறை நடந்த சம்பவத்தை கூறியிருந்தது திடீர் என்று நினைவு வந்த போது உண்மையில் உறவுகள் மீது வெறுப்பே வந்தது. அவர் ஜெயில் வாழ்க்கையை நீண்ட நாட்களாக அனுபவித்து ஒருநாள் விடுவிக்கப்படுகிறார். திருகோணமலையில் இருந்த தனது வீட்டுக்கு வந்த போது அவரது தாயின் தாய் (அம்மம்மா) வவுனியாவில் இறந்த செய்தி வருகிறது. தனது அம்மம்மாவை இறுதியாக பார்க்கத் துடித்த அவரை

“இல்லைத் தம்பி நீ இங்க வர வேண்டாம். நீ இங்க வாறதால மாமாவுக்கும் அவரின் குமர் பிள்ளைகளுக்கும் ஆபத்து வரலாம் தயவு செய்து செத்தவீட்டுக்கு வர வேண்டாம். என்று அவரது மாமியாரால் கூறப்பட்டது. இந்த வார்த்தைகள் அவரை சுக்குநூறாக உடைத்தெறிந்தது.

அந்த கணம் அவர் உண்மையில் உடைந்தே போனார். அவரும் அம்மாவும் உடைந்து போனார். தன் பிள்ளையை அனைவரும் ஒதுக்குகிறார்கள் என்பதை அறிந்த போது செய்வது அறியாது திகைத்து நின்றார். சிங்களவனின் அத்தனை சித்திரவதைகளையும் தாங்கி நின்ற அந்த மனிதன் அன்று உயிருடன் மீண்டு வந்ததற்காக வருந்தினார். உண்மையில் ஒரு பேத்தியாருடைய இறப்புக்கு கலந்து கொள்வதை தடுத்த தமிழினம் வாழுகின்ற இந்த தேசத்தில் தான் இவர்களுக்காக 40000 க்கும் மேலான வீரவேங்கைகள் விதையானார்கள் பல ஆயிரம் பேர் அங்கங்களை இழந்தார்கள். பல ஆயிரம் பேர் இன்றும் ஏதிலிகளாக, விதவைகளாக வாழ்கிறார்கள் என்பதை ஏனோ எமது சமூகம் ஏற்க மறுக்கிறது.

எவ்வளவு வலிகள்? நாட்டில் அடிமைநிலை என்று புலம்பெயர்ந்து வந்தாலும் பெற்ற தாயை இறுதி நேரத்தில் உயிருடன் பார்த்துக் கொள்வதற்கு இத்தனை போராட்டங்கள். எத்தனை மன்றாட்டங்கள். எவ்வளவு நாட்கள் காத்திருப்பு? தொடர்கின்ற இந்த வலிகள் எப்போது முடியும்? சுமனின் நினைவுகள் முழுக்க நிறைந்து கிடந்த காட்சிகளை கலைத்து விட்டு போராளி நண்பன் மீண்டும் அழைக்கிறார்.

சுமன்…. ஓம் அண்ண சொல்லுங்கோ.

“எனக்கு செக்கன்ட் லைனில ஒரு கோல் வருகுது பிரான்ஸில இருந்து இருங்கோ கதைச்சிட்டு எடுக்கிறேன்.”

சரி அண்ண.

அழைப்பு துண்டிக்கப்பட்ட போது. அவனின் மேசையின் மேலே சுவர் முழுக்க ஆக்கிரமித்து இருந்த மாவீரர் படங்களை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறான் அவர்கள் வெற்றுப் புன்னகை ஒன்றை உதிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதன் நடுவே சிரித்துக் கொண்டிருந்த தந்தையை பார்க்கிறான்.

“பாவம் அப்பா அண்ண… ஒரு முறையாவது அம்மாவ உயிரோட பார்க்க வேணும். அது வரைக்குமாவது அம்மா உயிரோட இருக்க வேணும் அப்பா…”

அவரும் ஆமதிப்பது போலவே இருந்தது. அவன் தந்தையோடு பேசிக் கொண்டிருந்த நேரம் அவனின் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததுக்கான ஒலி எழுகிறது.

” Amma died Thamby ????. “

சுமனால் எதையும் கூறவோ எழுதவோ முடியவில்லை. தந்தையின் திருவுருவப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொள்கிறான். அவரும் தலையை குனிந்தபடி அவனின் தலையை கோதி ஆறுதல் படுத்துவதைப் போல உணர்வு எழுகிறது. “அப்பா அண்ண பாவமப்பா…. ” மீண்டும் தந்தையோடு பேசிக் கொள்கிறான்.

எழுதியது: இ.இ.கவிமகன்
நாள்: 02.01.2020