இலங்கையில் என்ன நடக்கிறது?

இப்போது அனைத்துலக ஊடகங்கள் அல்லது புலனாய்வுக் கட்டமைப்புக்கள் அனைத்தும் உச்சப் பார்வையை இந்த ஒரு வாக்கியத்தில் அடங்கியுள்ள செயலுக்காக தான் விழிகளை விரித்தபடி காத்திருக்கின்றன. இந்த நிலையில் நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையின் நிறைவில் பெரும் பதட்டம் நிலவிய கல்முனைப் பகுதியில் உயிரற்ற உடலங்கள் மீட்கப்பட்டதாக காவல்த்துறை அறிவித்துள்ளது.

கல்முனை – சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலங்களில் 6 ஆண்களுடையது எனவும் 3 பெண்களுடையது எனவும் 6 சிறுவர்களுடையதெனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்துள்ள பெண்ணொருவரும் சிறு பிள்ளையொருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வித உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லையென் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆனாலும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அரச படைகளுக்கும் சேதம்வந்திருக்கலாம் என எதிர்வு கூறுகின்றன.

மீட்கப்பட்ட சடலங்கள் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.