உத்தமக் குறிக்கோளாம் தமிழீழ விடிவுக்காக சொல்ல முடியாத துயரங்களைத் தம் தோள்களில் சுமந்துநெருப்பாற்றை நீந்திக் கடந்தவர்கள் எங்கள் மாவீரர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சிந்திய குருதி இன்றும் பலஆயிரம் நினைவுகளை எமக்குள்ளே விதைத்துச் சென்றதை மறுக்க முடியாது; அவ்வாறுதான் மாறன்-8 அடிப்படைப் பயிற்சி முகாமில் ஒரு புலி தயாராகிக் கொண்டிருந்தான். தேசக் கனவை தன் உள்ளத்தில்சுமந்தவனாக, நேரிய சிந்தனைகளும், தேசியத் தலைமை மீதான அடங்காத நேசமும், விடுதலைப்போராட்டத்தின் மீதான அடங்காத பற்றும் கொண்ட வேங்கையாக உருவெடுத்தான் மிகுதன்.

எதையும் செய்து முடிக்கும் அசாத்திய துணிச்சல் கொண்டவன், எந்த விடயத்துக்காகவும் யாரிடமும்கறைபடியாத அளவுக்கு தன் சிந்தனைகளில் மட்டுமல்லாது செயற்பாடுகளிலும் நேரிய போக்குக் கொண்டவன். அச்சம் என்பதன் அர்த்தம் தெரியாதவன். களமுனைகளை மட்டுமல்ல, மக்கள் பணிகளிலும் தன்னை முழுமையாகஅர்ப்பணித்த பெரும் வேங்கை. அடிப்படைப் பயிற்சி முடிவடைந்த பின் அரசியல்துறை, கல்விப்பிரிவுக்குள்உள்வாங்கப்பட்டு பணியாற்றத் தொடங்கினான்.

மிகுதன் கல்விப்பிரிவுப் போராளியாக இருந்த போது முதல் சண்டைக் களமுனை நோக்கி நகர்த்தப்படுகிறான். பூநகரி நோக்கிய சிங்களத்தின் படையெடுப்பான “சுழல்காற்று “ நடவடிக்கைக்கு எதிராக தடுப்புக் காவல்வேலியாக சண்டைக் களம் புகுந்தான். அன்றில் இருந்து இறுதி வரை அவன் சண்டைக் களங்களைப் பிரிந்ததுகுறைவு. அரசியல் பணிகளில் இருந்தாலும் சண்டைக் களங்களை நோக்கிய வீரானாகவே வாழ்ந்தான்.

பள்ளிக்கல்வியை க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவானநிலையிலும் அதைத் துறந்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்த மிகுதன் எதையும் இலகுவில்கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவன். அடிப்படையிலேயேஆங்கில மொழியறிவைக் கொண்டிருந்தாலும் சிறப்புஆங்கிலப் பயிற்சிகள் மூலமாக இயக்கத்துக்குள்ளே தன்னை வளர்த்துக்கொண்டான். அதனாலோ என்னவோசர்வதேச அரசியலையும், அரசியல் பொருளாதாரத்தையும் அல்லது உலக நாடுகளின் ஒழுங்குகளையும் அவர்கள்எதிர்காலத்தில் எம்மீது எவ்வாறான நிகழ்ச்சி நிரல்களில் நகர்வுகளை மேற்கொள்வார்கள் என்ற பலமுனைஎதிர்வு கூறல்களைக் கூறக்கூடியவனாக நன்கு கற்றுத் தேர்ந்தான்.

அரசியல்துறையின் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரம் அடையும் போது சிறப்பு நடவடிக்கைகளுக்காககல்விப்பிரிவுப் போராளிகளும் விசேடமாக களமிறக்கப்படுவர். அப்போது அக்காலத்தில் பாடசாலைகளில் அல்லதுகல்வியாளர்களின் சந்திப்புகள் நடந்த போதெல்லாம், எதிர்வரும் கேள்விகளுக்கு சரியானபதில்களைக் கூறுவதனூடாக அல்லது தெளிவான விளங்கங்களை வழங்குவதனூடாக இயக்கத்தின்ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு பெரிதும் வழி வகுத்தவன்.

சில போராளிகளுக்கு பேச்சாற்றல் இருப்பதில்லை. ஆனால் அறிவுசார்ந்த கருத்துக்களால் சபையினை தம்கட்டுக்குள் கொண்டு வரும் அதி திறன் அவர்களிடம் இருக்கும். அவ்வாறான ஒரு திறனுடன் தான் விசேடபரப்புரைகள் நடக்கும் போதெல்லாம் ஒரு தூணாக மிகுதன் பயணித்தான்.

போராளிகளுக்கான அரசியல் தெளிவூட்டல்கள், வகுப்புக்கள் என பெரும் பணியை தனதாக்கிக் கொண்டான். ஒவ்வொரு களமுனையாக செல்வதும் அங்கே காவல் வேலிகளாக இருக்கும் போராளிகளுடன்தனித்தனியாகவும், இருவர் அல்லது மூவர் கொண்ட அணிகளாகவும், அல்லது 30 பேர்கொண்ட
ஒரு அணியாகவும் தேசியத்தலைவரின் சிந்தனைகள், எதிர்பார்ப்புக்கள், உலக நிகழ்ச்சி நிரல்கள் , சமகாலஅரசியல்நகர்வுகள் , மக்களின் எதிர்பார்ப்புக்கள் என அறிவார்ந்த தெளிவூட்டல்களைச் செய்வான். அதற்காகஅவன் நடக்காத காடுகள் இல்லை. அவனின் பாதம் பதியாத காவலரண்கள் இல்லை. சுற்றிச் சுற்றி தமிழீழஎல்லைக்காவலரண் போராளிகள் அனைவருடனும் நெருங்கி இருந்தான். அவர்களின் தேவைகளை, பிரச்சனைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை உரியவர்களூடாக பெற்றுக் கொடுத்தான்

பள்ளிக்கல்விக் காலம் தொட்டு கலை இலக்கியப் பணிகளில் முன்நிற்கும் மிகுதன் மற்றவர்களைக் கவரும்கவிஞனாகவும், எழுத்தாளனாகவும் வலம் வந்ததும் அவனின் பலங்களில் ஒன்று. அடிப்படைப் பயிற்சி முகாமில்நடக்கும் வாராந்த கலைநிகழ்வுகளை எடுத்துப் பார்த்தால் கலை இலக்கியப் பணியில் முதன்நிலையாகஇருப்பது மிகுதன் என்றால் அது மிகையாகாது. தனது எண்ணங்களை கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும்,
பட்டிமன்றங்கள் மற்றும் நாடகங்கள் என வெளிக்கொண்டு வந்து தமிழீழ இலக்கியப் பரப்புக்குள் அவனும்நிமிர்ந்து நின்றான்.

இவ்வாறான காலத்தில் தமிழீழ அரசின் உத்தியோகபூர்வ நாளிதழான ஈழநாதம் நாளிதழின் பணிக்காகபிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களால் அனுப்பப்பட்ட போது எவ் விதமான அடிப்படைக் கணனிஅறிவும் அற்றநிலையில் உள்ளே செல்கிறான். அங்கே பக்கவடிவமைப்புப் பிரிவுக்குள் தன்னை ஈடுபடுத்துகிறான். எதையும்ஆய்ந்து அறியும் ஆற்றல் கொண்ட மிகுந்தனால் அங்கே இருந்த கணனிகளைக்கையாள்வது என்பது குறுகியகாலத்தில் இலகுவான காரியமாகியது. நெஞ்சிலே விடுதலை வேட்கையும், எதையும் உடனடியாககற்றுக்கொள்ளும் திறனும் ஒருங்கே கொண்ட மிகுதன் தன் விடா முயற்சியினால் அங்கிருந்தவடிவமைப்பாளர்கள்மற்றும் கணினித் தொழில்நுட்பவியலாளர்களின் உதவி கொண்டு சிறுக சிறுக கணினியில்தன் கரங்களைப் பதித்தான்.

வடிவமைப்பின் (Graphics Design) பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு மத்தியில் ஈழநாதம் நாளிதழ்பணியகத்தையும் தாண்டி அவனது வடிவமைப்பு பேசப்படுமளவுக்கு தன்னை மேம்படுத்திக் கொண்டான் மிகுதன். ஒரு கட்டத்தில் இங்கிருந்தவர்களுக்கு புது ஆலோசனைகளை வழங்குவது தொடக்கம் கற்றுத்தந்தவர்களைக்கே புதியவற்றைக் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு தன்னைப் புடம் போட்டான். “ ஈழநாதம் “ நாளிதழ், “வெள்ளிநாதம்” வார சிறப்பிதழ் மட்டுமல்லாது, விடுதலைப்புலிகள் மாதவிதழ், நாவல்கள் எனமிகுந்தனின் வடிவமைப்புப் பணி அனைவரையும் வியக்கும் வண்ணம் மேம்பட்டிருந்தது.

இவ்வாறான பணிகளினூடாக தன் அரசியல் பயணத்தை தொடர்ந்த மிகுதனை கல்விப்பிரிவால் வெளியிடப்பட்டமாதவிதழின் வடிவமைப்புத் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கத் தவறவில்லை. இதன் அடுத்தநிலையில் அவனை சமாதானச் செயலகம் உள்வாங்கிக் கொள்கிறது. சர்வதேச நாடுகளின் திட்டமிட்டநிகழ்ச்சி நிரலில்உருவான ரணில் அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த சமாதானஉடன்படிக்கைக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்தபிரிவான சமாதானச் செயலகத்தில் தன் பணியை விரிவுபடுத்தி, புலம்பெயர் நாடுகளுக்கும் அரசியல்பணிகளுக்காக சென்று வந்தான்.

இந்த நிலையில் எம் தாயகத்தை இயற்கையின் சீற்றமான சுனாமி பேரலை தாக்கி பெரும் இன்னல்களைத் தந்துசென்ற போது அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான வடமராட்சிக்கிழக்குப்பகுதியில்பணியாற்ற அனுப்பப்பட்ட போது அவர்களுக்கான மீள் வாழ்வாதார கட்டுமானங்களை மட்டுமல்லாது, அவர்களின் உளவியல் சார்ந்த தேவைகளையும் நிறைவேற்றுவதில் வெற்றி கண்டு பாராட்டுதல்களைப்பெற்றிருந்தான்.

இது நடந்து கொண்டிருந்த நேரம் திட்டமிட்டு எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சமாதான உடன்படிக்கைமுறிந்து சண்டை தொடங்கிய காலத்தில் சமாதானச் செயலகத்தில் இருந்து பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்அவர்களால் அவரது பிரத்தியேகப் பணிகளுக்காக அழைக்கப்படுகிறான். அவரது பிரத்தியேகப்பணிகளில் தன்னைஈடுபடுத்திக் கொண்ட அதே வேளையிலும் சண்டைக் களங்களுக்குச் சென்று வந்தான் மிகுதன். போராளிகளோடு அரசியல் விழிப்பு செயற்பாடுகளைக்கதைத்தான். அவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்த ஒருநாளில் தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து இலங்கை வான்படையின் வான்கலங்கள்கிளிநொச்சி நகரில் இருந்த அவரது முகாமைத் தாக்குகின்றன.

தமிழீழ விடியலை தன் நெஞ்சிலே சுமந்து தமிழீழக் களங்கள் எல்லாம் அரசியல் பணிக்காக நடந்து திரிந்தபெரு வேங்கையான மிகுதன் தான் நேசித்த மக்களுக்காகத் தான் நேசித்த தன் பொறுப்பாளரை காத்துவிடும்
துடிப்போடு முயன்றாலும் அவருடனும் தன் தோழர்களுடனும் வான்படையின் தாக்குதலில் விழி மூடிவிதையாகிப் போனான்.

இ.இ.கவிமகன் 

02.11.2019